சிறுகதை கேட்பதற்கு உருவாக்கப்பட்ட காணலை இது. இதில் எனது சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்பவற்றுடன் பிரபலமான படைப்பாளர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட உள்ளது. அதற்கு ஆதரவு தருவதற்கு எனது காணலைக்கு தயவு செய்து வாருங்கள். உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.
இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார்.[1] இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.
குறிப்பு: அக்கினிக்குஞ்சு’ அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஜெர்மனியும் இணைந்து நடத்திய, ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளன்று (18.12.2021) எழுத்தாளர் திரு. தியாகலிங்கம், நோர்வே அவர்கள் வழங்கிய உரை.
எஸ்.பொ. வுடன் எனக்கு இருந்த தொடர்புகள், அனுபவங்கள் பற்றி மிகவும் சுருக்கமாகக் கூறுவதென்றால், எஸ்.பொ. வுடனான பழக்கம் என்பது எனது வாழ்வில் கிடைத்த இலக்கிய, குருகுல, மனிதநேயக் கணத்துளிகள் என்றுதான் நினைக்கிறேன். அழிவின் அழைப்பிதழ் என்கின்ற நாவலை நான் காகிதத்தில் கிறுக்கி வைத்திருந்த காலம் அது. நோர்வேயின் வடதுருவத்தில் தனிமையாக இருக்கும் பொழுதே அந்தப் பணி நடந்தது. அதை வெளியிட வேண்டும் என்கின்ற பேராசையுடன் அலைந்து திரிந்தேன். அப்போது என்னோடு வசித்து வந்த குகனேரியப்பன் என்பவர் அவஸ்ரெலியாவில் வசித்து வந்த எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவரைத் தொடர்புகொண்டு எஸ்.பொ.வை அறிமுகப்படுத்தினார். அதன் பின்பே 1994 ஆண்டு அவரைச் சந்திக்க சென்னை சென்றேன். அழிவின் அழைப்பிதழ் எனது முதலாவது நாவலாக அச்சேறியது. அது மித்ர பதிப்பகத்தின் நாலாவது பதிப்பும், முதலாவது நாவலுமாகும்.
ஒரு மதியம்போல கோடம்பாக்கத்தில் இருக்கும் பாலத்திற்குக் கீழே, மசூதியோடு இருந்த மித்ர அச்சகத்திற்குப் போயிருந்தேன். அப்பொழுது எஸ்.பொ, இளம்பிறை ரஹ்மான் இருவரும் அங்கே இருந்தார்கள். இருவரும் மிகவும் மென்மையாக அன்பாகப் பேசினார்கள். எஸ்.பொ கதைத்தால் அதில் நிறையத் தமிழ் இலக்கியக் கூறுகள், நெளிவு சுளிவுகள், எள்ளல்கள், பொதிந்து இருக்கும். நட்பு அதில் உறவாடும். முதல் சந்திப்பிலிருந்தே எனக்குப் பிடித்துக்கொண்ட விடயம் அது. அவரது பேச்சுத் திறமைக்கு அவரே நிகர் என்பதே சத்தியம். சிலர் அவரை ஈழத்துப் பாரதி, ஈழத்து ஜெயகாந்தன் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைத் தமிழுலகு மொத்தத்திற்குமான ஈடுயிணையற்ற படைப்பாளி அவர் என்று நினைக்கிறேன். வானத்தில் இருக்கும் நட்சத்திரம் போன்றவர். அவருக்கு ஈழம் என்று அணை போடக்கூடாது என்று நினைக்கிறேன். எப்படி பாரதி தமிழ் உலகு முழுமைக்கும் சொந்தமான, நிகரற்ற படைப்பாளியோ, அதைப்போலவே எஸ்.பொ. என்பது என் கருத்து.
கோடம்பாக்கத்தில் அவரைச் சந்தித்த போது அவரின் வயதிற்கு என்னால் அவரை ஒரு குருவாக, அல்லது அப்பா போன்ற ஸ்தானத்திலேயே வைத்துப் பார்க்க முடிந்தது. அதுவே எனது இறுதி வரையுமான எஸ்.பொ பற்றிய தரிசனமாக இருந்தது என்பதே உண்மை. ஆனால் நான் பார்த்தவரை அவர் எல்லோரையும் வயது வித்தியாசம், தகமை வித்தியாசம் இல்லாமல் நட்பாகவே நடத்துவார். நண்பர் போலவே பழகுவார். பாரியாரோடும் (ஈஸ்வரம்) மிகவும் தோழமையாகப் பழகுவார். சிறு குழந்தைகளுடனும் அதைப் போலவே பழகுவார்.
ஒரு நாவலை எழுதிவிட்டால் அதை வெளிக்கொண்டு வராது வைத்திருப்பது இயலாத காரியம். என்னிடம் சில நாவல்கள் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் விடுமுறை கிடைக்கும் போது சென்னை பயணமாவேன். ஆண்டுவாரியாகப் பட்டியல் இட முடியாத நிலையில் உள்ளேன். 1994 – 1999 இடையில் அவரை சில முறைகள் சந்தித்து இருக்கிறேன். அவருடன் ஒரு புத்தக அறிமுக விழாவிற்கு Book point இற்குச் சென்ற ஞாபகம் உண்டு. அப்படி ஒரு நிகழ்வில்; சிவசங்கரி, மாலன், அம்பிகைபாகன், பிரபஞ்சன், கணேசலிங்கம் மற்றும் பல இலக்கியப் பிரபலங்களை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கவிஞர் இன்குலாப்பை மித்திர அச்சகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தான் மாத்திரம் உயரத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணாது மற்றவரையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் சிந்தனை கொண்டவர் என்பதை நான் கண்டேன். சென்னையில் அவரைச் சந்தித்தபோது வெறுமனே எனது நாவல்களைப் பிரசுரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாது, அதை எப்படிச் செப்பனிடுவது (editing செய்வது) என்று எனக்குப் பயிற்சி தந்தார் என்பதை நான் என்றும் மறக்க முடியாது. நான் அதற்காகக் கோடம்பாக்கத்தில் அவரது பதிப்பகத்திற்கு அருகே இருந்த விடுதியில் தங்குவேன். அவர் அப்போது மாலை வேலைகளில் அங்கே வந்து, நாவலில் என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டும், எப்படி மெருகூட்ட வேண்டும் என்பதை அழகாகப் பயிற்றுவிப்பார். உண்மையில் நான் அச்சேற்றுவதற்குத் தயாராக இந்த நாவல்களை அங்கே கொண்டு சென்றது இல்லை. அதை அச்சேற்றுவதற்குத் தயாராக்கியதே அவர்தான். இதைச் சொல்வதற்கு நான் பின்னிற்கவோ வெட்கப்படவோ இல்லை. அன்று அவர் தந்த பயிற்சி இன்று எனக்கு உதவுகிறது என்பது உண்மை. ஆகக்குறைந்தது எனது படைப்புக்களையாவது நானே சொந்தமாக இயன்ற அளவு செம்மைப்படுத்தி வெளியிட முடிகிறது.
எஸ்.பொ, பாரியார் ஈஸ்வரம் அவர்களோடு ஒஸ்லோவுக்கு 2000 ஆண்டு இலக்கியப் பயணமாக வந்திருந்தார். எனது நாளை நாவலை வெளியிட்டதோடு ஒஸ்லோவில் இலக்கியச் சந்திப்பும் நடந்தது. அப்போது எனது இல்லத்திற்கும் வருகை தந்திருந்தார். அது எனது வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன். எஸ்.பொ. வுக்கு பல அவமதிப்புகள் ஏற்பட்டதான வருத்தம் அவரிடம் இருந்தன. அது உண்மையும் கூட. ஈழத்திலும் சரி, புலம் பெயர்ந்த தேசங்களிலும் சரி சிலர் தங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொள்வதற்காக, அல்லது கருத்தியல் ரீதியாக வெல்ல முடியாத காழ்ப்பில் அவருக்கான மதிப்பை அளிக்கத் தவறிவிட்டார்கள் என்பது என் எண்ணம். இன்றும் அதைப் பலர் ஒத்துக்கொள்ள முடியாது இருக்கிறார்கள். அவர் வார்த்தையில் சொல்வதென்றால் ‘எலியோட்டம் ஓடுகிறார்கள்’.
மேற்கூறியவற்றை விடவும் அவரிடம் வேறு சில கவலைகள் இருந்தன. அதைப்பற்றியும் என்னுடன் கதைத்தது ஞாபகம் இருக்கிறது. ஒன்று கோடம்பாக்கம் பாலத்திற்குக் கீழே இருந்த பதிப்பகத்தை மாற்ற வேண்டி வந்தபோது ஏற்பட்ட சிக்கல். அதில் அவர் மனமுடைந்து போய் இருந்தார். அது மிகவும் கரடுமுரடாக நடந்திருப்பதாக நான் உணர்ந்தேன். அதன் பின்பு பதிப்பக உரிமையில் அல்லது செயற்பாட்டில் ஏற்பட்ட சிக்கலிலும் மனமுடைந்து போய் இருந்தார். அதைப் பற்றிக் கதைக்கும் போது ‘உங்கள் நேரம் என்பது தமிழ் உலகிற்கானது. அதை அற்ப விஷயங்களுக்கு நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்’ என்று கூறினேன். தமிழை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்கின்ற கோபமும் அவரிடம் இருந்தது. அதைச் சில முன்னீடுகளிலும் காணலாம்.
எஸ்.பொ. வுக்குச் சென்னையில் போகுமிடங்களில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தன. அவரது பேச்சில் பலர் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். சபையில் துணிவோடு, மிகவும் இயல்பாக அவரால் பேசமுடியும். அவர் பேசத் தொடங்கினால் அரங்கம் தானாகக் கட்டுண்டு கிடக்கும். கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகத்திடம் இருந்து ஒரு விருது கிடைத்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். எதற்கு என்பது எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. மது அருந்துவதைப் பற்றி எஸ்.பொ.வின் பாரியாருக்கு மிகுந்த கவலை இருந்தது. மது அருந்தாமலிருந்தால் இன்னும் அதிக காலம் இருப்பாரே என்றும், அதனால் தமிழுக்கு மேலும் ஊழியம் செய்ய முடியுமே என்று கவலைப்படுவார். அவர் வீட்டில் எனக்கும், ஓவியர் புகழேந்திக்கும், யுகபாரதிக்கும் ஒரு நாள் விருந்து கொடுத்தார். அப்போது இந்தியாவில் திருமணம் செய்திருந்த மகன் உயிரோடு இருந்த காலம். மித்ரவுக்கு அடுத்ததாக அதுவும் அவருக்குப் பின்னாளில் மிகுந்த கவலையைத் தந்த விடயமாகும்.
இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் காலையும் மாலையும் அலுவலகத்திற்கு வந்து, தனது தமிழ் ஊழியத்தை யாகம் செய்வது போலச் செய்வார். தொடக்கத்தில் சென்னையில் வாட்டி எடுக்கும் வெப்பத்திற்குள், ஒரு சிறிய இடத்தில் அது நடந்தது. பின்னாளில் அது விஸ்தரிக்கப்பட்டுக் குளிரூட்டப்பட்டது. எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு கணமும் தமிழ் இலக்கியம் என்று வாழ்தல் அவர் வாழ்க்கையாக அமைந்தது. அதைப்போல ஈழத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களிலும் பலர் உண்மையான தமிழ் ஊழியம் செய்வது பற்றி அவர் பெருமைப்படுவார்.
ஒரு முறை ஒரு நாவலை வாசித்தால் பின்பு வரிவரியாக எங்கெங்கே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுமளவிற்குக் கிரகிக்கும் அபார சக்தி அவரிடம் இருந்தது. அது என்னை வியப்பில் ஆழ்த்தும். அதைவிட அரசியலா, வரலாறா, பொது அறிவா, எது என்றாலும் ஆழமாக, துல்லியமாக அவர் நினைவில் நிலைத்து நிற்பதைப் பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறேன். அப்படியான விடயங்களை வாசித்து அறிந்து கொள்ளவும் அவர் ஊக்குவிப்பார். எனக்கும் சிலவற்றைப் பிரதி எடுத்துத் தந்திருக்கிறார். அத்தோடு எந்தெந்த படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்கின்ற தன் கருத்தையும் தெரிவிப்பார்.
நான் அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்றாலும் எழுதுவது. ஒவ்வொரு நாளும் சிறிதாவது எழுத முயல்வது. எஸ்.பொ. இறுதிக் காலத்தில் தனது படைப்பைவிட மற்றவர்களின் படைப்பிற்கு அதிக நேரம் செலவு செய்திருக்கிறார். அதை நாங்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். தமிழ் உலகே அதற்கு நன்றி செலுத்த வேண்டும். எஸ்.பொ. வின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதைப் பலர் அறிந்திருப்பார்கள். அது மட்டுமல்ல, அவர் வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு தனி வடிவமைப்புடன், தனிக் கலையழகுடன் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். பதிப்பாசிரியராக நிச்சயம் அவர் கௌரவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அவர் எழுதிய முன்னீட்டில் ஒரு பகுதி தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்காக 1994 இல் இருந்து 2014 வரையும் ஒன்பது புத்தகங்களை வெளியிட்டுத் தந்ததிருக்கிறார். நான் அதற்கு என்றும் நன்றியுடையவன் ஆவேன். அதைச் சாத்தியமாக்க ஒத்துழைத்த அவரது துணைவியாருக்கும் குடும்பத்திற்கும் எனது நன்றிகள். ஒருகட்டத்தில் மித்ர அச்சகத்தை எடுத்து நடத்தும்படி கேட்டுக்கொண்டார். என்னால் நோர்வேயில் இருந்து குடிபெயர முடியாத இக்கட்டான நிலையிலிருந்ததால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது போயிருந்தது. எஸ்.பொ. வுடன் பல முறை தொலை பேசியில் கதைக்கும் வாய்ப்பும், சில கடிதப் பரிமாற்றங்களும் எனக்குக் கிட்டியிருந்தன. அவையும் எனக்குக் கிடைத்த அற்புதமான நினைவுகளே.
எஸ்.பொ. வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்பது யாவரும் அறிந்ததே. என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரு நல்ல ஆசானின், ஒரு நல்ல குருவின், ஒரு நல்ல தந்தை போன்றவரின் இழப்பாகும். எஸ்.பொ. அவர்கள் இலக்கியம் மட்டும் படைக்கவில்லை. பல புதிய எழுத்தாளர்கள் உருவாக ஊக்கமளித்தார். அவர்களை மேலும் செழுமைப்படுத்தினார் என்பதும் மறக்க, மறைக்க முடியாத வரலாற்று உண்மையாகும். அவர் இன்று இல்லாவிட்டாலும் அவர் படைப்புகள், அவர் ஆற்றிய தமிழ் ஊழியம் என்பன என்றும் அவரை ஞாபகம் கொள்ள வைக்கும் கல்வெட்டுக்கள். எஸ்.பொ என்றால் எஸ்.பொ. தான். அவருக்கு இணையாக யாரையும் ஒப்பிடத் தேவையில்லை. அவராக, அவரின் உச்சம், அதை யாரும் தொடமுடியாது என்று எண்ணுகிறேன்.
