கவல் களஞ்சியம் துவங்கத் தேவையானவை; இணைய முகவரியும் அதற்கான இடமும். அதை யார் வேண்டும் என்றாலும் துவங்கலாம். அதை எவ்வளவு காலத்திற்கு வாழ வைக்க முடிகிறது என்பதில் அதன் அர்த்தம், இருப்பு, முக்கியத்துவம், பெறுமானம் ஆகியவை பொதிந்து இருக்கிறது. அதற்குப் பலரும் உதவினால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதை வைத்துக் கொண்டு இலக்கிய மேலாண்மை செய்ய எண்ணுவது மிகவும் சிறுமையே. தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ள பல சிறுமைகளில் இதுவும் ஒன்றாகும்.

கட்டற்ற தகவல் களஞ்சியம் துவங்குவதற்கு நாடு நாடாகச் சந்திர மண்டலத்திற்கு விண்கலம் அனுப்புவதாகப் பந்தா காட்டி… ஒரு பெரும் மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கட்டற்ற தகவல் களஞ்சியத்தின் வளர்ச்சி இப்போது பலரது இலவச உழைப்பில் ஒரு வியாபார நிறுவனமாக மாறிக் கொண்டு வருகின்றது. அதற்கு அவர்களுக்கு உலகளாவியறீதியில் கிடைக்கும் வருமானம் சாட்சியமாகும். அதுவே இப்போது தமிழ் உலகிற்கும் பரவி உள்ளதோ என்கின்ற கேள்வி எழுகிறது.

முதலில் விக்கிப்பீடியாவின் தமிழ் பிரிவும் அவர்களின் பக்கச் சார்பு சர்வாதிகார போக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் தோன்றியதின் இலக்கிய நாட்டாமையும் அதனோடு சேர்ந்த அலப்பரையும் தாங்க முடியாது இருக்கிறது. இவ்விரண்டின் தகவல் நடுநிலைக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டைச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

தமிழ் விக்கி என்று துவங்கப்பட்ட தகவல் களஞ்சியத்தில் ஏன் எஸ்.பொவை இருட்டடிப்புச் செய்து உள்ளார்கள்? அந்த மர்மம் விளங்கவில்லை. பிள்ளை, ஐயர் என்கின்ற வகையில் ஈழத்து இலக்கியத்தில் தேடப்போனால் அது கோணலாகப் போகும் என்பதே உண்மை. அத்தோடு ஈழத்தில் பிள்ளை என்பது அந்த சாதியினரால் மட்டும் பயன்படுத்த படுவதில்லை என்பதை அதைத் தேடுகின்றவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதை விட்டாலும் எஸ்.பொ ஈழத்து இலக்கியத்தின் மாபெரும் வைரம் என்றே சொல்ல வேண்டும். அந்த வைரத்தைப் பொத்தி வைத்தால் அது மிளிராது என்பது அல்ல.

இதன் மூலகர்த்தாவையும் அவர் வசப்பட்ட அமைப்புக்களைப் பற்றியும், அவருக்கு ஜால்ரா போடும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய வாதிகளை பற்றியும் விமர்சனங்களை வைக்கும் நிலைமை மலிந்துள்ளது. எல்லாம் இயம்பும் கலாநிதிகளும், எழுத்தின் பிரம்மாக்களும் தாங்களே என்று தங்களை நினைத்துக் கொள்பவர்களும் இருக்கும் அவர்கள் தகவல் களஞ்சியத்தில் ஈழத்தின் இலக்கிய மேதையைப் புறக்கணிப்பது ஏன்? இப்படி இன்று பிரம்மாக்கள் என்று தங்களை எண்ணுபவர்கள் எஸ்.பொ இருக்கும்போது அவருக்குப் புகழாரம் சூட்டினார்கள். அதற்கு எதிராக இப்போது இந்த இருட்டடிப்புக்குக் காரணம் என்ன? அதைவிட கோடம்பாக்கத்திற்கு தங்கள் இலக்கிய குப்பைகளைத் தூக்கிச் சென்று இலக்கிய வடிவம் வாங்கிய ஈழத்துப் புலம் பெயர்ந்தவர்கள் இப்போது மௌனம் காப்பதின் அர்த்தம் என்ன? இப்போதும் அவர்கள் எஸ்.பொவின் நினைவு தினம் கொண்டாடுகிறார்கள். ஆனால் எஸ்.பொவிற்கான நியாயமான கெளரவம் பாதிக்கப்படுவது பற்றிய எந்த அக்கறையையும் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன? பிரம்மா கோபித்துக் கொண்டால் அவர்கள் தகவல் களஞ்சியத்தில் தங்கள் இடம் பறிபோய்விடும் என்கின்ற சுயநலமா ? அல்லது ‘புர’ விருதுகளுக்கான அடித்தளமா? அந்த விருதுகளை பெற்றுவிட வேண்டும் என்கிற இலக்கிய நசிவு நிலையா?

