கொரோனா – 3

புதன்கிழமை இமை மூடித் திறப்பதற்கு முன்பு பிரசன்னமாகியது. இடையில் நாட்கள் அண்ட வஸ்துக்களாய் அதன் வேகத்தில் கழிந்துவிட்டன. இடையில் பெற்ற அனுபவத்தில் அவனது நம்பிக்கை சிறிது தள்ளாடியது. இருந்தும் அவன் தளர்ந்துவிட விரும்பவில்லை. பத்து ஐம்பதிற்கே அகிலன் உல்லவோல் மருத்துவ மனைக்கு வந்துவிட்டான். அங்கே வந்ததும் தனது காரைத் தரிப்பிடத்தில் விட்டு அதற்குக் கட்டணம் செலுத்தினான். அவனுக்கு இடைக்கிடையே சாதுவாக இருமல் வருவதால் அதைக் கையாள்வதற்காகத் துடைக்கும் கிருமிநாசினித் தாளை எடுத்துச் சென்றான். அதில் ஒன்றை  இப்போது கையில் எடுத்துக் கொண்டான். அதன் பின்பு அவன் அந்தக் கூடாரத்தை நோக்கி நடந்தான். நல்ல வெயில் எறித்துக்கொண்டு இருந்ததால் வெளியே வெந்நீரில் குளித்தது போன்று கணகணப்பாய் இருந்தது. வந்த புதிதில் இருபத்தி ஐந்து பாகைக்கு மேலே சென்றால் கணகணப்பாய் உணர முடிந்தது. இப்போது பத்துப் பாகை நின்றாலே சூரியனைக் கண்டால் அது கணகணப்பாக இருக்கிறது. அதற்கு முன்பைவிட இப்போது துடிப்பாய் இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம். துடிப்பாய் இருப்பதற்கு உடல் நலம் பற்றிய அக்கறை அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அதற்குத் தன்னுடன் வேலை செய்யும் சுதேசிகள் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் உடல் மீது காட்டும் அக்கறையும் அவர்களிடம் அதைப்பற்றி இருக்கும் அறிவும் மதிய இடைவேளையிலிருந்து கதைக்கும் போது உரையாடலாக வெளியே வரும். அது அவனிலும் மாற்றத்தை உண்டுபண்ணி இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். நோர்வே மக்களிடம் இருக்கும் உடலைப் பற்றிய, அதற்குத் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் பற்றிய அறிவும் அத்தோடு கேடு விளைவிக்கும் இரசாயனங்கள் பற்றிய அறிவு நிச்சயம் இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும் என்கின்ற நம்பிக்கை அவனிடம் இருந்தது. இப்படியான நினைவுகளின் அலம்பல்களுடனே அவன் கூடாரத்தை நோக்கி நடந்தான்.

அப்படி நடந்து போகும் போதே அவனால் அதை அவதானிக்க முடிந்தது. மனிதர்கள் வரிசையாக இடைவெளிவிட்டு நின்றார்கள். அது பல மீற்றர்களுக்கு நீண்டு கொண்டே சென்றது. என்றாலும் முந்நூறு மீற்ரருக்கு அதிகம் இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அதிக நேரம் காத்திருக்கும் அவஸ்தை இருக்காது என்பது அவனுக்கு விளங்கியது. அகிலன் விரைவாக நடந்தான். அப்படி நடப்பதற்கே இப்போது இளைப்பது போல இருந்தது. ஆனாலும் பரிசோதனையின் முடிவு தெரியாது தானாக எந்த முடிவுக்கும் வரமுடியாது என்பதை நினைவு படுத்தியவன் முந்தைய நினைவைப் புறம் தள்ளி தொடர்ந்து நடந்தான்.

அகிலன் விரைவாக வந்து வரிசையில் நின்று கொண்டான். வரிசை மெதுவாகவே நகர்ந்தது. சிலர் அகிலனைவிடப் பலமாக இருமினார்கள். சிலர் கை இடுக்கிற்குள் அமுக்கமாகத் தும்மினார்கள். அகிலனுக்கு அந்தக் கனவு ஞாபகம் வந்தது. அப்படி யாரும் இங்கு இருப்பதாய் அவனுக்குத் தெரியவில்லை. அது கனவாகவே இருந்தது இப்போதும் அவனுக்கு நிம்மதியைத் தந்தது. அகிலன் தனது திறன்பேசியை எடுத்து அதற்குத் தலையணியை மாற்றினான். பின்பு ஓசோவின் பிரசங்கம் ஒன்றைக் கேட்கத் தொடங்கினான். ஓசோவின் பிரசங்கம் கேட்கும் பொழுது நேரம் பிரயோசனமாய் கழிவதாக அவன் உணர்வது உண்டு. இருந்தும் சிலவேளை அதற்கு மாறாக இந்த மனிதர்களிடம் என்ன இருக்கிறது என்கின்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகும். நாம் ஒருவர் சொல்வதை அவதானமாய் கேட்கிறோம் என்றால் அவரிடம் எங்களால் அடையமுடியாத பிறப்போடு உண்டான ஞானம் இருக்க வேண்டும். அந்த ஞானத்தை வெளிப்படுத்தும் சொல்வன்மை அல்லது உடற்பாசை வசப்பட வேண்டும். அவ்விரண்டையும் தவிர்த்துப் பார்த்தால் அவரிடம் என்ன இருக்கிறது என்கின்ற கேள்வியே உண்டாகும். அவர்களும் மனித பலவீனங்களுக்கு உட்பட்டவர்களே. உண்மையில் பல மனிதர்கள் தங்கள் மாயமான தோற்றத்தோடே மற்றவர்கள் முன்பு பிரசன்னம் ஆகிறார்கள். அதையே நாம் உண்மை என்று தப்பிதமாக நம்புகிறோம். அது ஒருசிலர் இடத்தில் அதிகமாகவே இருக்கிறது. அப்படியானவர்களை நாம் கையெடுத்துக் கூம்பிடக்கூடத் தயங்குவதில்லை. உண்மையை உணர்ந்தால்… அந்த மனிதர்களின் மாயத்தைத் தவிர்த்து அவர்களைப் பார்த்தால்… எமது மயக்கம் தீரும். விவேகானந்தரின் தாயார் கூறியது போல நாம் நடந்து கொண்டால் எந்த மலைப்பும் எமக்கு ஏற்படாது. ஓசோ தொடர்ந்தும் பிரசங்கம் செய்தார். அவர் சொல்வதையும் மறுப்பதற்கு இல்லை. உண்மையை உரைப்பவர்களுக்குப் பகை வராமலும் இல்லை. யார் எதை எப்படிக் கூறினாலும் நாம் மட்டுமே நல்லதைக் கண்டுபிடித்து எங்கள் மண்டைக்குள் சரியானதை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பது அகிலனுக்கு விளங்கியது.

வரிசை மெது மெதுவாகவே நகர்ந்தது. திடீரென ஒரு இளைஞன் அங்கே நோர்வேயின் வசந்த காலத்துச் செடியாகத் திடீரெனத் தோன்றினான். அவன் தனது மருத்துவ உடைக்கு மேல் ஒளியைப் பிரதிபலிக்கும் பாதுகாப்பு அங்கியும் அணிந்து இருந்தான். ஆனால் அவன் முகக்கவசம் அணியவில்லை. நோர்வேயில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்பது அரசின் நிலைப்பாடு. அதை அனேக மக்கள் பின்பற்றினர். அதைப் பாவிக்கத் தெரியாது பாவித்தால் நோயைக் கட்டுப்படுத்துவதைவிட அது பரவுவதற்கே ஏதுவாகும் என்பதை அவர்கள் நம்பினார்கள். அந்த இளைஞன் கையில் ஒரு பட்டியல் இருந்தது. அவன் ஒவ்வொருவராக அணுகி அவர்களது பெயர் மற்றும் பரிசோதிக்க வேண்டிய நேரம் என்பதைக் கேட்டுத் தனது பட்டியலோடு ஒப்பிட்டுச் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வந்தான். அந்த இளைஞன் சிரித்த வண்ணம் அகிலனை அணுகினான். அப்போது அவனும் அகிலனும் தங்களுக்கு இடையிலான இடைவெளியை அவதானமாகக் கவனித்துக் கொண்டார்கள். அவன் அகிலனின் பெயரையும் நேரத்தைக் கேட்ட பின்பு அகிலனுக்குப் பின்பாக நின்றவர்களை நோக்கிச் சென்றான். அவன் சென்றாலும் ஓசோ ஓயாது பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார். அது அகிலனுக்குப் புத்துணர்வு ஊட்ட அவன் அத்தோடு தானும் அசையலானான்.

அகிலனின் முறை வந்தது. அங்கே இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருத்தி மேசை ஒன்றின் முன்பாக ஒரு நாற்காலியிலிருந்தாள். அவள் மீண்டும் புன்னகைத்த வண்ணம் பெயரைக் கேட்டாள். பின்பு அவளின் பின்னே இருந்த அலுவலகத்திலிருந்தவர்களுக்கு அதை அறிவித்தாள். சிறிது நேரத்தில் அவர்கள் உள்ளே வருமாறு அழைப்பு விடுத்தனர்.

அங்கே இரண்டு அலுவலகங்களில் பரிசோதனை நடந்தது. சிறிது நேரத்தில் மறுமொழி வந்ததும் முதலாவது அறைக்குச் செல்லுமாறு அகிலனுக்கு அவள் கட்டளையிட்டாள். அகிலன் முதலாவது அறைக்குச் சென்றான். அங்கே ஒரு இளைஞன் முகக்கவசம், உடம்பைப் பாதுகாக்கும் மேலாடை,  மற்றும் கையுறை அணிந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டு பரிசோதனை செய்வதற்குத் தயாராக நின்றான். உள்ளே சென்றதும் வழமை போலக் கையைக் குலுக்கி அவன் வரவேற்கவில்லை. அந்தப் பழக்கம் தற்காலிகமாக அழிந்து போய்விட்டது. அவன் மீண்டும் அகிலனின் பெயரைக் கேட்டு உள்ளே இருந்த பெண்மணியுடன் அதை உறுதி செய்து கொண்டான். அந்தப் பெண் வெளியே வரவில்லை. பின்பு அவன் கையைச் சுத்தம் செய்யக் கிருமிநாசினி வழங்கினான். அடுத்ததாக இடையில் தும்மல் அல்லது இருமல் வந்தால் அதை மூடிக் கட்டுப்படுத்த துடைக்கும் காகிதம் கொடுத்தான். பின்பு தான் எப்படி மூக்குத் துவாரத்திற்குள்ளும் தொண்டைக் குளிக்குள்ளும் பஞ்சு பொருத்திய குச்சியைச் செலுத்திப் பரிசோதனை எடுக்கப் போகிறேன் என்பதைத் தள்ளி நின்றே விளங்கப்படுத்தினான். மீண்டும் அந்த நடைமுறைகள் விளங்கியதா என்பதைக் கேட்டு உறுதி செய்தான். பின்பு அவதானமாகத் தான் கொடுத்த காகிதத்தால் வாயை மூடிக் கொள்ளுமாறு கூறிவிட்டு மூக்கிற்குள் குச்சியைச் செலுத்தினான். அகிலனுக்குப் பலங்கொண்ட மட்டும் அவன் மேல் தும்மி விடுவேனோ என்று பயமாக இருந்தது. அவன் தன்னை இயலுமானவரைக் கட்டுப்படுத்தினான். அந்த இளைஞனும் எவ்வளவு விரைவாகப் பரிசோதனை செய்ய முடியுமோ அவ்வளவு விரைவா மூக்கிற்குள் விட்டுத் துடைத்துப் பரிசோதனைக்கான பொருளை எடுத்து முடித்தான். பின்பு அப்படியே தொண்டைக் குளிக்குள்ளும் துடைத்து எடுத்து தனது வேலையை முடித்தான். அதன் பின்பு மீண்டும் கையைக் கிருமிநாசினியைக் கொண்டு சுத்தம் செய்துவிட்டு அகிலன் விடை பெற எண்ணினான். இருந்தும் அவன் மனதில் சில கேள்விகள் உண்டாகின. அதை அவன் தெளிவுபடுத்த எண்ணி…
‘இதன் முடிவு எப்போது… எப்படி வரும்?’ என்று கேட்டான்.
‘இதன் முடிவு தெரிவதற்கு சில நாட்கள் எடுக்கும். உங்களுக்கு வருத்தம் இருந்தால் உங்கள் திறன்பேசிக்குச் செய்தி வரும். அதுவரையும் நீங்கள் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும்.’
‘அது வரைக்கும் நான் வேலைக்குப் போக முடியாது என்கிறீர்கள்.’
‘நிச்சயமாக… நீங்கள் வேலைக்கோ அல்லது மற்றைய பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது. எப்போதும் மனிதர்களிடம் இருந்து விலகி இருங்கள்.’
‘கட்டாயமாக நான் அவற்றைக் கடைப்பிடிப்பேன். நன்றி.’
‘வாருங்கள்.’

அகிலன் வெளியே வந்தான். அந்தப் பெண் நலம்பெற வாழ்த்துக்கள் என்றாள். அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு அகிலன் அவசரமாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினான். நோய் இருக்கிறதா என்று நிச்சயம் பரிசோதிக்க வேண்டும். ஆனால் அப்படிப் பரிசோதிக்க வரும்பொழுது நோய் தொற்றிவிடுமோ என்கின்ற பயமும் இருந்தது. அதனால் எவ்வளவு விரைவாக அந்த இடத்தைவிட்டு வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேற அவன் சித்தமானான்.

வெளியே வந்த பொழுது அவன் முன்பு நின்றிருந்த வரிசை அவன் வந்த பொழுது இருந்ததைவிட மேலும் அனுமர் வால் போல நீண்டு இருந்தது. நல்ல வேளையாக தனக்குச் சற்று முன்பாக நேரம் கிடைத்திருக்கிறது என்பது அவனுக்குப் பெரும் ஆறுதலைத் தந்தது. அதன் பின்பு அவன் மருத்துவ மனையில் நின்று நேரம் கழிக்க விரும்பவில்லை. வில்லிலிருந்து புறப்பட்ட கணையாக வாகனத்தை நோக்கி விரைவாகச் சென்றான்.

மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பொழுது தெருவில் மனிதர்களின், வாகனங்களின் நடமாட்டத்தை அவதானமாகக் கவனித்தான். வழமை போல நடமாட்டம் இருக்கவில்லை. பலர் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதைவிடப் பலர் நோய்க்குப் பயந்து தங்களது அலுவல்களைத் தள்ளி வைத்திருக்க வேண்டும். அவசியமானவர்களும், வேறு வழி இல்லை என்பவர்களுமே இப்பொழுது வெளியே வந்திருக்கிறார்கள் என்பது அகிலனுக்கு நன்கு விளங்கியது. இந்த நோயைக் கட்டுப்படுத்த இதைவிட வேறு வழி ஒன்றும் இல்லை. கையைச் சுத்தமாக வைத்திருப்பதும், மனிதர்களுக்கு இடையேயான தூரத்தைக் கடைப்பிடிப்பதும் முக்கியமானது. நோர்வேயில் வாழும் பெரும்பான்மையினர் அதைக் கடைப்பிடிப்பார்கள் என்கின்ற நம்பிக்கை அகிலனுக்கு இருந்தது. சிலர் அதிலும் விதிவிலக்காக இருப்பார்கள் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. அந்த எண்ணங்களுக்கு அத்தோடு விடை கொடுத்து அவன் அமைதியாக வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான்.

 

*


வீட்டிற்கு வந்ததும் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி அதன் கதவைத் திறந்து அதை இயலுமானவரைக் கிருமிநாசினியால் துடைத்துவிட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றான். சார்மினியும் பிரசனும் இல்லாத அந்த அறைக்குச் செல்வது சிறைக்குச் செல்வதான ஒரு உணர்வை அவனுக்கு உண்டு பண்ணியது. இருந்தும் அதற்கு வேறு வழி இல்லை என்பதால் மிகவும் சோர்வுடன் அங்கே சென்றான். அகிலன் கீழே வந்த சத்தத்தைக் கேட்ட சார்மினிக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்க வேண்டும் என்கின்ற அடக்க முடியாத ஆவல். அவள் தனது ஆவலுக்கு அணை போட நினைக்கவில்லை. திறன்பேசியை எடுத்து அழைப்பை மேற்கொண்டாள். அழைப்பு உயிர்பெற்றுக் கொண்டது.
‘ஒ… நான் வந்ததை எப்படி அறிஞ்சா?’
‘உங்கை கமறா பூட்டி வைச்சிருக்கிறது உங்களுக்குத் தெரியாதே?’
‘நீ பூட்டினாலும் அதிசயப்பட ஒண்டும் இல்லை.’
‘தெரியுது தானே? அப்ப கவனமாய் இருங்க.’
‘நான் கவனமாய் இருக்கிறன். இப்ப எடுத்த விசயத்தைச் சொல்லு?’
‘நீங்கள்தான் சொல்ல வேணும். ஆஸ்பத்திரிக்குப் போனீங்கள்… என்ன சொன்னாங்கள்?’
‘அவங்கள் ரெஸ்ற் எடுத்தாங்கள். ஆனா அது மெசினில ஆராய்ஞ்சு முடிவு சொல்ல ஒரு நாள் அல்லது இரண்டு நாள் செல்லுமாம். நாங்கள் அதுவரைக்கும் பொறுமையாக இருக்க வேணும். நிறையச் சனம் வரிசையா நிக்குதுகள். அங்க போன பிறகுதான் போனதாலேயே வருத்தம் வந்திடுமோ எண்டு பயமா இருந்திச்சுது. ஒரு மாதிரிக் கெதியா முடிச்சுக் கொண்டு ஓடி வந்திட்டன். காரை நல்லாத் துடைச்சு இருக்கிறன். நீ எடுக்கிறது எண்டா திரும்பவும் நல்லாக் கிளீன் பண்ணீட்டு எடுத்துக்கொண்டு போ. சரியே? காருக்குள்ள ஏறமுதல் திரும்பவும் ஜன்னலையும் கொஞ்ச நேரம் திறந்தவிடு.’
‘இதை எத்தினைமுறை சொல்லுவியள்? நான் சீக்கப்பிளையராக்கும். எனக்கு எப்பிடி நடந்து கொள்ள வேணும் எண்டு தெரியாதே?’
‘சரி… சரி… தெரியாமல் சொல்லீட்டன் தாயே. மன்னிச்சுக்கொள்.’
‘சரி அப்பா. என்ன சாப்பிடப் போகிறியள்? சொன்னியள் எண்டா நான் கொண்டு வந்து வைப்பன். பிறகு இவனுக்குச் சாப்பாடு குடுப்பன். அவன் ஒரேதா ரீவியிலும் கொம்பியூற்றரிலும் தொங்கிக் கொண்டு இருக்கிறான்.’
‘எனக்கா நீ இப்ப சமைக்கப் போறியா? சமைச்சதைக் கொண்டு வா.’
‘அதைத்தான் கொண்டு வரவேணும்.’
‘என்ன சமைச்சா?’
‘இறைச்சிக் கறி அப்பா.’
‘அது நல்லா இருக்கும். எனக்குத் தொடர்ந்தும் ஒரு மாதிரி இருந்தாலும் ஒரு பிடி பிடிக்க வேணும் எண்டும் ஆசையா இருக்குது. நீ கொண்டு வந்து வை.’
‘சரி. பிரசன் உங்களோடை கதைக்க வேணுமாம். ஸ்கைப்பில கதையுங்க. அவனுக்கும் சிறை மாதிரி இருக்குது.’
‘அது எண்டா உண்மை. எனக்கே சிறை மாதிரி இருக்குது எண்டா அவனுக்கு எப்பிடி இருக்கும்? நீதான் அவனுக்கு அலுப்படிக்காமல் பார்த்துக் கொள்ள வேணும்.’
‘பார்த்துக்கொள்ளுகிறன். நீங்கள் இப்ப அவனோடை கதையுங்க.’
‘அப்பா… அப்பா… மேல வாங்க அப்பா. இல்லாட்டி நான் கீழ வரட்டே அப்பா? அம்மாவோடை இருக்கச் சேடிலியா (அலுப்பா) இருக்குதப்பா.’
‘பிள்ளைக்கு அலுப்பாய் இருக்கும் எண்டு எனக்குத் தெரியும். ஆனா நான் இப்ப மேல வரமுடியாது. நீங்களும் இப்ப கீழ வரமுடியாது. அப்பாவுக்கு வருத்தம் இல்லை எண்டு தெரிஞ்ச பிறகு அப்பாவே மேல வருவன். ஓகேயா?’
‘எப்ப அப்பா முடிவு தெரியும்?’
‘கெதியாத் தெரியும் பிரசன்.’
‘கெதியா எண்டா எப்ப அப்பா? நாளைக்கு… இல்லாட்டி அடுத்த நாளா அப்பா?’
‘ம்… அப்பிடிதான்.’
‘இன்னுமா நாளைக்கு… நாளைக்கு…?’
‘பொறுமையா இருக்க வேணும் பிரசன். லாப்பில வேலை செய்கிற அவங்களுக்கும் நிறைய வேலை இருக்கும் எல்லோ? நீ நல்ல பிள்ளையா இருக்கோணும் சரியா?’
‘ம்… சரியப்பா.’
‘சரி… அப்பாவுக்கு உம்மா தா.’
‘உம்மா…’
‘உம்மா….’

கொரோனா – 1


மனிதர்களின் சுயநலமே இவ்வருத்தத்திற்கான விளைநிலமாகியது.

இக்கதை நோர்வேயில் நடந்தாலும் அனைவரும் இலகுவாக விளங்கிக் கொள்வதற்காய் பெரும்பான்மையான உரையாடல்கள் இயல்பை மீறி இயலுமானவரைத் தமிழிலேயே தரப்படுகிறது.