பேடும் மிதிக்கும் என்கின்ற இந்த நாவல் மனித வக்கிரங்கள் பால், இனம், நிறம் கடந்தது என்பதைப் பாடுபொருளாகக் கொண்டது. எழுத்தாளர்கள்கூட தாங்கள் வாழும் சமுதாயத்திற்கும் அது சார்ந்து நிற்கும் கலாசாரத்திற்கும் அடக்கமானவர்களே. அதையும் மீறி எழுதுவதற்கு ஒரு எழுத்தாளனுக்குச் சுதந்திரமும், நெஞ்சில் மற்றவருக்கு அஞ்சாது மிஞ்சியிருக்கும் துணிவும், சமுதாயத்தின் மேல் காதல் கொண்ட பார்வையும் வேண்டும். அந்த வகையில் இது தியாகலிங்கத்தின் மற்றுமொரு பங்களிப்பாக இருக்கும் என்பதில் பெருமைப்படலாம். அதை அங்கீகரித்து அறிந்துகொள்வது வாசகர்களாகி உங்கள் கடமையாகும்.
சந்திரமதிக்கு காசு எந்த வழியில் வந்தாலும் பறுவாய் இல்லை பொருளோடு சுகமாக வாழ வேண்டும் என்கின்ற ஆசை. இல்லை… பேராசை என்று சொல்லலாம். ஊரில் அவள் குடும்பம் பொருளற்று, பணமற்று, சுகமிழந்து வாழ்ந்த காலம் இங்கே வந்த பின்பு கழிந்தாலும், அவள் அனுபவித்த வறுமையின் கழியாத நினைவு போதாது போதாது என்கின்ற எண்ணத்தை ஓயாது ஓயாது அடுக்கேற்றம் போல ஏற்றிக்கொண்டே சென்றது. பற்குணனுக்கு அரிச்சந்திரன் போல வாழ வேண்டும் என்கின்ற கொள்கை. இருந்தும் தனக்கு வாய்த்த சந்திரமதி அதற்கு எதிராகக் கொடி பிடிப்பது அவனை எப்போதும் வருத்தும். தமிழ்ச் சமுக மரபின்படி சந்திரமதியின் மூக்கணாம் கயிறு அவனிடம் இருந்தது. அவளது நினைவுகளுக்கு நிரந்தரமாக அகலிகையின் சாபம் கிடைத்தது போல பற்குணனின் பிடி இறுகி இருக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். விரும்பியவை முழுமையாக அவனுக்கு அருளப்படாவிட்டாலும் கனதியான அதிகாரம் அவன் கைவசப்பட்டது. கடன் என்னும் மூழ்கும் கப்பலில் குடும்பம் பயணம் செய்யக்கூடாது என்பதே அவன் பதைபதைப்பும், குறிக்கோளும்.
அன்று இந்த நவீன சந்திரமதியான சந்திராவை அழைத்துக் கொண்டு Alnabru என்கின்ற இடத்தில் இருக்கின்ற OBS கடைக்குச் சென்றான். அந்தக் கடைக்குப் பக்கத்தில் Power என்கின்ற இல்லப் பயன்பொருள்கள் கடையும் இருக்கிறது. அதற்குள் போக வேண்டும் என்று சந்திரா குழந்தைப் பிள்ளையாகி பற்குணனின் மேலங்கியைப் பிடித்த வண்ணம் அடம்பிடித்தாள். அவள் இப்படி அடம்பிடிப்பதும் அதைச் சமாளிப்பதும் பற்குணனுக்கு பழகிப்போன விஷயம். அவன் அவளிடம் காரணம் கேட்டபோது அந்தக் கடையில் Kenwood சமையலறை இயந்திரம் மலிவு விற்பனையில் போவதாகவும், அதை வாங்க வேண்டும் என்பதாகவும் கூறினாள். அது தரமான இயந்திரம். அதற்கு நான்காயிரம் குரோனர்கள் தேவைப்படும் என்பது பற்குணனுக்கு விளங்கியது. அவனிடம் அதற்குக் கையிருப்பு போதுமானதாக இருக்கவில்லை. அவன் அவளுக்கு அதை விளங்கப்படுத்தினான். அதை அவள் கேட்பதாக இல்லை. கடன் அட்டையைப் பாவித்து என்றாலும் வாங்க வேண்டும் என்றாள். கடன் அட்டையில் பொருட்கள் வாங்குவது பற்குணனின் கொள்கைக்கு ஒத்துப் போகாத விடயம். அது இரவல் பணத்தில் சுகம் அனுபவிக்கும் சூதாட்டம் என்பது அவனது உறுதியான நம்பிக்கை.
அரிச்சந்திரனின் கொள்கை மாறாது என்பதை அறிந்த பின்பு கவலையோடு மீன் மற்றும் உலர் பொருட்கள் விற்பனையாகும் OBS பல்லங்காடிக்குள் பற்குணன் பின்னே இழுபட்டுச் சென்றாள். பற்குணனுக்கு கடையில் நிற்பவர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பது போல இருந்தது. அவள் தொடர்ந்தும் கடையில் வாயைத் திறவாது தனது கோபத்தைக் காட்டினாள். வீட்டிற்குத் திரும்பி வரும்போது திடீரென ‘எனக்கு ஒரு யோசினை வருகுதப்பா’ என்று திருவாய் மலர்ந்து ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போடத் தயாரானாள். அதைக் கேட்டதுமே பற்குணன் நடுங்கிப் போய்விட்டான். தனது கொள்கைக்கு எதிராக மீண்டும் எதைச் சொல்லப் போகிறாளோ என்று அவசரமாக, அந்தரங்கமாக, சமாளிப்பதற்கு தனக்குள் மதியூகம் நடத்தினான்.
பதில் சொல்லாது ஏதோ யோசித்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்துவதைப் பார்க்கச் சந்திரா என்கின்ற சந்திரமதிக்கு எரிச்சலாக இருந்தது. அதை அடக்கிய வண்ணம், ‘என்னப்பா என்ன எண்டு கேள்க மாட்டியளே?’ என்றாள். வேறு வழி இன்றி ‘கேள்கிறன் சொல்லு’ என்றான் பற்குணன். ‘வசதிகள் எங்களைத் தேடி வராதப்பா. நாங்கள்தான் அதைத் தேடிக் கண்டுபிடிச்சு கைப்பற்ற வேணும். எங்களிட்ட இருக்கிறதை வைச்சே அதை அடையலாம். அதுக்கு கொஞ்சம் யோசிச்சால் சரியப்பா’ என்றாள். இவளும் மதியூகி ஆகிவிட்டாளே என்கின்ற யதார்த்தம் அவனைக் கதி கலங்க வைத்தது. இந்த மதியூகியைக் கேட்டால் நன்மை விளையுமா கேட்காவிட்டால் நன்மை விளையுமா என்பது அவனுக்கு விளங்கவில்லை. தமக்குத் தேவை வரும்போது மதியூகியாகும் மனிதர்கள் பலர் என்பது அவனுக்குத் தெரியும். அவன் அதைக் காட்டிக் கொள்ளாமல், ‘நீ என்ன சொல்ல வாறாய் எண்டதைத் தெளிவாச் சொல்லு சந்திரா’ என்றான். ‘நீங்கள் ஒண்டையும் கவனிக்கமாட்டியள் அப்பா. ஆனால் அதைச் செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது எண்டு அதுக்குச் சப்போட்டா உங்களுக்கு ஏற்ற தத்துவங்களை எடுத்து விடுவீங்கள்’ என்றாள். ‘தொணதொண எண்டு தலையைச் சுத்தி மூக்கைத் தொடாத… விஷயத்தை நேரடியாச் சொல்லு’ என்றான் பற்குணன் கோபத்தோடு. ‘சரி… சரி… கோபப்படாதையுங்க. எத்தினபேர் வீடு வாங்கிற போதே பெரிசா வசதியா வாங்கி, அதில ஒரு பகுதியை வாடகைக்கு குடுத்து, வரியில்லாத பணம் சம்பாதிச்சு சுகமா வாழுகினம். அதைப் பார்த்தாவது நாங்களும் ஏதாவது செய்தால் இப்பிடி நாலாயிரத்துக்கு யோசிச்சுகொண்டு இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லையெல்லே’ என்றாள்.
பற்குணனுக்கு அவள் சொல்வது புதிய கீதா உபதேசம் போலப் பட்டது. இது சட்டத்திற்கு ஏற்பானதோடு அதில் வரி இல்லாத வருமானமும் கிடைக்கும் என்பது விளங்கியது. அப்படியான வீடு வாங்குவது என்றால் இருக்கும் கடனைப் பெருப்பிக்க வேண்டும். அது சிறு சுமை என்றாலும் அதனால் வரும் வருவாயில் அதற்கான கட்டுக்காசும் செலுத்தி ஒரு தொகை செலவிற்கும் எடுக்கலாம் என்பது தெளிவாகியது. அதை வைத்து சந்திராவின் வாயை அடைத்தால் நிம்மதி கிடைக்கலாம் என்று நம்பினான்.
வீடு வாடகைக்குக் கொடுப்பதில் சிக்கல்கள் வரலாம் என்பதை அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் வேலை செய்யும் பாடசாலையின் அதிபர் தனது அனுபவத்தை இளைப்பாறும் அறையில் பகிரும் போது அருகே இருந்து கேட்டிருக்கிறான். அவர் தவறுதலாகப் போதை வஸ்துப் பாவிக்கும் நபருக்குக் கொடுத்துவிட்டு அவனை வெளியேற்றப் பட்டபாடு, பின்பு அதைத் திருத்துவதற்குச் செலவழித்த பணம், அதனால் வந்த நஷ்டம் என்பதை அரை மணித்தியாலமாய் கவலையோடு பிரஸ்தாபித்துக்கொண்டு இருப்பதைக் கேட்டிருக்கிறான். அவருக்கு நேர்ந்தால் தங்களுக்கும் அப்படி நடக்க வேண்டுமா என்று பற்குணன் அதற்குச் சமாதானம் சொல்லிக்கொண்டான்.
*
சில காலத்தில் தற்போது வைத்திருந்த வீட்டை விற்றுவிட்டு பிறின்சென்ங் என்னும் இடத்தில் இருக்கும் பல்லங்காடிக்குப் பக்கத்தில் புதிதாகக் கட்டிய கட்டடத் தொகுதி ஒன்றில் தமக்கான வசந்த மாளிகையை வாங்கி விமர்சையாகக் குடிபுகுந்தனர். அதற்கு மூன்று படுக்கை அறைகளோடு கூடிய பிரதான வீடு எழுபத்து ஐந்து சதுர மீற்றரிலும், வாடகைக்குக் கொடுக்கும் ஒரு துணை வீடு இருபத்து நான்கு சதுர மீற்றரிலும் இருந்தன. இரண்டு வீட்டிற்கும் தனித்தனியான கதவுகள் உண்டு. அந்த இரண்டு கதவுகளையும் உள்ளடக்கியதாகப் பிரதான கதவு அமைந்திருந்தது.
அதிலிருந்து வீட்டுக்காரர் திரு பற்குணன் தனது தொழிலைப் பொறுப்போடு ஆரம்பித்தார்.
முதலில் டூரோ என்னும் Italy-ஐச் சார்ந்த நபர் வாடகைக்கு விண்ணப்பித்தான். வீடு பார்க்க வந்தபோதே அவனை முதலில் பற்குணன் பார்த்தான். தலை, தாடி, மீசை என்பனவற்றை மொத்தமாக வழித்து புத்தத் துறவிபோல காட்சி தந்தான். அவன் ஐந்தடி ஐந்து அங்குலம் இருப்பான். அணில் போன்று மிதந்து நின்ற முன்வாய்ப் பற்கள். நீலநிறத்தில் சட்டையும் ஜீன்சும் அணிந்திருந்தான்.
முதலில் ஒரு வீட்டில் கூட்டாகச் சேர்ந்து வாழ்ந்ததாகவும் (ஒரு வீட்டில் இருக்கும் பல அறைகளைப் பல நபர்கள் வாடகைக்கு எடுத்திருப்பார்கள். சமையல் அறை, குழியல் அறை, வாழ்க்கை அறை ஆகியவை அனைவரும் பகிர்ந்து கொள்வதாக இருக்கும்) அது தனக்கு வசதியாக அமையவில்லை என்றும், தனக்கே உரியதாகச் சமையல் அறை, குழியல் அறை, வாழ்க்கை அறை இருக்கும் குடியிருப்பு வேண்டும் என்பதால் இப்படியான வீட்டில் வாசிக்க விரும்புவதாய் பற்குணனிற்கு விளக்கம் கொடுத்தான்.
முதல் வீட்டில் கூட்டாக வாழ்ந்ததால் இவன் எப்படி வீட்டை வைத்திருப்பான் என்பதை அறியச் சரியான தகவல்களைப் பெறமுடியாது என்பது பற்குணனுக்கு விளங்கியது. பற்குணன் முதல் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரனின் அலைபேசி எண்ணை விண்ணப்பத்தில் இணைக்குமாறு கூறினான். அத்தோடு முன்பணமாக இருபத்தி நான்காயிரமும் முதல் மாத வாடகை எட்டாயிரமும் செலுத்தப் பணம் இருக்கிறதா என்று கேட்டான். அவன் அனைத்தும் தயாராக இருக்கிறது என்றான். அதன் பின்பு தனக்குப் படுக்கும் சோபா வேண்டும் என்றான். தன்னிடம் அப்படிப் படுக்கும் சோபா இருப்பதால் தானே கொண்டு வந்து அதைப் போடுவதாய் கூறினான். பற்குணன் மற்றைய தளபாடங்கள் வாங்கி இருந்தாலும் கட்டில் மாத்திரம் வாங்காது தாமதித்தது சிரி என்று தனக்குள் பெருமையாக எண்ணிக் கொண்டான்.
வாடகை ஒப்பந்தம் இணை நிறுவனப் பக்கம் ஒன்றினூடாக நவீன முறையில் கைச்சாத்தானது. கையெழுத்து வைக்காது வங்கி அடையாளப்படுத்தும் முறை மூலம் அது நடந்தேறியது. அத்தோடு குடியேறியதற்கான பதிவும் உருவாக்கப்பட்டு வங்கி அடையாளப்படுத்தும் முறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. முதல் வாடகைக்காரன் நல்லவனாக இருக்கிறான் எனச் சந்திரா புகழ் பாடினாள்.
