
சுரங்க இரதம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. அவள் சிரித்துக்கொண்டு இறங்கிச் சென்றாள். சித்தனுக்கு,
‘இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே… ‘ என்பதான வேதனை அவன் இதயத்தையும் ஆத்மாவையும் பிழிந்து சக்கையாக்கியது.
அவன் அவள் போவதைப் பார்த்துப் புழுவாய்த் துடித்தான். அவன் துடிப்பைப் பொறுக்கமுடியாத சுரங்க இரதம் ஒரே இழுவையில் அவளை மறைத்து அவனுக்கு உதவாதவற்றைக் காட்சியாக்கியது.
‘இதயம் போகுதே
எனையே பிரிந்தே…’
அவன் மீண்டும் முழுமுழுத்தான். இது எப்படிச் சாத்தியமாகிறது? அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ போதைவஸ்தை உண்ட மயக்கம் அவனிடம். மீண்டும் அவன் உதடுகள் ‘இதயம் போனதே எனையே பிரிந்தே…’ என்றது. மற்றவர்கள் இதைக் கேட்டால் சிரிப்பார்கள். கண்டதும் காதலா என்று கிண்டல் செய்வார்கள் என்பதும் அவனுக்கு விளங்கியது.
‘சங்க இலக்கியத்திலேயே ‘பசலை நோய்’ என்று ஒரு நோயைப் பற்றி பேசப்பட்டிருக்கிறதாம். பசலை என்பது உணவு, உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். காதல் பைத்தியம் என்று சொல்லலாம். அதனால் காதல் ஒரு நோய் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவகையில் நீங்கள் இப்போது நோய் வசப்பட்டிருக்கிறீர்கள்’ என்றாள் அமுதினி.
‘நினைச்சன்… இப்பிடிதான் கொண்டந்து முடிப்பிள் எண்டு.’
‘பிறகு என்ன… ஒருக்கால் சொன்னால் கேட்க வேணும். உங்களுக்குக் கஸ்ரமாக இருப்பது உண்மைதான். இருந்தாலும் அப்படி மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் இல்லைத்தானே? நீங்கள் கதைப்பது கண்டம் காதல் போல, குறுந்தொகையில் அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது,
‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.’
அதுதான் இது. இதில் வருவது போல ‘சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல அன்பு கொண்ட நம் இருவரின் நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே’ என்று கதைவிடுவது போல இருக்கிறது. நீங்கள் சங்க இலக்கியக் கற்பனையோடு கதை விடவில்லையே?’ என்றாள் அமுதினி.
‘இப்படி எல்லாம் கேட்கிறாயே அமுதினி. உம்மைப் போல நான் இணையத்திலிருந்து சங்க இலக்கியம் படிக்க நேரம் இருப்பதில்லை. ஒரு சில முறை பார்த்திருக்கிறேன். ஆனால் என் நிலையை எப்படி உங்களுக்கு விளங்கப்படுத்துவது என்று விளங்கவில்லை. ஆனால் சங்க இலக்கியத் தலைவன் போல ஏமாற்றிவிட்டுப் போய்விடுவேன் என்கின்ற கவலை உமக்குத் தேவையில்லை’ என்றான் சித்தன்.
என்று கோடிடும் இது; எனது பதினைந்தாவது நாவலும் இருபத்து இரண்டாவது படைப்புமாகும். இந்த நாவல் பலரும் தொட்டால் சுடும் என்று தள்ளிப்போகும் விஷயத்தை, பேசாப்பொருள் பேசுவதாகப் பேசிச் செல்கிறது. அது எதைத் தொட்டுச் செல்கிறது என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.