உயிர்ப்பு அற்ற கிரகத்தில் மனிதன் கால் வைத்தது போன்று ஒஸ்லோ திடீரெனக் களையிழந்து, தெரு வெறித்து, உயிரடங்கி அமைதி தழுவிக் கிடந்தது. இருந்தும் அகிலனுக்குத் தவிர்க்க முடியாது கட்டாய வேலைக்குப் போக வேண்டிய தர்மசங்கடம். சில வேலைகள் மனித சமூகத்தின் உயிர்நாடியாகும். அப்படியான வேலைகளுக்கு அவசரகாலத்தில் விடுப்பு இருப்பதில்லை. விடுப்புக் கொடுத்தால் அது சமுதாயத்தைப் பாதித்துவிடும் என்பது அரசின் எண்ணம். வீட்டிலிருந்து செய்யும் அலுவலில் நோயாளிகளைக் கவனிப்பது அடங்காது. அதில் முக்கியமானவர்கள் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள். அதற்கு இப்போது மேலும் அதிகமான தேவையாக இருந்தது. அகிலனுக்கு வழமையாக வேலைக்குப் போவது மிகவும் பிடிக்கும். வேலை இல்லாது வீட்டில் இருப்பது சில நாட்கள் சர்க்கரைப் பொங்கலாய் இனித்தாலும் நீண்ட காலத்தில் வேம்பாய் கசந்துவிடும். காலையில் நேரத்தோடு எழுந்து இருக்காவிட்டால் அந்த நாளே அரை மதி போல ஆகிவிடும் என்பது அவன் எண்ணம். அதனால் அவன் காலையில் எழுந்து வேலைக்குச் செல்வதை மனமார விரும்பினான். இன்றும் அதே ஆர்வத்தோடு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான். அப்பொழுது மத்திய சுரங்கரத நிலையத்தில் வண்டி நின்று மூச்சுவிட்டு மீண்டும் கதவை மூடத் தயாரானது. அந்த நேரத்தில் அந்த மனிதன் ஒரு பயணப் பொதியுடன் அவசரமாகக் காண்டீபத்தின் நாணாக வந்து அவனது பெட்டியின் முன்பகுதியில் ஏறினான். முதற் பெட்டியில் சாரதியின் அறைக்குப் பின்புறமாக இருந்த இருந்த மூலையில் அகிலன் நின்றிருந்தான். கொரோனா பரவுகிறது என்று அறிந்தது தொடக்கம் அவன் அந்த இடத்தில் மட்டுமே உறுமீனிற்காய் காத்திருக்கும் கொக்காய் பயணத்தின் போது இரட்டைக் கால்களில் நிற்பான். கொரோனாவிற்கான எச்சரிக்கை அவனிடம் அதிகம். கதவில் இருக்கும் ஆழியைக்கூட அவன் மறந்தும் வெறும் கையால் தொடுவதில்லை. அதை மீறித் தொடவேண்டி வந்தால் கைதுடைக்கும் காகிதத்தைப் பாவித்தே தொடுவான். அதைத் தவிர்த்து வீட்டிலிருந்து அல்லது வேலையிலிருந்து புறப்பட்டால் அடுத்த இடத்தைச் சென்றடையும்வரை அவன் தனது கையை முகத்திற்கு அருகே வராது கவனித்துக் கொள்வான். அது எவ்வளவு வேதனையான அரிப்பாக இருந்தாலும் அவன் கை முகத்தைத் தீண்டாது. இப்படியாக இன்னும் பல தற்காப்பு முறைகளை அவன் அன்றாட வாழ்வில் பயின்றான். மூச்சை அடக்கும் யோகாசனம்கூட அதில் அடங்கும்.
இன்று அந்த மனிதனைப் பார்த்ததும் அகிலனுக்கு அங்கிருந்து நகரவேண்டும் என்கின்ற எண்ணமே முதலில் வலுவாக ஏற்பட்டது. அதற்கான ஒரே காரணம் அவன் விமான நிலையத்திலிருந்து வருகிறான் என்பதே. அதை அவனின் பயணப் பெட்டியை வைத்து அகிலன் அறிந்து கொண்டான். அவனிடம் இருந்து விலகியோட மனம் மீண்டும் மீண்டும் ஏனோ ஏங்கியது. இருந்தும் அப்படி விலகி ஓடுவது அவனைத் தேவையில்லாது சங்கடப்படுத்தும் என்று எண்ணிய அகிலன் எதுவும் செய்யாது அப்படியே சிலையாகி நின்றான். சிறிது நேரம் அந்த மனிதனும் மிகவும் சாதாரணமாகவே நின்றான். வண்டி வேகமெடுத்து பனியில் வழுக்குவது போலத் தண்டவாளத்தில் நழுவி ஓடத் தொடங்கியது. திடீரென அவன் மூன்று முறை பலமாகத் தும்மினான். அவன் தும்மிய தும்மல் துகள் அவன் கையில் பட்டதை அகிலனால் உணர முடிந்தது. அவன் உடல் கூசியது. மயிர் குற்றிட்டு நின்றது. அகிலனுக்கு என்ன செய்வது என்று சில கணங்கள் தெரியவில்லை. மயக்கம் வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. சுரங்க ரதம் குரன்லாண்டில் நிற்க அதிலிருந்து அவசரமாக இறங்கி அகிலன் வெளியே ஓடினான். தனது மேலங்கியைக் கழற்றி கையை நன்கு மீண்டும் மீண்டும் துடைத்தான். என்றாலும் அவனுக்குத் திருப்தி இல்லை. ஆனால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பது அவனுக்கு விளங்கியது. மனதுக்குள் தொடர்ந்தும் ஒருமாதிரியாக இருந்தது. மரக்கறி வாங்க வேண்டும் என்கின்ற திட்டத்திற்கு அமைய அவன் அங்கே இறங்கினான்? அங்கேயும் எள்ளுப் போட்டால் அது நிலத்தில் வீழாத சனநெரிசலாக இருந்தது. மலிவு பார்த்துத் தேவையில்லாத ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதாய் இது அமைந்துவிடும் என்பதும் அவனுக்கு உடனடியாக விளங்கியது. இன்று இங்கு வந்தாகிவிட்டது. இம்முறை மரக்கறியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்லலாம். ஆனால் இதுவே கடைசியாக இருக்கட்டும். இனி விலை அதிகம் என்றாலும் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் நேரம் பார்த்து அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் முடிவு செய்து கொண்டான். அதன் பின்பு அவசரமாகப் பொருட்களை எடுக்கத் தொடங்கினான். சன நெரிசலைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருந்தது.
வீட்டிற்கு வந்தவன் வாயிற் கதவு மணியை அழுத்திவிட்டுச் சார்மினிக்காகக் காத்திருந்தான். வழமையாகக் கையில் எதுவும் இருக்காது. தானே திறந்து உள்ளே சென்றுவிடுவான். இன்று கையில் சுமையோடு கதவு திறப்பதற்கு அவனுக்கு மனது ஏகவில்லை. சார்மினிக்கு இரவு வேலை. அவள் ஒரு முதியோர் இல்லத்தில் தாதியாக வேலை செய்தாள். அதனால் பகலில் பொதுவாக வீட்டில் நிற்பாள். இன்று அவள் வீட்டில் நிற்பாள் என்பது தெரிந்ததால் கதவு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். அவள் கருத்தும் முக்கியம் என்பது அவன் எண்ணம் ஆகியது.
கதவு திறந்தது. அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவள் அவனை உற்றுப் பார்த்தாள். பின்பு சந்தேகத்தோடு,
‘என்ன பேயறைஞ்ச மாதிரி வந்திருக்கிறியள்? தேவணில எதையும் வாங்கிக் கொண்டு வந்திட்டியளே? உங்களைப் பார்க்க எனக்கு அப்பிடித்தான் இருக்குது.’ என்றாள்.
‘நீ சொல்லுகிறது ஒருவகையில சரிதான்.’
‘என்ன சொல்லுகிறியள்?’
‘தேவாணில ஒருத்தன் தும்மிப் போட்டான்.’
‘என்ன? என்ன கோதாரியச் சொல்லுகிறியள்? தயவு செய்து அப்படியே நில்லுங்க. வீட்டிற்குள்ள தவறியும் வராதேங்க. நாங்கள் எப்பிடி எண்டாலும் இருந்திட்டுப் போகலாம். ஆனா பிரசனுக்கு ஏதும் வருத்தம் வந்தால் என்னால தாங்க முடியாது. அதால தெரிஞ்சு கொண்டு நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைத் தரக்கூடாது. தயவு செய்து அதை வீட்டிற்குள்ள கொண்டு வராதேங்க.’
‘எனக்கு மாத்திரம் வீட்டிற்குள்ள வருத்தத்தைக் கொண்டு வரவேணும் எண்டு ஆசையா? திடீரென அவன் தேவாணில தும்மினான். அதுக்காக எல்லாத்தையும் நாங்களா முடிவு பண்ணக்கூடாது. பிரசன் ஸ்கூலுக்குத் தொடர்ந்தும் போகிறான்தானே? அங்க என்ன நடக்குது எண்டு எங்களுக்குத் தெரியுமே? அதே நேரம் நாங்கள் றிஸ்க் எடுக்க முடியாது எண்டும் விளங்கிது. நான் உங்களுக்காத்தானே வேலைக்குப் போனன். மரக்கறியும் வாங்கப் போனன். இப்பவும் அங்கை நிறையச் சனமா இருக்குது. ஆனா… அதைப் பற்றி நான் கவலைப்பட இல்லை. நீ இப்ப என்னை வீட்டுக்க வராதை எண்டுகிறாய்? நான் எங்க தெருவிலையா நிற்கிறது? இது எனக்கு வேணுமே? ம்… இதுக்கு விளக்கம் சொல்லு பார்ப்பம்.’
‘எனக்கு உங்களைத் தெருவில நிறுத்த வேணும் எண்டு வேண்டுதலோ ஆசையோ இல்லை. என்ரை கவலை உங்களுக்கு வந்த வருத்தம் தற்செயலா எங்களுக்கும் வரக்கூடாது எண்டுகிறதே. எனக்கு எண்டாலும் பருவாய் இல்லை. பிரசனுக்குத் தொற்றினால்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க? நாங்கள் இவ்வளவு காலமும் சேர்ந்து வாழ்ந்ததுக்கே அர்த்தம் இல்லாமல் போயிடும். அதுகின்ரை ஒரு அடையாளமும் இல்லாமல் போயிடும். தயவு செய்து அதை விளங்கிக் கொள்ளுங்க அப்பா.’
‘எனக்கும் விளங்காமல் இல்லை. அதுக்கு இப்ப நான் என்ன செய்ய முடியும் சொல்லு பார்ப்பம்?’
‘என்னிட்டை ஒரு நல்ல ஐடியா இருக்குது.’
‘ஓ நீயும் இப்ப ஒரு பெரிய மதியூகீ ஆகீட்டாய் போல? ம்… என்ன பிளான் சொல்லு பார்ப்பம்? என்னுடைய சொந்த மதியூகீயின்ரை திறமையையும் பார்ப்பம்.’
‘அது சிம்பிள் அப்பா.’
‘என்ன எண்டு முதல்ல சொல்லு?’ ‘நீங்கள் போய் கீழ பேஸ்மண்டில இருங்க. சாப்பாடு மேல்க்கதவைத் திறந்து படியில வைக்கிறன். அதைவிட ஏதும் தேவை எண்டா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க. நான் கொண்டு வந்து கதவைத் திறந்து வைப்பன். நீங்கள் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து எடுங்க. இப்படி நாங்கள் இரண்டு கிழமைக்கு இருக்க வேணும். அதுக்கிடையில உங்களுகுத் தொற்றி இருக்குதா இல்லையா எண்டு முடிவாகீடும்.’
‘ம்… நீ சொல்லுகிறதும் சரிதான். எதுக்குத் தேவை இல்லாமல் றிஸ் எடுப்பான்? ஆனா நான்  நாளைக்கு வேலைக்குப் போக வேணும். அவங்கள் என்ன சொல்லுவாங்களோ தெரியாது. றிங்பண்ணிக் கேட்க வேணும்.’
‘நோய்க்கான அறிகுறி இல்லாதவரைக்கும் நீங்கள் என்ன காரணம் சொல்லுவியள்?’
‘அப்ப நீ ஏன் இவ்வளவு பதறுகிறாய்?’
‘அது வேலையிடம் அப்பா… அங்க பொருளாதாரம் பற்றி மட்டும் சிந்திப்பினம். இது வீடு… இங்க நாங்கள் முதலில பிள்ளையைப் பறித்தான் சிந்திக்க வேணும். அதால எங்களுக்கு வேற வழி இல்லை. எந்தவித ஆதாரம் இல்லாட்டியும் பாதுகாப்பாய் இருக்கிறது மட்டுமே நல்லது.’
‘சரி நீ பேஸ்மன்ற் திறப்பைக் கொண்டு வந்து தா. என்னோடை தேவை இல்லாமல் நிண்டு நீ கதைக்காதை.’ என்று கண்ணைச் சிமிட்டினான்.
‘நீங்க சாப்பாட்டுச் சாமான்களை வைச்சிட்டு வெளியில நில்லுங்க… நான் போய் கெதியாய்த் திறப்பை எடுத்தாறன்.’

என்று கூறிய சார்மினி வேகமாக உள்ளே சென்றாள். அகிலன் பாதாள அறைக் கதவைப் பார்த்தான். நல்ல வேளையாக தாங்கள் தற்போது தொடர் மாடி வீடொன்றில் இருப்பது இதற்கு வசதியாக அமைந்ததாக அவனுக்குத் தோன்றியது. இந்த வீட்டின் பாதாளத்தில் பெரியதொரு அறையும், குழியல் அறையும் இருந்தன. பெரிய அறையில் சோபாவும் தொலைக்காட்சியும் உண்டு. அது நீல நிறச் சோபா ஒன்று. வேண்டும் என்றால் அதை விரித்துப் படுக்கை போல மாற்றிக் கொள்ளலாம். இதில் இருக்கப் போகும் பெரிய அசௌகரியம் என்ன வென்றால் பிரசனையும் சார்மினியையும் பிரிந்து தனிமையாகப் பாதாள அறையில் இருக்க வேண்டும். அதை எண்ண எண்ண அகிலனுக்கு வெறுப்பாக இருந்தது. இருந்தும் இதைவிட வேறு வழி இருப்பதாக அவனுக்கு இப்போது தோன்றவில்லை. அகிலனின் நண்பன் ஒருவன் இந்த வருத்தம் இருப்பதான அறிகுறி இருந்ததைத் தொடர்ந்து மனைவியால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டான். அவனுக்கு இப்படிப் பாதாள அறை கொண்ட வீட்டு வசதி எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவனிடம் கார் ஒன்று இருந்தது. வேறு வழி இன்றி அதை அவன் தனது தங்குமிடமாக மாற்றி வாழ்வதாய் அகிலனோடு தொலைப் பேசியில் கதைக்கும் பொழுது கூறி இருந்தான். அந்த வகையில் தான் அதிஸ்ரம் செய்ததாய் அவனுக்குத் தோன்றியது.

பாதாள அறைக்குள் செல்வதற்குத் தனியாகக் கதவு இருந்ததால் தேவையில்லாது பிரதான வீட்டிற்குள் செல்லத் தேவையில்லை. இந்த நோய் காற்றில் பரவுவது இல்லை என்கிறார்கள். சிலர் காற்றில் இருக்கும் திரவத் துளிகளில் வைரஸ் சொகுசாக வாழலாம் என்கிறார்கள். எது எப்படி என்பது தெளிவாக யாருக்கும் தெரியாது. சீனாவில் இப்படி நடந்ததாம் அப்படி நடந்ததாம் என்கிறார்கள். ஒரு வீட்டில் ஒருவருக்குத் தொற்றினால் அனைவருக்கும் தொற்றுவதாய் கூறுகிறார்கள். கூடவாழ்ந்த பூனைகள்கூட இறந்ததாகத் தகவல்கள் வருகின்றன. பெண்களைவிட ஆண்களுக்கே அதிக ஆபத்து என்கிறார்கள். நோர்வேயில் வெளிநாட்டிற்குப் போய் வந்தவர்களுக்கே இந்த வருத்தம் முதலில் வந்ததாக நம்பப்படுகிறது. உள்ளூரில் தொற்றத் தொடங்கி இருக்கலாம். அது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. இருந்தாலும் ஸ்திரமின்மை தொடர்கிறது. அகிலனின் சிந்தனையைக் கலைத்த வண்ணம் சர்மினி மீண்டும் திரும்பி வந்தாள்.

‘இந்தாங்க திறப்பு.’ அவள் அதை தூரத்தே நின்று அகிலனை நோக்கி வீசி எறிந்தாள். அகிலனுக்குச் சிரிப்பு வந்தது. கவலையாகவும் இருந்தது. அவன் கவலையோடு சிரித்தவண்ணம் குனிந்து திறப்பை எடுத்தான். சர்மினி மீண்டும் உள்ளே சென்று சோப்புக் கரைத்து வாளியில் எடுத்து வந்தாள். பின்பு அவன் கொண்டு வந்த பொருட்களை ஒவ்வொன்றாகத் துப்பரவு செய்யத் தொடங்கினாள். சுடு நீருக்கும் சோப்பிற்கும் இந்த வைரஸ் சொற் கேட்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.  நோர்வேயில் இது ஆரம்ப நிலையில் இப்போது உள்ளது. இருந்தும் இது ஒரு ஆரூடமே. ஆனால் சீனாவில் ஒரு வாட்டு வாட்டிய பின்பு இப்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்து இருக்கிறது. இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. சீனாவில் நடந்ததைக் கேள்விப்பட்டது மட்டுமே. அங்கே நடந்ததாகக் கேள்விப்பட்டதையும் சிலர் நம்பினர். சிலர் நம்ப மறுத்தனர். சில நாடுகள் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். சில நாடுகள் உள்ளே விட்டுப் பிறகு அடிப்பதற்காய் காத்திருக்கிறார்கள்.

அகிலனோடு வேலை செய்பவளுக்கு மாறன் என்று பெயர். மாறன் என்று தமிழ்ப் பெயராக அர்த்தம் கண்டுவிட முடியாது. அவள் ஒரு அழகான பெண். அவளுக்கு இந்தச் செய்திகளில் நம்பிக்கை இல்லை. இவை அனைத்தும் பூதக்கண்ணாடியால் நோக்கிச் சொல்லப்படுவதாய் கோபமாகக் கூறுவாள். அகிலனுக்கு அவளைப் பாக்க வியப்பாக இருக்கும். அதே நேரம் இப்படி நம்பாதவர்களால் இந்த வருத்தம் மேலும் பரவ வாய்ப்பு இருக்கிறது என்கின்ற உண்மையும் கசக்கும்.

பாதாள அறைக்குள் வந்த அகிலனுக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. இப்போது சார்மினியைக் கூப்பிட முடியாது. அவள் பம்பரமாய் சுழலும் நேரம் இது. அந்த அறையிலிருந்த ஒரு குவளையைக் கையில் எடுத்தான். குளியல் அறைக்குச் சென்று நீரைத் திறந்துவிட்டு அது குளிரான நீராக வரும் வரைக்கும் பொறுமையாகக் காத்திருந்தான். நீர் நன்றாக ஓடத் தொடங்கியதும் குளிரான நீர் வந்தது. அவன் அதை எடுத்துக் கொண்டு மீண்டும் கோலுக்குள் வந்தான். அவனுக்குத் தாகமாக இருந்தது. அதைப் பருகத் தொடங்கினான். எதுவும் தொற்றி இருக்கக்கூடாது என்று மனம் கிடந்து அடித்தது. இந்த நோய் பெண்களைவிட ஆண்களை அதிகமாகப் பாதிக்கிறது என்று அவன் கேள்விப்பட்டு இருந்தான். அதுவும் நாற்பது வயதிற்கு மேல் என்றால் மேலும் பயப்பட வேண்டும் என்று அவன் வாசித்த ஞாபகம். அதன் உண்மை பொய் விளங்காவிட்டாலும் அவனுக்குப் பயமாக இருந்தது. ஒஸ்லோவின் மேற்குப் புகுதியைச் சார்ந்த பல சுதேசிகளுக்கு இந்த வருத்தம் முதலில் வந்திருக்கிறது. அது இத்தாலியில் அல்லது ஆஸ்திரியாவில் குளிர்கால விடுமுறையைக் கழிக்கச் சென்றதால் தொற்றியது என்கிறார்கள். நாட்டிற்குள் வந்துவிட்டால் இதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதைப் பலர் அறிவார்கள். இருந்தும் இன்று போல விமான நிலையத்திலிருந்து எந்த ஒழுங்குமுறையும் இன்றிப் பயணிகள் நாட்டிற்குள் வருகிறார்கள். அவர்களில் எவர் நோயைக் காவி வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. தும்மியவனுக்கு நோய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அறிகுறி தெரிவதற்கு முன்பு யாருக்கும் இப்போது பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. அதனால் உடம்பிற்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. ஏதாவது அறிகுறிகள் தெரிந்தால் மட்டுமே மேற்கொண்டு அவர்களுடன் கதைத்துப் பரிசோதிக்கச் செல்லலாம். நோர்வே அரசாங்கம் முதலில் இங்கு எதுவும் இல்லை என்பது போலக் கண்களை மூடிக் கொண்டு இருந்தது. இப்பொழுது அப்படி இருக்க முடியாது என்பது நன்கு உறைக்கத் தொடங்கி இருக்கிறது. அகிலனுக்கு நோர்வே மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதாது என்றே எண்ணத் தோன்றியது.

நாளை என்ன செய்வது என்கின்ற குழப்பமாக இருந்தது. இதற்கு யோசித்துப் பிரயோசனம் இல்லை. அகிலனின் முக்கிய வேலை மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளிடம் இருந்து இரத்தம் பரிசோதனைக்காக எடுப்பது. அதைப் பரிசோதிக்கும் ஆய்வுகூடப் பகுதியில் வேலை செய்வது. இது மருத்துவமனையில் உள்ள மிகவும் பிரதானமான பகுதிகளில் ஒன்று. அங்கே யாருக்கும் தொற்று இருந்தால் அது பலருக்கும் பரவ வாய்ப்பு உண்டு. வேலைக்குப் பொறுப்பில்லாது போய் அங்கே நோயைப் பரப்புவது மிகவும் தவறான விடயம். ஆகவே திறன்பேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தைக் கேட்டு பின்பு அவர்கள் சொல்வது போல நடந்தால் எந்தத் தவறும் செய்ததாக அவர்கள் பின்பு குற்றம் சுமத்தமாட்டார்கள் என்பது அகிலனின் எண்ணம். அவனுக்குத் திடீரென அவன் கேள்விப்பட்ட அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்தது. மருத்துவர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து விடுமுறை கழித்து மீண்டும் நோர்வேக்கு வந்த பின்பு தன்னைப் பரிசோதிக்கக் கேட்டிருக்கிறார். ஆனால் அது அவரது மேல் அதிகாரிகளால் மறுக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு வேலையைத் தொடருமாறு பணிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் சிலருக்கு வருத்தம் பரவி உள்ளது. அப்போது அந்த மருத்துவர் தான் பரிசோதிக்க மேலதிகாரியைக் கேட்டேன் என்பதிலிருந்து அவர் மீது வீண் குற்றம் சுமத்த முடியாது தப்பித்துக் கொண்டார். அப்படியே தானும் புத்தியாக அவர்களைக் கேட்டு நடப்பது நல்லது என அகிலன் முடிவு செய்து கொண்டான். அகிலன் திறன்பேசியைப் பார்த்தான். விரைவு மின்னூட்டலை எடுத்து வருமாறு முதலில் சார்மினிக்குக் குறுஞ் செய்தி அனுப்பிவிட்டு தனது தலைமை அதிகாரிக்கு அதனால் தொடர்பை உண்டுபண்ணினான்.

‘வணக்கம்! நான் அகிலன்.’
‘சொல்லுங்கள்… என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?’
‘எனக்கு ஒரு ஆலோசனை வேண்டும்.’
‘எதைப் பற்றி?’
‘நான் இன்று சுரங்க இரதத்தில் வீட்டிற்குப் போகும் போது விமான நிலையத்திலிருந்து வந்த பயணி ஒருவரும் எங்களுடன் அதில் பயணித்தார். எதிர்பாராத விதமாக அவர் சுரங்கரத்திற்குள் பலமுறை தும்மிவிட்டார். நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. அதனால் உங்களின் அறிவுரை எனக்கு வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி நான் செய்வேன்.’
‘ஓ… மிகவும் சிக்கலான விடயம். எது எப்படி என்றாலும் சிறிது ஐயம் ஏற்பட்டாலும் நாம் அதைப் பார்த்தும் பாராமலும் விடமுடியாது. இங்கு வருத்தம் பரவத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் நீங்கள் வீட்டிற்குள் முடங்கி இருப்பதே நல்லது என்று நான் எண்ணுகிறேன். ஏதாவது அறிகுறி தென்பட்டால் அல்லது காய்ச்சல் வந்தால் கொரோனா எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். இரண்டு கிழமைக்கு நீங்கள் வீட்டிற்குள் இருப்பதே நல்லது. வருத்தம் ஏதும் இல்லை என்றால் அதன் பின்பு நீங்கள் வேலைக்கு வரலாம். எனக்கு இப்படியே அறிவிப்பு வந்து இருக்கிறது. நான் அதில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை.’
‘நீங்கள் சொல்வது மிகவும் சரியே. எங்கள் வேலையிடம் அப்படியானது என்பது எனக்கு நன்கு விளங்கும். அதில் எந்தத் தவறும் ஏற்பட நாம் ஏதுவாக இருக்கக்கூடாது.’
‘அதுவே என் கவலையும் அகிலன். அதையே நானும் விரும்புகிறேன். உங்களுக்கு விரைவில் குணமாக எனது வாழ்த்துக்கள். நிச்சயம் இது கொரோனாவாக இருக்காது என்று நம்புகிறேன்.’
‘அப்படியே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையும். உங்கள் அறிவுரைக்கு நன்றி. விரைவாக மீண்டும் சந்திப்போம்.’