வாடகைப் பணத்தில் கட்டுக்காசுக்கு ஒரு பகுதியைக் கட்டிவிட்டு மீதத்தைச் செலவழிப்பது சந்திராவுக்கும் பற்குணனுக்கும் ஒருவித பொருளாதார சுதந்திரத்தைக் கொடுத்தது. அதில் தங்களுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் சுற்றுப்பிரயாணங்கள் செய்வதற்கு வசதி கிடைத்த மகிழ்வு அவர்களை மேலும் ஊக்கமூட்டியது. அதனால் உந்தப்பட்ட சந்திரா வீட்டில் இருக்கும் அறையை வாடகைக்கு விட்டால் என்ன என்று கேட்டாள். ‘உன்ர பேராசைக்குக் கொள்ளி வைக்க’ என்று பற்குணன் துள்ளிய துள்ளலில் அவள் அடங்கிப்போனாள். பணம் மட்டும் நிம்மதி தருவதில்லை என்பதில் பற்குணன் தெளிவாக இருந்தான். பணம் மட்டுமே நிம்மதி தரும் என்பதில் சந்திரா பிடிவாதமாக இருந்தாள். இருந்தும் சில விட்டுக் கொடுப்புகளோடு அவர்கள் குடும்ப வண்டி நகர்ந்துகொண்டு இருந்தது.
டூரோ பிரச்சனை இல்லாது இருப்பதைப் பார்த்த பற்குணன் இப்படி என்றால் இவன் எவ்வளவு காலமும் குடியிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுது, தனக்கு நகரத்துக்குள் இருப்பது பிடிக்கவில்லை என்றும், தான் நகரத்துக்கு வெளியே குடியிருக்கப் போவதாகவும், அதற்கு அனுமதி அளிக்க முடியுமா என்று பற்குணனிடம் ஒரு நாள் கேட்டான். பொதுவாக வாடகை வீட்டை காலி செய்து வெளியேறுவது என்றால் மூன்று மாதத்திற்கு முன்பே அறிவித்தல் கொடுக்க வேண்டும். அவன் அடுத்த மாதமே வெளியேற வேண்டும் என்று கேட்டபோது முதலில் என்ன செய்ய வேண்டும் என்று பற்குணனுக்கு விளங்கவில்லை. இருந்தும் பணத்தைவிட மனிதர்களே முக்கியம் என்கின்ற தனது கொள்கைக்கு ஏற்ப அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதமே வெளியேற அனுமதித்தான். அதன்படி வெளியேறுவதற்கான படிவமும் வங்கி அடையாளப்படுத்தும் முறை மூலம் உறுதி செய்யப்பட்டது.
மீண்டும் வாடகைக்கு வீடு இருப்பதாக இணையத்தில் விளம்பரம் கொடுத்ததால் பலர் அலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அதிபர் அன்று ஒரு நாள் பற்குணனோடு கதைக்கும் பொழுது பற்குணன் தான் வாடகைக்கு வீடு கொடுப்பது பற்றிப் பிரஸ்தாபித்தான். அப்போது அவர் ஆண்களைவிடப் பெண்களுக்கு கொடுப்பதே மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லி வைத்தார். அதைப் பற்குணன் நம்பினான். அதிலிருந்து அவனது பட்டியலில் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்றாகியது. பெண்களில் சுதேசப் பெண்கள் வெளிநாட்டவரிடம் வாடகைக்கு வருவதற்குப் பொதுவாக விரும்புவதில்லை. இப்படியாகப் பற்குணனின் வாடிக்கையாளர்கள் குறைந்தாலும் பெண் என்றாலே வீட்டைச் சேதப்படுத்தாது பார்த்துக் கொள்வாள் என்று எண்ணியவன், இனி கொடுப்பது என்றால் ஒரு பெண்ணிற்கே கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.
அப்பிடியாக பற்குணன் நினைத்தது போல வந்து பார்த்துவிட்டுச் சென்ற சில பெண்கள் காட்டில் தொலைந்த கட்டெறும்பாய் பதில் அளிக்கவில்லை. சலிப்பு ஏற்பட்டாலும் பற்குணன் நம்பிக்கையோடு இருந்தான். ஒரு நாள் எத்தியோப்பியா நாட்டைச் சார்ந்த கிளியோபாற்றா வீட்டைப் பார்க்க வேண்டும் என்று பற்குணனிடம் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூறிவிட்டு வீடு பார்க்க வந்தாள்.
வழமையான ஆப்பிரிக்கப் பெண்கள் போலச் சுருண்டு, தலையோடு ஒட்டிய கேசம் அல்ல அவளுக்கு. சுருண்டு இருந்தாலும் சடைத்த கேசமாக மெல்லிய கம்பிகள் போலத் தலையை அடர்த்தியாக நிறைத்து இருந்தது. அதை ஒருவாறு வழித்து இழுத்துக் கட்டியிருந்தாள். அந்தக் கம்பிச் சடை இயற்கையா அல்லது செயற்கையா என்கின்ற தடுமாற்றத்தை தரவல்லதாகியது. அவனுக்கு அதைத் தொட்டுப் பார்த்தால் என்ன என்கின்ற எண்ணம்கூட ஏற்பட்டது. கிளியோபாற்றாவுக்கும் இப்படித்தான் கேசம் இருந்திருக்குமா என்கின்ற கேள்வி பிறந்தது. பற்குணனின் தோள்மூட்டைத் தாண்டா முடியாத ஐந்தடி உயரம். பருமனாக இருந்தாலும் பெண்ணிற்கான வடிவம் மாறாத உடல். வெள்ளைச் சுவரில் கறுப்பில் பொட்டு வைத்தது போன்ற கண்கள். அரியதரம் போன்ற தட்டை மூக்கு. தனது பெயர் கெடாஸ் என்றாள்.
வீட்டைக் காட்டிய உடன் கிளியோபாற்றா கெஞ்சும் குரலில் தான் இப்போதே குடிவர வேண்டும் என்றாள். பற்குணன் வீடு வாடகைக்கு எடுப்பது என்றால் அவள் என்ன செய்ய வேண்டும் என்று விபரமாகக் கூறினான். அவளுக்கு அது சட்டென்று பற்றிக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றாக அவளுக்கு விளங்கப்படுத்த வேண்டி இருந்தது.
வீட்டிற்குக் குடிவந்த காலத்திலிருந்து அடுப்பை இயக்குவது எப்படி? துணி கழுவும் இயந்திரத்தை இயக்குவது எப்பிடி? வெப்பமூட்டியை இயக்குவது எப்பிடி? அலைபேசியில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவது எப்பிடி? என்பதாகப் பல எப்படிகள் அவளிடம் புழுத்தன.
ஒருநாள் கழிவு நீர்க் குழாயால் கழிவுநீர் இறங்கவில்லை என்று அலைபேசியில் தொடர்பு கொண்டாள். வீட்டில் குழியல் அறை கழிவுநீர்க் குழாய், சமையல் அறை கழிவுநீர்க் குழாய், என்று எங்கும் அடைப்பு என்பதே சர்வமயமாக இருந்தது. பற்குணன் ஒவ்வொன்றாக அதைத் திறந்து துப்பரவு செய்தான். கிருஷ்ண பரமாத்மா திரௌபதிக்குக் கொடுத்த சீலை போல அவள் தலைமயிரைக் கழிவுநீர்க் குழாய்களில் இருந்து இழுத்து இழுத்து துச்சாதனன் போலக் களைத்து வீழ்ந்து விடுவேனோ என்று பற்குணன் பயந்தான்.
ஒரு வருடம் குடியிருந்தவள் பின்பு வாடகை அதிகமாக இருப்பதால் தான் வேறு வீட்டிற்குப் போகப் போவதாக அலைபேசியில் தொடர்புகொண்டு கூறினாள். பற்குணன் அதை குறுஞ் செய்தியாக அனுப்பிவிடக் கூறினான். அவளும் அதற்கு இசைய ஒரு குறுஞ் செய்தியை அனுப்பிவிட்டாள்.
அதன் பின்பு பிள்ளை பிடிகாரரைப் போல அவன் வேறு வாடகைக்காரரைத் தேடத் தொடங்கினான். அதில் ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்த பின்பு கெடாஸ் அலைபேசியில் தொடர்புகொண்டு தான் தொடர்ந்தும் வீட்டில் குடியிருக்க விரும்புவதாகக் கூறினாள். அதற்கு அவன் ஏற்கனவே வேறு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும், அவள் கட்டாயம் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றும் கூறினான். அவளுக்குக் கட்டின புருசனைப் பிரியும் மனநிலை. இருந்தும் வேறு வழி இல்லையே என்கின்ற கவலை.
*
யூலியா ரஷ்யா நாட்டுக்காரி. ஒஸ்லோவில் கணக்காளராக வேலை செய்கிறாள். அவளுக்குத் துரண்கெய்ம் என்கின்ற நகரத்தில் வீடு இருக்கிறது. அதை வாடகைக்குக் கொடுத்துவிட்டு இங்கே வேலை கிடைத்ததால் வந்திருக்கிறாள். வந்த இடத்தில் குடியிருப்பதற்கு வீடு தேவைப்பட்டது. அதனால் பற்குணனின் விளம்பரத்தைப் பார்த்துத் தொடர்புகொண்டாள். பற்குணன் அவளை வீடு பார்க்க வரச் சொன்னான்.
அவளை நேரே பார்த்த போது அவளுக்கு நாற்பது வயது இருக்கும் என்று பற்குணனுக்குத் தோன்றியது. பொன்னிறக் கேசத்தைக் கழுத்தளவில் கத்தரித்து சரை சரையாகச் சுருட்டி வைத்திருந்தாள். ஒருவிதமான பச்சையும் நீல நிறமும் கலந்ததான ஒளி தெறிக்கும் விழிகள். வரிசை மாறாத சங்குப் பற்கள். மெல்லிய உதடுகளில் ஏறியிருந்த சிவப்புச் சாயத்தில் அது மிளகாய்ப்பழமான தோற்றம். கிளியின் அலகு போல வளைந்த மூக்கு. அவளின் வயதை மீறிய ஒருவித வசிகரிப்பான தோற்றம். அதில் பற்குணன் தன்னை மறந்து சிலகணங்கள் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். பின்பு தன்னைச் சமாளித்துக்கொண்டு அவளோடு கதைத்தான்.
அவளுக்கு வீடு பிடித்துக்கொண்டது.
வீட்டிற்குக் குடிவந்த பின்பு வீட்டை நன்கு பார்த்துக்கொண்டாள். இருந்தும் ஒரு நாள் கழுவும் இயந்திரத்திற்குள் கரையும் உடையைப் போட்டதால் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. பற்குணன் போய் அதைத் துப்பரவு செய்து இயங்கவைத்துக் கொடுத்தான்.
யூலியாவிற்கு வேலை போய்விட அவள் துறண்கெய்ம் கிளம்பிவிட்டாள். அதனால் பற்குணனுக்கு அடுத்த ஆளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த முறை அவ்வளவு சுலபமாய் ஆள் பிடிப்பு நடந்து விடவில்லை. பற்குணனின் எண்ணப்படி பெண்கள்தான் வீட்டைக் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் ஆண்களின் விண்ணப்பங்களை நிராகரித்தான். இலவு காத்த கிளியாகக் காலம் கரைந்தது. அவனுக்குக் காத்திருப்பதில் சலிப்பு ஏற்பட்டது. இறுதியில் யாருக்காவது வாடகைக்குக் கொடுப்போம் என்கின்ற முடிவுக்கு வேறு வழியின்றி வந்தான்.
அந்த நேரத்தில்தான் ஆரி என்கின்ற எஸ்தோனியா நாட்டுக்காரன் தொடர்புகொண்டான். தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்றான். அலுத்துப்போன பற்குணன் அவனை வீடு பார்க்க வரச் சொன்னான். அதற்குச் சந்திராவின் நச்சரிப்பும் ஒரு காரணமாகியது.
அவனுக்கு நாற்பது வயது இருக்கும். கட்டுமஸ்தான ஐரோப்பியருக்கு உரித்தான தேகம். இருந்தும் பழுப்பு நிறக் கண்கள். பழுப்ப நிறத்தில் பற்கள். ஆங்கிலத்தில் தட்டித் தட்டிக் கதைத்தான். அவனது பல்லைப் பார்த்துப் புகை பிடிப்பானோ என்கின்ற எண்ணம் பற்குணனுக்கு வந்தது. வீட்டிற்குள் புகை பிடிக்கக்கூடாது என்றான். தான் அப்படி புகை பிடிக்க மாட்டேன் என்று அவன் பதில் சொன்னான். தான் ஒரு பாதணிக் கடையில் பாதணிகள் திருத்தும் வேலை செய்வதாயும், வாடகை ஒழுங்காச் செலுத்த முடியும் என்றும், சந்தேகம் இருந்தால் தனது முதலாளியைத் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் கூறினான். பின்பு தயங்கிவிட்டு முற்பணம் தரவேண்டுமா அல்லது முற்பணத்திற்குக் காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து உத்தரவாதம் வாங்கித் தரலாமா என்று கேட்டான்.
பற்குணன் யோசித்தான். இவனையும் வேண்டாம் என்றால் இனி என்கின்ற கலக்கம் அவனிடம். சந்திரா வேறு மேலதிகப் பணம் செலவுக்கு இல்லாது தவண்டையடிப்பாள். அந்தத் தொணதொணப்பைத் தாங்குவதிலும் இவனுக்கு என்றாலும் வாடகைக்குக் கொடுப்பது மேலாகப்பட்டது.
‘இது முற்பணம் போலவே. உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. வாடகைகூட நான் நேரத்திற்கு ஒழுங்காகச் செலுத்திவிடுவேன்’ என்று ஆரி தொடர்ந்தான். பற்குணனுக்கு வேறு வழியிருக்கவில்லை. சந்திராவின் சுகமான வாழ்க்கைக்கு வீட்டுவாடகை முக்கியம். அல்லது அவள் தவிப்பு இவன் நிம்மதியை அசுரனாக வதம் செய்துவிடும்.