பணத்திற்காக, முகமனுக்காக விலை போகும் இலக்கிய விருதுகளும் கெளரவங்களும் கேலிக்குரியவையே. எ.ஸ்.பொவிற்கு கிடைக்காத விருதுகளைக்கூடக் கடைநிலை இலக்கியவாதிகள் பெற்றுக்கொள்கிறார்களே எதனால்? யாவும் வியாபாரம், வியாபாரத்திற்கான நட்பு. அதற்காகத் தமிழகத்தை நோக்கிப் படையெடுப்பதும், அவர்களைத் தாம் இருக்கும் இடத்திற்கு அழைத்து விழுந்து விழுந்து விருந்து பகிர்வதும்… அப்படியாக தற்போதைய தமிழ் இலக்கியம் கையூட்டுப் புகழ்ச்சியில் மிதக்கிறது.

யாழ்பாணன் என்றார்கள், இலக்கிய கலகக்காரன் என்றார்கள், இன்று அவர்கள் வியாபாரத்தில் அவை தொலைந்துவிட்டது போல இருக்கிறது.

ஒரு படைப்பிற்கான பரிசு அதன் நுட்பத்திற்கான வெகுமதியாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு நான் என்கிற அகங்காரம் தேவையில்லை. அதற்கு அவர்கள் மனித மூளையையும் அதன் வேறுபடும் திறன்களை உருவாக்கிய இயற்கைக்குமே நன்றி சொல்ல வேண்டும். அதைக்கூட தமது சிறு புத்தியால் வியாபாரம் ஆக்குபவர்களை என்னவென்று சொல்வது?

எனது மொழியா வலிகள் நாவலில் இருந்து

‘உலகத்தில் படைக்கப்படும் மனிதர்களில் ஒருவன் அறிவாளி ஆவதும் இன்னொருவன் சோடை போவதும் அந்தத் தனி மனிதர்களின் குறை அல்ல. அது இயற்கையின் விசித்திரத்தில்… விருப்பில்… பல இலட்சம் வருடம் பரிசோதித்து இயற்கை கடைந்தெடுத்த நெய்யாக, தாயின் கருவறையில்… படைக்கப்படும் மூளையும், அதில் பொதிந்து கிடக்கும் நரம்புக் கலங்களும், அதனில் பாய்ச்சப்படும் மின் சமிக்கைகளும், ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமாக அமைந்து விடுகின்றது. இந்த அடிப்படை விளங்காது திறமையான மற்றைய மனிதனைப் பார்த்து மலைப்பதும், போற்றுவதும், மயங்குவதும், சங்கம் அமைப்பதும், கொடி பிடிப்பதும், கோபத்தில் தூற்றுவதும், பட்டியல் போடுவதும் பேதைமை அல்லவா? அறிவுஜீவிகள் என்பவர்கள்கூட சில விடயங்களில் அறிவீனர்களாக இருப்பதும் அந்த விசித்திர கோளத்தின் மர்மமே. இயற்கையின் சூட்சுமம் அதுவே.