அவர் அத்துடன் தொலைப்பேசியைத் துண்டித்துக் கொண்டார். இப்போது பலர் தன்னைப் போல வேலைக்குப் போகமுடியாமல் இருப்பதால் அங்கே தற்போது வேலைக்கு வருபவர்களுக்கு அதிகமான வேலைப் பழுவாய் இருக்கும் என்பது அகிலனுக்கு விளங்கியது. தலைமை அதிகாரிக்கும் அதிக வேலைப் பழுவாய் இருக்கும். என்றாலும் இதை எல்லோரும் சிரம தானம் போல எண்ணி உதவுவார்கள் என்பது அகிலனுக்கு நன்கு தெரியும். நோர்வே மக்களின் உயரிய பண்புகளில் சிரம தானமும் ஒன்றாகும். இந்தப் பண்பு அகிலனை மலைக்க வைத்திருக்கிறது. அகிலனை மட்டும் அல்ல நோர்வேக்கு வரும் அனைவரையும் அது திகைக்க வைப்பது உண்டு. பொதுவாக நோர்வே மக்கள் மிகவும் கனிவானவர்கள். அதற்குப் புறநடையானவர்களும் உண்டு. அதேபோன்ற புறநடையான அரசியற் கட்சிகளும் உண்டு. அவர்களது கைகள்கூட இக்காலத்தில் வலுத்துக் கொண்டு வருகிறது. அது இங்கு மட்டும் நடப்பதல்ல. உலகம் முழுவதும் நடக்கும் ஒரு புதிய மார்க்கமாக இருக்கிறது. அந்தப் புறநடைகளை விட்டுப் பொதுவாகப் பார்த்தால் நோர்வே மக்கள் மிகவும் கனிவானவர்கள். பொதுவாகச் சட்டத்தை மதிப்பவர்கள். அதனால் இங்கு இந்த வருத்தத்தைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரும் நடைமுறைகளையும் அவர்கள் நிச்சயம் கடைப்பிடிப்பார்கள். அது இந்த வருத்தத்தைக் கட்டுப்படுத்த பெரும் உதவியாக இருக்கும். அதற்குப் புறநடையாகவும் பல காரியங்கள் நடந்து ஏறலாம். அதுவும் எங்கும் நடக்கும் மனித யதார்த்தமாகும். எந்த நாட்டிலும் பெரும்பான்மையின் செயற்பாடே அந்த நாட்டின் செயற்பாடாகப் பார்க்கப்படும். அப்படிப் பார்த்தால் நோர்வே மிகவும் ஒரு உன்னதமான நிலையைப் பெறும் என்பதில் அகிலனுக்கு எந்த ஐயமும் இல்லை. கொரோனா என்கின்ற வருத்தம் தாக்குகின்ற போது நோர்வே என்னும் நாட்டில் இருப்பது மிகவும் பாதுகாப்பைத் தந்தாலும் இந்த வருத்தம் இத்தினை பாதுகாப்பையும் தாண்டி மனிதர்களை வதைத்துவிடுமோ என்கின்ற ஐயம் அவன் மனதை அலைக்கழித்தது. தனது வீட்டில் இன்று தொடங்கிய இந்தப் பிரச்சனை எப்போது முடியும் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை.

அகிலனுக்கு ஒரே யோசனையாக இருந்தது. சார்மினி வேலைக்குச் சென்றால் பிரசனை யார் பார்த்துக் கொள்வது என்றும் அவனுக்கு விளங்கவில்லை. அவனைத் தனித்து இருக்க விடமுடியாது. அதே நேரம் அவன் தன்னுடன் இருக்கவும் முடியாது. அப்படி என்றால் என்ன செய்வது என்கின்ற கேள்வி புழுபோல அவன் மண்டையைக் குடைந்தது. எதற்கும் சார்மினியோடு கதைக்க வேண்டும். யாரையாவது உதவிக்குக் கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை. கொரோனாவை முன்னிட்டு யாரும் இலகுவில் உதவி செய்யமாட்டார்கள். அதுவும் குழந்தைப் பிள்ளையைத் தங்களோடு வைத்திருப்பது என்றால் சம்மதிக்கமாட்டார்கள். அப்படி என்றால் சார்மினி இல்லாத நேரத்தில் எப்படிச் சமாளிப்பது? அவனைப் பார்த்துக்கொள்ள ஒரு நபர் தொடர்ந்து வேண்டுமே? அகிலனுக்கு எந்தப் பதிலும் கிட்டுவதாகத் தெரியவில்லை. இதைப்பற்றி சார்மினியோடு கதைக்க வேண்டும். அவளுடனும் நேரடியாகக் கதைக்க முடியாது. ஆகவே அவன் திறன்பேசியை எடுத்து அவளது எண்களை அழுத்தினான்.
‘என்னப்பா அதுக்குள்ள என்னுடைய ஞாபகம் வந்திட்டுதே? அவசரமாய் அடிக்கிறியள்? எனக்கு இங்க நிறைய அலுவல்கள் இருக்குது. முதல்ல பிரசனுக்குச் சாப்பாடு கொடுக்க வேணும். அதைவிடத் துப்பரவு… புதிய விதிமுறை… இயலும் எண்டா ஸ்பிரீற் வாங்க முடியுமா எண்டு பார்க்க வேணும். அப்படி  நிறைய வேலை இருக்குது. சிலவேளை வெளிய போக வேணும்.’
‘எனக்கும் பிரச்சினைப் பற்றின யோசனையா இருக்குது. அதுதான் உன்னோடை கதைக்க வேணும் எண்டு எடுத்தன். அவனை என்ன செய்கிறது? நீ வேலைக்குப் போனா அவனை யார் பார்க்கிறது? இதைப்பற்றி நீ யோசிச்சியா?’
‘நீங்கள் யோசிக்கிற அளவுக்கு நான் யோசிக்காமல் இருப்பனா? தகப்பன் சந்ததியை தாறதோடை சரி. தாய்தான் அதைப் பேணிப் பாதுகாக்கிறவள் எண்டு தெரியாதே? அப்படி எண்டா நானும் அவனை எப்பிடிப் பாதுகாக்கிறது எண்டு யோசிக்காமலா இருப்பன்?’
‘சரி… சரி… நீ நிச்சயம் யோசிப்பாய். அப்படி என்ன யோசிச்சு என்ன முடிவு எடுத்தாய் எண்டு எனக்குச் சொல்லு பார்ப்பம்? அதுக்குப்பிறகு எனக்குத் தேவையானது எல்லாத்தையும் படியில வை. நான் வந்து எடுத்துக் கொண்டு வாறன். கதவுக்குத் திறப்பு போட்டுப் பூட்டி விடு. இல்லாட்டிப் பிரசன் இங்க ஓடி வந்திடுவான். சரி சொல்லு… என்ன எண்டு இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கிறது? குறிப்பா பிரசன்ரை பிரச்சினையை எப்பிடிச் சமாளிக்கிறது.’
‘அது சிம்பிள் அப்பா. நான் வேலைக்குப் போன் பண்ணி நடந்ததைச் சொன்னனான். அவைக்கும் நிலைமை விளங்கி இருக்குது. அவையும் வீண் றிஸ்க் எடுக்க விரும்ப இல்லையாம். அதால பதின்நாலு நாளுக்கு காரன்தேனில இருக்கட்டாம். நானும் கரன்தேனில இருந்தால் பிரசனைப் பார்க்கிறது ஒரு பிரச்சினை இல்லை. உங்களையும் வீட்டையும் பார்த்துக் கொள்கிறதும் ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏலும் எண்டா உங்கடை மெபீல்ல இருந்து ஸ்பிரீற், மாஸ்க் ஓடர் பண்ணி எடுக்க முடியுமோ எண்டு பாருங்க. இரண்டும் கொஞ்சம் கொஞ்சம் மட்டுமே எங்களிட்டை இருக்குது. சாப்பாட்டுச் சாமான்களும் நெத்தில ஓடர் பண்ண வேணும். அதை நான் செய்கிறன். இதை உங்களால ஓடர் பண்ணி எடுக்க முடியுமா எண்டு பாருங்க. நாங்கள் கடைக்குப் போக முடியாது. ஆனால் அவசரம் என்டா மாஸ்க்கைப் போட்டுக் கொண்டு போயிட்டு வரவேண்டி இருக்கும். வேற வழி இல்லை. எல்லாரும் இப்ப விசியா இருப்பினம். அதோடை அவைக்கும் பயமாகவும் இருக்கும்.’

‘ஓ நீ கெட்டிக்காரி. அப்ப நான் பெரிய பிரச்சினை எண்டு நினைச்சது இப்ப பெரிய பிரச்சினை இல்லை. ஓ மற்றதை நாங்கள் சமாளிக்கலாம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்குது. நான் அதுக்கு றை பண்ணுகிறன். ஸ்பிரீற்றும், மாஸ்க்கும் எடுக்கிறது சுலபமாக இருக்காது. முயற்சி செய்வம். இல்லாட்டி நீ போய் அப்போத்தெக்கில (மருந்துக்கடை) பார்த்திட்டு வா. அதுவும் இல்லை எண்டால் இருக்கிறதை வைச்சுச் சமாளிக்க வேணும்.’
‘ம் நீங்கள் சொல்லுகிறதும் சரி. நான் வெளிய போகிறது எண்டா இவனையும் இழுத்துக் கொண்டு போக வேணும். அதைவிட வேற வழி இல்லை. யாரையும் கேட்டால் உதவி செய்வினமோ தெரியாது. அதேநேரம் எதுக்கு இப்ப தேவையில்லாமல் அவை இவையக் கடமைப்படுத்திக் கொண்டு… இப்போதைக்கு இதை எங்களால சமாளிக்க முடியும். அதுக்கான நம்பிக்கையும் தைரியமும் என்னிட்ட இருக்குது.’
‘அப்பிடிதான் நானும் நினைக்கிறன் சார்மினி. ஆனா என்ன நான் மட்டும் இரண்டுபேரையும் பார்க்காமல் தனிய இருக்க வேணும். அதை நினைக்க நினைக்க வெறுப்பா இருக்குது. அதோட இது எப்பிடி முடியுமோ எண்டும் பயமா இருக்குது.’
‘முதல்ல நீங்கள் எதுக்கும் பயப்படாதையுங்க. நீங்கள் தனிய இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. உங்க இருந்தாலும் நீங்கள் எங்களோடை இருக்கிறமாதிரி உணரலாம். அதுக்கான வழியும் உங்களுக்குத் தெரியும்தானே?’
‘என்ன சொல்லுகிறா?’

‘பிறகு என்ன…? ஸ்கைப் என்னத்திற்கு இருக்குது? அது இருக்க உங்களுக்கு ஏன் பயம்? அதைவிட நாங்கள் மேலதானே இருக்கிறம். உங்களுக்கு ஏதும் கடுமையா இருந்தாச் சொல்லுங்க. மிச்சத்தை நான் பார்க்கிறன். நான் கதைச்சா நிச்சயம் அது எடுபடும். அதால நீங்கள் தேவை இல்லாமல் பயப்பிட வேண்டாம்.’
‘அது உண்மை. சாதாரண ஆட்கள் சொல்லுகிறதைவிட நீ சொன்னா நிச்சயம் கேட்பாங்கள். எனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் பை ஒண்டில போட்டுக் கதவுக்கு வெளிய வை. குறிப்பா மொபீல் சார்ச்சர் எனக்கு வேணும். அது இல்லாட்டி ஒரு தொடர்பும் இருக்காது. அதோடை அந்த எக்ஸ்றா கேத்தில், ரீ பக்கேற், ரின்பால், எண்டு தேவையானதை எல்லாம் எடுத்து வை. படுக்கைக்குத் தேவையான பொருட்களையும் மறந்திடாதை.’
‘இதெல்லாம் எனக்குத் தெரியாதே? நீங்கள் இதையெல்லாம் சொல்ல வேணுமே? எல்லாம் சரியாய் வரும். நான் வைச்ச பிறகு போன் பண்ணுகிறன். அப்ப போய் பையை எடுங்க. சாப்பாடும் அப்பிடியே வரும். வேறை என்ன வேணும் எண்டாலும் போன் பண்ணுங்க. காய்ச்சல் காயத் தொடங்கினா அதையும் உடனடியா எனக்குப் போன் பண்ணிச் சொல்லுங்க.’
‘கட்டாயம் சொல்லுறன். நீ தேவை இல்லாமல் பயப்பிடாதை. நீங்கள் இரண்டுபேரும் தனியச் சமாளிப்பீங்கள் தானே? பயம் ஒண்டும் இல்லையே?’
‘நீங்கள் கீழ இருக்கிறியள். நாங்கள் மேல இருக்கப் போகிறம். இதில பயப்பிட என்ன இருக்குது? நீங்கள் ஒண்டும் இதைப்பற்றிக் கவலைப்படாதையுங்க.’
‘இல்லை… இந்த வருத்தம் தொற்றத் தொற்ற இங்கையும் என்ன மாற்றங்கள் வருமெண்டு யாருக்குத் தெரியும்? அதை நினைக்கவும் பயமாக இருக்குது.’
‘உது தேவை இல்லாத கவலை அப்பா. இங்க அப்படி எதுவும் நடக்கிறதுக்குச் சந்தர்ப்பம் இல்லை. சாப்பாட்டுச் சாமன்களைக் கொண்டு வந்து தந்தாங்கள் எண்டா நாங்கள் சமாளிப்பம். என்ன… உங்களுக்கும் தொற்றி இருக்கக் கூடாது. அப்பிடித் தொற்றினாலும் கடுமை ஆக்கக் கூடாது. அதில ஏதும் சிக்கல் வரயில்லை எண்டா நாங்கள் எதுக்கும் பயப்பிடத் தேவை இல்லை. இங்க வேற நாடுகளில நடக்கிற மாதிரி வீட்டுக்கை எல்லாம் யாரும் லேசில வரமாட்டாங்கள். நீங்கள் ஆறுதலா றிலக்ஸ் எடுங்க அப்பா.’
‘சரி நான் உன்னை மினக்கெடுத்த இல்லை. நீ போய் உன்ரை அலுவலைப் பார். நானும் இதுக்க இருக்கக்கூடிய மாதிரி எல்லாத்தையும் ஒழுங்கு படுத்துகிறன். இங்க ஒரே தூசா இருக்குது. வைக்கும் மெசின் பிடிக்க வேணும். அது கீழ இருக்குதா?’
‘ஓ… அங்கதான் இருக்குது. அதை எடுத்து ஒருக்காக் கீழ்க்கோலை நல்லாத் துப்பரவு செய்யுங்க. பிறகு அங்கேயே வைச்சிடுங்க. இனி என்ன பொருள் உங்களிட்ட இருந்து வாறது எண்டாலும் ஸ்பிரீற் போட்டுத் துடைச்ச பிறகு மட்டுமே இங்க வரவேணும்.’
‘நான் இங்க நெத்தில செக் பண்ணினனான். ஸ்பிரீற் நெத்தில கிடையாது. சில அப்போத்தெக்கில மட்டும் இருக்குது. நீ ஒருக்கா நேர போய் அதை வாங்கி வா. சோப்புத் தாராளமாய் இருக்குது தானே?’
‘இருக்குது. சரி நான் அப்ப அதை முதல்ல பார்க்கிறன். பிறகு ஏதும் எண்டாத் துப்பரவா வெளியில போகமுடியாமல் போயிடும். நீங்கள் உங்கடை அலுவலைப் பாருங்க… அப்ப நான் கெதியாப் போயிட்டு வாறன். கடைக்கு ஐஞ்சு நிமிசத்தில காரில போயிட்டு வந்திடலாம். பக்கத்தில இல்லாட்டியும் வேறை இடத்திலை எண்டாலும் போய் வாங்கிக் கொண்டு வாறன்.’
‘சரி கெதியாய் போயிட்டு வா. வந்த பிறகு மிச்சத்தைப் பார்க்கலாம். காருக்கையும் ஒரு ஸ்பிரீற் போத்தல் வை. நான் காரைப் பாவிச்சா அதைத் துடைக்க வேணும்.’
‘சரி நான் வைக்கிறன்.’
‘சரி. வாய்.’
‘வாய்.’

அகிலன் திறன்பேசியை வைத்த பின்பு சவர்க்காரத்தை வாளியில் கரைத்துத் தூசு படிந்திருக்கும் மேற்பரப்புகளை முதலில் நன்றாகத் துடைத்தான். பின்பு நிலத்தையும் வைக்கும் கிளினரால் துப்பரவு செய்துவிட்டுச் சவர்க்காரத்தில் நனைத்த துணியால் துடைத்து எடுத்தான். அதைச் செய்து முடித்த பொழுது அவனுக்குப் பசித்தது. சார்மினி அவசரமாகப் புறப்பட்டு மருந்துக் கடைக்குச் சென்றுவிட்டாள். இனி அவள் மீண்டும் திரும்பி வந்தாலே சாப்பாடு கிடைக்கும். ஆனால் மற்றைய பொருட்களை உள்ளே வைத்துவிட்டேன் என்று மருந்துக் கடைக்குச் செல்வதற்கு முன்பு திறன்பேசியில் தொடர்பு கொண்டு கூறிவிட்டச் சென்றிருந்தாள். துப்பரவு செய்து முடிந்துவிட்டதால் அவள் என்ன என்ன பொருட்களை வைத்திருக்கிறாள் என்று பார்த்து அதை எடுத்து வரலாம் என்று அவன் எண்ணினான். அதில் அவன் கேட்டுக் கொண்டது போலக் கேற்றிலும், தேநீருக்குத் தேவையான பொருட்களும் இருந்தன. அதனால் தற்போது சுவையான தேநீர் தயாரித்துப் பருகலாம் என்று எண்ணினான்.

சார்மினி அவனது மனதை நள்ளிரவுச் சூரியன் போல எப்போதும் அறிந்தவள் என்றே சொல்ல வேண்டும். எதிர்பார்த்தபடியே தேநீருக்குத் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. சிற்றுண்டிகளும் அதற்குத் துணையாக இருந்தன. அத்தோடு படுக்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வைத்திருந்தாள். அதைப் பார்த்ததும் அகிலனுக்குச் சந்தோசமாய் இருந்தது. இப்போது இருக்கும் பசிக்குத் தேநீர் குடித்ததால் நன்றாய் இருக்கும் என்கின்ற நினைப்பை அவன் செயலாக்கினான். தேநீரைக் குடித்துவிட்டு மற்றைய வேலைகளைச் செய்யலாம் என்பது அவன் எண்ணம். அப்போது சார்மினி திரும்பிவரும் நேரத்திற்கு அது கணக்காக இருக்கும் என்பது அவன் எண்ணம்.

கோலுக்குள் பொருட்களைக் கொண்டு வந்து வைத்துவிட்டுத் தேநீர் தயாரிக்கும் வேலையில் அகிலன் ஈடுபட்டான். தேநீரைத் தயாரித்து ஒரு இழுவை இழுத்த பொழுது சொர்க்கம் கோலுக்குள் வந்ததாக அவனுக்குத் தோன்றியது. ஆறுதலாக அதை இரசித்துப் பருகலாம் என்று சோபாவில் அமரும் போது மீண்டும் திறன்பேசி அவனை அன்போடு அழைத்தது. யாராக இருக்கும் என்கின்ற கேள்வியே அவன் மனதில் முதலில் எழுந்தது. யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் அது முக்கியமான அழைப்பாக இருக்கலாம் என்பது விளங்கியவனாய் அவசரமாகச் சென்று அதை எடுத்தான். அப்படி எடுக்கும்போது அது யாரிடம் இருந்து வருகிறது என்பதைப் பார்த்தான். அது அவன் வேலை செய்யுமிடத்தின் தலைமை அதிகாரியிடம் இருந்து வந்தது. என்னவாக இருக்கும்? சிறிது நேரத்திற்கு முன்புதானே கதைத்தது…? என்கின்ற யோசனையுடன் அவன் அதைப் பாய்ந்து எடுத்தான்.
‘கலோ… நான் கெலேனா.’
‘சொல்லுங்க என்ன விசயம்?’
‘நீங்கள் உல்லவோலிற்குப் போய்க் கொரோனா உங்களுக்கு இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதற்கு நீங்கள் அழைக்க வேண்டிய எண்ணைத் தருகிறேன். மறந்துவிடாமல் பரிசோதனை செய்யுங்கள். முடிவு வந்து உடன் அதை அறிவியுங்கள். நான் தரும் எண்ணிற்குத் தொடர்பு கொண்டால் அவர்கள் மேற்கொண்டு விபரம் கூறுவார்கள்.’
‘ஓ… அப்படியா? நீங்கள் எண்ணைச் சொல்லுங்கள். நான் நிச்சயம் தொடர்பு கொண்டு அந்தப் பரிசோதனையை மிக விரைவாகச் செய்கிறேன். அது எங்களுக்கும் மன அமைதியைத் தரும்.’
‘உண்மை அகிலன். எல்லோரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது. அதனால் இந்தப் பரிசோதனை மிகவும் முக்கியமானது.’
‘எனக்கு அது நன்கு விளங்குகிறது. எனது குடும்பமும் இதற்கான விடையை அறியக் காத்திருக்கிறது.’
‘சரி அகிலன் தொலைப்பேசி எண்ணை எழுதிக் கொள்ளுங்கள்.’

அவள் தொலைப்பேசி எண்ணைக் கூறினாள். அகிலன் அவதானமாக எண்ணை எழுதிக் கொண்டான். அதன் பின்பு கெலேனா தொலைப்பேசியைத் துண்டித்துக் கொண்டார். அகிலன் அவர் தந்த எண்ணைப் பார்த்தான். அது ஆறு இலக்கம் கொண்ட பிரத்தியேக எண்ணாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொறுமை அவனிடம் இருக்கவில்லை. அவன் அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டான். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் காத்திருக்க வேண்டும் என்று பதில் வந்தது. மனிதர்களுக்கு இயந்திரம் பதில் சொல்லும் காலம் இது. அகிலனுக்கு அது புதுமை இல்லை. அவன் மனிதக் குரலுக்காய் காத்திருந்தான்.

நோர்வேயில் இந்த வருத்தத்தின் தொடக்கக் காலம் இது. பலரும் சந்தேகத்தில் அந்த எண்ணுடன் தொடர்பு கொள்வார்கள். தொடர்பு கொள்பவர்களில் பலர் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள அதிக கேள்வி கேட்பார்கள். அதனால் அதிக நேரம் கதைப்பார்கள். பொறுமையைத் தவிர அகிலனுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. அவன் அந்தக் காத்திருப்பிற்கான இசையைக் கேட்ட வண்ணம் காத்திருந்தான். அந்தக் காத்திருப்பு மிகவும் அலுப்பைத் தந்தது. இருந்தாலும் இணைப்பைத் துண்டித்துக் கொள்ள முடியாது என்பது அவனுக்கு நன்கு விளங்கியது.