‘என்ன யோசிக்கிறியள்? உங்களுக்கு முதலாளியின் தொடர்பு எண் தரவா?’ என்று ஆரி கேட்டான். ‘பறுவாய் இல்லை. உங்களை நம்புகிறேன்’ என்றான் பற்குணன். ஆரி தனது முயற்சியில் அயராது பாடுபட்டான். ‘எப்போது திறப்பைத் தருவீர்கள்’ என்று கேட்டான். சுதாரித்துக்கொண்ட பற்குணன் ‘முதலில் இணையத்தின் ஊடாக வாடகை ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதன் பின்பு முதல் மாத வாடகையும் முற்பணத்திற்கான காப்புறுதியும் நீங்கள் வழங்க வேண்டும். அது முடிந்தால் சாவியைத் தரலாம்’ என்று கூறினான். ‘சரி… நான் அதைச் செய்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றான். பற்குணன் ஆற அமர ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என்றுதான் நினைத்தான். அவன் நினைப்பு யானை ஏறிய பானையாக, சிலநாட்களிலேயே படுக்கும் சோபாவிற்கு மேலே போட்டுப் படுப்பதற்குக் குசன் மெத்தை ஒன்றுடன் ஆரி வந்து குடியேறினான்.
புதுப் பெண்ணே, புதுப் பெண்ணே, நெருப்பு எடுத்து வா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்படி என்பதை அறியாத பற்குணன் சந்திரமதியின் சந்தோஷத்தில் தனது சந்தோஷத்தைக் கண்டு மகிழ்ந்தான். காலம் கனவு போலக் கரைந்து சென்றது. இடையில் இணையத் தொடர்பு பிழைப்பதாகவும் தனக்கு உதவி வேண்டும் என்றும் பற்குணனிடம் உதவி கேட்டான். அது வீடு என்ன நிலைமையில் இருக்கிறது என்பதைத் தான் நோட்டமிட வசதியாக இருக்கும் என்று பற்குணன் எண்ணிக் கொண்டான்.
வீடு அப்போது ஒழுங்காக இருந்ததில் பற்குணன் திருப்தி அடைந்தான். அவன் இணைய இணைப்பைச் சரி செய்து கொடுத்துவிட்டு நிம்மதியாகத் திரும்பி வந்தான். சில நாட்களின் பின்பு ஆரியைக் கடைக்குப் போகும்போது கண்டான். கடைக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து பியர் அருந்திக்கொண்டு இருந்தான். கோடை வெயிலை அனுபவிக்கிறான் என்று எண்ணிய வண்ணம் அவனைப் பார்த்துச் சிரித்தான். அவனும் கையை உயர்த்திக் காட்டிச் சிரித்தான். அதன் பின்பு அடிக்கடி அவனை பியர் புட்டிலுடன் கண்டிருக்கிறான். இங்கே இது ஒரு சாதாரண விடயம் என்பதால் பற்குணன் அதைக் கணக்கெடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு பயம் அவன் மனதில் முளை விட்டது.
அடுத்த மாத வாடகையில் தனக்கு ஒரு புதிய அலைபேசி வாங்க வேண்டும் என்று சந்திரா ஒப்பந்தம் போடுவது போல அன்று ஒரு நாள் கேட்டாள். பற்குணனால் என்ன சொல்ல முடியும்? தலையைக் கோயில் மாடு போல நன்கு ஆட்டி வைத்தான். அவனைப் பொறுத்தவரைப் பணம் தங்களது உறவில் நெஞ்சி முள்ளாக விழுந்துவிடக்கூடாது என்கின்ற கவலை. கனவில் கருக்கொள்ளும் பணம் கைக்கு வராது என்பதை முதலாம் திகதி கழிந்தும் வாடகை வராதபோதுதான் பற்குணனால் உணர முடிந்தது. பணம் ஏன் கட்டவில்லை என்று கேட்டு ஆரிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான். அரச உதவிப் பணம் வருவதில் தாமதம் அதனால் தன்னால் கட்டமுடியவில்லை என்று பதில் வந்தது. அப்பொழுதுதான் அவன் வேலை இல்லாது இருப்பது பற்குணனுக்கு தெரியும்.
ஒரு கிழமை கழித்து அவன் அந்தப் பணத்தின் பாதித் தொகையைக் கட்டினான். பின்பு பத்து நாள் கழித்து மீதித் தொகையைக் கட்டினான். அடுத்த மாதமும் அவன் முதலாம் திகதி பணம் கட்டவில்லை. பற்குணன் அவனுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தான். அதன் பின்பு ஐந்து நாள்கள் கழித்துப் பணம் கட்டினான். அடுத்த மாதம் ஐந்தாம் திகதி வரையும் எந்தப் பணமும் வரவில்லை. பற்குணன் வீட்டைவிட்டு மூன்று மாதத்தில் வெளியேற வேண்டும் என்று கடிதம் அனுப்பி வைத்தான். நேரே கூப்பிட்டுச் சொல்லலாம். அது இங்கே செல்லுபடியாகாது. வாடகைக்கு இருப்பவர்களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் இருக்கின்றன. வீட்டை வாடகைக்கு விடுபவர்களுக்கு வாடகைக்கு இருப்பவர்களின் தயவு வேண்டிய நாடு இது. தயவு இல்லாவிட்டால் ஒவ்வொரு அடியையும் சிந்தித்தே வைக்க வேண்டும். ஆதலால் எதுவென்றாலும் அது எழுத்து மூலம் இருப்பதே செல்லுபடியாகும்.
அதன் பின்பு உதவிப் பணம் கொடுக்கும் அரச நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி தொடர்புகொண்டு பற்குணனுடன் கதைத்தாள். இனி அவர் ஒழுங்காக வாடகை செலுத்தினால் நீங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடமுடியுமா என்று கேட்டாள். வாடகை ஒழுங்காய் வந்தால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பற்குணன் சமாதானமானான். அதைத் தொடர்ந்து ஒரு மாதம் ஒழுங்காக வாடகை வந்தது. பின்பு பழைய குருடி கதவைத் திறவடி என்பதாக அதே அசண்டையீனம். பற்குணன் கொதி கொண்டான். நோர்வேயில் வாடகை வீட்டிலிருந்து ஒருவரை எழுப்புவது என்பது மயிரால் கட்டி மலையை இழுப்பது போன்றது. அதற்கு Namsmann என்று காவலிடம் ஒரு அமைப்பு இருக்கிறது. அவர்களுக்கு விண்ணப்பித்து அவர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாடகைக்காரனை வீட்டிலிருந்து எழுப்ப முடியும். பற்குணனுக்கு இதில் முன்பின் அனுபவம் கிடையாது. இருந்தும் தான் கொடுத்த எச்சரிக்கைக் கடிதங்கள் குறுஞ்செய்திகள் ஆகியவற்றை இணைத்து அவனை எழுப்பித் தரவேண்டும் என்று விண்ணப்பித்தான். இரண்டு கிழமைக்குப் பின்பு முறைப்படி சட்டத்தை ஆதாரமாகக் காட்டி வாடகைக்காரனுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்குமாறு அறிவுறுத்தி அந்த விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்பி வைத்தனர். பற்குணனிற்கு வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டதான தவிப்பு. மீண்டும் ஒழுங்காக எச்சரிக்கை எழுதத் தொடங்கலாமா என்று நினைத்தான். பின்பு அவன் பல மாதங்கள் வாடகை காட்டாமல் விடட்டும், அதன் பிறகு தனது வேலையைத் தொடங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். பல மாதங்கள் வாடகை காட்டாவிட்டால் சட்டப்படி வீட்டைவிட்டு வெளியேற வேண்டி வரும் என்பதைப் பற்குணன் தற்போது அறிந்து வைத்திருந்தான்.
பணம் ஒழுங்காக் கிடைக்காததில் சந்திராவுக்குப் பொறுக்க முடியாத அவஸ்தை. அதைப் பற்குணனிடம் கேட்க முடியாது. கேட்டால் நீ ஒரு பேராசை பிடித்த பிசாசு என்று சொல்லி விடுவானோ என்கின்ற பயம்.
பல நாள்களாக ஆரி குடியிருக்கும் வீட்டின் கதவின் முன்பு பெண் ஒருத்தியின் பாதணி நிரந்தரமாகத் தரித்து நிற்பதைக் கண்டான். வாடகை ஒப்பந்தப்படி ஒருவர் மட்டுமே வீட்டில் தங்கி இருக்கலாம். உறவினர்கள், நண்பர்கள் வேண்டும் என்றால் வந்து போகலாமே தவிரத் தங்கி இருக்க முடியாது. அவன் அந்த விதிகளை மதிப்பவன் அல்ல என்பதை ஏற்கனவே பற்குணன் அறிந்து கொண்டான். இப்போது அதற்கு மேலும் ஆதாரம் கிடைத்தது போல இருந்தது. கதவைத் தட்டி விசாரிக்கலாம். தட்டினாலும் அவன் திறப்பானா என்று தெரியாது. திறந்தாலும் அது பயனுள்ள உரையாடலாக இருக்குமா என்கின்ற குழப்பம். பற்குணன் கதவைத் தட்டவில்லை. அதன் பின்பு குடித்துவிட்டு அவனும் அவளும் சண்டையிடும் சத்தம் சில வேளையில் கேட்கும். பற்குணனுக்கு அப்போது நவ துவாரங்களும் அரைத்த மிளகாயை அப்பியதாகப் பற்றி எரியும்.
நாள்கள் செல்லச் செல்ல அவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டான் என்பதை பற்குணன் அறிந்து கொண்டான். அதை நிரூபிப்பது போல எப்போதும் வியர் புட்டியுடன் அலைவான். இடைக்கிடையே கதவின் முன்பு வாந்தி எடுத்து அசிங்கம் செய்திருப்பான். அதைத் துப்புரவு செய்வது பற்றி எந்த அக்கறையும் காட்டமாட்டான். அவன் ஆழக்கடலில் அமிழும் கல்லாக மதுவுக்கு அடிமையாகிக் கொண்டு இருக்கிறான் என்பது பற்குணனின் நிம்மதியை மேலும் தின்றது.
ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அதற்கான வலுவான காரணங்களைக் காட்டி கடிதம் அனுப்பி வைத்தான். அதற்கு ஒரு மாதத்திற்குள் பதில் அழிக்காவிட்டால் வாடகைக்கு இருப்பவன் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியது கட்டாயமாகும் என்கின்ற ஒரு சட்ட நுணுக்கத்தை பற்குணன் ஒருவாறு அறிந்துகொண்டு, அவனுக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி வைத்தான். ஆரிக்கு இருக்கும் மதுப் பிரச்சினையில் அவன் பதில் கடிதம் எழுதமாட்டான் என்கின்ற ஒரு குருட்டு நம்பிக்கை பற்குணனிடம் இருந்தது.
காகம் இருக்கப் பனம்பழம் விழுகிறதோ இல்லையோ ஆரி பதில் எழுத மறந்து போய்விட்டான். பற்குணனுக்கு அதை எண்ணி மனதிற்குள் சீட்டி அடிக்கத் தோன்றியது. அது மனித நேயம் அற்ற செயல் என்று எண்ணிச் செய்யாது விட்டான். இருந்தும் இன்னும் இரண்டு மாதத்தில் முறைப்படி தான் நம்ஸ்மன்னைத் தொடர்புகொண்டு அவனை எழுப்பி விடலாம் என்கின்ற நம்பிக்கை உண்டாகியது. வீடு என்ன நிலையில் இருக்கிறது என்பது பற்குணனுக்கு இப்போது தெரியாது. நீண்ட காலமாகவே ஆரி அவனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.
எதிர்பாராது வாடகைக் காலம் முடிவதற்குப் பத்து நாள்கள் இருக்கும் பொழுதே தான் வீட்டை விட்டு வெளியேறுவதாயும், தனக்கு மது விலக்கிற்கான மையத்தில் இடம் கிடைத்திருப்பதாகவும், பற்குணனிடம் வந்து கூறினான். வீட்டைத் துப்பரவு செய்த பின்பு தருவதாகவும், தற்போது வீட்டை ஒரு முறை வந்து பார்க்க முடியுமா என்றும் கேட்டான்.
பற்குணன் சென்றான். அவனுக்கு வயிற்றைப் புரட்டி குடலைப் பிடுங்கிக்கொண்டு வந்தது. அவன் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான். ஆழக்கடலில் அமிழ்ந்த குரலாக எதுவும் பற்குணன் காதில் ஏறவில்லை. கழிப்பறை அடிவாங்கி அடிவாங்கி அலங்கோலமாய் கிடந்தது. பல்கணிக் கதவு கோடாரியால் கொத்தியது போன்று காயப்பட்டுக் கிடந்தது. தரை பொன் நிறத்தில் இருந்தது கறுப்பாகிப் போனது. எங்கும் அழுக்கு. எதிலும் காயம். அதைப் பார்க்கும் மனநிலையில் பற்குணன் இல்லை. உதிரம் கண்ணீராக வடிவதாக அவன் கண்கள் கனத்தன. வீட்டிற்குள் இருந்த வெடுக்கைத் தாங்க முடியவில்லை. துப்பரவு செய்த பின்பு வந்து பார்க்கிறேன் என்றுவிட்டுத் திரும்பி வந்துவிட்டான்.
மூன்று நாள்களின் பின்பு ஆரி அலைபேசியில் தொடர்புகொண்டான். உங்களுடன் ஒரு அதிகாரி கதைக்க வேண்டும் என்றான். அலைபேசி கைமாறியது. அடுத்த முனையில் ‘நான் லிசா, மது விலக்கு மையத்திலிருந்து கதைக்கிறேன். ஆரியை இங்கே சேர்த்திருக்கிறோம். அவர் இங்கிருந்து இப்போது வெளியேற முடியாது’ என்றாள். எவ்வளவு காலத்திற்கு என்று பற்குணன் கேட்டான். அதற்கு அவள் தன்னால் அதைச் சொல்ல முடியாது என்றும் ஆனால் நீண்ட காலம் இருக்க வேண்டி வரும் என்று ஆரூடம் தெரிவித்தாள். ‘வீட்டுச் சாவியை ஆரி தந்துவிட்டுப் போகவில்லை. அதை வாங்கி அனுப்ப முடியுமா?’ என்று கேட்டான். அவள் வாங்கி அனுப்புவதாக உறுதி அளித்தாள்.
ஆரி இனித் திரும்பி வரமாட்டான் என்பதில் சந்தோஷம் இல்லாவிட்டாலும் கவலை இருக்கவில்லை. அதே நேரம் சாவி வரவேண்டுமே என்பது கவலையாக இருந்தது. அதன் பின்பு துப்பரவு செய்து, விளம்பரம் கொடுத்து, வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடும்வரைக்கும் அமைதி கிட்டாது என்று தோன்றியது.