ஆன்ஸ்ரயின்’ மூளையில் என்ன இருந்தது? அந்த நரம்புக் கலங்களை இயற்கை கோர்த்த விதம் யாருக்கு விளங்கும்? அணுக்களையும், அண்டத்தையும், ஆண்டவன் மனிதனுக்குக் கூறாததையும், அவரால் எப்படி மனிதருக்குக் கூற முடிந்தது? அந்த மூளைக்குள் அடங்கும்படி ஏன்? எப்படி? அது படைக்கப்பட்டது? அவர் நிரூபித்த ஞானம் ஏடுகளில் கற்றதால் வந்ததா? அல்லது அவர் மூளையில் மின் பொறிச் சுடராய் உள்ளுக்குள் இருந்து பெரும் ஊற்றாக எழுந்ததா? அல்லது பிரபஞ்சத்தில் இருந்து அவரது மூளைக்குள் மின்னலாகப் பாய்ச்சப் பட்டதா? அவர் மூளையை வெட்டி வெட்டி ஆராய்ந்து எதைக் கண்டுபிடிக்க முடிந்தது? துணைக் கலன்களுக்கும் நரம்புக் கலன்களுக்கும் என்ன தொடர்பு? துணைக் கலன்களை அதிகரித்து வருங்காலத்தில் பல ஆன்ஸ்ரெயின்களை உருவாக்க முடியுமா?

மனிதர்களுக்கு இடையேயான போட்டிகள் அறிவிலிகளுக்கான அடையாளம். அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவிலிகளின் அடையாளம். ஒவ்வொரு மூளையும் அற்புதமான தனித் தன்மையுடன் படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மூளை போல் வேறு ஒரு மூளையைத் தேடிப் பிடிக்க முடியாது’

ஆகப் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகள் தமிழைப் பற்றிக் கூவுவது உண்மை என்றால் தங்களை அற்ப ஆசைகளுக்குப் பலிகொடுக்காது பாதுகாத்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் சுய பரப்புரை பரப்புபவர்கள் ஆகவும், அதற்காகப் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு விருதுகளை விலைபேச அலைபவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப பேரங்கள் இலக்கிய தரகர்களோடு புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் நடக்கின்றன.

விருதுகள் என்பவை கேலிக்குரியவை என்பதற்கு இருக்கும் இன்னோர் காரணம் அவை உழைப்பிற்கு முதல் மரியாதை கொடுப்பவை அல்ல மாறாக இயற்கை கொடுத்த அதீத மூளைத் திறனை ஆராய்பவை அளப்பவை. அதற்கு இயற்கைக்கே இவர்கள் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும்.

இப்போது ஒருவர் இலக்கியம் படைக்கிறார் என்பது வெளியே வரவேண்டும் என்றால் பணப் பெட்டியுடன் இலக்கிய தரகர்கள் காலடியில் போய் நிற்க வேண்டும் என்பதாகிவிட்டது. அதைவிட ஈழத்தமிழர்களிடம் அவர்களது இலக்கியத்தை ஊக்குவிக்க ஒரு சுயமான எந்தக் கையூட்டுகளுக்கோ பரப்புரைகளுக்கோ வசப்படாத இலக்கிய அமைப்பு இல்லை என்பது மிகவும் மனவருத்தத்திற்கு உரியது.

எஸ்.பொவைப் பற்றி இலக்கிய உலகம் அறியும். இருந்தும் நட்சத்திரங்கள் சூரியனின் பிரகாசத்தை விழுங்க முயல்வது போன்ற சிலரின் முயற்சியே இந்த இருட்டடிப்பு.

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் திரைப்பட வசப்பட்டவர்களிடம் அகப்பட்டு இதைவிட மோசமாகச் சீரழியப் போகின்றது என்கிற கவலை ஏற்படுகின்றது.