இதற்கு இடையில் சர்மினி வந்துவிட்டதற்கான சத்தம் மேலே கேட்டது. இருந்தும் அவளுடன் தொடர்பு கொள்ள முடியாத அவஸ்தை அவனுக்கு. அவன் தொடர்ந்தும் தொடர்பில் காத்திருந்தான். இறுதியாக ஒருவாறு அவர்கள் அழைப்பிற்கு உயிர் கொடுத்தார்கள்.
‘இது தொற்று நோய்த் தடுப்பு மையம். நான் நீனா கன்சன் பேசுகிறேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?’ என்று ஒரு பெண்குரல் அவனைக் களத்திற்கு இழுத்து வந்தது.
‘நான் அகிலன் பேசுகிறேன். எனது வேலையிடம் றிக்ஸ்கொஸ்பிற்றல். அங்கே இரத்தப் பரிசோதனை எடுக்கும் இடத்திலும் அதைப் பரிசோதிக்கும் இடத்திலும் வேலை செய்கிறேன். இன்று சுரங்க ரதத்தில் வரும்போது அதில் விமான நிலையத்திலிருந்து வந்த பயணி ஒருவர் மிகவும் பலமாகத் தும்மிவிட்டார். நானும் அவ்விடத்தில் சுவாசித்துவிட்டேன். அதனால் அவருக்குக் கொரோனா இருந்தால் அது தொற்றி இருக்குமோ என்று பயப்படுகிறேன். எனது தலைமை அதிகாரி கொரோனாவிற்கான பரிசோதனை செய்து எனக்குக் கொரோனா தொற்றவில்லை என்று உறுதி செய்த பின்பே வேலைக்கு வருமாறு கூறுகிறார். அதனால் எனக்கு விரைவாக அந்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.’
‘ஓ… உங்களுக்குத் தொண்டை நோ, இருமல், காய்ச்சல் இப்படி ஏதாவது தொடங்கி இருக்கிறதா? அனேகமாக அவை இருப்பதற்கு இப்போது வாய்ப்புக்கள் இருக்காது என்று நினைக்கிறேன். அதனால் உங்களுக்குப் புதன்கிழமை பன்னிரண்டு மணிக்கு நேரம் ஒதுக்குகிறேன். அதுவரையும் நீங்கள் எங்கும் வெளியே செல்ல வேண்டாம். தனித்து வீட்டில் இருக்க வேண்டும். அத்தோடு இங்கே பரிசோதனைக்கு வரும்போது பொதுப் போக்குவரத்தைப் பாவிக்கக்கூடாது. உங்களின் சொந்த வாகனத்தைப் பாவியுங்கள். அல்லது யாராவது நண்பர்களிடம் இருந்து உதவியைப் பெறுங்கள்.’
‘பருவாய் இல்லை. என்னிடம் சொந்த வாகனம் இருக்கிறது. அதில் நான் வரலாம்.’
‘மிகவும் நன்று. அதற்கு இடையில் உங்களுக்கு ஏதாவது கடுமையான வருத்தமாக இருந்தால் நீங்கள் அம்புலன்சிற்குத் தொடர்பு கொள்ளுங்கள். அப்படி எதுவும் நடக்காது என்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு எச்சரிக்கைக்கு இதைப் பற்றிச் சொல்லி வைக்கிறேன்.’
‘பரிசோதனைக்கு நான் ஏதாவது முன்னேற்பாடு செய்ய வேண்டுமா?’
‘இல்லை. இதற்கு எதுவும் தேவையில்லை. நீங்கள் தனித்து இருங்கள். மற்றவர்களுக்கு அருகே செல்ல வேண்டாம். மற்றும்படி நீங்கள் சாதாரணமாக உங்கள் நாளைக் கழியுங்கள். ஏதாவது அவசரம்  என்றால் ஏற்கனவே கூறியபடி தொடர்பு கொள்ளுங்கள்.’
‘பரிசோதனைக்கு வரும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டி வருமா?’
‘அது வருபவர்களின் தொகையைப் பொறுத்தது. எப்படி என்றாலும் அரை மணித்தியாலம் தொடக்கம் ஒரு மணித்தியாலம் வரைக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டி வரும் என்று நான் நினைக்கிறேன். அதற்குத் தயாராக வாருங்கள்.’
‘தயவு செய்து நான் எங்கே வரவேண்டும் என்பதையும் நீங்கள் எனக்கு விரிவாகக் கூற வேண்டும். இடம் தெரியாது தேடிக்கொண்டு நின்றால் நேரத்திற்குப் பரிசோதனைக்கு வரமுடியாது போய்விடும்.’
‘ஒ… அப்படியா…? நீங்கள் இதற்கு முன்பு உல்லவோல் மருத்துவமனைக்கு வந்து இருக்கிறீர்களா? உங்களுக்கு மருத்துவமனையின் அமைப்பு பற்றிய பரிட்சியம் இருக்கிறதா?’
‘ஆம்… நான் சில வேளை அங்கே வந்து இருக்கிறேன். நீங்கள் விளங்கப்படுத்துங்கள். அது எனக்கு இலகுவாகக் கண்டுபிடித்து வருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.’
‘உங்களுக்கு உல்லவோல் மருத்துவமனைக்குள் இருக்கும் ‘கிவி’ கடை தெரியுமா?’
‘தெரியும்.’
‘நீங்கள் அந்தப் பாதையால் தொடர்ந்து நேராகப் பின்னோக்கி வரவேண்டும். பரிசோதனை செய்யும் இடத்திற்கு முன்பாக தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.’
‘ஓ… அப்படியா? அப்படி என்றால் கண்டுபிடித்து வருவது சிரமமாக இருக்காது. தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் இன்னும் நேரத்தைச் சொல்லவில்லை.’
‘ஓ… மறந்துவிட்டீர்களா? நீங்கள் புதன்கிழமை பன்னிரண்டு மணிக்கு இங்கே வரவேண்டும் என்று கூறினேன். அங்கே பலரும் வரிசையில் நிற்பார்கள். நீங்களும் அதில் இணைந்து கொள்ளுங்கள். ‘
‘நான் நேரத்தை மறந்ததிற்கு என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றிகள்.’
‘நல்லது நீங்கள் மிகவிரைவாக உண்மையை அறிந்து கொள்ள எனது வாழ்த்துக்கள். பயப்படாதீர்கள். அனேகமாக உங்களுக்கு இந்த நோய் தோற்றி இருக்க வாய்ப்பு இருக்காது என்று எண்ணுகிறேன். இது ஒரு உறுதி செய்யும் முயற்சியே.’
‘மிக்க நன்றி.’
‘காத.’
‘காத’

என்று விடை கூறிய அகிலன் திறன்பேசியைத் துண்டிக்க அது தனக்கு ஓய்வு வேண்டாம் என்பது போல மீண்டும் சிணுங்கியது. அதை எடுத்துப் பார்த்த பொழுது அந்த அழைப்புச் சார்மினியிடம் இருந்து வருவது தெரிந்தது. அகிலன் ஆர்வத்தோடு அதை ஏற்றான்.
‘என்னப்பா செய்கிறியள்? எவ்வளவு நேரமா உங்களுக்கு அடிக்கிறன் எடுக்கிறியள் இல்லை. என்ன சரியான விசியா இருந்தீங்கள் போல…? நானும் ஓயாமல் கால் மணித்தியாலமாய் உங்களுக்கு அடிச்சுக் கொண்டு இருக்கிறன்.’
‘தெரியும் சார்மினி. ஆனா நான் உல்லவோல் கொஸ்பிற்றலோடை கதைச்சுக் கொண்டு இருந்தன். அதைக் கட்பண்ணி உன்னோடை கதைக்க முடியாது. அப்பிடிக் கட்பண்ணினால் திரும்ப அவங்களோடை கதைக்க ஒருமணித்தியாலம் வெயிற் பண்ண வேணும். அதால நீ அடிக்கிறாய் எண்டு தெரிஞ்சும் அதை எடுக்கிற சந்தர்ப்பம் எனக்கு இருக்க இல்லை. இப்ப விளங்கிச்சா உனக்கு? போனை எடுக்காததுக்குச் சொறி செல்லம்.’
‘பருவாய் இல்லை அப்பா. நல்லதாய் போச்சுது. எப்ப வரட்டாம்?’
‘புதன்கிழமை வரட்டாம். எங்க வரவேணும் எண்டும் விளங்கப்படுத்திச்சினம்.’
‘அப்ப நல்லதாப் போச்சுது. எப்பிடிப் போகப் போகிறியள்?’
‘என்னைக் கூட்டிப் போகக் கெலியா வரும்? கார்ரிலதான் போக வேணும். வேறை எப்பிடிப் போகலாம்? பப்பிள்க் ரான்ஸ்போட் பாவிக்க வேண்டாமாம். வேற வழி இல்லை.’
‘அதுக்குப் பிறகு நான் எங்கையும் போகிறது எண்டா என்ன செய்கிறது?’
‘நடந்து போகலாம்தானே? என்ன நீ இப்படிப் பயப்பிடுகிறாய். நான் கார் யன்னலைத் திறந்து காத்துப் போகவிட்டுப் பிறகு ஸ்பிரீற்றால காரின்ரை உட்பகுதியை துடைச்சுத் துப்பரவு செய்து போட்டு வாறன். நீயும் வேணுமெண்டால் ஸ்பிரீற்றால துப்பரவு செய்துபோட்டுக் காரைப் பாவிக்கலாம்.’
‘றிஸ்க் இல்லையே அப்பா?’
‘நீதான் சொல்ல வேணும். அந்த அளவுக்கு இருக்காது எண்டு நான் நினைக்கிறன். தேவையில்லாமல் பயப்பிடாதை. வேணும் எண்டா மாஸ்க் கொண்டே வை. நான் மாஸ்க் பாவிக்கிறன். நீ ஸ்பிரீற் வாங்கி வந்திட்டியா?’
‘ நீங்கள் இன்னும் இந்த வருத்தத்தின்ரை சீதியஸ் பற்றி விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறியள் எண்டு நான் நினைக்கிறன். இந்த வைரஸ் சுவாசத்தில இருந்து வருகிற நீர்த்துளிகளுக்கு உள்ளேயும் வாழுமாம். அதுவும் காற்றில மூன்று மணித்தியாலத்திற்கு மேல உயிர் வாழுமாம். அப்பிடி நீங்கள் தும்மி அது காருக்க இருந்தா நான் என்ன செய்யலாம் சொல்லுங்க பார்ப்பம்?’
‘உன்னுடைய பயத்திற்கும் சில காரணங்கள் இருக்குது. இருந்தாலும் அதுக்குத்தானே கார் கண்ணாடியைத் திறந்துவிடப் போகிறன். அது காத்தோடை போயிடும். மீதியை நீ ஸ்பிரீற் போட்டுத் துடைச்சுவிடு. வேணும் எண்டா நான் கார் பாவிச்சு மூண்டு மணித்தியாலத்திற்குப் பிறகு நீ காரைப் பாவி. இப்ப ஓகேயா? அல்லது இன்னும் பயமா இருக்குதா?’
‘இல்லை நீங்கள் சொல்லுகிறது சரிதான். அப்படிச் செய்வம். எதுக்கும் நாங்கள் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லதுதானே?’

‘ம்… உண்மை. அது சரி ஸ்பிரீற் வாங்கி வந்திட்டியா?’
‘அதுக்கு நிறைய இடம் அலைய வேண்டி இருந்திச்சுது. ஒரு மாதிரி நெத்தில பார்த்து கடையைத் தேடிப் பிடிச்சுப் போய் வாங்கிக் கொண்டு வந்திட்டன். சாப்பாட்டுச் சாமான்களும் நெத்தில ஓடர் பண்ணப் போகிறன். அதுவும் கடைகளில என்ன இருக்கும் என்ன இல்லை எண்டு தெரிய இல்லை. அதோடை நெத்தில ஓடர் பண்ணினால் கொஞ்சம் விலையாகவும் இருக்கும்.’
‘இப்ப விலையைப் பற்றி யோசிக்காத. வருத்தம் வரமல் இல்லாட்டிப் பரவாமல் இருக்கிறது முதல் முக்கியம். மற்றதைப் பற்றி ஒண்டும் நாங்கள் இப்ப யோசிக்கத் தேவையில்லை. கசைப் பார்த்து வருத்தத்தை வாங்க இயலாது.’
‘நான் உங்களுக்குச் சாப்பாடு சூடாக்கிக் கொண்டு வாறன். நீங்க முதல்ல சாப்பிடுங்க. நானும் இவனுக்குச் சாப்பாடு குடுக்க வேணும். எண்டாலும் இன்னும் ஒரு குழப்பம் எனக்கு இருக்குது அப்பா.’
‘என்ன அது?’
‘அது என்ன எண்டா கரந்தேன முடிய வேலைக்குப் போக வேணும். அப்பிடி எண்டால் எங்களுக்குப் பிரச்சினையா இருக்கும். அதுக்கு என்ன செய்கிறது? நாளைக்கும் அவனை எப்பிடிப் பள்ளிக்கூடம் அனுப்புகிறது எண்டும் தெரிய இல்லை. அங்க ஏதாவது தொற்றிக் கொண்டு வந்தால் என்ன செய்கிறது எண்டும் தெரியாது? இல்லாட்டி அவனுக்கும் கரந்தேனவா?’
‘அவன் பள்ளிக்கூடம் கட்டாயம் போக வேணும் எண்டு இல்லை. அதுக்கும் ஏதாவது ஒரு முடிவு வரும். மற்றதை ஆறுதலாக யோசிப்பம். இப்ப நீ சாப்பாட்டைச் சூடாக்கிக் கொண்டு வா.’
‘சரி.’

அகிலன் திறன்பேசியை வைத்துவிட்டுக் குளிக்க நினைத்தான். அதற்கிடையில் சார்மினி உணவைச் சூடாக்கிக் கொண்டு வந்தால் சிக்கலாகிவிடும் என்பது அவனுக்கு விளங்கியது. அவளுடன் மீண்டும் திறன்பேசியில் தொடர்பு கொண்டு தான் குளித்துவிட்டு வந்த பின்பு உணவைச் சூடாக்குமாறு கூறிவிட்டுக் குளிக்கச் சென்றான்.

அவன் விரைவாகவே குளித்துவிட்டு வந்து சாப்பாட்டைச் சூடாக்கி வைக்குமாறு திறன்பேசியில் கூறிவிட்டுத் தொலைக்காட்சியை இயக்கினான். அதில் செய்தி போய்க்கொண்டு இருந்தது. செய்தியில் அரசாங்கம் பாடசாலைகளைத் திங்கள் கிழமையிலிருந்து மூடுவதாக அறிவித்தது. அதைப் பார்த்த பொழுது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இன்று தான் தேவையில்லாது சுரங்க ரதத்தில் ஏறி இருக்காவிட்டால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்கின்ற எண்ணம் எழுந்தது. சார்மினி காரைக் கொண்டு செல்வதால் அவன் அதில் போகவேண்டியது கட்டாயமாகியது. சார்மினி ஏற்கனவே ஒரு முறை மிதிவண்டியில் வேலைக்குச் சென்று வருமாறு கூறினாள். ஆனால் அலுப்பில் அகிலன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைக் கேட்டிருந்தால் இன்று சிலவேளை இப்படிச் சிந்திக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. செய்தியில் இனி நோர்வேயில் எப்பிடியான நடைமுறைகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன என்று விவரித்து கொண்டு சென்றார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் போதுமா அல்லது இதைவிட கட்டுப்பாடுகள் வேண்டுமா என்பது அகிலனுக்கு விளங்கவில்லை. அவனது சிந்தனையைக் குழப்புவது போல மீண்டும் சார்மினி திறன்பேசியில் தொடர்பு கொண்டாள்.
‘திரும்ப என்ன சார்மினி?’
‘சாப்பாடு கொண்டு வந்து வைக்கிறன். சூடாறமுதல் வந்து எடுத்துக் கொண்டேச் சாப்பிடுங்க. சரியே? பிறகு மறந்துபோய் ரீவியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது இல்லை.’
‘இல்லை… நான் இப்ப வாறன். நீயும் ரீவியைப் பார். திங்கள் கிழமையில இருந்து ஸ்கூல் இல்லையாம். ஆனா நாங்கள் கரந்தேனவுக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டி வரும் எண்டு நினைக்கிறன்.’
‘முதல்ல இது முடியட்டும் அப்பா.’
‘நீ சொல்கிறதும் உண்மை. எதுக்கும் நாங்கள் நிலைமையைச் சமாளிக்கிறதுக்கு றெடியா இருக்க வேணும்.’
‘ம்… இருப்பம் அப்பா. நாங்களே நிலைமையைச் சமாளிக்க முடியாட்டி யார் நிலைமையைச் சமாளிப்பினம்?’
‘அதைத்தானே நான் சொதப்பீப் போட்டான்.’
‘நடந்தது அல்லது முடிஞ்சதை இனி யாராலும் மாற்ற முடியாது. அப்பிடி மாத்த முடிஞ்சிருந்தா சீனாவே மாத்தி இருக்கும். அப்பிடி மாத்தி இருந்தால் அது எப்பிடியான உலகமாய் இருந்து இருக்கும்? அப்பிடி எண்டா எத்தினை விசயத்தை மனிசன் றிவேர்ஸ் பண்ணி இருப்பான். அதைப் பற்றி இப்ப யோசிச்சு என்ன பிரயோசனம்? இனிக் கவனமா இருப்பம். அப்பிடி இருந்தால் அதுவே போதும். எதுவும் உண்மையில் எம்கையில் இல்லாத உலகு இது. இல்லையா அப்பா?’
‘தத்துவம்… ஆனா நீ சொல்லுகிறது உண்மை. அதை எல்லாம் தெரிஞ்சு கொண்டும் நாளை நிரந்தரம் எண்டுகிற கற்பனையில வாழ்கிறதே இந்த மனித வாழ்க்கை. அதை யாரும் இலகுவில மீறிவிட முடியாது. சரி…. நீ போய் முதல்ல செய்தியைப் பார்.’
‘ஓ நான் பார்க்கிறன். அதோடை பிரசன் உங்களோடை கதைக்க வேணுமாம்.’
‘ஓ ஸ்கைப்பில கதைப்பம்.’
‘அவன் உங்களிட்டை வரவேணும் எண்டு அடம்பிடிக்கிறான். அவனுக்கு இந்த வருத்தத்தைப் பற்றி முழுமையா விளங்குதில்லை. அப்பாவிட்டப் போக வேணும் எண்டு கேட்கிறவனிட்டை இல்லை எண்டால் உடன முகம் சிவந்து கண்ணீர் பெரும் ஊற்றாய் பொங்குது. ‘ஏய் காத்த டை’ (நான் உன்னை வெறுக்கிறேன்) எண்டுகிறான். எதுக்கும் நீங்கள் இப்ப சாப்பிடுங்க. அவனுக்குச் சாப்பாடு குடுக்கேக்கை நான் உங்களை ஸ்கைப்பில கூப்பிடுகிறன்.’
‘சரி. அவன் குழந்தைப் பிள்ளை தானே? அவனுக்கு எப்பிடி இது எல்லாம் விளங்கும்? குழந்தைப் பிள்ளைகளுக்கு இது பெரிசாத் தொத்தாது எண்டுகிறாங்கள். அதால நாங்கள் தேவை இல்லாமல் பயப்பிடத் தேவை இல்லை எண்டு நினைக்கிறன்.’
‘அப்பிடி எல்லாம் நாங்கள் அசண்டையீனமாய் இருக்க முடியாது. இந்த வைரஸ்சால எப்பிடியான பிரச்சினை வரும் எண்டு யாருக்கும் சரியாகத் தெரியாது. உடலில இருக்கிற இயற்கையான எதிர்ப்புச் சக்தியையே கடத்தி தன்ரை விருப்பத்திற்குப் பாவிக்குமாம். இந்த வைரஸ் எண்பது வீதத்திற்கு மனிதப் புரதத்தைக் கொண்டிருக்காம். அப்படியான வைரஸ் யாருக்கும் தொத்தாமல் இருக்கிறதுதான் நல்லது. தொத்தினா உடன வாற வருத்தம் ஒண்டு. ஆனா நீண்டகாலத்தில எப்பிடியான பாதிப்புகளை உண்டு பண்ணும் எண்டது சரியாக யாருக்கும் தெரியாது. அதால எந்தவொரு விசயத்திலும் நாங்கள் அசண்டையீனமாய் இருக்கக்கூடாது அப்பா. இது சிலருக்கு சாதரண காய்ச்சல் மாதிரிக் கழியலாம். ஆனால் சிலரது வாழ்க்கையைத் தலைகீழாக்கிப் போடும் போல இருக்குது. எதுக்கும் போகப் போகத்தான் தெரியும். நாங்கள் இயலுமானவரை கவனமாய் இருக்க வேணும்.’
‘நீ சொல்லுகிறுது உண்மை. நாங்கள் கவனமாக இருக்க வேணும். அதே நேரம் அவனுக்கும் அதில பெரிய அதிர்ச்சி ஏற்படக்கூடாது. எப்பிடியாவது அவனைச் சமாளிக்க வேணும்.’
‘அதுக்கு நாங்கள் இதைவிட என்ன செய்ய முடியும்? இந்த வைரஸ் எப்பிடி ஒரு ஆளைவிட்டு மற்ற ஆளுக்குப் பாயுது எண்டு முழுமையாத் தெரியாது. அப்படி இருக்கேக்க நாங்கள் இதைவிட வேற என்ன செய்யமுடியும்? பிறகு ஏதும் தப்பாகீட்டா பிறகு இருந்து கவலைப்பட முடியாது.’
‘சரி… நீ போய் அலுவலைப் பார்.’
‘சரி.’

குளித்துவிட்டு வந்ததிலிருந்து அகிலனுக்கு உடம்பு குளிர்வது போல இருந்தது. அவன் எழுந்து சென்று வெப்மூட்டியை முறுக்கிவிட்டான். இது நிலத்திற்குக் கீழே இருக்கும் பாதாள அறை. பொதுவாக கோடைக்காலத்திலும் சீதளம் சிதையாது இருக்கும். குளிர்காலம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை. இப்போது குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் தருவாய். சிறிது நேரம் வந்துவிட்டப் போனால் குளிர் தெரியாது. இப்போது அதிக நேரம் இங்கு இருப்பதால் அதை உணர முடிகிறது என்பது அகிலனின் எண்ணமாகியது.

சார்மினி குத்தரிசிச் சோறும் முருங்கைக்காய் குழம்பும், நண்டு வறையும் சமைத்து இருந்தாள். அகிலன் ஆர்வத்தோடு எடுத்து அதைச் சாப்பிடத் தொடங்கினான். இரண்டு வாய் வைத்திருப்பான்… அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பொதுவாகச் சாப்பாட்டில் அவன் யாரும் குறை சொல்ல வைப்பது இல்லை. இன்று என்ன நடந்தது என்பது அவனுக்கு விளங்கியும் விளங்காது போல இருந்தது. அவன் இது தனது வீண் கற்பனை எனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு மீண்டும் சாப்பிட்டான். அவனால் வழமை போல் முழுவதையும் சாப்பிட முடியாவிட்டாலும் பெரும்பகுதியைச் சாப்பிட்ட திருப்தியோடு மீதம் இருந்த உணவைக் குப்பை வாளிக்குள் கொட்டிவிட்டு தட்டைச் சவர்க்காரம் இட்டுச் சுடுநீரில் நன்கு அலசிக் கழுவினான். அவனுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. அவன் அந்தத் தட்டை மீண்டும் சவர்க்காரம் இட்டு கவனமாகக் கழுவினான். கழுவிய உடனே சென்று அதைக் கதவடியில் வைத்தான். சார்மினி அதை எடுத்துப் பாத்திரங்கள் கழுவும் இயந்திரத்தில் கழுவப் போடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். அதன் பின்பு அதில் லைரஸ் வாழ்வதற்கான சந்தர்ப்பம் இருக்காது. இந்த வைரசிற்கு வெப்பம் அதிகம் பிடிப்பதில்லை என்று கதைக்கிறார்கள். பொதுவாகக் குளிர்மையான நோர்வேக் காலநிலை மிகவும் அதற்குப் பிடிக்குமென நம்பப் படுகிறது. அது வைரசிற்குச் சாதகமாய் அமைந்தாலும் இங்கு மனிதர்களின் செறிவு குறைவாக இருப்பது அதற்குப் பாதகமாக அமையும் என்பதும் உண்மை. சனநெருக்கம் குறைவு என்றால் ஒரு மனிதனை விட்டு மற்றைய மனிதனுக்குப் பாய்வது கடினமாக இருக்கும். அப்படி நோர்வேயின் மற்றப் பகுதிகளிலிருந்தாலும் ஒஸ்லோ அப்படி அல்ல என்பதும் உண்மை. அதில் வெளிநாட்டவர்கள் அதிகம் செறிவாக வாழும் பகுதி முக்கியமானது. அத்தோடு பலநபர்களை அங்தவர்களாகக் கொண்ட பெரிய குடும்பங்கள் வாழும் ஒஸ்லோவின் கிழக்குப் பகுதியும் அடங்கும். இந்தப் பகுதிகள் நோர்வேயில் வைரசிற்கு பெரும் வாய்ப்பான இடமாகும். லண்டன் போன்று இங்கு நகரத்தினுள் அதிக சனநெருக்கம் இல்லாவிட்டாலும் ஒஸ்லோவின் மத்திய பகுதி எப்போதும் சனநெருக்கமாகவே இருக்கும். அதுவும் குரன்லாண்ட் போன்ற பகுதிகளில் மக்கள் மிகவும் நெருக்கமாகச் செறிந்து நடமாடுவார்கள். அங்கே இடிபட்ட வண்ணம் மரக்கறிக் கடைகளில், இறைச்சிக் கடைகளில் கொள்முதல் செய்வார்கள். அது வைரசிற்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும் என்பதிலும் ஐயம் இல்லை. இதைப் பற்றி எப்படிக் கவனம் எடுக்கப் போகிறார்கள் என்று அகிலனுக்கு விளங்கவில்லை. குரன்லாண்ட் போன்ற வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் நடமாடும் இடங்களில் மக்களும் அசண்டையீனமாக இருப்பதாகவே அகிலனுக்குத் தோன்றியது.

தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் நாட்டில் மாறி இருக்கும் நடைமுறை பற்றி விளங்கப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இந்த நடைமுறை மாற்றத்திற்கு முற்காரணம் பலரும் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்ந்து இருக்க வேண்டும். அதன் பின்பே அரசாங்கம் விழித்துக் கொண்டதாக அகிலனுக்குத் தோன்றியது. இப்போது என்றாலும் நோய் பரவாது கட்டுப்படுத்தும் விதமாக அவர்கள் நடவடிக்கை எடுப்பது அவனுக்கு பெரும் மன மகிழ்வைத் தந்தது.

சொக்கட்டான்

சென்னை கோடம்பாக்கத்தில் மேலும் கீழுமாக வழி பிரிக்கும் அந்தப் பாலம். அதன் கீழ் இரண்டு சிறிய சந்துகள் பாலத்திற்குத் தோழர்கள் போல நீளும். அவை பல வரலாற்றைத் தம்மில் அடக்கிய வண்ணம் பல சகாப்தங்களாக அவ்விடத்தில். அங்கே பல பதிப்பகங்கள், உணவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றின் நெருக்கம். ஈ இருக்கும் இடம்கூட இனி எவருக்கும் இல்லை என்பதாகச் சென்னையில் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இதுவும் ஒன்று. பாலத்திற்குக் கீழ் அது ஒரு சந்து என்றாலும் புழுத்துப் போய்விட்ட சன நெரிசல் எப்போதும் இருக்கும். வறுமையும் வாழ்வும் ஒவ்வொரு மனித அசைவிலும் அங்கு, இங்கு என எங்கும் இயங்கும் காட்சிகள். அவ்விடத்தில் ஒரு கடையைப் பதிப்பகமாக்கிப் பிதாமகர் காலையும் மாலையும் தவறாது தனது யாகத்தைச் செய்து வந்தார். சிலவேளைகளில் மட்டும் சந்திப்புகள் கரணமாக யாகத்திற்குத் தற்காலிக சாந்தியும் சித்திப்பது உண்டு. பிதாமகர் யாருடனும் நேருக்கு நேரே அதிகம் மிண்டிப் பழகத் தெரியாதவர். பிதாமகருடன் பழகுபவர்கள் அவருடன் எதற்காகவும் மிண்ட மனமேகார். ஆனால் அதுவும் நடந்தேறியது. எழுத்தில் அவர் மிண்டாத மலைகள் கிடையாது. அதனால் தனக்கென ஒரு போக்கையே தனியாக அமைத்துக் கொண்டவர். அவருடன் இருந்து அந்த மிண்டல்கள் பற்றிய கதைகள் கேட்பதே சுதனுக்கு ஒரு அலாதியான அனுபவமாகும். அதைச் சுதன் பலமுறை அனுபவித்து இருக்கிறான். பிதாமகர் ஈழத்தின் தமிழ் இலக்கியத்திற்கு ஈடுயிணை இல்லாத பிதாமகரே என்பதை யாரும் ஆரவாரத்தால் அல்லது அவர் ஈட்டிய செல்வத்தால் மறைக்க முடியாது. அவர் புகழுக்கு சில இசங்கள் குறுக்கே நின்றது வரலாற்று உண்மை. இலக்கியத்தால் சில சமுகப் போராட்டங்களை உருவாக்கலாம். சமுகப் போராட்டத்திற்கான ஆக்கங்கள் அனைத்தும் இலக்கியம் ஆகிவிடுமா? அப்படியான படைப்புகளால் பிதாமகரை அம்புப் படுக்கையில் வீழ்த்திவிட முடியுமா? வரலாறு இல்லை என்கிறது. அந்த அலசலைச் சுதன் அதிகம் மேற்கொள்வதில்லை. அவன் தன்னை எதிலும் சாராதவனாய் நினைத்திருந்தான். குருச்சேத்திரத்தின் பிதாமகருக்குப் பாண்டவர் மேல் இருந்த அன்பு போல நமது பிதாமகருக்கும் அவர் நம்பும் பாண்டவர்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. அதற்குப் பாண்டவர்கள் அல்லக் காரணம் பதிலாக ஈழத்தின் கௌரவர்கள் காரணமாய் இருந்தனர். துரியோதனன்கூடத் திருந்தி நல்ல மனிதனாகலாம் ஆனால் ஈழத்துக் கௌரவர்கள் அப்படி எல்லாம் தப்பு செய்துவிடமாட்டார்கள் என்பதற்கு எதிராக அவருடன் யாரும் வாதிடுவதில்லை. அதற்கான பிரதிவாதம் தாராளமாக அவரிடம் இருக்கும். அது ஆத்ம விசுவாசம். அந்தக் குருச்சேத்திரக் கதைகளில் இருப்பது போல அல்ல இது. இது நம் கண்முன்னே ஆடி அழிந்தவை. அநியாயத்தை அநியாயத்தால் வெல்ல முடியாது என்கின்ற புது யுகம். ஈழத்திற்காய் மரித்தவர்கள் சிலருக்குக் கௌரவர்கள். அவர்களே சிலருக்குப் பாண்டவர்கள். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. துரியோதனனும் தான் செய்வது தனக்கான நியாயம் என்றே இறப்புவரை கருதினான். பிதாமகர் ஈழத்தின் பொக்கிசங்களை தன்னுடன் காவிக்கொண்டு கோடம்பாக்கத்திற்குத் தனது சொகுசு வாழ்வைத் துறந்து ஆத்ம இன்பம் தேடி வந்தார். அவரது கவனம் தொடக்கத்தில் ஆத்ம இன்பத்தைப் பெருக்கும் யாகத்தில் மட்டுமே இருந்தது. அதற்காக அவர் செய்த அர்ப்பணிப்பு அனைவரையும் மலைக்க வைத்தது. அவர் அப்படி யாகம் செய்யும் பொழுது பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடையும் பொழுது அமிர்தம் திரண்டு எழுந்தது போலப் பிதாமகரின் யாகத்திலும் ஒரு அமிர்தம் திரண்டு எழுந்தது. என்னதான் பிதாமகராய் இருந்தாலும் அவரும் உலக பாசங்களுக்குக் கட்டுப்பட்ட சாதாரண மனிதரே. தேவேந்திரன் உண்டதும் கொடுத்ததும் போல ஆசை அவருக்கும் உண்டாகியது. அதை இவ்விலகில் யாரும் தவறாகக் கருத முடியாது. அவர் செய்த கடும் யாகத்திற்கு இந்த அமிர்தம் பெரிய பலன் இல்லை என்றே சொல்லலாம். என்றாலும் அதில் ஒரு பலன் இருப்பதை அவர் கண்டு கொண்டார். ஈழத்தைப் பற்றி அறியாமலே அல்லது எந்தத் தொடர்பும் ஏற்படாமலே வியாபார நோக்கிற்காக ஈழ, புலம்பெயர் இலக்கியங்களை வெளியிட்ட பலரோடு அவரை எக்காரணம் கொண்டும் ஒப்பிட முடியாது. இந்த யாகம் பலனை எதிர்பார்த்து அவரால் தொடங்கப்பட்டது அன்று. பலனைக் கண்டபொழுது அவரையும் மனித பலவீனம் ஆட்கொண்டதை அவரால் வெல்ல முடியவில்லை.பலன்மீது பற்று வைக்காது காரியம் செய்ய வேண்டும் என்றார் பரமாத்மா. அதற்கான காரணம் உண்டு. பலனை எதிர்பார்த்துச் செயற்படத் தொடங்கினால் நாம் செய்யும் யாகமே கெட்டுப் போய்விடும். பலனினில் உண்டாகும் பற்றால் செய்கின்ற காரியத்தின் அல்லது யாகத்தின் குறிக்கோள் அல்லது முனைப்பு தொலைந்துவிடும். பிதாமகர் அப்படி எல்லாம் தன்வழி விட்டுப் பெரிதாக மாறாவிட்டாலும் மாற்றம் இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. அத்தால் பிதாமகருக்குச் சிலவேளைகளில் பல சங்கடங்கள் ஏற்பட்டன. அவர் புகழக்கூடாத மனிதர்களைப் புகழ வேண்டி வந்தது. இகழக்கூடாத சிலரை இகழ வேண்டி வந்தது. பரிசிற்காகக் கவி பாடிது போன்ற நிலைமை அவருக்கும் உண்டாகியது. வியாபாரத்திற்கு என்று ஒரு தருமம் இருக்கிறது. நேர்மை மீறப்படுவது அதில் கண்டும் காணாமலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 

பிதாமகருக்குப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒன்றும் புதிதல்ல. மற்றைய மனிதர்கள்மேல் அவர் காட்டும் நம்பிக்கைக்கும் அவரிடம் பஞ்சம் இல்லை. ஈழத்திலேயே அவர் அப்படியான யுத்தங்களைப் பலமுறை கண்டவர். அப்பொழுது அவருக்கு எழுத்து மட்டுமே தளமாகும். வியாபாரம் அவருக்குக் கன்னி கழியாத பெண் போல.சுதன் அன்று காலையே பிதாமகரிடம் சென்றுவிட்டான். காலை வந்து சந்திக்குமாறு அவர் கேட்டு இருந்தார். காலை அங்கே சென்ற பொழுது வயிற்றை இயற்கை கிள்ளியது. அதனால் அருகே இருந்த உணவு விடுதிக்கு இருவருமாகச் சென்றார்கள். அப்பொழுது பிதாமகர், ‘உனக்குச் சபேசனைத் தெரியுமோ?’ என்று அவனைப் பார்த்துக் கேட்டார். சபேசன் ஸ்கண்டிநேவியன் நாடு ஒன்றில் இருப்பது அவனுக்குத் தெரியும். மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டதும் ஞாபகம் இருந்தது. நேரடியாக அவனைச் சந்தித்தது இல்லை. அதற்கான சந்தர்ப்பம் கிட்டியதில்லை. சுதனுக்கு சபேசனும் எழுத்து ஆர்வத்தால் பிதாமகரைத் தேடிவந்த ஒருவன் என்கின்ற பிம்பம் ஒன்று உண்டாகியது. நல்லது. பல நபர்கள் எழுதினால் தமிழ் கொழிக்கும் என்று அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். வெளியே வெயில் விட்டுக் கொடுப்பில்லாது வாட்டத் தொடங்கி இருந்தது. உணவு விடுதி என்றும் போல் இன்றும் அமளிப்பட்டது. உணவின் வாசங்கள் மேலும் வயிற்றைக் கொதியேற்றின. பிதாமகரோடு ஒருவாறு இடத்தைப் பிடித்து அமர்ந்த சில நிமிடங்களில் ‘உங்களுக்கு என்ன வேண்டும்? ‘ என்கின்றபடி ஒரு பணியாள் வந்து நின்றான். அவனிடம் தேவையானதைக் கூறினார்கள். பிதாமகரின் சாப்பாடு சுதனோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருந்தது. வயது ஏற ஏற உணவு இறங்க வேண்டியது விதியாகிறது எனச் சுதன் எண்ணிக் கொண்டான். பிதாமகர் தனக்கு ஒரு பொங்கலும் குடிப்பதற்குக் கோப்பியும் தருமாறு கூறினார். சுதனுக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்கின்ற அவா. நோர்வேயில் இப்படிச் சாப்பிட முடியாது. இங்கு வந்து நிற்கும் போது அந்தச் சந்தர்ப்பத்தை அவன் கோட்டைவிட விரும்பவில்லை.  அவன் தனக்கு முதலில் பொங்கலும் பின்பு மாசாலாத் தோசையும் அத்தோடு கோப்பியும் கொண்டு வருமாறு கூறினான். உணவிற்காக அவர்கள் காத்து இருக்கும் பொழுது மீண்டும் பிதாமகர் தொடங்கினார். ‘சபேசன் நல்லா எழுதுறான். அவனுக்கு நிச்சயம் நல்ல வரவேற்புக் கிடைக்கும். தமிழிலையும் நல்ல ஆர்வம் இருக்குது. ”நல்ல விசயம். யார் எண்டாலும் ஈழத்து இலக்கியத்திற்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தால் அது எங்களுக்கும் சந்தோசம் தான்.’ என்றான் சுதன். அவன் மனதும் அர்ச்சுனன் மனது போல ஏங்கியது. இருந்தும் அதை அவன் பிதாமகரிடம் காட்டிக் கொள்ளவில்லை. அந்த எண்ணம் தவறு என்றே அவன் எண்ணினான். ‘சபேசன் இப்ப சென்னையிலதான் நிக்கிறான். பத்து மணிபோல இங்க வருவன் எண்டு சொல்லி இருக்கிறான். நீ கொஞ்சம் வெயிற்பண்ணினா அவனைப் பார்த்திட்டுப் போகலாம். நிச்சயம் ஈழத்தமிழர் தமிழ் இலக்கியத்தை வாழ வைப்பினம் எண்டு நான் சொல்லுகிறதுக்கு இவனைப் போன்றவர்கள் பலமான என்னுடைய நம்பிக்கைகள். நீங்கள்தான் வருங்காலம். உனக்கும் நிச்சயம் அவனுடைய உதவி எதிர்காலத்தில தேவைப்படலாம்.’ எதற்கு அவனது உதவி தனக்குத் தேவைப்படும் என்பது சுதனுக்கு முழுமையாக விளங்கவில்லை. என்றாலும் பிதாமகர் எதாவது சொன்னால் அதில் விசயம் பொதிந்து இருக்கும் என்று அவன் நம்பினான். அத்தால்…’கேட்கவே சந்தோசமாய் இருக்குது. எனக்கும் இப்ப ஒண்டும் அவசர அலுவல் இல்லை. இருந்து பார்த்திட்டுப் போகலாம்.’ என்றான் சுதன்.சாப்பாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் யாகசாலைக்குச் சுதனும் பிதாமகரும் திரும்பி வந்தார்கள். அவர்கள் வரும்பொழுது சபேசன் வந்துவிட்டான். அவனைக் கண்ட பொழுது பிதாமகரின் வதனம் ஆதவன் கண்ட தாமரையாக அங்கே சட்டென அகல விரிந்தது. சபேசனுக்கு அவர் சுதனை அறிமுகம் செய்து வைத்தார். சபேசன் வாட்டசாட்டமான உருவம் கொண்டவன். அவனது வெளித் தோற்றம் போல அகமும் இருக்க வேண்டும். அதனாலேயே பிதாமகரின் நற்பெயரை விரைவில் சம்பாதித்து இருக்கிறான் என்று சுதன் எண்ணினான். சுதனுக்குப் பிதாமகரை நீண்டகாலம் தெரியும் என்றாலும் அவன் யாருடனும் அதிகம் பழகுவது இல்லை. அதைப் போன்று யாரிடம் இருந்தும் அதிகமாக எதிர்பார்ப்பதும் இல்லை. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று போலியாகப் பழகுவதும் கிடையாது. இருந்தும் தன்னைப் போல அல்லாது மிகவும் ஆக்கப்பூர்வமாய் சபேசன் இருப்பதால் அவன் பிதாமகரைக் கவர்ந்திருப்பது சுதனுக்கு தற்போது வியப்பைத் தரவில்லை. 

சிறிது நேரம் நின்று சபேசனுடன் கதைத்தான். சபேசன் தேனொழுகக் கதைத்ததில் அவன் மலைத்தான். என்றாலும் அது எங்கோ சுதனுக்கு நெருடியது. சிலர் அப்படித்தான் என்று எண்ணிக் கொண்டான். சபேசனிடம் இடைக்கிடையே ஒருவித மமதை மேலோங்குவதையும் அவனால் அவதானிக்க முடிந்தது. பிதாமகர் எப்படி இவனை என்கின்ற கேள்வி திடீரென ஒரு கணம் தோன்றி மறைந்தது. அது எப்படி என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இப்போது பிதாமகருக்கும் அவனுக்கும் நடக்க இருக்கும் சம்பாசனைக்குத் தான் தடையாக இருக்கக்கூடாது என்கின்ற எண்ணத்தோடு சுதன் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தான். அவன் ஏதோ ஒரு கடமையைச் செய்யாது தப்பி ஓடுவது போன்ற உறுத்தல். இது தேவையற்ற உணர்வு எனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

*


ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. உலகம் ஒரு விண்மீன் பேரடையில் இருந்து இன்னோர் பேரடைக்குச் சென்ற மாற்றம். ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கிட்டத்தட்ட அப்படியே இருந்தது. சுதன் இன்று பிதாமகரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். அவரது யாகசாலையை இப்போது சில காரணங்களால் இடம்மாறி இருப்பதாகக் கூறியிருந்தார். அந்த புதிய யாகசாலையில் வந்து தன்னைச் சந்திக்குமாறும் அவர் பணித்திருந்தார்.
பிதாமகரின் புதிய யாகசாலை முதல் இருந்ததிற்குப் பின் ஒழுங்கை ஒன்றிற்கு மாறி இருந்தது. தொலைப்பேசியில் கதைக்கும் பொழுது எதனால் என்று கூறினார். என்றாலும் சுதன் அதை யாரிடமும் கூறுவதில்லை. அதற்காக அவன் அனைத்தையும் இரகசியமாய் அடைகாத்து வைத்திருப்பான் என்றும் இல்லை. இரண்டு பக்கம் இருக்கும் பொருளிற்கு ஒரு பக்கத்தைப் பார்த்து மதிப்புக்கூற முடியாது. அது தார்மீகமும் ஆகாது. பிதாமகர் சுதனைக் கண்டதும் என்றும் போல் இன்றும் இன்முகத்தோடு வரவேற்றார்.
‘நீ உன்ரை கைக்காசைப் போட்டு எண்டாலும் தமிழை வளர்க்க வேணும் எண்டு ஆசைப்படுகிறாய். உன்னை மாதிரி எல்லாரும் இருக்கமாட்டினம் சுதன். முதல்ல நல்ல பிள்ளையளாட்டம் பௌவியமாக வாறான்கள். தந்திரமாத் தேனும் பாலும் ஒழுகக் கதைக்கிறாங்கள். கொஞ்ச நாளில குருவுக்கு மிஞ்சிய சீடனாகப் பார்க்கிறாங்கள். ஈழத்தமிழை அவைதானாம் இப்ப தூக்கிப்பிடிக்கப் போகினம். அதுகூடப் பாருவாய் இல்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதையாட்டம் என்னிட்ட இருக்கிறதையும் பறிச்சுக் கொண்டு போகப் பார்க்கிறாங்கள்.’ என்று தனது மனக் கொதிப்பைச் சுதனைப் பார்த்ததும் கொட்டித் தீர்த்தார்.
சுதன் ஏதோ தமிழில் எழுதினாலும் அவனுக்குக் கொஞ்சம் மந்த மூளை. பிதாமகர் என்ன சொல்கிறார் என்பதின் வாலோ தலையோ எதுவும் அவன் மூளைக்கு அகப்படவில்லை. அவன் விளங்காது அவரது முகத்தைப் பேந்தப் பேந்தப் பார்த்தான். அவனுக்கும் தனது கைக்காசைப் போட்டே தனது புத்தக அலுவல்கள் செய்யும் விடயம் நன்கு தெரியும். தமிழில் எழுதும் பலருக்கும் அதுவே விதி. சுதனைப் பொறுத்தவரையில் அவனால் ஈழத்தமிழ் இலக்கத்திற்குப் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பதும் தெரியும். அதைவிட அவன் எந்தப் பதவிக்கோ அல்லது பெயருக்கோ பேராசைப்படுபவனும் அல்ல.
பிதாமகர் சுதனைப் பார்த்தார். பிதாமகருக்கும் அவனைப் பற்றி விளங்கும். அதனால் அவர் நேரடியாக விசத்தை அவனுக்கு விளக்கமாகக் கூறினார்.
‘இவன் சபேசனைப் பற்றித்தான் கதைக்கிறன். கொஞ்சம் கெட்டித்தனமாய் எழுதுகிறான் எண்டு நினைச்சன். அதை வேறை அவரிட்டைச் சொல்லியும் போட்டன். அப்பிடியே எனக்கும் உதவியா இருக்கும் எண்டு ஒரு ஒப்பந்தம் அவனோடை. இப்ப அது முதலுக்கே நட்டமாய் வந்து நிக்குது. ஒட்டு மொத்தமா தந்திட்டு வெளி போ எண்டுகிறான். தன்னால என்ரை இடத்தைப் பிடிக்க முடியும் எண்டுகிறான். இப்ப வழக்கு கோடு எண்டு ஒரே பிரச்சினையா இருக்கு சுதன். அதால மனசிலும் நிம்மதி இல்லை. உன்னுடைய இந்தப் புத்தக வேலைகள் எனக்கு இப்ப சரியான உதவியா இருக்கும்.’
சுதனுக்கு இப்போது விசயம் முழுமையாகப் பிடிபடத் தொடங்கியது. இதற்குச் சபேசனை மட்டும் குறை கூறிவிட முடியாது. சொந்தத் தகப்பன், மகன், சகோதரங்களே வியாபாரத்தில் தகராகப்படுகிறார்கள். அப்படி உலகு கலியுகத்தைக் கடைப்பிடிக்க இவரால் எப்படி இவனை நம்ப முடிந்தது? மனிதச் சொற்களே மனிதனை மாய மானாக மயக்க வைக்கும். கண்ணைக் காட்சி மாற்றிக் கட்டிப் போடும். தன் சொல்லால் தமிழைக் கட்டிப் போடும் பிதாமகரே சபேசன் சொல்லில் ஏமாந்து இருக்கிறார் என்றால் அவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான் என்பதை எண்ணச் சுதனுக்கு மலைப்பு ஏற்பட்டது.
‘என்ன பேசாமல் இருக்கிறாய்? ‘ என்றார் பிதாமகர்.
‘உங்களுக்கே ஆப்பு எண்டா நான் என்ன சொல்ல இருக்குது. நீங்கள் நாலும் தெரிஞ்ச அடிபட்ட மனிசர். நீங்களே ஏமாந்ததாய் இப்ப சொல்லுகிறியள். அப்பிடி எண்டாச் சபேசன் எப்படிப்பட்டவனாய் இருப்பான் எண்டு யோசிக்கிறன்.’
‘காலம் சரியில்லையடா தம்பி. நானும் அவன்ரை கதையிலதான் ஏமாந்து போயிட்டன். மனச் சுத்தியோடை தமிழுக்காக எழுதுகிறது வேறை. அது உன்னை மாதிரி. எதைச் செய்தாலும் பேசாமல் இருக்கிற மனசு யாருக்கும் வராது. சிலருக்கு முட்டை போட்ட கோழியாட்டம் எழுத முதல் ஆரம்பிச்சுடுவாங்கள். அப்பிடி இருந்தாலும் பருவாய் இல்லை. மனதில இருந்து மனிதத்திற்காகச் சொல்லு வராமல் மற்றவனை ஏமாத்தோணும் எண்டு எழுதுகிறவங்களை என்ன செய்ய முடியும்? அவங்கள் எதை எழுதினாலும் ஒரு பெறுமானமும் எதிர்காலத்தில இருக்கப் போகிறது இல்லை. காசக் கொடுத்தே பட்டங்களும், கௌரவங்களும் பெறலாம் எண்டு நினைக்கிறவங்களை நான் என்ன செய்ய முடியும்? இந்த நாடும் அப்பிடி. இதெல்லாம் எனக்குப் பிறகுதான் தெரிய வந்திச்சுது. அதுக்கு முதலே நாங்கள் அவசரப்பட்டிட்டம். தலையைக் கொண்டே தூக்குக் கயித்தில கொடுத்தமாதிரி இப்ப எங்கடை நிலைமை.’
‘நீங்கள் எழுத்தைத் தவமா நினைக்கிற மனிசர். இந்தச் சின்னச் சின்ன சில்லறைத்தனமான பிரச்சினைகளுக்க அகப்பட்டு நேரத்தை வீணடிக்கிறது தமிழுக்கே நட்டம் இல்லையா? ‘
‘உண்மை சுதன். முள்ளில சிலையைப் போட்டாச்சுது. அதை எப்பிடியாவது குறைஞ்ச சேதாரத்தோடை எடுத்துக் கொண்டு நான் என்ரை வேலையைப் பார்க்க வேணும்.’
‘அதுதான் நல்லது.’
அதன் பின்பு பலகாலம் சுதனால் பிதாமகரைச் சந்திக்க முடியவில்லை. இயற்கை தனது கடமையை யாரது பலனையும் எதிர்பார்க்காது ஆற்றும். அதற்கு அற்ப மனிதர்கள் போன்று அடங்காத அகங்காரமோ, புகழோ, இகழோ, ஆசையோ கிடையாது.