சில நாள்களின் பின்பு சாவி வந்தது. வீட்டைத் திறந்து பார்க்கப் போகும் பொழுது சந்திராவும் வந்தாள். தாங்க முடியாத அந்த மணத்தால் அவர்களது வீட்டிற்குத் திரும்பி ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். கையெடுத்துப் பற்குணனைக் கும்பிட்டு ‘நீங்கள் முதலில் துப்பரவு செய்யுங்கள், மீதிக்கு நான் வந்து உதவி செய்கிறேன்’ என்றாள். பற்குணனுக்குக் கழிவிரக்கம் ஏற்பட்டது. அவன் மீண்டும் சென்றான். வீடு கன்னியைக் கற்பழித்தது போலக் கசங்கிக் கிடந்தது. அந்த வெடுக்கு என்ன என்று பற்குணனுக்கும் விளங்கவில்லை. வயிற்றைப் புரட்டியது. சமாளித்துக் கொண்டு முதலில் ஒவ்வொரு அங்குலமாகத் தனது அலைபேசியில் படம் எடுத்துக் கொண்டான். பின்பு வந்து போகுமளவிற்கு மேலோட்டமாக அலுவலைப் பார்த்தான். முழுமையாகத் துப்பரவு செய்யமுடியாது. அதற்கு முன்பு காப்புறுதி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் வந்து பார்ப்பார்களா என்பது அவனுக்கு விளங்கவில்லை. பார்த்தால் வேலை சுலபமாக அமையலாம் என்கின்ற ஒரு நப்பாசை இருந்தது.
பற்குணன் வாடகைக்காரன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய படிவத்தை நிரப்பி அதில் தனக்கு நஷ்டமான தொகையைப் போட்டு அனுப்பி வைத்தான். எறிந்த பந்தைப் போல ஆரி அதை நிராகரித்து உடனடியாகப் பதில் அனுப்பிவிட்டான். பற்குணனிற்கு உடல் கோபத்தில் உலையாகக் கொதித்தது. காப்புறுதி நிறுவனத்தின் வாடகை முற்பண உத்தரவாதம் இருந்ததால் அவர்களைத் தொடர்பு கொண்டான். வீட்டில் இருக்கும் அசையும் பொருட்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு மட்டுமே தாங்கள் பொறுப்பேற்க முடியும் என்றும், வீட்டின் அசையாத பகுதியில் இருக்கும் சேதங்களுக்கு நீதிமன்றமோ அல்லது அதைப் போன்ற சட்ட பரிபாலன அமைப்போ உங்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு தந்தாலே நஷ்டஈடு தரமுடியும் என்று கூறினார்கள். பற்குணனுக்குக் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டதான மூச்சுமுட்டல். முதலில் அசையும் பொருள்களுக்கான நஷ்டஈடு பற்றிய விண்ணப்பத்தை அனுப்பி வைத்தான்.
நீதிமன்றத்திற்குப் போவது என்றால் காசை அள்ளி இறைக்க வேண்டும். இறைப்பது திரும்பி வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிடுவதான செயலில் ஈடுபட அவன் விரும்பவில்லை. காப்புறுதி நிறுவனமும் வந்து பார்க்கவில்லை. இதற்கு வேறு என்ன வழி இருக்கிறது? அவன் இணையத்தின் உதவியை நாடினான். இணையம் பலருக்குப் பல வேளைகளில் இருட்டறையில் ஏற்றி வைக்கப்படும் தீபம் போன்றது.
Husleietvistutvalget (HTU) என்கின்ற அரச அமைப்பு இப்படியான வழக்குகளைப் பேசிச் சமாதானமான முடிவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதைக் கண்டு பிடித்து, அவர்களின் இணைய தளத்திற்குச் சென்று, தனது வழக்கைப் பதிவு செய்தான்.
சில நாள்களில் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. அதில் மேலதிக விபரம் கேட்டிருந்தனர். வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான ஒழுங்கான நஷ்டஈட்டு விபரத்தை மீள்பார்வை செய்து ஆதாரங்களோடு அனுப்புமாறு கேட்டிருந்தனர். அத்தோடு இந்த வழக்கைப் பார்ப்பதற்கு அவர்களுக்குக் கட்ட வேண்டிய பணத்திற்கான விபரங்களையும் அனுப்பி இருந்தனர். அவர்களுக்குக் கட்டும் தொகை பெரிதாக இருக்கவில்லை. அதைச் செய்து முடிப்பதற்கும் அவனுக்கு இணைய உதவியே தேவைப்பட்டது.
ஆரி மதுவிலக்கு மையத்தில் இருப்பதால் அவனுக்கு இலவசமாகச் சட்டத்தரணிகளை அரசாங்கம் கொடுத்திருந்தது. அவர்கள் அந்த வழக்கிற்கு எதிரான தங்களது எதிர் மனுவை அனுப்பி இருந்தனர். அதில் ஆரியில் எந்தப் பிழையும் இல்லை என்றும், ஆரிதான் வீட்டிற்குச் சேதாரத்தை விளைவித்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.
சந்திரா இப்போது எதுவும் பேசுவதில்லை. எதைக் கேட்டும் நச்சரிப்பதில்லை. தான் செய்தது பிழையோ என்கின்ற குற்ற உணர்வில் அவள் வாடுவது பற்குணனுக்குத் தெரியும். இருந்தும் பற்குணன் அவளைச் சமாதானம் செய்ய விரும்பவில்லை. அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று எண்ணி இருந்தான்.
சில கடிதப் பரிமாற்றத்தின் பின்பு HTU சமாதான பேச்சு வார்த்தை மூலம் இந்த வழக்கைத் தீர்த்து வைப்பதே சிறந்த வழியெனவும், அதற்குச் சம்மதமா என்றும் கேட்டுக் கடிதம் அனுப்பி இருந்தது. பற்குணன் அதைப் பார்த்ததுமே அதில் பங்கு கொள்வதாக முடிவு செய்து கொண்டான். சந்திராவிடம் கூற ‘இதுவும் நல்ல யோசனைதானே. உங்களுக்குத் தேவையில்லாத கஷ்டம்’ என்றாள். இவளுக்கு என்ன இந்த ஞானம் என்பது பற்குணனுக்கு விளங்கவில்லை. சில வேளை சும்மா சமாதானமாகச் சொல்கிறாளோ என்று எண்ணிக் கொண்டான்.
ஆரியும் சமாதான பேச்சிற்குச் சம்மதம் தெரிவித்ததால் அவர்கள் சந்திப்பதற்கான நேரமும் திகதியும் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தச் சமாதான பேச்சு Teams மூலமாக நடக்க இருப்பதாயும், அதற்கான தொடுப்பைத் தாங்கள் பின்பு அனுப்புவதாகவும் எழுதி இருந்தார்கள்.
குறிப்பிட்ட நாளில் கூட்டம் Teams மூலமாக கூடியது. அதில் பற்குணன், HTU சார்பாக லேனா, ஆரி, அவனது சட்டத்தரணி மாரி, மொழிபெயர்ப்பாளர் மீயா ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள். ஆரி எஸ்தோனியனும், தட்டித் தட்டி ஆங்கிலமும் கதைப்பான். அதனால் அவனுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டிருந்தது. லேனாவே சமாதானம் செய்து வைக்கும் அலுவலராகப் பணியாற்றினாள். அவளுக்கு இருபத்தி ஐந்து வயதுதான் இருக்கும். இருந்தும் அவள் தனது பணியில் உச்சம் கண்டு வருவதை பற்குணனால் பார்க்க முடிந்தது. மாரியும் அவளின் வயதை ஒத்தவளே.
இருவரிடமும் இளமையும் அழகும் ததும்பி வழியும் கோலம். ஸ்கண்டிநேவிய இளம் பெண்களுக்கே உரிய வெள்ளையில் ரோஜாவைக் குழைத்துப் பூசியதான நிறம். பளிங்காக ஒளிரும் நீல வைரம் போன்ற கண்கள். சிவப்புப் பவளமாக உயிருடன் நெளியும் இதழ்கள்.
மீயாவுக்கு அறுபத்து ஐந்து வயது இருக்கும். முதுமை ஏறிக்கொண்டு இருக்கும் தோற்றம்.
அவர்களை இரசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. அவன் தொடக்கத்திற்குக் காத்திருந்தான்.
பற்குணன் கோரிய நஷ்டஈட்டுத் தொகை 46000 குரோனர்களாக இருந்தது. கூட்டம் தொடங்கியதும் தங்கள் தங்கள் பக்கங்களை விளக்குமாறு லேனா கேட்டாள். அது முடிந்த பின்பு லேனா தனக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொண்டாள். அதன் பின்பு இருவருடனும் தனித் தனியே கதைக்க வேண்டும் என்று கேட்டாள்.
பற்குணனோடு கதைக்கும் போது 46000 குரோனர்கள் தங்கள் அமைப்பின் கணிப்பைவிட அதிகமாக இருக்கிறது என்றும் தங்கள் அமைப்பின் கணிப்புப்படி18000 குரோனரே இதற்குச் சரியான தொகை என்றும் கூறினாள். மர நிலத்தை மாற்றாது மெருகூட்டுவதே சரி என அபிப்பிராயம் தெரிவித்தாள். நிறுவனங்களை வைத்துத் துப்பரவு செய்திருந்தால், திருத்தியிருந்தால் முழுத் தொகையையும் வாங்கி இருக்கலாம் என்றும், சொந்தமாகச் செய்ததால் இதைத்தான் கேட்க முடியும் என்றும் கூறினாள்.
பற்குணன் அலுத்துப் போய் இருந்தான். எப்போது இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியேறுவேன் என்று துடித்தான். அவனுக்கு எதிர்த்து நீதிமன்றம் போகும் எந்த எண்ணமும் இருக்கவில்லை. மறுபக்கத்திலிருந்த சந்திராவைப் பார்த்தான். அவள் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று சைகை காட்டினாள். பற்குணன் ‘நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றான். ஆரியோடும், அவனது சட்டத்தரணியோடும் லேனா என்ன கதைத்தாள் என்பது அவனுக்குத் தெரியாது.
பின்பு இருவருக்குமான கூட்டம் தொடங்கியது. அதில் லேனா 18000 குரோனர்கள் தந்தால் பற்குணன் இந்த வழக்கை முடித்துக்கொள்ள ஒத்துக்கொண்டார் என்று கூறினாள். அதற்கு ஆரி தன்னால் ஐந்தாயிரம் குரோனர்கள் மட்டுமே தரமுடியும் என்றான். பற்குணன் இது மிகவும் அற்பத் தொகை என்று கனன்றான். பின்பு ஆரி தனியாகத் தனது சட்டத்தரணியோடு கதைக்க வேண்டும் என்றான்.
கதைத்த பின்பு 8000 குரோனர் தரலாம் என்று கூறினான். அப்போது லேனா இருவரும் நெருங்கி வரவேண்டும் என்றாள். பின்பு தான் ஒரு தொகையைப் பரிந்துரைக்கலாமா என்று கேட்டாள். அதற்கு இருவரும் அனுமதித்தனர். அவள் 15000 குரோனருக்கு ஒப்பந்தம் செய்யலாம் என்று பரிந்துரைத்தாள். ஆரி பத்துதான் தரமுடியும் என்றான். உங்களால் இறங்கிச் செல்ல முடியுமா என்று பற்குணனிடம் கேட்கப்பட்டது. பற்குணன் 12500 குரோனர்கள் என்றான். ஆரி அறுதியாக தன்னால் 12000 குரோனர்கள் தரமுடியும் என்றான். சந்திரா ஒத்துக் கொள்ளுங்கள் என்று கண்ணைக் காட்டினாள். பற்குணனுக்கு அதை நம்பமுடியாமல் இருந்தது. இருந்தும் அவள் கண் காட்டாவிட்டாலும் அவன் அதைத்தான் செய்திருப்பான். அதன் பின்பு லேனா தனது தீர்ப்பை வழங்கினாள். அதன்படி இத்தோடு இருவருக்குமான பிணக்குத் தீருகிறது எனவும், பணம் செலுத்திய பின்பு இந்த விஷயம் பற்றி ஒருவர் மீது மற்றவர் வழக்குத் தொடர்வதற்கு எந்த உரிமையும் கிடையாது என்றும், அதற்கான சட்டங்களைப் பற்றி விவரித்தாள்.
பற்குணனுக்கு இருட்டுக் குகைக்குள் பல மாதங்கள் அடைந்து கிடந்தவனை வெளியே திறந்து விட்டது போன்ற நிம்மதி.
கூட்டம் முடிந்த பின்பு பக்கத்தில் வந்த சந்திரா, ‘உங்களை நான் தேவையில்லாத பிரச்சினைக்குள்ள மாட்டி விட்டிட்டன் எண்டு நினைக்கிறன். வாடகைக்கு விடுகிறதில இவ்வளவு பிரச்சினையும் சிக்கலும் வரும் எண்டு எனக்குத் தெரியாது அப்பா. நான் இனிமேலைக்கு உங்களிட்ட காசு கேட்டுத் தொந்தரவு செய்யமாட்டன். நீங்கள் ஆறுதலா நல்ல ஆள் கிடைச்சா மட்டும் வாடகைக்கு விடுங்க அப்பா. திரும்பவும் சொறி அப்பா’ என்றாள்.
இந்தப் பிக்குணி எப்போது பிறந்தாள்?
பற்குணனின் தலையை அந்தப் பிக்குணி செல்லமாகத் தடவிக்கொண்டு இருந்தாள். ஆசையும் துன்பமும் நீங்கி எட்டு நெறிகளும் கைவசப்பட்டதாக பற்குணன் உணர்ந்தான்.
சுரங்க இரதம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. அவள் சிரித்துக்கொண்டு இறங்கிச் சென்றாள். சித்தனுக்கு,
‘இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே… ‘ என்பதான வேதனை அவன் இதயத்தையும் ஆத்மாவையும் பிழிந்து சக்கையாக்கியது.
அவன் அவள் போவதைப் பார்த்துப் புழுவாய்த் துடித்தான். அவன் துடிப்பைப் பொறுக்கமுடியாத சுரங்க இரதம் ஒரே இழுவையில் அவளை மறைத்து அவனுக்கு உதவாதவற்றைக் காட்சியாக்கியது.
‘இதயம் போகுதே
எனையே பிரிந்தே…’
அவன் மீண்டும் முழுமுழுத்தான். இது எப்படிச் சாத்தியமாகிறது? அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ போதைவஸ்தை உண்ட மயக்கம் அவனிடம். மீண்டும் அவன் உதடுகள் ‘இதயம் போனதே எனையே பிரிந்தே…’ என்றது. மற்றவர்கள் இதைக் கேட்டால் சிரிப்பார்கள். கண்டதும் காதலா என்று கிண்டல் செய்வார்கள் என்பதும் அவனுக்கு விளங்கியது.
‘சங்க இலக்கியத்திலேயே ‘பசலை நோய்’ என்று ஒரு நோயைப் பற்றி பேசப்பட்டிருக்கிறதாம். பசலை என்பது உணவு, உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். காதல் பைத்தியம் என்று சொல்லலாம். அதனால் காதல் ஒரு நோய் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவகையில் நீங்கள் இப்போது நோய் வசப்பட்டிருக்கிறீர்கள்’ என்றாள் அமுதினி.
‘பிறகு என்ன… ஒருக்கால் சொன்னால் கேட்க வேணும். உங்களுக்குக் கஸ்ரமாக இருப்பது உண்மைதான். இருந்தாலும் அப்படி மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் இல்லைத்தானே? நீங்கள் கதைப்பது கண்டம் காதல் போல, குறுந்தொகையில் அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது,
‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.’
அதுதான் இது. இதில் வருவது போல ‘சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல அன்பு கொண்ட நம் இருவரின் நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே’ என்று கதைவிடுவது போல இருக்கிறது. நீங்கள் சங்க இலக்கியக் கற்பனையோடு கதை விடவில்லையே?’ என்றாள் அமுதினி.
‘இப்படி எல்லாம் கேட்கிறாயே அமுதினி. உம்மைப் போல நான் இணையத்திலிருந்து சங்க இலக்கியம் படிக்க நேரம் இருப்பதில்லை. ஒரு சில முறை பார்த்திருக்கிறேன். ஆனால் என் நிலையை எப்படி உங்களுக்கு விளங்கப்படுத்துவது என்று விளங்கவில்லை. ஆனால் சங்க இலக்கியத் தலைவன் போல ஏமாற்றிவிட்டுப் போய்விடுவேன் என்கின்ற கவலை உமக்குத் தேவையில்லை’ என்றான் சித்தன்.
என்று கோடிடும் இது; எனது பதினைந்தாவது நாவலும் இருபத்து இரண்டாவது படைப்புமாகும். இந்த நாவல் பலரும் தொட்டால் சுடும் என்று தள்ளிப்போகும் விஷயத்தை, பேசாப்பொருள் பேசுவதாகப் பேசிச் செல்கிறது. அது எதைத் தொட்டுச் செல்கிறது என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
காரையூரான், காரைநகரான் முதலான புனைபெயர்களில் எழுதிக்கொண்டிருக்கும்,நோர்வேயில் வதியும் எழுத்தாளர் இ. தியாகலிங்கம் அவர்களை நான் இதுவரையில் நேரில் பார்த்ததில்லை. எனினும், அவ்வப்போது இவரது எழுத்துக்களை ஊடகங்களிலும் இவர் அனுப்பும் இணைப்புகளிலும் படித்திருக்கின்றேன்.
நாம் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நான்கு நாட்கள் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கும் இவர் வந்து சென்றிருக்கிறார் என்ற தகவலையும் காலம் கடந்தே அறிந்துகொண்டேன்.
அந்த மாநாடு தொடர்பாக மிகவும் மோசமாக கருத்துரைத்து காகித ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைத்த மூத்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களை சென்னையில் சந்தித்து, “நீங்கள் சொன்னதுபோன்று அங்கு எதுவும் நடக்கவில்லையே..?“ எனக்கேட்டவர் இவர் என்பதும் நான் காலம் கடந்து அறிந்த செய்திதான்.
தியாகலிங்கம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஆறாவது தலைமுறையைச்சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்பது எனது கணிப்பு. 1967 இல் வடபுலத்தில் காரைநகரில் பிறந்திருக்கிறார்.
ஊர்மீது கொண்டிருந்த நேசம், காரையூரான், காரைநகரான் முதலான புனைபெயர்களிலும் இவரை எழுதவைத்திருக்கிறது.
நோர்வேக்கு புலம்பெயர்ந்து சென்று, அந்த நாட்டின் மொழியையும் பயின்று தேர்ச்சி பெற்று, அம்மொழியிலும் தனது இலக்கியப்பிரதிகளை வெளியிட்டிருப்பவர்.
சிறுகதை, நாவல், கவிதை என இவர் தொட்ட துறைகளில் பல படைப்புகளை இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கிறார். அவற்றில் சில ஆங்கில மொழியிலும் வந்திருக்கின்றன.
இவர் தனது 132 பக்க நாவலை எழுதி, அதன் மூலப்பிரதியை அனுப்பி, படித்துவிட்டு முன்னுரை எழுதித்தருமாறு கேட்டிருந்தார்.
எழுத்துப்பணிகளிலும் இலக்கிய மற்றும் பொதுவேலைகளிலும் சமகால மெய் நிகர் அரங்குகளிலும் எனது நேரம் அதிகம் செலவாகின்றமையினால், இந்தப்பதிவை எழுதித்தருவதற்கு தாமதம் நேர்ந்துவிட்டது.
எனினும், தொடர்ந்தும் இவரை காத்திருக்கவிடலாகாது என்ற எண்ணத்தில், இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்கி, உறைவி நாவலை முழுமையாகப் படித்து முடித்தேன்.
உள்நாட்டுப்போர்களும், சர்வதேசப்போர்களும் பெற்ற குழந்தைகள்தான் அகதிகள். மீண்டும் அகதிகள் உரத்துப்பேசப்படும் ரஷ்யா – உக்ரேய்ன் மோதல் காலத்தில், இந்நாவலில் இடம்பெறும் இரண்டு ஈழ அகதிக்குழந்தைகள் குறித்து தியாகலிங்கம் எம்மை சிந்திக்க வைத்துள்ளார்.
இடப்பெயர்வினால் உள்நாடுகளில் அவதியுறும் அகதிகள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கும், புலம்பெயர்ந்து சென்று அந்நிய நாட்டின் சுவாத்தியத்திற்கு ஏற்பவும், அங்குள்ள சமூக கட்டமைப்பினை உள்வாங்கி அதற்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் சந்திக்கும் நெருக்கடிகளுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்த அகதிகள் மொழிவாரியாக அதிகம் துன்பப்படமாட்டார்கள். இரண்டே இரண்டு மொழிகள்தான். கலவர காலத்தில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த அகதிகளும், போர்க்காலத்தில் வடக்கு – கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் பலவந்தமான வெளியேற்றத்தினால், யாழ். குடநாட்டிலிருந்தும் மன்னார் – வன்னியிலிருந்தும் இடம்பெயர்ந்த இஸ்லாமிய மக்களும் எதிர்நோக்கிய நெருக்கடிகளிலிருக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிக்கோலத்துடன் புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் சந்தித்த நெருக்கடிகளுக்கும் பாரிய வேறுபாடுள்ளது.
அவ்வாறு சென்று தமது வாழ்வை வளம்படுத்திக்கொண்டவர்களையும், சிக்கிச்சின்னாபின்னமாகி தமது வாழ்வை அழித்துக்கொண்டவர்களையும் பற்றிய செய்திகளை இலக்கியப்படைப்புகளிலும் ஊடகங்களிலும் பார்த்துவருகின்றோம்.
நோர்வேக்கு விதிவசத்தால் வந்து சேர்ந்த 19 வயதிற்கும் குறைவான லக்ஷிகா–லவன் என்ற இரண்டு பிள்ளைகளின் கதைதான் உறைவி.
இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போர் வடபுலத்தில் பெற்ற குழந்தைகள்தான் இந்த இரண்டு பிள்ளைகளும். அவர்கள், அவர்களின் உறவினர்களினாலேயே நோர்வேக்கு அனுப்பப்பட்டவர்கள்.
மொழிதெரியாத ஒரு நாட்டில், அறிந்த தெரிந்தவர்கள் எவருமே அற்ற ஒரு ஐரோப்பிய நாட்டில், தமது ஊணுக்கும் உறைவிடத்திற்கும் பாதுகாப்பிற்குமாக அவர்கள் தினம் தினம் நடத்தும் போராட்டமே இந்தப்புதினம்.
உறவினர்களினால் நோர்வேக்கு அனுப்பிவைக்கப்பட்ட அபினயா என்ற பிள்ளை, லக்ஷிகா என்ற புதிய பெயருடன், அங்கு ஒரு புறநகரத்தில், அந்நாட்டு அதிகாரிகளின் கண்களில் தென்படாமல் ஒரு ஈழத் தமிழர் வீட்டின் கீழறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறி சந்திக்கும் மனிதர்கள், அனுபவிக்கும் வேதனைகள், இவளைப்போன்று அதே பத்தொன்பது வயதில் அங்கு வந்து சேர்ந்துள்ள லவன் என்ற ஆண்பிள்ளை காணும் காட்சிகளும் அனுபவிக்கும் தொல்லைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
அங்கிருப்பவர்களின் மனிதநேயத்தையும் மனநிலையையும் பொறுத்தே தங்கள் விதி அமையும் என்ற நம்பிக்கையுடன் புகலிடத்தில் தங்கள் தங்கள் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கியிருக்கும் இந்த பதின்மவயதுப்பிள்ளைகள் இருவரும் இறுதியில் என்னவாவார்கள் என்பதை பதட்டத்துடன் படிக்கவைக்கிறது இந்தப்புதினம்.
வீட்டறைக்குள் அகப்பட்ட சிறை வாழ்க்கை, முகாம் வாழ்க்கை, காப்பகம் என்ற பெயரில் கிடைத்த தற்காலிக அடைக்கலம், தொழில் என்ற பெயரில் கிட்டிய பண்ணைப்பணி, அங்கு சந்திக்கும் மனிதர்களின் பாலியல் வக்கிரங்கள், உழைப்பின் மீதான சுரண்டல் அனைத்தையும் திகிலுடன் நாவலாசிரியர் தியாகலிங்கம் சித்திரித்துள்ளார்.
எண்ணெய்ச்சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த பண்டங்கள் போன்று இந்த பிள்ளைகள் இருவரும் புகலிடத்தில் அனுபவிக்கும் வேதனைகளை வாசகர்கள் அருகிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வினை தியாகலிங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்.
ஊரிலே அள்ளிக்கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் பிள்ளையான லக்ஷிகா, புகலிடத்தில் ஒருவேளை உணவுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அல்லல்படும் காட்சிகள் அவள் மீது உருக்கத்தை வரவழைக்கின்றன.
வேலைக்கென்று அமர்த்தப்பட்ட லவனை ஓரினச்சேர்க்கையாளன் ஒருவன் தனது இச்சைக்கு பலியாக்க நினைக்கிறான்.
தந்தை ஸ்தானத்தில் இருக்கவேண்டிய ஒருவன் லக்ஷிகாவை வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு துடிக்கிறான்.
இந்தக் கழுகுகளிடம் இரையாகாமல் தப்பித்தாலும்> பிறிதோர் சந்தர்ப்பத்தில், உயிர் வாழுவதற்காகவே பலியாகிப்போகின்றன அந்த இளம் குருத்துக்கள்.
இலங்கை இராணுவத்துடன் போரிடச்சென்று கால், கை இழந்து முடமாகிப்போயிருக்கும் தனது சகோதரிகளை காப்பாற்ற புகலிட தேசத்தில் பாலியல் ரீதியில் ஊனமுற்றுள்ள பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்து பணம் உழைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றான் லவன்.
தனது அன்றாட செலவுகளை சமாளிப்பதற்காக உடலை விற்று வயிறு வளர்க்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றாள் லக்ஷிகா.
ஒரு புறத்தில் இனவிடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்கள் தாயகத்தில்,- மறுபுறத்தில் அந்த போராட்டத்தால் உயிர்தப்பி வாழ புகலிடம் தேடி வந்தவர்களை அரவணைக்காமல் உணர்ச்சிக்கோஷம் எழுப்பி மஞ்சள் – சிவப்பு கொடிகளுடன் பம்மாத்து காண்பிக்கும் கூட்டம்.
இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியில் சிக்குண்டு சின்னாபின்னமான ஒரு பக்கத்தை தியாகலிங்கம் இந்த உறைவி என்ற புதினம் வாயிலாக முடிந்தவரையில் பதிவுசெய்ய முயன்றுள்ளார்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி, சில பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கிறது.
ஒரு காலகட்டத்தில், தேசிய இலக்கியம் சார்ந்து மண்வாசனை இலக்கியம், பிரதேச மொழிவழக்கு படைப்புகள் ஈழத்தில் வெளிவந்தன. அதனையடுத்து முற்போக்கு இலக்கியம் பேசுபொருளானது. சோஷலிஸ யதார்த்தப்பார்வைகொண்ட இலக்கியத்துடன், அடிநிலை மக்களின் வாழ்வுக்கோலங்களை ஆவணப்படுத்தும் தலித் இலக்கியம் மேற்கிளம்பியது.
இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போரட்டம் வெடிக்கத்தொடங்கியதும் போர்க்கால இலக்கியம் வரவாகியது. போர் உக்கிரம்பெற்றமையால், உள்நாட்டு இடப்பெயர்வு இலக்கியத்துடன், அங்கிருந்து அந்நியம் ஓடிவந்துவிட்டவர்களிடமிருந்து புலம்பெயர் இலக்கியம் உருவானது.
அவ்வாறு வந்தவர்கள் முதலில் தாயக நினைவுளுடன்தான் முதலில் எழுதினர். பின்னர் தாயகத்தையும் புகலிட வாழ்வையும் இணைத்து தமது பிரதிகளில் பாலம் அமைத்தனர்.
காலப்போக்கில் தாம் அடைக்கலம்புகுந்த நாடுகளின் மொழியைக்கற்று தேர்ச்சிபெற்று அம்மொழிகளிலும் தங்கள் படைப்புகளை மொழிபெயர்த்து எழுதினர். அவ்வாறு பரிமாணம் பெற்றுவளர்ந்த ஈழத்து இலக்கியம், தற்போது புகலிட இலக்கியமாக அவதாரம் எடுத்துள்ளது.
அத்தகைய இலக்கியங்களை படைக்கும் தலைமுறையினரில் தியாகலிங்கமும் முக்கியமான இடத்தை வகித்துள்ளார். அத்துடன் தான் வாழ்ந்துவரும் நாட்டின் நிலக்காட்சியையும் தனது படைப்புகளில் காண்பித்து வருகிறார். அதனால் இவரது படைப்புகள் ஆறாம் திணைக்குள் வந்துள்ளன. அதாவது பனியும் பனிசார்ந்த நிலங்களும் இவரது படைப்புளில் இடம்பெறுகின்றன.
அத்துடன் பேசாப்பொருளை பேசத்துணிந்தவராக அடையாளமும் பெற்றுள்ளார்.
ஈழத்தில் உறைவி போன்ற படைப்பிலக்கிய முயற்சிகளை காண்பது அரிது. ஓரினச்சேர்க்கை சார்ந்த சிறுகதைகளையோ, நாவல்களையோ அங்கிருப்பவர்கள் எழுதத்தயங்குவர். அத்தகைய படைப்புகளுக்கு அங்கிருக்கும் ஊடகங்களும் களம் வழங்காது.