*


அன்று முகநூலில் சபேசனின் பக்கத்தைச் சுதன் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. பிதாமகர் ஏன் ஏமாந்தார் என்பது சட்டென அவனுக்கு விளங்கியது. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று கூறிய ஓளவையார் கூடத் தோற்றுப் போகும் சில அறிவுரை அமுதம் அதில். அழுக்காறு அற்றுக் காவி தரித்த ஓளவையோடு ஒப்பிடுவது மடமையே. இருந்தும் இதிலே அவனது உண்மை உள்ளம் எங்கே என்று சுதன் தேடினான். பிதாமகருக்கு ஏற்பட்ட அனுபவம் அவனுக்கும் உண்டாகியது. எழுத்து என்பது மனதிலிருந்து மனிதம் காக்க வரவேண்டும் என்றார் பிதாமகர். உண்மை. அது மனித இச்சைகளுக்காக அல்ல. ஞானம் கைகூடுவது ஒரு தவத்தை மேற்கொள்ளவே அன்றித் தராசைத் துக்கிக் கொண்டு கூவுவதற்கு அல்ல. சுதன் சட்டென வெறுப்போடு கணினியை மடித்து வைத்தான்.

டைஸ்டோபிய நாவல் ஒன்று

பேராசிரியர். க.பூரணச்சந்திரன் 

May 17, 2015

dystopia novel3.jpg

“மானிடம் வென்றதம்மா” என்றான் கம்பன். அது உடோபியா நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது ‘டைஸ்டோபியா’ தீக்கனவு. ‘நைட்மேர்’. சமூகமின்றி மனிதன் இல்லை என்கிறார்கள் சமூகவியலாளர்கள். ஆனால் சமூகத்தை அழித்தும் தான் மட்டும் செல்வம் சேர்த்து வளமாக வாழும் சுயநலமியாக மனிதன் மாறிவிட்டான். டார்வினின் தத்துவம் வென்றுவிடும் போல் இருக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மதங்களும், கோட்பாடுகளும் மனிதத்தன்மையை வலியுறுத்தியபோதும், “நான் ஒரு மிருகம்தான்” என்று மறுபடி மறுபடி நிலைநாட்டிக் கொண்டிருக்கிறான் மனிதன். அதிலும் அவன் சிங்கம் போன்ற உயர்நிலை மிருகம்கூட அல்ல. தேள்போலத் தன் இனத்தையே கொன்று தின்னும் கீழ்நிலை மிருகம்.

dystopia novel4.jpg

இராமன் வந்து தன் வில்லைத் தரையில் ஊன்றியபோது தெரியாமல் ஒரு தவளைமீது அது ஊன்றிவிடுகிறது. தவளை கத்துகிறது. வெகுநேரம் கழித்துத்தான் அது இராமன் காதில் விழுகிறது. “என்ன தவளையே?” என்று கேட்கிறான். “இராமா, உன் வில்லை என்மீது ஊன்றியிருக்கிறாய்.” “முன்பே சொல்வது தானே?” “வேறு யாராவது தீங்கு செய்தால் ‘இராமா’, ‘இராமா’ என்று முறையிடலாம். இராமனே தவறு செய்தால் யாரிடம் முறையிடுவது?” என்கிறது தவளை. இராமனுக்கு வெட்கமாகப் போய்விடுகிறது.

இது பழைய கதை. புதிய கதை வேறு.

இராமனின் வில் தவளைமீது ஊன்றியிருக்கிறது. தவளை கத்துகிறது. இராமன் காதில் விழத்தான் செய்கிறது. வெகுநேரம் கழித்து, பிறர் தன்னைக் குறைசொல்லாமல் இருக்கவேண்டுமே என்பதற்காக “என்ன தவளையே?” என்கிறான் இராமன். “இராமா, உன் வில்லை என்மீது ஊன்றியிருக்கிறாய்.” “தெரியும். நீரிலிருந்து புலம்பெயர்ந்து தரைக்கு வந்தவன்தானே நீ? உன்னைப் போன்றவர்கள் எதற்கு இங்கே?” என்று அழுத்தமாக வில்லை ஊன்றுகிறான். தவளை செத்துப்போகிறது.

இதுதான் இரண்டாயிரத்துப் பதினெட்டில் மேற்குநாடுகளின் கதை என்கிறார் தியாகலிங்கம்.

தியாகலிங்கம் எனக்குத் தெரிந்தவர் அல்ல. வலைத்தளம் மூலம் அவருடைய நாவல் ‘மானிடம் வீழ்ந்ததம்மா’ என்பதைப் படித்தேன். நாவலில் முக்கியக் கதாபாத்திரங்கள் என்று தனிமனிதர்கள் யாரும் கிடையாது. நாடுகள், அவற்றின் அரசாங்கங்கள் தான் கதாபாத்திரங்கள். அரசு ஒடுக்குமுறை, அரசு பயங்கரவாதம் பற்றி அல்தூசரும் அண்டோனியோ கிராம்ஸ்சியும் எத்தனையோ எச்சரித்தவை எல்லாம் இன்று உண்மையாகின்றன. உலகம் இருளை நோக்கிப்போகிறது. விடிவு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. கதையின் உரிப்பொருளை ஆசிரியரின் வழியிலேயே சொன்னால் “சுதேசிகளின் வெறுப்பு நிறமான மனிதர்கள்மேல் பாய்கிறது”. கதையின் கருத்து: “மனிதனை மனிதன் இன, மத வாதத்தால் அழித்த நாசகாரமான அந்த வரலாற்றை மீண்டும் ஓடவிடலாகாது. அதை நிறுத்தப் போராட வேண்டும்.”

நாவலின் கதைக்களம் ஆறு பாகங்களாக அமைந்திருக்கிறது. ஒருவகையில் இன்றைய கதையை மூன்றாண்டுகள் தள்ளி ஆரம்பிக்கிறார் தியாகலிங்கம். கதை தொடங்குவது இந்தியாவில்தான். தொண்ணூறுகளில் நடந்த குஜராத் கலவரம் போல ஒன்று 2018இல் மும்பையில் நடக்கிறது. பின்னர் களம் இலங்கைக்கு மாறுகிறது. அப்துல் காதர் என்ற இலங்கை முஸலிம்-தமிழ- இளைஞன் ஒருவன், கலவரத்திற்குப் பழிவாங்கத் துடிக்கும் பாகிஸ்தானிய இளைஞர்கள் தமிழக அணுஉலை (கல்பாக்கமாகத் தான் இருக்கமுடியும்) மீது விமானத்தை மோதி அழிப்பதற்கு உதவிசெய்கிறான். அழிவு. இந்திய அரசு பழிவாங்கத் துடிக்கிறது. சதியில் ஈடுபட்டது பாகிஸ்தான் என்பதால் அதன்மீது போர் தொடுக்கிறது. பாகிஸ்தான் அணுஆயுதத்தைப் பயன்படுத்திவிடுகிறது; இந்தியா பதிலடி கொடுக்க, பேரழிவும் கதிர்வீச்சும் பொருளாதார வீழ்ச்சியும் உலகின் கிழக்குப் பகுதி முழுவதும். கிழக்காசிய மக்கள் (இனிமேல் நிற-மக்கள்) வெள்ளையர் நாடுகளுக்கு அகதிகளாகப் பெயர்கிறார்கள்.

ஐரோப்பாவில் பெரும்பாலும் தீவிர வலதுசாரி அரசுகள் தோன்றியிருக்கின்றன. அவை நவநாஜிகளை ஆதரிக்கின்றன. வெள்ளையர் நாட்டில் வந்து அகதிகளாகக் குடிபுகும் நிற-மனிதர்களை அழித்துவிடவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இரட்டை கோபுரத்தாக்குதல் காலத்திலிருந்தே முஸ்லிம்கள் மீது கூடுதல் வெறுப்புத் தோன்றியிருக்கிறது.

இரண்டாம் பாகம் நோர்வேயில் தொடங்குகிறது. அங்கும் அந்நாட்டில் குடியேறிய முஸ்லிம்களின் தாக்குதல் ஒன்று ஆஸ்லோ சிட்டி மையத்தின்மீது நிகழ்கிறது. நடுநிலை நாடாக இருந்த நோர்வே நிதானம் இழக்கிறது. நிற-மனிதர்கள்மீதும் அகதிகள் மீதும் தாக்குதல்கள் நிகழ்கின்றன.

மூன்றாம் பகுதியில் விக்னேஸ்-அவன் மகள் திரி என்பவர்கள் பார்வையில் இத்தாக்குதல்களும் அரசாங்கத்தின் ஓரவஞ்சனையும் வருணிக்கப்படுகின்றன.

நான்காம் பகுதியில் ஏதென்ஸில் களையெடுக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. அங்கு சென்றிருந்த திரி அவற்றை வீடியோவில் பதிவுசெய்ய, திரும்பிய பிறகு விக்னேஸ் அதை நெட்டில் வெளியிடுகிறான். நவநாஜிகள் அதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இடையில் எதிர்வீடு ஒன்றிலிருந்த சோமாலியக் குடும்பம் ஒன்றின் அழிவு சொல்லப்படுகிறது. அழிககப்படவேண்டிய நிற-மனிதர்கள் வீடுகள்முன் வண்ணத்தைக் கொட்டி அடையாளம் செய்து அவ்வீடுகளை எரிக்கிறார்கள். விக்னேஸ் வீட்டின் எரிப்பு அவனால் சமயோசிதமாகத் தவிர்க்கப்படுகிறது.

ஐந்தாம் பகுதியில், ரோமில் ஜிப்சிகள் அழிக்கப்படுவதும், ஜெர்மனியில் துருக்கியர் களையெடுக்கப்படுவதும் சொல்லப்படுகின்றன. ஜிப்சிகள் விழாக் கொண்டாட்டத்தில் குண்டு வீசப்படுகிறது. துருக்கியர் திருமணத்தில் குண்டுகள் வீசி மணமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்படுகின்றனர். இவற்றைப் பற்றி வலதுசாரி அரசுகள் அக்கறைகாட்டவில்லை. எதிர்ப்பு ஊர்வலங்களும் போலீசால் குரூரமாக ஒடுக்கப்படுகின்றன.

ஐரோப்பிய நகரங்கள் பெரும் கெட்டோக்களாக மாறியிருக்கின்றன. லண்டனில் அப்படிப்பட்ட கெட்டோ ஒன்றில் கடை வைத்துப் பிழைக்கும் நகுலன் என்பவனின் கடை எரிக்கப்படுகிறது.

கிரேக்கத்திலும் துருக்கியர் பிரச்சினை. அவர்களை வெளியேற்ற முடிவு செய்கிறது அரசாங்கம். முதலில் பஸ் வழியாக அவர்களைத் துருக்கிக்கு அனுப்புகிறது. அத்திட்டம் தோல்வியுற்ற பின்னர் இரயில் மூலமாகவும் கப்பல் வாயிலாகவும். யாவும் தோல்வியுற்றதும் கிரேக்கத்தின் அதிதீவிர வலதுசாரித் துணைப் பிரதமர் மூளையில் நிற-மனிதர்கள், அகதிகள் எல்லோரையும் ‘மோட்சத்திற்கு’ அனுப்பிவிடுவது என்ற குயுக்தியான திட்டம் உருவெடுக்கிறது.

ஆறாம் பகுதி தொடங்குகிறது. ஐரோப்பிய வணிகச் சமுதாயத்தின் கெடுபிடிகளுக்கும் வலதுசாரி அரசாங்கங்களின் தீவிரவாதத்திற்கும் ஈடுகொடுக்கமுடியாமல் ஐக்கிய நாடுகள் சபை செயலிழக்கிறது. கிரேக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட கொலைத் தொழிற்சாலையில் திரைப்படம்காட்டி அதில் அகதிகள் ஈடுபட்டிருக்கும்போது நச்சுவாயு செலுத்தி அவர்கள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்படுகிறார்கள். கொஞ்சநாளில் அங்கு அகதிகளே இல்லாமல்போய் துப்புரவாகிறது. முன்பு இந்தியாவில் அணுஉலையை அழிக்கத் துணைசெய்த அப்துல் காதர் அகதியாக அங்கே வந்து கொலைக்கூடத்தில் குடும்பத்தோடு இறக்கிறான் என்பது வேடிக்கையான ஒரு முரண்.

அந்நாட்டின் முன்னேற்றம் பற்றிக் கேள்விப்பட்ட சுவீடன் நாட்டுப் பிரதமர் கிரேக்கத்தைப் பார்வையிட வந்து, ஒரு மனிதனுக்கு 5000 யூரோ என்ற வீதத்தில் தந்து அகதிகளை கிரேக்கத்திற்கு அனுப்புவதாக பேரம் பேசுகிறார். கிரேக்கம் பிறநாட்டு அகதிகளை ஏற்கமுடியாத நிலையில் ஐரோப்பிய அரசுகள் பலவும் தங்கள் தங்கள் கொலைத் ‘தியேட்டர்களைத்’ தொடங்குகின்றன. இப்படிப்பட்டது ஒன்றில் விக்னேசும் திரியும் உயிரிழக்கின்றனர்.

முடிவு சம்பவிக்கிறது. ஐரோப்பாவின் களையெடுப்பு முயற்சி அமெரிக்காவுக்கும் பரவும் நிலையில் அது செயலில் இறங்குகிறது. ஐ.நா.வை உயிர்ப்பிக்க முடிவாகிறது. ஐரோப்பிய வணிகக் கூட்டமைவு முடக்கப்படுகிறது. வலதுசாரி அரசுத் தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். உழைக்கும் சக்தி ஐரோப்பாவில் குறைந்ததால் மறுபடியும் நிற-மக்களைப் பணிக்கு அமர்த்த அந்தந்த அரசாங்கங்கள் முயன்றாலும் இப்போது நிற-மக்கள் அங்கு வரத்தயாராக இல்லை. ஐரோப்பா அவலத்திற்கு உள்ளாகிறது எனக் கதை முடிகிறது.

(இந்த முடிவு மட்டும்தான் ஏற்புடையதாக-நம்பக் கூடியதாக இல்லை. அறம் வெல்லும் என்பதை ஏதோ ஒரு வழியில் நிலை நாட்ட எழுதிய முடிவாகவே தோன்றுகிறது. ஐரோப்பியர்கள் அவ்வளவு எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்ல.)

உலகின் வீழ்ச்சி மிக நெருக்கத்தில்-2018க்கு அண்மையில் இன, மத வாதங்கள் வாயிலாக வரக்கூடும் எனத் தியாகலிங்கம் கணிக்கிறார். அதைவிடச் சுற்றுச்சூழல் பிரச்சினை, ஆற்றல் (எரி பொருள்) பிரச்சினை போன்றவை முக்கியமானவை. மத, இனப் பிரச்சினைகளைக் கணக்கில் கொண்ட தியாகலிங்கம், சுற்றுச் சூழல், எரிபொருள், ஊழல், உலகமயமாக்கல் பிரச்சினைகளை ஏனோ இணைக்காமல் விட்டுவிட்டார். ஆனால் ஒரு நாவலில் எவ்வளவு பிரச்சினைகளைத்தான் தொடமுடியும்?

என்னைக் கேட்டால், சுற்றுச்சூழல், தண்ணீர்ப் பிரச்சினைகள் வாயிலாகத்தான் உலகின் அஸ்தமனம்-சற்றே தாமதமாக- ஐம்பதாண்டுகள் அளவில் ஏற்படும் என்பேன். மனிதன் தன்னை அழிக்கக்கூடிய பல குழிகளைத் தானே தோண்டிக் கொண்டிருக்கிறான். அதுதான் நாகரிகம் என நம்பவும் செய்கிறான். தன்னிறைவு கொண்ட, மனிதநேயமிக்க சமூகங்கள் இன்று நாகரிகமுள்ளவையாகத் தோன்றவில்லை. பிறரை அழித்துக் கொள்ளையடிக்கும் பன்னாட்டுக் குழுமங்களின் வணிகப்பொருள்களை நுகரும் நுகர்வுமோகம்தான் நாகரிகம் உள்ளதாகத் தோன்றுகிறது. பல ஆயிரம் ஆண்டுகள் வரை வரக்கூடிய மூலவளங்களை யெல்லாம் ஒன்றரை நூற்றாண்டில் நாசமாக்கிவிட்டான் மனிதன்.

திருவள்ளுவர் போன்ற ஆதி ஆசானைக் கேட்டால் இது விதை நெல்லையும் விற்றுத் தின்பதைப் போல ஆயிற்று என்பார். ஆனால் நுகர்வு மோகத்தின்முன் திருவள்ளுவராவது, சாக்ரடீஸாவது, புத்தராவது?

உடோபியா என்ற நாவலை சர் தாமஸ் மூர் என்பவர் 1516இல் எழுதினார். அதைத் தொடர்ந்து சூரியனின் உலகம், நியூ அட்லாண்டிஸ் என நிறைய உடோபிய நாவல்கள் வந்துவிட்டன. நம் காலத்தில் தமிழிலும்கூட கி.பி. 2000 என்பதை அறிஞர் மு. வரதராசனார் எழுதினார். அரசியல், சட்டங்கள், வழக்காறுகள், வாழ்நிலைமைகள் யாவற்றிலும் இலட்சிய முழுமையை எய்திய ஒரு வளமான நாட்டை, அரசாங்கத்தை உடோபியா என்ற சொல் குறிக்கிறது. அதற்கு எதிரானது டைஸ்டோபியா. உடோபியா என்பதை இலட்சிய உலகம் என்றால், டைஸ்டோபியா என்பதை அச்சுறுத்தும் உலகம் என்று சொல்லலாம்.

தங்கள் நோக்கில் அரசியல்வாதிகள் நல்லதொரு சமூகம் என்பதை மக்கள் மனத்தில் மாயையாக உருவாக்கி, ஆனால் நடைமுறையில் ஒடுக்கும் சமூகக் கட்டுப்பாட்டினைச் செயல்படுத்தும் ஓர் கற்பனை உலகினைச் சித்திரிக்கும் நாவல்தான் டைஸ்டோபிய நாவல். கூட்டுக்குழுமங்கள், அதிகார வர்க்கம், மதங்கள், இனவாதம், தொழில்நுட்பம், சர்வாதிகார ஆட்சி என எதன் வாயிலாகவும் இந்த ஒடுக்குமுறை நிகழலாம். மிக மோசமானதோர் எதிர்கால உலகினைப் படைத்துக் காட்டினாலும், இன்றுள்ள உலகப் போக்குகள், சமூக நிலைமைகள், அரசியல் முறைகள் ஆகியவற்றை டைஸ்டோபிய நாவல்கள் கடுமையாக விமரிசனம் செய்கின்றன.

நாவலில் நுழையும் முன், தியாகலிங்கம் கூறும் சொற்கள், இன்றைய நிலைமீதான அவருடைய கசப்புணர்ச்சியையும், எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தையும் காட்டுகிறது. மனிதனை மனிதன் அழித்த வரலாறு மீண்டும் தொடரலாகாது என்பதுதான் இதன் “போதனை”.

“இந்த நவீன உலகத்தில் மனிதம் மிதிக்கப்படுகிறது. அதற்குச் சுயநலத்தோடு, மனச் சாட்சிக்கு எதிராக நியாயம் கற்பிக்கப்படுகிறது. அகிம்சை பேசிய காந்தி தேசமே குருதிதோய்ந்த கைகளை முதுகிற்குப் பின் மறைத்த வண்ணம் சட்டாம்பி(ள்ளை) வேலை செய்கிறது…..

“கருவாடாக்கப்பட்ட நிர்வாணப் பிணங்களின் காட்சிகள் மனித நேயரின் மனத்தை விட்டு என்றும் அகலா…..

“அந்தக் காட்சிகள் நினைவில் உள்ள மனிதனால் அதே தவற்றை மீண்டும் செய்ய முடியாது. மனிதன் வாழ்வதற்காய் மறதியோடு படைக்கப்பட்ட மிருகம். அதற்காக வரலாற்றை மறந்தால் அது மீண்டும் மனிதத்திற்குச் சோதனையாகும்….

“சிறிய தவறுகள் தட்டிக் கேட்கப்படாதபோது அதுவே பெரிய தவறுகளின் விளைநிலமாகிறது….

“பொருளாதாரத்தில் மனிதநேய ஆதாரங்கள் அடிபட்டுப் போகின்றன….

இவ்விதம் பொன்மொழிகளின் ஆற்றலோடு வாக்கியங்கள் விளைகின்றன. “மனிதத்தின் பாதாளத்தை தரிசிக்காமல் இருப்பதே நாங்கள் செய்யும் பாக்கியமாகும்”.

டைஸ்டோபிய சமுதாயம் எப்படி இருக்கும்? அதில்,

-சமூகத்தில் குடிமக்களைக் கட்டுப்படுத்தப் பிரச்சாரம் ஆற்றல் வாய்ந்த கருவியாகப் பயன்படுகிறது.

-தகவல்கள், சுயமான சிந்தனைகள், சுதந்திரம் ஆகியவை முடக்கப்படுகின்றன.

-ஒரே ஒரு கருத்தாக்கம் அல்லது (ஹிட்லர் போன்ற) ஒரு தலைமை சமூகத்தினால் வழிபடப்படுகிறது.

-மக்கள் நிரந்தரக் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள்.

-அவர்கள் வெளியுலகத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்.

-மனிதத்தன்மை இழந்த நிலையில் வாழவைக்கப்படுகிறார்கள்.

-இயற்கையான உலகம் அகற்றப்படுகிறது, அதன் மீதான நம்பிக்கை குலைக்கப்படுகிறது.

-ஒரேசீரான, ஒருதரப்பான கருத்துகளை மக்கள் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். எதிர்ப்போ, தனித்தன்மையோ தீமையாகக் கருதப்படுகிறது.