ஆனால், புலம்பெயர் வாழ்வின் புகலிடச்சூழல் அத்தகைய கதைகளுக்கு வாசல் திறந்திருக்கிறது. அதனால், தியாகலிங்கம் போன்ற புலம்பெயர் படைப்பாளிகள் உறைவி போன்ற படைப்புகளை எழுதியிருப்பதன் மூலம் அந்நிய நாட்டின் வாழ்வுக்கோலங்களையும் இலங்கை – இந்திய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்தப்புதினத்தில் வரும் லக்ஷிகா, தனது தாய்நாட்டின் ( இலங்கையில் ) இன ஒடுக்குமுறையினால் தப்பிவந்திருந்தாலும், புகலிடதேசத்தில் தனது இனத்து இளைஞர்களினால் அவமானத்திற்கும் இலக்காகி, இறுதியில் அவர்களினாலேயே கொல்லப்பட்டு அந்நிய தேசத்தில் வீதியில் அநாதரவாகிப் போகின்றாள்.
மண்மீட்பு போராட்டத்தில் தங்கள் அவயவங்களை இழந்து உடல் ஊனமாகிப்போன சகோதரிகளின் வாழ்வுக்காக தனது உடலை பாலியல் ரீதியில் ஊனமாகிப்போன அந்நியப்பெண்களிடம் சோரமாக்கி வருவாய்தேடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் லவன்.
புகலிடம் என்பது சொர்க்கமல்ல, அதுவும் ஒரு நரகம்தான். ஆனால், அந்தப்பக்கத்தை பார்க்காமல் கடந்துசென்றுகொண்டிருக்கிறது வாசிப்பு உலகம் என்பதை உணர்த்தியிருக்கிறார் தியாகலிங்கம்.
அதனால், பேசாப்பொருளை பேசத்துணிந்தவராக இந்த படைப்பாளி இலக்கிய உலகில் பேசப்படுவார்.
இயற்கை தன்னை வாழவைத்துக் கொள்ளப் பெண்ணை வஞ்சித்திருப்பது யதார்த்தம். அந்த யதார்த்தத்தை உணர்ந்து ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது மனிதாபிமானம் உள்ள ஒவ்வொரு ஆணின் கடமையுமாகும். அதை சில நாடுகள் ஓரளவு செவ்வனே செய்துள்ளன.
நோர்வேயும் அந்த நாடுகளில் ஒன்று. இது உன்னதமான மனிதத்தைப் பேணும் நடவடிக்கையாகும். பூவுக்குத் தலை ஆணுக்குப் பெண் என்பது போல இந்த உன்னதமான முன்னேற்றத்திற்கு ஒரு மறு பக்கமும் உண்டு.
நல்ல சட்டங்களை அல்லது அதில் இருக்கும் ஓட்டைகளை மனித மூளைகள் கச்சிதமாய் பயன்படுத்திக் கொள்ளும். அதில் ஆண் பெண் என்கின்ற வேறுபாடு கிடையாது. இந்த உன்னதமான சட்டங்கள் பெண்களைப் பாதுகாக்கும் அதே நேரம் சில ஆண்களைப் பாதிக்கிறது என்பதும் உண்மையே.
அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதே கடூழியத்தின் கதை. மேற்கொண்டு அது உங்கள் சுவைப்பிற்கு.
இன்று கொரோனா என்கின்ற கொடிய வருத்தம் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. பல நாடுகள் அதன் தாக்கம் தெரியாது பொருளாதாரத்தை மட்டுமே எண்ணுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. முதலில் நோய்க்கு எதிராக முழுப் பலத்துடன் போராட வேண்டும் என்பது மிகவும் அவசியம். அதற்காகப் பொருளாதாரத்தை முற்றுமாகக் கைவிடுதல் என்று பொருளாகாது. ஆனால் அமரிக்கா, இந்தியா, பிரேசில் இத்தாலி போன்ற பல நாடுகளில் நடந்தது போன்ற பேரவலங்களைத் தடுக்க வேண்டும்.
கொரோனா தனது முழுப் பலத்தையும் காட்ட முதல் எழுதப்பட்ட கதை இது. இன்றும் அது காட்டிவிட்டதா என்பது கேள்வியே. அதன் பிடிக்குள் அகப்பட்டும் ஒரு மனிதனின் அல்லாடலே இந்தக் கதை.
கொரோனா தாக்கத்தின் போது உலகம் எப்படி அநீதியைத் தன்னுள் பதுக்கி வைத்திருக்கிறது, மனிதர்கள் எவ்வளவு சுயநலத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அதற்கு நேர்மாறாக தங்கள் உயிரையும் தியாகம் செய்து மனிதர்களைக் காப்பாற்றும் மதர்களையும் காணமுடிந்தது.
இனியாவது சுயநலத்தோடு நடப்பவர்கள் மாறுவார்களா? மாற வேண்டும்.
உலகத்தில் உயிரினங்கள் தோன்றியது தொடக்கம் இப்படியான அச்சுறுத்தல் இருந்திருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது ஊகம். இயற்கை தன்னைத் தானே செப்பனிடும் முறை இது. அந்த இயற்கையில் உதித்த மனிதன் அதனைக் கைக்கொள்ள நினைத்தது விபரீதமே. அதனால் கூட அதன் சில கடுமையான கோலங்களை அது காண்பிப்பதாக இருக்கலாம்.
ஆனால் மனிதனால் இயற்கை மீது மேற்கொள்ளப்படும் அளவுக்கு மீறிய குறுக்கீடு வருங்காலத்தில் பெரும் விளைவுகளை உண்டு பண்ணலாம். அதனால் ஒட்டு மொத்த மனித இனத்திற்கே பாதிப்பு ஏற்படலாம். மனிதர்கள் இனியாவது அதை விளங்கிக் கொண்டு அதற்கேற்ப நடக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. எனது அவாவை இந்த மனித இனம் ஏற்றுக் கொள்ளுமா?
சொக்கனும் சுப்பனும் ஒரே விமானத்தில் நோர்வேக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் ஒஸ்லோவின் பொர்னவூ விமானநிலையத்தில் இறங்கிய பொழுது விமானத்திற்குள் பார்த்த அதே சொர்க்கம் இங்கு நாட்டிற்குள்ளும் வஞ்சகம் இல்லாமல் பரந்து தொடர்கின்ற உண்மை இருவருக்கும் விளங்கியது. அதனால் கள்ளுண்ட மந்திபோல் உண்டான மலைப்பு அவர்கள் வாயைப் பிளக்க வைத்தது. இந்த அளவிற்குத் தூய்மை, வசதி, சொகுசு என்பவற்றை அவன் இலங்கையில் இதற்கு முன்பு கண்டதில்லை. அங்கே கூரையும், தரையும் கதவோடு இருந்தால் அதை வீடு என்பார்கள். அவை எதனாலும் உருவாக்கப்பட்டு இருக்கலாம். உள்ளே அடுப்பு மட்டும் இருக்கலாம். அதுகூடப் பலருக்கு நிம்மதி தந்த காலம் உண்டு. அந்தக் காலம் கப்பல்லேற இவர்கள் விமானம் ஏறினார்கள். இங்கு அவன் விமானத்திலிருந்து பார்த்த வீடுகளின் வெளித் தோற்றமே அவனை மலைக்க வைத்தன. அனேகமான வீடுகள் அரிகல் அச்சில் அரிந்தது போல ஒரே அளவிலிருந்தன. அதன் உள்ளேயும் விமான நிலையத்தைப் போன்ற சொகுசும் நவீனமும் இருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. இப்படி மலைப்போடு இருவரும் விமானத்தை விட்டு இறங்கிப் பழக்கத் தோசத்தில் கையைத் தூக்கிக் கொண்டு வர எண்ணியவர்கள் இது நோர்வே என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுக் குடிவரவு குடியகல்வுப் பகுதிக்கு வந்தார்கள். இவர்கள் வரும் காட்சியைக் கண்டு இன்புற்ற விமானநிலைய அதிகாரிகள் விமான நிலையக் காவலர்களுக்கு உடனடியாக நடைபேசியில் அறிவித்துவிட்டு இவர்களை அங்கே இருக்கும் ஒரு ஆசனத்தில் காத்திருக்குமாறு பணிவுடன் கட்டளை இட்டார்கள். அது தமிழர்கள் வஸ்கொடகாமா போல நோர்வேயைக் கண்டுபிடித்த குடியேறிகளின் ஆரம்பக்காலம். அதனால் தமிழர்கள் பற்றி நோர்வே அதிகாரிகளுக்கு அவ்வளவாகத் தெரியாது. இவர்களும் தங்களைப் போன்ற சாதுவான ஜந்துக்கள் என்ற கணிப்புடனே தமிழர்களை நடத்தினார்கள். இராஜ மரியாதை கொடுத்தனர். அது காலத்தால் கரைந்த கதை வேறு ஒன்று.
சிறிது நேரத்தில் ஒரு அதிகாரியால் சொக்கனும் சுப்பனும் விபரங்கள் பதிவதற்காய் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது சொக்கன் சுப்பனைப் பார்த்துச் சொன்னான்…
‘நோர்வே வசதியான நாடு எண்டு நான் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் இவ்வளவு வசதியாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை. இங்க உழைச்சா நல்ல வருமானம் வருமாம். நிறைய றொக்கெற் ஊருக்கு அடிக்கலாம் எண்டு கேள்விப்பட்டன். அதோடை ஏதாவதும் பிரத்தியேகமாய் செய்ய வேணும்.’ என்றான்.
‘என்ன பிரத்தியேகமாச் செய்ய வேணும் எண்டு நினைக்கிறா?’
‘நிறையத் தமிழ் ஆட்கள் இனி நோர்வேக்கு வருவினம். அதுவும் யாழ்ப்பாணத்தார். தாங்கள் அனுபவிக்காததை எல்லாம் தங்கடை பிள்ளையள் அனுபவிக்க வேணும் எண்டு ஒற்றை காலில நிப்பினம். அவைக்குச் சேவை செய்கிற மாதிரி ஏதாவது செய்யலாம்.’
‘ஓ… அப்ப நீங்கள் சேவை செய்யப் போகிறியளா?’
‘ஏன் நான் செய்யக்கூடாதே? சேவைதான் நல்ல தொடக்கம் சுப்பா. அது உனக்கு இப்ப விளங்காது. ஆனால் போகப் போக விளங்கும். எனக்குச் சேவை செய்கிறது எண்டால் அப்பிடி ஒரு விருப்பம். அது எனக்கு நிறைய மனசிற்குச் சந்தோசம் தரும். ம்;;;…’ அவன் சிரித்தான்.
‘நீ ஏன் சிரிக்கிறா? நீ என்ன சொல்ல வாறா எண்டு எனக்கு விளங்க இல்லை.’
‘அதை விடு… அதுதான் உனக்கு நல்லது.’
‘நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். எனக்கு என்னுடைய சொந்தப் பிரச்சினை தீர்க்கவே நேரம் இல்லை. அது சரி நீ இங்க என்ன பொதுச் சேவை செய்யப் போகிறா?’
‘எத்தினையோ சேவை செய்யலாம். அது அவை அவையின்ர திறமையைப் பொறுத்தது. திறமைக்கு ஏற்ப பயனும் கிடைக்கும். சேவை செய்கிறதுக்கு தேவை இருக்கோணும் எண்டு இல்லை. தேவையை நாங்களே உருவாக்க வேண்டியதுதான். பிறகு பார்க்க வேணும் அது எப்பிடி செளிக்குது எண்டு.’
‘சேவை… செழிப்பு… நீ என்னவோ கதைக்கிறா… உன்ரை பிளான் என்ன?’
‘நான் ஒரு காலத்தில ஒரு மடத்தை இங்க ஸ்தாபிப்பன்.’
‘இங்க மடம் நடத்தப் போகிறியா? அது ஏற்கனவே ஹரி ராமா ஹரி கிருஷ்ணா எண்டு ஒண்டு ஒஸ்லோவில இருக்குதாமே? ‘
‘இந்தால் என்ன? நான் வேற ஒரு பெயரில வேறை ஒரு மடம் நடத்துவன். திட்டங்கள் நல்லாய் இருந்தால் விட்டில்கள் தானாய் வரும். நீ இருந்துபார்… எப்பிடி எல்லாம் இங்கை மாற்றம் வரும் நான் எப்பிடி அதை வளர்த்து எடுக்கிறன் எண்டு.’
‘ம்… நல்ல கற்பனைதான். இப்ப நாங்கள் பறக்கிறதை விட்டிட்டு இருக்கிறதைப் பார்ப்பமே?’
‘ம்… தொடங்குவம்.’
*
காலங்கள் உருண்டோடின. சொக்கன் கூறியது போலவே ஒஸ்லோவில் தமிழர் பல்கிப் பெருகினர். சொக்கன் பல சேவை செய்யும் அமைப்புக்களில் அக்கறை காட்டினான். அதன் நிர்வாகங்களிலும் பங்களித்தான். சுப்பனையும் அங்கே வருமாறும் அதற்குச் சேவை செய்யுமாறும் அழைத்தான். சுப்பனுக்கு நிறைப் பொறுப்புகள் இருந்தன. அதனால் அவன் தன்னால் அதற்கு நேரம் ஒதுக்க முடியாது என்றான். ஆனால் சொக்கனோ நீ ஓய்வாக இருக்கும் நேரங்களில் என்னுடன் வந்தால் அது உனக்குப் பல நன்மைகளை உண்டு பண்ணும் என்றான். என்ன நன்மை உண்டாகும் என்பது சுப்பனுக்கு விளங்கவில்லை. தனது சகோதரங்களுக்காய் உழைக்க வேண்டிய நேரமே வீணடிக்கப்படும் என்று அவன் மேலோட்டமாக எண்ணிக் கொண்டான். பல அமைப்புகள் பல பெயர்களில் நேர்வே எங்கும் உருவெடுத்தன. இங்கு மாத்திரம் அல்ல பல நாடுகளிலும் அப்படித்தான். சேவை செய்பவர்கள் சேவை பெறுபவர்களைவிட அதிகமாக இருப்பது போலத் தோன்றியது. இப்படி ஒரு மனம் படைத்த மாந்தர்கள் எதற்காக நாடு விட்டு நாடு வந்தார்கள் என்பது சுப்பனுக்கு விளங்கவில்லை. இந்தச் சேவையை இலங்கையில் செய்திருந்தால் சமுதாயத்திற்குள் நிலவி இருந்த பல பகைகள் காணாமல் போயிருக்கலாம். சிலவேளை அதற்கு இடம் காலம் சூழ்நிலை என்பன ஒத்து வந்திருக்காத போல என்று அவன் எண்ணிக் கொண்டான்.
அன்று மாலை சுப்பன் வீட்டிற்குச் சொக்கன் வந்திருந்தான். சுப்பனுக்கு இவன் எதற்கு வந்து இருக்கிறான் என்பது விளங்கவில்லை. சேவை செய்வதற்குப் பலமுறை கேட்டுவிட்டான். சுப்பனால் அதற்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை. முதலில் தனது வீடு. அதன் பின்பே பொதுச் சேவை என்பதில் அவன் உறுதியாக இருந்தான். இருந்தாலும் சொக்கன் எப்படி முதலில் சேவை பின்பு வீடு என்று வாழ்கிறான் என்பது மட்டும் அவனுக்கு விளங்கவே இல்லை. தான் இப்படி யோசித்துக் கொண்டு நிற்பது சரி அல்ல என்பதை உணர்ந்த சுப்பன் சொக்கனைப் பார்த்தான்.
‘என்ன சொக்கா… என்ன விசயம்? நீ விசயம் இல்லாமல் நேரத்தை வீணாக்க மாட்டியே? ‘ என்று தொடங்கினான்.
‘ஓ முதலில வசதியா ஒரு இடத்தில இருப்பம். பிறகு அதைப்பற்றிக் கதைப்பம். என்ன?’ என்றான் சொக்கன்.
‘ஓ நீ சொல்லுகிறது சரி. வந்து முதல்ல இரு.’
‘நான் இவ்வளவு நாளும் ஓடி ஓடிச் சேவை செய்தது உனக்கும் நல்லாய் தெரியும்.’
‘உன்ரை மனது யாருக்கு வரும் சொக்கா. நான் சொல்லுகிறது சரியே?’ என்றவன் உதட்டில் ஒரு மென்னகை.
‘ம்… அது மட்டும் இல்லை. அப்படி சேவை செய்ததால எனக்கு ஒஸ்லோவில இருக்கிற எல்லாப் பெரிய காய்களையும் தெரியும். அவையின்ர சப்போட்டும் எனக்கு இனி எப்பவும் இருக்கும். சப்போட் எடுக்கோணும் எண்டா தகுதியில்லாததையும் வாழ்த்திப் பழக வேணும். முகப்புத்தகத்தில ஓடி ஓடி விருப்பம் தெரிவிக்கிற மாதிரி இதுவும் ஒரு முக்கியமான சடங்கு. எல்லாம் ஒரு சதுரங்கம்.’
‘ஓ… உன்னைமாதிரி முறிஞ்சா நிச்சயம் அவங்கள் அதுக்கு மரியாதை தருவங்கள் தானே? அதோடை உனக்கு விளங்காத அரசியலா? எனக்கு இதெல்லாம் தூரம் சொக்கா.’
‘சுப்பா நீ இங்கதான் கோட்டை விடுகிறாய்.’
‘என்ன சொல்லுறாய் சொக்கா?’
‘பிறகென்ன? நான் என்னுடைய குடும்பத்தையே விட்டிட்டுப் பாடுபட்டன் எண்டால் அதுக்கு முறையான ஒரு காரணம் இருக்காமல் நான் அதைச் செய்வன் எண்டு நினைக்கிறியா? இந்த உலகத்தில அப்பிடி எதுவும் இந்த யுகத்தில லேசில நடந்திடுகிறது இல்லை.’
‘உண்மையைச் சொன்னால் எனக்கு உள்ளேயும் அப்பிடி ஒரு கேள்வி இருக்குது. சோழியன் குடுமி சும்மா ஆடுமோ எண்டு நினைப்பன். எண்டாலும் எனக்கு உன்னுடைய சேவை மனப்பான்மையில இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்குது. அதை நானாகக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.’
‘உனக்கு நான் சேவை பற்றிக் காட்டுகிறதுக்குத்தான் என்னோடை சேவை செய்ய வரச்சொல்லிக் கேட்டனான். நீ வர இல்லை. இப்ப எனக்கு என்ன சேவை ஒஸ்லோவில எப்பிடி நடக்குது, அதை எப்படி நடத்த வேணும், அதனால எனக்கு என்ன வரும் எண்டு எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். வியாபாரம் செய்கிறதைவிட இது றிஸ்கில்லாத அலுவல். இதை எல்லாம் படிக்க வேணும் எண்டுதான் நான் இவ்வளவு காலமும் மினக்கெட்டன். பருவாய் இல்லை சில இடங்களில சில இரையும் கிடைச்சுது. கணக்கில்லாத இரை அது. இது எல்லாம் சாதாரணமாய் வெளிய நிண்டு பார்த்தால் விளங்காது. உள்ள இறங்கினால்தான் தெரியும். ஒவ்வொரு அங்கத்தவரும் பொன் முட்டை இடுகிற வாத்து போல. அப்பிடி இப்பிடி கணக்குக் காட்டி இரகசியம் காக்க வேணும்…’
‘நீ என்ன சொல்லுகிறாய் சொக்கா?’
‘சேவை எண்டுகிறது சேவை மட்டும் இல்லையடா சுப்பா. அது ஒருவிதமான உழைப்பு. அது உனக்கு விளங்குதா?’
‘ஏதோ அப்பிடிக் கேள்விப்பட்டு இருந்தன். ஆனா எனக்கு உண்மை பொய் என்ன எண்டு விளங்க இல்லை. சேவை எண்டா எனக்கு முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி தான் ஞாபகம் வரும். அது எதையும் எதிர்பார்க்காது தன்னிடம் இருப்பதையும் கொடுப்பது. சிலர் அதைத் தியாகம் எண்டு சொல்லலாம். ஆனா நான் உண்மையான சேவையெண்டா அதுதான் எண்டு நினைக்கிறன். உண்மையான சேவை எண்டுகிறது பிரதி பலனை எதிர்பாராது செய்யப்படும் கல்வி, கலை, செல்வம், தொண்டு, உணவு எண்டு எதையும் இதயம் மகிழ்ந்து கொடுப்பது. அது இல்லாமல் இங்க நடக்கிறது உண்மையில சேவையா? குரு எண்டால் மாணவனிடம் தட்சணையைக்கூட எதிர்பார்க்காது போதிப்பதாம். தட்சணை பெற்றால் அது வியாபாரம் எனப்படுகிறது. இங்கே யார் குரு? யார் இங்கே ஆகக்குறைந்தது ஆசிரியன்?’
‘நான் உனக்கு அதை விளங்கப்படுத்துகிறன். உழுத்துப் போன தத்துவங்களை முதல்ல விடு. மற்றவங்களை மாதிரி நீயும் பிழைக்கப்பார். யாருக்கும் எதுக்கும் சிலை வைக்கப் போகிறது இல்லை. சிலை வைச்சாலும் அது நீடூழி நிலைக்கப் போகிறது இல்லை. நீ சேவை என்கிற சொல்லிற்கு வைச்சிருக்கிற கற்பனை மிகவும் பழமையானது. அது எப்பவோ அழிஞ்சு போயிட்டுது. இது கலி யுகம். இங்க நடக்கிறது எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ வியாபாரம். அதை நாங்களும் பயன்படுத்திக் கொள்ள வேணும். இல்லாட்டி நாங்கள் வாழத் தெரியாத மனிசராகிடுவம். இப்ப நான் சொல்லுகிறதைக் கேளு… நாங்கள் ஒரு மடம் திறப்பம். அதுக்கான காலம் இப்ப வநத்திட்டுது. நீ என்னோடை சேவை செய்ய வா. திரும்பவும் சொல்லுகிறன்… சேவை எண்டுகிறது சேவை மட்டும் இல்லை. விளங்கிச்செண்டா என்னோட வா. நாங்கள் இன்னும் சிலரோடை அதைத் தொடங்குவம். அதில எங்கடை முழு நேரத்தையும் செலவிடுவம். அது பொழுது போக்காகவும் இருக்கும். பொருளாகவும் பெருகும். விளங்குதா சுப்பா? இங்க யாரும் உன்னுடைய கற்பனைப் பாரி இல்லை. அதை யாரும் எதிர்பார்க்கிறதும் இல்லை. நான் இவ்வளவு காலமும் சேவை சேவை எண்டு அலைஞ்சதின்ரை அர்த்தம் பற்றி இப்ப உனக்கு விளங்கி இருக்கும்.’
‘நான் அரசல்புரசலாக கேள்விப்பட்டிருந்தன். இப்ப நீயே வெட்ட வெளிச்சமாய் அதைச் சொல்லிப் போட்டாய்.’
‘அப்ப வேலையைத் தொடங்குவமே? எனக்கு உன்னை மாதிரி நம்பிக்கையான வேறு ஒரு நண்பன் கிடையாது. எல்லாரையும் நம்ப இயலாது.’
‘உன்னுடைய எண்ணம் விளங்குது. ஆனா நான் கொஞ்சம் ஆழமா இதைப்பற்றி யோசிக்க வேணும். எனனைப் பொறுத்தவரையில வாழ்க்கை எண்டுகிறது மற்றைய ஜீவன்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் ஆகக் குறைஞ்சது எங்கடை பேராசைக்காக அவற்றை இம்சைப் படுத்தாமலாவது இருக்கிறது. அதுவே எங்களைப் போன்ற மனிசருக்குச் சரியாக இருக்கும்.’
‘இது கலியுகம் சுப்பா. யதார்த்தத்தை விளங்கிக் கொள். உன்னுடைய குடும்பப் பொறுப்பே இன்னும் முடிய இல்லை எண்டது ஞாபகம் இருக்கா? உதில இருந்து எல்லாம் நீ எப்ப விடுபடப் போகிறாய்?’
‘ம்… எல்லாம் ஞாபகம் இருக்குது. அதுக்கான காலம் வரும்.’
‘சரி நான் வெளிக்கிடுகிறன். உனக்கு பிறகு போன் பண்ணுகிறன். நீ எதுக்கும் யோசிச்சுப் போட்டு அப்ப முடிவைச் சொல்லு.’
என்று கூறிய சொக்கன் சுப்பனிடம் விடை பெற்றுச் சென்றான். சுப்பனுக்கு ஒன்று விளங்கியது. இந்த உலகில் உண்மையாகச் சேவை செய்யும் சிலரும் உண்டு. ஆனால் துர்அதிஸ்ரவசமாக சேவை செய்வதாக வேசம் போடுபவர்களும் கோசம் போடுபவர்களுமே அதிகம். அவர்கள் நோக்கம் கிடைப்பதைச் சுருட்டுவது அல்லது சுயவிளம்பரம் செய்து கொள்வது. அதற்காக அவர்கள் போற்றப்படும் எதையும் விற்பார்கள். யாரையும் ஏமாற்றுவார்கள்.
*
‘அப்பா உங்களுக்கு என்ன வேணும்? எதற்காக இப்படித் திடீர் என்று வந்தீர்கள்? நான் ஏதும் குறை வைத்தேனா?’
‘நீ குறை வைத்தால்கூட பருவாய் இல்லை. எனக்கு அது ஒரு பிரச்சினையே இல்லை. உன்னை நான் என்றும் நேசிப்பவன். உன்மீது எனக்கு வஞ்சம் வாராது.’
‘ஓ… என்னைப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை உங்களுக்கு வந்துவிட்டதா?’
‘உன்நினைவு என்னோடு என்றும் நீங்காது இருக்கிறது.’
‘பிறகு?’
‘என்மனதில் அமைதி இல்லை. அதில் ஒரு தாங்க முடியாத புதிய உறுத்தல். அது என்னை இடைவிடாது வருத்துகிறது. அதிலிருந்து விடுதலை வேண்டி இங்கு வந்தேன்.’
‘எதனால், எப்பிடி அப்பா அது வந்தது?’
‘அது உன்னால் உருவாகியது.’
‘என்னால் உருவாகியதா? என்னால் எப்படி உருவாகியது அப்பா?’
‘உன் சித்தம் கலங்கிப் போய்விட்டது. அதுவே என்கலக்கத்திற்கும் காரணமாகியது.’
‘எவன் ஒருவன் பொருள்மேல் வேட்கை கொண்டு தர்மத்தைத் துறக்கிறானோ நீ அவனுடைய நட்பைத் துறந்துவிடுவது மேல். யாருக்கும் சேரவேண்டிய பொருளை உனது மதியால் மயக்கி அபகரித்துக் கொள்வதும் மாகா பாவமே. அரச சொத்தாக இருந்தால்கூட அது கொடும் பாவமே. உனது ஞானத்தை விற்றாலோ அல்லது குறுக்கு வழியில் பாவித்தாலோ அதுவும் பாவமே. அந்தப் பாவத்தைச் செய்தால் பின்பு நீ எனக்கு எள்ளும் தண்ணியும் இறைக்காதே. அது என்மீது அனலை அள்ளிக் கொட்டுவதாய் இருக்கும்.’
‘அப்பா?’
‘நீ தப்பு செய்யமாட்டாய் என்பது எனக்குத் தெரியும் சுப்பா. ஆனால் நீ தளும்புவதுகூட எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் உன்னிடம் வந்தேன் சுப்பா? எனக்கு நீ ஒரு தானம் தரவேண்டும் சுப்பா.’
‘என்னப்பா அது?’
‘நீ எனக்கு என்றும் உன்வாழ்வில் மாறாத வாக்கு ஒன்று வஸ்துவாக தானம் தரவேண்டும்?’
‘அப்பா?’
‘தருவாயா?’
‘தருவேன் அப்பா. உங்களுக்கு என்ன வேண்டும்?’
‘முளை விட்ட உன் ஆசை சுப்பா. அதை என்னிடம் தந்து நீ அதிலிருந்து விலகிவிடு.’
‘அப்பா?’
*
சுப்பனிற்கு விழிப்பு வந்தது. திறன்பேசி அவனை விழிப்பிற்குக் கொண்டு வந்திருந்தது. அதை எடுத்துப் பார்த்தான். சொக்கன் அழைத்தான். சுப்பன் அந்த அழைப்பை ஏற்றான். அவன் இதழ்களில் மீண்டும் ஒரு மென்னகை.
‘என்ன சொக்கா? இந்த நேரத்தில? உனக்கு நித்தரை வரவில்லையா? நித்திரை கொள்ள முயற்சிசெய் சொக்கா.’
‘அது இருக்கட்டும். நீ யோசிச்சியா?’
‘ம்… யோசிச்சன்.’
‘என்ன முடிவு? ‘
‘நான் எந்தச் சேவை செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும். அது நீ எண்ணும் சேவை அல்ல. தயவு செய்து என்னை மன்னித்துவிடு.’
‘சுப்பா? இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நீ அதை வீணாக்குகிறாய்.’
‘பருவாய் இல்லை. எனக்கு நித்திரை வருகிறது.’
சுப்பன் திறன்பேசியைத் துண்டித்தான். நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினான். சுப்பனின் அப்பா தான் பெற்ற தானத்தோடு திருப்தியாக தன்னிடம் மீண்டார்.