-ஆள்பவர்கள் மனத்தில் தன்னிச்சையான, தங்கள் நோக்கிலான ஒரு கற்பனை உலகம் இருக்கிறது. (உலகம் வெள்யைர்க்கே சொந்தமானது, இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் – அவர்கள் இல்லாத உலகம் அமைதியானது, தலித்துகள் நம் வாழ்க்கைக்கு எதிரிகள், இந்துராஷ்டிரம் ஒன்றே சிறப்பானது- அதுதான் ராமராஜ்யம் போன்ற எதுவாகவும் அந்தக் கற்பனை உலகம் இருக்கலாம்.) இந்தத் தன்மைகள் யாவும் தியாகலிங் கத்தின் இந்த நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன.

dystopia novel2.jpg

பெரும்பாலான டைஸ்டோபிய நாவல்கள், அரசியல் கட்டுப்பாடுமிக்க ஒரு பயங்கர உலகினைக் காட்டுகின்றன. அவற்றில் செயல்படுத்தப்படும் கட்டுப்பாடு என்பது, (1) தத்துவ/மதக் கட்டுப்பாடு, (2) வணிகக் கட்டுப்பாடு, (3) அரசியல், அதிகார வர்க்கக் கட்டுப்பாடு, (4) தொழில்நுட்பக் கட்டுப்பாடு என்ற எந்த அடிப்படையிலும் நிகழலாம்.

இந்த நாவலில் முஸ்லிம் தீவிரவாதம், அதன் விளைவாக உருவாகும் அணுஆயுதப்போர் என்பது, முதல்வகைக் கட்டுப்பாட்டினைக் காட்டுகிறது. தீவிர வலதுசாரி அரசுகள் தவறான முறையில் சக மனிதர்களை அழிக்கும்போதும் பிற ஐரோப்பிய அரசுகளோ, அமெரிக்கா, ஜப்பான் போன்ற அரசுகளோ தங்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை. அவை ஐரோப்பிய வணிகக் கூட்டமைவுக் கட்டுப்பாட்டிற்கு அஞ்சிப் பேசாமல் இருந்துவிடுகின்றன. தமது சொந்த நலங்கள் நிற-மனிதர்களால் குறையுமானால், அவர்கள் அழிந்து போகட்டுமே என்ற மனப்பான்மைதான் மிஞ்சுகிறது. இது இரண்டாவது வகைக் கட்டுப்பாட்டினைக் காட்டுகிறது.

மூன்றாவது வகைக் கட்டுப்பாடுதான் இந்த நாவலின் முக்கியப் பொருள். அரசுகள் தாங்களே வன்முறையைக் கையாண்டு தங்களுக்குப் பிடிக்காத இனத்தவரை, மதத்தவரை, நிறத்தவரை அழிக்கின்றன. அவர்கள் எதிர்த்துப் போராடினால் ஒடுக்குகின்றன. அவர்களைக் குருவிகள் போலச் சுட்டுத்தள்ளுகின்றன. நவநாஜிகளை விட்டு நிற-மனிதர்களின் கடைகளைச் சூறையாடுகின்றன, கொளுத்துகின்றன; நிற-மனிதர்களின் வீடுகளை திட்டமிட்டுக் கொளுத்துகின்றனஜிப்சிகளின் முகாம்களில் குண்டெறிகின்றன. துருக்கியத் திருமணத்தில் கலவரம் விளைக்கின்றன. இம்மாதிரித் தகவல்களை வெளிப்படுத்துவோரையும் அழிக்கின்றன. நிற-மனிதர்களை, அகதிகளை நாடு கடத்துகின்றன, அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புகின்றன, அல்லது கடலில் மூழ்கடிக்கின்றன. இவை எதுவும் முடியாதபோது கம்பிமுள் சுவரிட்ட முகாம்களில் அடைக்கின்றன, கடைசியாக மரணக்கூடங்களில் அவர்களை அழித்து, அவர்கள் பற்றிய ஆவணங்களையும் இல்லாமல் செய்து விடுகின்றன.

[கடைசி வகையான தொழில்நுட்பம் (கணினிகள், ரோபாட்டுகள்) மக்களை ஒடுக்குவது என்பது இதில் சொல்லப்படவில்லை.] இந்த நாவலில் தொழில்நுட்பம் அரசியல்வாதிகள் கைகளில் ஒரு கருவியாகவே உள்ளது. (ஆனால் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டைக் காட்டுபவையாகத் திரைப்படங்கள் பல-சான்றுக்கு ‘தி டெர்மினேட்டர்’, ‘தி மேட்ரிக்ஸ்’, ‘ஐ-ரோபாட்’ போன்றவை-வந்திருக்கின்றன.) இந்நாவலின் கிரேக்க வன்முறை வலதுசாரி ஆட்சி மனப்பான்மை, ஒருபோக்கில், ‘பிரேசில்’ என்ற திரைப்படத்தில் காட்டப்படும் போக்கினை ஒத்துள்ளது.

தியாகலிங்கத்தின் நடை பற்றிச் சொல்லியாகவேண்டும். அவருடைய அனுபவத்தின் காரணமாகவோ, ஆதங்கத்தின் காரணமாகவோ பொன்மொழிகளின் ஆற்றலோடு தொடர்ச்சியாகச் சொற்கள் வந்து விழுகின்றன. உணர்ச்சி வீறு கொண்ட நடை. வாசகர்களே படித்து அதை அனுபவிக்கவேண்டும்.

(அச்சுப்பிழைகள் உள்ளன. நூலின் ஒரு மிகச்சிறிய குறை என்றால் இது தான். சான்றாக, பிழை திருத்தியவருக்கு நன்றி சொல்லும் வரிக்கு மேல்வரியிலேயே “வார்த்தை” என்பது “வார்தை” என உள்ளது.)

சொல்கிறார் தியாகலிங்கம்: “நாடு ஒருவனை அன்னியப்படுத் தும்போது, அவன் அந்த நாட்டை அந்நியமாகப் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.” இன்று இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களின் நிலை இதுதான். காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாற்றுப் பிரச்சினை, பாலாற்றுப் பிரச்சினை முதலிய எந்தப் பிரச்சினையிலும் எந்த மத்திய அரசும் தலையிடாதாம். (நியாயத்தைப் பேசினால் வாக்குகள் போய்விடுமே என்ற பயம். அந்த பயத்துக்கு நியாயம் பலியிடப்படுகிறது.) தமிழர்களைப் பற்றிய கேவலமான-இந்தச் “சினிமா மோகக் கூட்டத்தால்” என்ன செய்துவிடமுடியும் என்ற எண்ணமும் நிலவுகிறது. மீனவர் பிரச்சினை போன்ற பலவற்றை எதிர் கொள்ளாமல், தமிழர்களைக் காவுகொடுப்பதற்கான காரணமும் அதுதான். ஆட்சியும் பல தலைமுறைகளாகத் தெலுங்கர் ஆட்சியாகவே இருந்து விட்டது. தமிழர்களின் நலன்களை உண்மையாக பாவிப்பதற்கு யாரும் இல்லை. பாவிக்கக்கூடியவர்கள் அல்லது பாவிக்கவேண்டியவர்கள் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள். இப்படியான நேரத்தில் எங்கள் மனத்தில் ஒலிக்கும் குரல் இதுதான்: “நாடு ஒருவனை அந்நியப்படுத்தும்போது, அவன் அந்த நாட்டை அந்நியமாகப் பார்ப்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது.”

தியாகலிங்கத்தின் மிகச் சிறந்த நாவல் இது எஸ். பொ. பாராட்டியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தியாகலிங்கத்தின் பிற நாவல்களை நான் படித்ததில்லை என்றாலும், இது நல்ல நாவல் என்பதை மறுக்க முடியாது.

ஓரிடத்தில் ஆசிரியர் சொல்வது முற்றிலும் முற்றிலும் உண்மை.

“எளியவனுக்கு வலியவன்மீது ஏற்படும் தார்மிகக் கோபத்திற்குப் பதிலாக வலியவனுக்கு எளியவன்மீது ஏற்படும் கோபமே இந்த நவீன உலகில் எங்கும் தாண்டவமாடுகிறது. அது, இந்தப் புதிய யுகத்தின் சாபம் கலந்த சோகமான விதியாகிவிட்டது”. சொந்த நாட்டில் இருக்கும் தமிழர்களும், பிறநாடுகளில் குடிமக்களாக வாழ்ந்த, வாழ்ந்துவரும் தமிழர்களும், இன்று அயல்நாடுகளில் குடியேறி ஒடுக்குதலுக்கு ஆளாகின்ற தமிழர்களும்-யாராயினும் அவர்கள் நிலை இதுதான். ஆசிரியர் சொல்கிறார்: “பலியாவது மாத்திரம் ஏன் பாவப்பட்ட நாங்களாய் இருக்கவேண்டும் என்பது மட்டும் அவனுக்குப் புரியவில்லை”. நமக்கும் அதுதான் புரியவில்லை.
பேராசிரியர். க.பூரணச்சந்திரன் 

மதுவின் இரகசியம்

4

கமலா மிகவும் கோபமாக இருந்தாள். மது சோபாவில் தூக்குத் தண்டனைக் கைதி போல தலையைக் குனிந்த வண்ணம் இருந்தான். மருத்துவமனையில் முதலில் தாதிகள் கூறியதிற்கு மதுவிடம் எந்த விளக்கமும் இருக்கவில்லை. அதனால் கமலாவின் கேள்விகளுக்கு அவன் பதிலளிக்கவில்லை. அவனின் அந்த மௌனம் அவளை மேலும் கோபம் கொள்ள வைத்தது.
‘என்ன பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல பேசாமல் இருக்கிறியள்?’
‘எதை நான் சொல்லுகிறது? அப்பிடி நான் எதையாவதும் சொன்னாலும் நீ நம்பப் போகிறாயே?’
‘இவ்வளவு குடிச்சு இருக்கிறியள்? எனக்குச் சும்மா சும்மா சத்தியம் பண்ணித் தாறியள் எண்டது விளங்காதே?’
‘குடிக்கப் போகிறம் எண்டு சொல்லிப் போட்டுத்தானே குடிக்கத் தொடங்கினம். பிறகு என்ன கேள்வி இது?’
‘அது சாந்தன்ரை வீட்டில…’
‘அப்பிடி எண்டா?’
‘அதுக்கு முதல் எங்கை குடிச்சியள் எண்டதுதான் என்னுடைய கேள்வி? எவ்வளவு குடிச்சியள் எண்டது என்னுடைய அடுத்த கேள்வி. அதுக்கு முதல்ல விளக்கம் சொல்லுங்க. அதை விட்டிட்டு என்னைத் தொடர்ந்து பயித்தியக்காரி ஆக்காதேங்க.’
‘ஐயோ நான் எங்க போகிறது?’
‘சமாளிக்காதையுங்க… தயவு செய்து உண்மையைச் சொல்லுங்க. அதைச் செய்தா நீங்க எங்கையும் போகத் தேவை இல்லை.’
‘உனக்கு எது உண்மை எது பொய் எண்டு தெரியுமா?’
‘நீங்கள் தத்துவம் கதைக்கிறதாய் என்னையும் ஏமாத்தி உங்களையும் ஏமாத்தாதீங்க. எனக்குத் தெரியும் உங்கடை சுத்துமாத்து. அங்க போக முதலே நீங்கள் இங்க குடிச்சு இருக்கிறியள். அதைத்தானே கொஸ்பிற்றலையும் சொன்னவை. உண்மைதானே?’
‘உனக்குக் கொஸ்பிற்றல்ல நடந்ததில கொஞ்சம் மட்டும் தெரியும். ஆனா நிறையத் தெரியாது. நேரம் வரேக்க உனக்குத் தெரியவரும்.’
‘எனக்கு என்ன தெரியாது?’
‘உனக்கு எதுவும் தெரியாது. அதாலதான் இந்தக் கதை கதைக்கிறாய்.’
‘நீங்கள் சொல்லுகிற எதையும் நான் நம்பத் தயாராக இல்லை. நீங்கள் சொன்ன மாதிரி உண்மையைக் கண்டுபிடிக்க வேணும். பிறகு பாப்பம் உங்கடை வித்தையைப் பற்றி.’
‘நான் வருவன். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பொய் சொன்னால்தானே பயப்பிட வேணும். நான்தானே பொய் சொல்ல இல்லை எண்டு சொல்லுகிறன். உனக்கு எந்நிலை நம்பிக்கை இல்லை. அதால நம்புகிறாய் இல்லை. நீ எப்பதான் என்னை நம்பினாய்?’
‘நீங்கள் சமாளிக்காதையுங்க. நான் உதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை. நீங்கள் வியாழக்கிழமை றெடியா இருங்க. அண்டைக்குத் தெரிஞ்சிடும் உங்கடை வள்ளல்.’
‘இருந்துபார். அதுக்குப் பிறகு இருக்குது உனக்கு.’
‘உந்த வெருட்டலுக்கு எல்லாம் நான் பயப்பிடமாட்டன்.’
‘சரி… சரி… பார்ப்பம்.’
‘போகிற இடங்களிலையாவது இனிமேலைக்கு அமைதியாக இருங்க. உங்களோடை நான் கொஸ்பிற்றலுக்கு அலைய ஏலாது. உங்கடை திருக்கூத்தால பிள்ளையைக் குழப்பாதையுங்க.’
‘ஐயோ தாயே… உதைப்பற்றிக் கதைக்கிறதை நிப்பாட்டுகிறியா?’
‘சரி… சரி… உதுக்கு மாத்திரம் குறைவில்லை.’
அதன் பின்பு அவள் எழுந்து சமையல் அறையை நோக்கிச் சென்றாள். மதுவுக்கு வெறுப்பாக இருந்தது. தான் சொல்வதை அவள் நம்பவில்லை என்பது அவனுக்கு மனவருத்தத்தைத் தந்தது. இதற்கு ஒரு முடிவு விரைவாக வரவேண்டும் என்பதே அவன் விருப்பமாக இருந்தது. அதற்கு அந்த உண்மையைக் கண்டுபிடிக்கும் இயந்திரம் உதவி செய்யும் என்றால் அதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. வியாழக்கிழமை அதற்கான நாள். அன்று ஒரு உண்மை கமலாவிற்குத் தெரியவரும். இப்போதே மருத்துவர் என்ன கூறினார் என்பதைக் கூறலாம். அதைக்கூடச் சிலவேளை அவள் நம்பமாட்டாள். நம்பிக்கை இல்லாதவளிடம் நான் ஏன் கையேந்த வேண்டும் என்கின்ற கோபம் அவனுக்கு வந்தது. அவன் தனது கோபத்தை எதில் காட்டுவது என்பது தெரியாது கையைப் பிசைந்தான். மதுவின் யோசனையை குழப்புவது போல,
‘சாப்பிட வாங்க.’ என்ற வண்ணம் தட்டில் பச்சை அரிசிச் சோற்றையும் கறியையும் எடுத்து வந்திருந்தாள். மதுவுக்குக் கோழி இறைச்சிக்கறி மிகவும் பிடிக்கும். அதனால் கறி அவனுக்குப் பிரச்சினையாக இல்லை. ஆனால் பச்சை அரிசிச் சோற்றைப் பார்க்க அருவருப்பாய் இருந்தது. அதைப் பல முறை கமலாவிற்குக் கூறி இருக்கிறான். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் அவளிடம் எடுபடுவதே இல்லை.’

*

பத்தரை மணிக்கு அந்த இயந்திரத்தை இயக்குபவர் வருமாறு கூறியிருந்தார். இருந்தும் பிந்திவிடுவோமோ என்கின்ற பயத்தில் கமலாவும் மதுவும் பத்து மணிக்கே அங்கே ஆயராகிவிட்டார்கள். அது ஒரு சிறிய அலுவலகம். அலுவலகத்தின் முன்பு நான்கு நாற்காலிகளும் சில சஞ்சிகைகளும் வைக்கப்பட்டு இருந்தன. அலுவலகத்தின் கதவுகள் சாத்தி இருந்ததால் யாருக்கோ உள்ளே பரிசோதனை நடக்கிறது என்பதை மது ஊகித்துக் கொண்டான். என்றாலும் கமலாவின் நச்சரிப்பால் அரைமணித்தியாலத்திற்கு முன்பே வந்திருந்ததில் வெறுப்பாக இருந்தது.
‘இவ்வளவு வெள்ளன வரத் தேவையில்லை எண்டு நான் அப்பவே சொன்னன்.’
‘வாந்தாச்சுது… இனி என்ன செய்கிறது? பேசாமல் இருங்க. நான் நேரம் எடுக்கும் எண்டு நினைச்சன்.’
‘நீ எல்லாத்தையும் பிழை பிழையாகத்தான் நினைப்பாயாக்கும்?’
‘ஏன் அப்பிடிக் கேட்கிறியள்?’
‘கொஞ்சம் பொறு… ஏன் அப்பிடி எண்டு அப்ப தெரியும்.’
‘இப்ப என்ன சொல்ல வாறியள்?’
‘உனக்கு நான் சொல்லி எது விளங்கி இருக்குது. கொஞ்சம் பொறு தானா விளங்கும்.’
‘சரி… சரி… அதில உங்கடை வண்டவாளம்தான் தெரியப் போகுது.’
இவர்கள் சண்டை பிடித்துக்கொண்டு இருக்கும் பொழுதே வியட்நாம் நாட்டைச் சார்ந்த ஒரு தம்பதி வந்து அமர்ந்தார்கள். அவர்களைப் பார்க்கத் தனது நிலையை மறந்து மதுவுக்குச் சிரிப்பு வந்தது. அதன் பின்பு பரிதாபமாக இருந்தது. அவன் தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர்களை மீண்டும் பரிதாபமாகப் பார்த்தான். அவர்களுக்குள் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அவர்கள் ஒருவருடன் ஒருவர் கதைத்துக் கொள்ளவில்லை. அதை நினைக்கும் போது தாங்கள் பருவாய் இல்லை என்று ஒரு கணம் அவனுக்கு எண்ணத் தோன்றியது. என்ன பிரச்சினை இருந்தாலும் கதைப்பதை நிறுத்துவதில்லை. கடித்துக் கடித்துக் கதை தொடரும். அது ஒருவகையில் நன்மை என்று மது எண்ணிக் கொண்டான். அவன் அப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அந்த வியட்நாம் பெண்,
‘மன்னிக்க வேண்டும்… நீங்கள் வந்து அதிக நேரமாகிவிட்டதா?’ என்று கேட்டாள்.
‘இல்லை. சற்று முன்பே வந்தோம்.’
‘நாங்கள் அதிக நேரத்திற்கு முன்பே வந்துவிட்டோம் என்று நினைக்கிறன்.’
‘நாங்களும் நேரம் முந்தியே வந்து இருக்கிறோம். உள்ளேயும் யாரோ இருக்கிறார்கள் போல இருக்கின்றது?’
‘இதையும் இப்போது பலரும் பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள்… அதனால் இங்கே இப்படி இருக்கிறது.’
‘இனி வரும் காலத்தில அலைபேசியில்கூட இந்த வசதிகள் வந்தாலும் வரலாம்.’
‘நீங்கள் சொல்வது நூறுவீத உண்மை.’
கதைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே கதவு திடீரெனத் திறந்தது. ஒரு வயதுபோன தம்பதி வெளியே வந்தனர். அதைப் பார்த்த மதுவுக்கும் அவனோடு இருந்தவர்களுக்கும் வியப்பாக இருந்தது. அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. கமலா கண்ணைக் காட்டினாள். மதுவுக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும் கமாலா தன்னையும் இழுத்துக் கொண்டு இங்கே வந்தது பிடிக்கவில்லை. அவன் அதனால் உதட்டைப் பிதுக்கினான். அவளுக்கு அது விளங்கியது. அதன் பின்பு அவள் அவனைச் சொறியவில்லை. அந்த வியட்நாம் குடும்பமும் தங்கள் மொழியில் ஏதோ கதைத்தார்கள். அவர்கள் அந்த வயது போன தம்பதிகள் பற்றியே கதைத்து இருப்பார்கள் என்பது விளங்கியது. என்ன கதைத்து இருப்பார்கள் என்பது மட்டும் சுத்தமாக விளங்கவில்லை.
அந்தத் தம்பதிகளுக்குக் கதவைத் திறந்துவிட்ட நபர் மதுவின் பெயரை அழைத்தார். மது முன்னே சென்றதும் கையைக் கொடுத்து,
‘மார்ட்டின்.’ என்றார்.
மதுவும் கையைக் கொடுத்து தன்னை அறிமுகம் செய்தான். அத்தோடு கமலாவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
உள்ளே சென்றதும் மதுவை ஒரு நாற்காலியில் இருக்க வைத்துப் பின்பு அவன் மார்பிலும் இடுப்பிலுமாக இரண்டு பட்டிகள் பொருத்தப்பட்டன. அதன் பல இணைப்புகள் ஒன்றிணைத்து கணணியில் பொருத்தப்பட்டு இருந்தது. கணணியில் இருக்கும் மென்பொருள் மிச்சத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தது. அதற்கு மார்ட்டின் கேள்வி கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு மது பதில் அழிக்க வேண்டும். பதில் சரியா அல்லது பிழையா என்பதை உடல் தரும் சமிக்கையை வைத்து அந்த மென்பொருள் கண்டுபிடித்துவிடும்.

மார்ட்டின் முதற் கேள்வியாக மதுவின் பெயரைக் கேட்டார். மது தனது பெயரை அமைதியாகக் கூறினான். இயந்திரம் அதை உண்மை என்றே காட்டியது. பின்பு மாட்டின் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்கத் தொடங்கினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு மது உண்மையாகப் பதில் கூறினான். கடைசியாகப் பிரமாஸ்திரம் போல அந்தக் கேள்வியை மார்ட்டின் மதுவிடம் கேட்டார். மது பதில் சொன்னான். அத்தோடு பரிசோதனை முடிவுக்கு வந்தது. மது நாற்காலியை விட்டு எழுந்தான். மார்ட்டின் கமலாவைப் பார்த்து,
‘அவர் உண்மைதான் கூறுகிறார்.’ என்று உறுதியாகக் கூறினார்.
‘அப்ப எப்பிடி அவர் போதையாகிறார்?’
‘அதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம். அது எனக்குச் சரியாகத் தெரியாது. அது என்னுடைய அறிவுக்கு எட்டாதது. நீங்கள் உங்கள் மருத்துவருடன் கதைத்துப் பாருங்கள். அவர்கள் கண்டுபிடித்துக் கூறுவார்கள். இதற்கான பதிலை அவரால்தான் கூறமுடியும்.’
‘சரி. நாங்கள் கதைத்துப் பார்க்கின்றோம். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.’
பின்பு அவர் பணம் கட்டுவதற்குக் கொடுத்த கட்டண ரசீதை வாங்கிக் கொண்டு இருவரும் புறப்பட்டார்கள்.
மதுவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவன் சிரித்த வண்ணம் இருந்தான். அவனுக்கு இந்த முடிவு ஏற்கனவே தெரியும். தெரிந்தாலும் அது பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டமை மிகவும் மன மகிழ்வைத் தந்தது. மேற்கொண்டு கமலா கேள்வி கேட்கமாட்டாள் என்பது தெரியும். இருந்தாலும் அவள் தலை தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருக்கும் என்பது அவனுக்கு விளங்கியது. விளங்கினாலும் அவன் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. இவ்வளவு காலமும் தன்னைக் குடைந்ததிற்குச் சிறிது நேரம் தவிக்கட்டும் என்று பேசாது இருந்தான். ஆனால் கமலாவால் அப்படி இருக்க முடியவில்லை.
‘என்ன பேசாமல் சிரிச்சுக் கொண்டு இருக்கிறியள்?’
‘ஏன் நான் இப்ப சிரிக்கவும் கூடாதே?’
‘சும்மா சிரிச்சா வேறை மாதிரி நினைப்பினம்.’
‘அது நினைக்கிறவை நினைக்கட்டும். உன்ன மாதிரிச் சந்தேகப்படாமல் இருந்தால் சரிதான்.’
‘அப்ப நீங்கள் உண்மை சொல்லுகிறியள் எண்டா அது எப்பிடிக் குடிக்காமல் வெறிக்கும்? காத்துக் குடிச்சு வெறிக்குமா? நானும் ஒவ்வொரு நாளும் நிறையக் காத்துக் குடிக்கிறனே? என்ன நடக்குது? எப்பிடி இந்த வித்தையை நீங்கள் மட்டும் செய்கிறியள்? மற்றவைக்கும் சொன்னா அது எங்களுக்கும் உதவியா இருக்கும்தானே?’
‘இன்னும் உனக்குச் சந்தேகம் போக இல்லையா?’
‘விடை கிடைக்காமல் சந்தேகம் எப்பிடிப் போகும்?’
‘உனக்கு விடை கிடைக்கிறதுக்கு இடையில ஆயுள் முடிஞ்சிடும் போல இருக்குது.’
‘பகிடியை விட்டிட்டு உண்மையைச் சொல்லுங்க.’
‘எனக்கும் அதுக்குச் சரியான விளக்கம் தெரியாது. டொக்ரரிட்டைக் கேட்க வேணும். அவர் அதுக்கு முறையான விளக்கம் தரவேணும். அப்பதான் எனக்கும் முழுமையாக விளங்கும்.’
‘அப்ப உங்களுக்குக் கொஞ்சம் எண்டாலும் விளங்கி இருக்கும்தானே? அதை மட்டும் சொல்லுங்க. இல்லாட்டி என்ரை தலை இப்பவே வெடிச்சிடும் போல இருக்குது.’
‘எனக்குத் தெரியாத அரைகுறை விசயத்தை நான் உனக்குச் சொல்ல முடியாது. நாங்கள் டொக்ரரிட்டைப் போகேக்கை அதைப் பற்றிக் கதைப்பம். அப்ப அவர் விளக்கமாகச் சொல்லுவார். இப்ப என்னை விடு. போய் உன்னுடைய வேலையைப் பார்.’
‘பெரிய நடப்புத்தான்.’
‘சரி. இவ்வளவு நாளும் என்னைக் குற்றம் சொன்னதுக்கு என்ன செய்யப் போகிறாய்?’
‘நான் என்ன செய்ய வேணும்? முதல்ல டொக்ரற்றை விளக்கமும் கேட்க வேணும். அப்பதான் இறுதி முடிவு தெரியும். அதுக்குப் பிறகு உதைப் பற்றிக் கதைப்பம்.’
‘சரி இறுதி முடிவு தெரிஞ்ச பிறகு என்ன செய்யப் போகிறாய்?’

‘அது வாற முடிவைப் பொறுத்துத் தெரியும். எனக்கு நீங்கள் உண்மை பேசுகிறியள் எண்டதை இன்னும் நம்ப முடியாமல் இருக்குது.’
‘சரி… சரி…’

இரண்டகன்?

http://www.lulu.com/shop/thiagalingam-ratnam/irandakan/paperback/product-24368366.html

இரண்டகன்?

4. புதிய நாள்

சுமனின் அம்மா அவனுக்கு அரிசிமாப் பிட்டோடு சம்பலும், உருளைக்கிழங்குப் பொரியலும் போட்டுத் தயிரும் விட்டுக் குழைத்து ஊட்டிக் கொண்டு இருந்தார். சுமனும் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான். அம்மாவின் கைப்பட்டாலே தனிச் சுவை. அம்மாவே சமைத்தால் அது தெவிட்டாத தேவாமிர்தம். அந்தத் தேவாமிர்தத்தை நித்தம் உண்ணக் கிடைத்ததே எப்பிறப்பிலோ செய்த பெரும் புண்ணியம். அப்படி அவன் சுவைத்து உண்ணும் போது அவர்கள் வீட்டின் முன்பு இராணுவ வண்டி ஒன்று வந்து நின்றது. அதைக் கண்டவுடன் சுமன் யோசிக்காது வேலியைத் தாண்டி ஓடினான். அவன் ஓடியதால் ராணுவம் அவன் அம்மாவைச் சுட்டுக் கொன்றது.

‘அம்மா… அம்மா… ஐயோ… அம்மா…..’ என்று கத்திப் பக்கத்தில் படுத்து இருந்தவர்களையும் குழப்பினான் சுமன். கண்ணன் அவனின் சத்தத்தில் முழித்து விட்டதால் அவன் கன்னத்தில் தட்டினான். அவன் தட்டியதை அடுத்து முழிப்பிற்கு வந்த சுமன் என்ன நடந்தது என்பது விளங்காது விழித்தான். அவனை அப்படிப் பார்த்த கண்ணன்,
‘என்ன கனவே கண்ணடனீ?’ என்றான்.
‘ம்…. ஊரில அம்மா சாப்பாடு தார மாதிரி…’
‘மனதில உள்ள ஆசை கனவா வந்து இருக்குது.’
‘சாப்பாடு மாத்திரம் எண்டாப் பருவாய் இல்லை. ஆமி வாற மாதிரி… அம்மாவைச் சுடுகிற மாதிரி… எனக்கு என்னவோ போல இருக்குது.’
‘அது எல்லாம் சும்மா கனவு… மனப்பீதி…  பேசாமல் படு.  காலமை போட்டு முறிப்பாங்களாம்.’
‘ம்… எனக்கு ஏற்கனவே உடம்பு இயலாமல் இருக்குது.’
‘ஒழுங்காச் சாப்பிடு எண்டு எல்லாரும் அதுக்குத்தான் விழுந்து விழுந்து உனக்குச் சொன்னது. இனியாவது விளங்கும் எண்டு நினைக்கிறன்.’
‘ச்… விடு. இயலுமானவரை நான் றை பண்ணுவன்.’
‘இது ஒற்றை வழிப்பாதை.’
‘தெரியும்.’
‘இப்ப படு. கெதியாய் பொழுது விடிஞ்சிடும். பிறகு கால் குண்டியில தட்ட ஓட வேணும்.’
‘ம்…’
அவன் திரும்பிப் படுத்தான். அதனால் கண்ணன் மேற்கொண்டு நித்திரை கொள்ளக் கடுமையாக முயற்சிதான். கூவுவதற்குச் சேவல் அருகில் இல்லை. ஆனால் திடீரென வீளைச் சத்தம் பிளிறிற்று. எல்லோரும் துடித்துப் பதைத்து எழுந்தார்கள். கண்ணனும் அவர்களோடு எழுந்தான். சுமன் தொடர்ந்தும் நித்திரை கொள்வதைப் பார்க்க முதலில் என்ன செய்வது என்று அவனுக்கு விளங்கவில்லை. பின்பு யாராக இருந்தாலும் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்கின்ற உண்மை உறைக்க அவசரமாக அவனை உலுப்பி எழுப்பினான். அவன் எழாது நித்திரை கொள்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அத்தோடு ஏனோ பயமாகவும் இருந்தது. கண்ணன் சுமனைத் தெண்டி எழுப்பி இருத்தினான். அவன் சிரமப்பட்டு எழுந்து இருந்தான்.

‘நீ எழும்பி வாரியா? இல்லாட்டி நான் வெளியால போகட்டுமா? நீ விரும்பித்தானே இயக்கத்துக்கு வந்த நீ? பிறகு அதுகின்ரை கட்டுப்பாடு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடக்காட்டி அதுக்கான விளைவையும் ஏற்க வேணும். என்னால இயலுமானவரைச் சொல்லத்தான் முடியும். அதுக்கு மேல உன்னுடைய விருப்பம்.’ என்று கூறிய கண்ணன் கோபத்தோடு எழுந்தான். சுமனக்கு நிலமை சாதுவாக விளங்கத் தொடங்கியது. அவன் தெண்டித்து எழுந்தான். கண்ணன் அதற்குமேல் தாமதியாது குவளையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். சுமனும் தனது குவளையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
எல்லோருக்கும் காலைத் தேநீர் கொடுக்கப்பட்டது. வரிசையில் நின்று கண்ணனும் சுமனும் அதைப் பயபக்தியோடு வாங்கினார்கள். அது வெறும் தேநீர். அத்தோடு துண்டு வெல்லமும் கொடுக்கப்பட்டது. அதைக் குடித்து இதைக் குடித்து முடித்த பின்பு வெளிக்குப் போய் வர வேண்டும். அதன் பின்பு முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு பயிற்சிக்குச் செல்ல வேண்டும். நேரத்திற்குப் பயிற்சிக்குச் சென்றுவிட வேண்டும் என்பதில் கண்ணனுக்கு மிகவும் அக்கறை இருந்தது. அவன் தேநீரை விரைவாகக் குடித்து முடித்து விட்டுச் சுமனைப் பார்த்தான். சுமனும் ஒருவாறு அதை விளங்கிக் கொண்டு தேநீரை விரைவாகப் பருகி முடித்துவிட்டு கண்ணனோடு புறப்பட்டான். இருவரும் காலைக் கடனை முடித்து மைதானத்திற்கு நேரத்திற்கு ஒருவாறு வந்ததில் கண்ணனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

சுமனை இதுவரையும் இழுத்து வந்ததில் கண்ணனுக்கு ஒரு சொல்ல முடியாத பெருமைகூட. மேற்கொண்டு அவன் செய்ய வேண்டிய பயிற்சியை அவனே செய்ய வேண்டும். அவனுக்காக யாரும் பயிற்சி செய்ய முடியாது. அதை எல்லாம் கவனிப்பது தனது வேலை இல்லை என்பதும் அவனுக்கு விளங்கியது. என்றாலும் சுமனை எண்ணும் போது அவனுக்குத் தொடர்ந்தும் கவலையாக இருந்தது. பயிற்சிகள் தொடங்கின. அணிவகுப்பில் ஒன்றாக நின்றாலும் ஓட்டம் தொடங்கிய பின்பு அவனைக் கண்ணனால் கவனிக்க முடியவில்லை. கண்ணனுக்கே மூச்சு வாங்கியது. உடல் அனலாகக் கொதித்தது. அதைக் குளிர்விக்கக் குடம் குடமாய் வியர்த்துக் கொட்டியது. வியர்வை வழிந்து வழிந்து சூரிய வெப்பத்தில் அது காய்ந்ததில் உப்பு உடுப்பில் ஏறியது. அது வெள்ளைப் பட்டையாகத் தெரிந்தது. கண்ணனுக்கு வாயிலிருந்த உமிழ் நீர் வற்றிப் பிசினாக அது நாக்கில் ஒட்டியது. குடிப்பதற்கு நீர் கேட்க முடியாது. பயிற்சியை விட்டும் அசைய முடியாது. ஓட்டம் ஒருவாறு முடிவுற்றது. அதை அடுத்துப் பயிற்சி தொடங்கியது. அவன் வேறு வழியின்றி அதைக் கவனமாகக் கிரகித்துச் செய்யத் தொடங்கினான். கண்ணனுக்கு மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது. மயக்கம் வந்துவிடுமோ என்கின்ற பயம்கூட வந்தது. அதை மேலும் கொடுமையாக்குவது போல ஆதவன் அனலாய் கொதித்து உச்சிக்கு மேல் எழும்பினான்.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே… என்பது உயிரோடு இருக்கும் போது உலகு மறந்த உண்மையான கவியின் வரிகள். அந்தக் கவிதை வரிகள் போல என்ன நடந்தாலும் பின்வாங்குவதில்லை என்கின்ற ஓர்மத்தோடு அவன் பயிற்சியைச் செய்தான்.
‘சுமன் என்ன ஆனான்?’ என்கின்ற ஒரு கேள்வி அவன் மனதில் திடீரென உதித்தது.
‘சமாளித்து இருப்பானா? சமாளித்து இருப்பான்.’ என்று மனதைத் திருப்திப்படுத்திக் கொண்டு அவன் தொடர்ந்தும் பயிற்சியைக் கவனித்தான்.
பயிற்சி முடிந்ததும் சுமன் எங்கே என்று தேடினான். அவனை ஒரு இடமும் காணமுடியவில்லை. அப்போது சிவம் தோழரும் பயிற்சி முடிந்து வந்தார். அவரைப் பார்த்ததும்,
‘தோழர் சுமனைப் பாத்தீங்களா?’
‘இல்லையே… நான் றெயினங் தொடங்கீனாப் பிறகு அவரைச் சுத்தமாய் கவனிக்க இல்லை. ஏன் நீங்கள் அவரை இடையில காண இல்லையா?’
‘இல்லைத் தோழர். அதுதான் கேட்டன்.’
‘சரி. தேடிப்பாரும். எங்கேயாவது நிற்பார்.’
‘சரி… நான் தேடிப் பார்க்கிறன்.’
‘தேடிப்பாரும். கிறவுண்டில இல்லாட்டிச் சில வேளை காம்பிற்குத் திரும்பிப் போய் இருப்பார். அங்க போய் பார்த்தால் ஆளைப் பார்க்கலாம் எண்டு நினைக்கிறன். முதல்ல இங்க பாரும். இல்லாட்டி காம்பிற்குப் போய் பாரும்.’
‘சரி. நீங்கள் சொல்லுகிறது சரிதான். நான் அப்பிடிச் செய்கிறன். நீங்கள் வாறீங்களா?’
‘இல்லை. எனக்கு வயித்துக்க ஒரு மாதிரி இருக்குது. ஒருக்கா வெளிக்குப் போயிட்டு வரவேணும். நீர் முதல்ல முகாமிற்குப் போம்.’
‘சரி… சரி… நான் போய் பார்க்கிறன்.’
கண்ணன் மைதானத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். எங்கும் அவனைக் காணவில்லை. மைதானத்தின் சுவர்களாக நின்ற சவுக்கம் தோப்புக்களை ஊன்றிக் கவனித்தான். எங்கும் அவன் கண்ணில் சுமன் தட்டுப்படவில்லை. இனி இங்கு நின்று தேடுவதில் பிரயோசனம் இல்லை என்பது அவனுக்கு விளங்கத் தொடங்கியது. அதனால் அவன் அங்கு மேற்கொண்டு தேடுவதை விடுத்து முகாமை நோக்கிச் செல்லும் தோழர்களோடு முகாமை நோக்கிச் சென்றான். கண்ணன் தன்னை அறியாதே விரைவாக நடந்தான். அவனுக்குச் சுமனைப் பார்த்தால் மட்டுமே நிம்மதி உண்டாகும் என்பது விளங்கியது. பயிற்சி முடிந்தால் தேடி வந்து சொல்லி விட்டுப் போய் இருக்கலாம். எதுவும் கூறாது எதற்கு இப்படிப் போனான் என்பதில் கண்ணனுக்குக் கோபம் வந்தது. கோபம் வந்து என்ன செய்வது? அவன் மிகவும் வேகமாக முகாமை நோக்கிச் சென்றான். முகாமிற்கு வந்தவன் அவர்கள் தங்கும் குடிலுக்கு முதலில் சென்று பார்த்தான். அங்கேயும் அவன் இல்லை. ‘இது என்ன கோதாரி.’ என்கின்ற அங்கலாய்ப்பு மேலோங்கியது. நல்ல வேளையாகக் குமரன் அங்கே நின்றான். அவனைக் கேட்டால் ஏதாவது விசயம் தெரிய வரும் என்கின்ற நம்பிக்கையோடு அவனிடம் சென்றான்.
‘சுமனைப் பாத்தீங்களா தோழர்?’  என்றான்.
‘இல்லையே… நான் பார்க்க இல்லையே… எங்க போனான் எண்டு தெரியாதா?’
‘இல்லை. பயிற்சி தொடங்கினால் பிறகு நானும் கவனிக்க இல்லை.’
‘பொறு வாறன். யாரை எண்டாலும் கேட்டாத் தெரியும்.’
என்று கூறிய குமரன் வேறு ஒரு தோழரை நோக்கிச் சென்றான்.

‘தோழர் சுமன் எண்டு புதுசா வந்த தோழரைக் கண்டியளோ?’
‘ஓ… ஓ… அவரைப் பார்த்தம். ஒழுங்கா றெயினிங் செய்யாமல் நல்லா வேண்டிக் கட்டினார். பிறகு தூக்கிக் கொண்டு வந்ததைக் கண்டம். பிறகு எங்கை எண்டு தெரியாது. சில வேளை சிக்காம்பில இருக்கலாம். போய் அங்க பாருங்க.’
அதைக் கேட்டதும் குமரன் சிறிது பதட்டமானான். வந்த முதல் நாளே இப்படிப் பிரச்சினை என்றால் இனிப் போகப் போக என்ன நடக்கும்? ஏன் பயிற்சி செய்ய முடியாத இவன் இயக்கத்திற்குப் புறப்பட்டான்? வினாக்கள் விடைகள் இல்லாது அவனது மண்டைக்குள் குடைந்தன.
அவசரமாகத் திரும்பி வந்தவன்,
‘சிக்காம்பில சில வேளை இருப்பான் எண்டு சொல்லுகிறான்.’
‘சிக்காம்பா? அதுக்கேன் அவன் போகிறான்? அவனுக்கு என்ன வருத்தமே? இராத்திரி ரொட்டி சாப்பிட்டவன் தானே?’
‘தெரியாது கண்ணன். இப்ப முதல்ல அவனைப் போய் பார்ப்பம்.’
‘அவன் அங்க இருக்கச் சந்தர்ப்பம் இருக்காது.’
‘நானும் அப்பிடிதான் நினைக்கிறன். எண்டாலும் ஒரு எட்டுப் பார்த்திட்டு வருவம் கண்ணன். அப்ப அந்தச் சந்தேகமும் இருக்காது இல்லையா?’
‘ம்… நீ சொல்லுகிறதும் சரிதான். சரி வா போய் பார்த்திட்டு வருவம். அப்பதான் வேறை எங்யையாவது இருக்கிறான் எண்டாவது யோசிக்கலாம்.’

அதன் பின்பு இருவரும் புறப்பட்டு வருத்தக்காரர்கள் தங்கும் முகாமிற்குச் சென்றார்கள். உள்ளே செல்லும் வரையும் சுமன் அங்கே இருப்பான் என்று கண்ணன் நினைக்கவில்லை. அதைவிட அவன் உடம்பிலிருந்து கசிந்த இரத்த அடையாளங்கள் அவனை மலைகள் வந்து நிஜத்தில் மோதியதாக அதிர வைத்தன. அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்து இருந்தான். அவனிடம் இருந்து வேதனையால் அனுங்கும் சத்தம் கேட்டது. அதைப் பார்த்த கண்ணனுக்கு அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருந்தது. மயக்கம் வந்துவிடும் போலத் தோன்றியது. அவன் அந்த உணர்வுகளைத் தள்ளி வைத்தான். சுமனை நோக்கி ஓடினான். கண்ணன் மீண்டும் மீண்டும் அதிர்ந்து போனான். சுமனின் முகம் அதைத்துப் போய் இருந்தது. போர்வையை விலக்கிப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. மாட்டிற்குக் குறி சுட்டது போல உடம்பு எங்கும் அடி விழுந்த அடையாளங்கள் புண்ணாகத் தெரிந்தன. கண்ணனால் வேதனையைத் தாங்க முடியவில்லை. அவன் கண்கள் அவனையும் அறியாது நிலை இல்லாது பனித்தன. அவனுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை. கண்ணனைக் கண்டதும் சுமன் எதுவும் சொல்லவில்லை. அவன் கண்கள் கட்டுப்பாடு இல்லாது பனி மலைகள் கரைவதாகக் கரைந்தன. சிறிது நேரத்தில் அவன் விம்மி விம்மி அழுதான். அவன் அப்படி அழுவதைக் கண்ணனால் பார்க்க முடியவில்லை.
‘அழாத சுமன். என்ன நடந்தது? ஏன் இப்படிக் காயம் வந்தது? உன்னை யார் இப்படி அடிச்சது?’
‘ஐயோ…..’ அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.
‘அழாத சுமன். என்ன நடந்தது எண்டு சொல்லு.’
‘சூ… நீ முகாமிற்குப் போ.’
‘ஏன்?’
‘உனக்குத் தேவை இல்லாத பிரச்சனைகள் எதுக்கு? நான் பின்னேரம் இல்லாட்டி நாளைக்கு அங்க வருவன். அப்ப கதைக்கலாம். இப்ப நீ போய் உன்ரை அலுவலைப் பார்.’
‘அப்பிடியே உனக்குக் காயம் இருக்குது. ஏன் நான் போக வேணும்?’
‘இல்லைக் கண்ணன். நீ போ. என்னை எதுவும் இப்ப கேட்காதை.’
‘ஏன்ன சுமன் இப்பிடிச் சொல்லுகிறா?’
‘அது உனக்குப் போகப் போக விளங்கும். நீ இப்ப போ. ஐயோ… தயவு செய்து போ.’  அவன் முணுகிய வண்ணம் திரும்பிப் படுக்க முயற்சித்தான்.
‘உனக்கு என்ன நடந்தது எண்டதைச் சொல்லுகிற வரைக்கும் நான் போக முடியாது.’
‘இல்லைக் கண்ணன். தேவையில்லாமல் அடம்பிடிக்காத. சுமன் சொல்லுகிறதிலையும் அர்த்தம் இருக்குது. அது உனக்குப் போகப் போக விளங்கும். இப்ப நீ என்னோடை வா. நாங்கள் போவம். காலைமைச் சாப்பாட்டுக்கு விசில் ஊதீட்டாங்கள்.’
‘தோழர் நீங்களுமா?’
‘ம்… இப்ப அமைதியா வாரும்.’
‘அவனை விட்டிட்டா?’
‘ச்… வாரும்.’
கண்ணன் கவலையோடு சுமனைப் பிரிந்து சென்றான். என்ன நடக்கிறது என்பது அவனுக்கு முழுமையாக விளங்கவில்லை. விளங்கியமட்டில் இப்படியான ஒரு தமிழ் இராணுவத்திற்கு வருவதாய் அவன் நினைத்து இருக்கவில்லை. நினைப்பது வேறு நடப்பது வேறாக இருக்கலாம். எது எப்படி என்றாலும் இது ஒரு வழிப்பாதை என்பது விளங்கியது. தங்களது குடிலுக்குத் திரும்பி வந்தாலும் மனது அமைதி இல்லாது துடித்தது. சுமனை யார் அப்படி அடித்தார்கள் என்பது விளங்கவில்லை. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவனது எண்ணமாக இருந்தது. அதைத் தோழர் சிவம் அல்லது தோழர் குமரனிடம் மட்டுமே கேட்டு அறியலாம் என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது. கண்ணன் மெதுவாகத் தோழர் குமரன் அருகே சென்றான். சென்றவன் மிகவும் தணிவான குரலில்,
‘என்ன நடந்தது தோழர். யார் சுமனை அப்பிடி அடிச்சது? எதுக்காக அவனை அப்பிடி அடிச்சிருக்கினம்? தயவு செய்து சொல்லுங்க தோழர். இல்லாட்டிப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குது. இதை நானோ அவனோ எதிர்பார்க்க இல்லை.’
‘பயிற்சி எண்டு வந்தா பயிற்சி செய்ய வேணும். அதில யாருக்கும் எந்தச் சலுகையும் இங்க கிடைக்காது. இங்க வந்த பிறகு உழவுக்குப் பயந்த கள்ள நம்பனாட்டம் படுக்க நினைச்சா இப்பிடித்தான் அடி வேண்ட வரும். கழகத்திற்கு வெளிக்கிட்டு வரேக்கையே சுகபோக வாழ்க்கை பற்றின எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. அப்பிடியான எண்ணம் இல்லாட்டி எந்தப் பிரச்சனையும் இருக்காது. கழகம் கஸ்ரப்பட்டுத்தான் எங்களுக்குச் சாப்பாடு, தங்குகிற இடங்கள், தேவையான உபகரணங்கள் எல்லாவற்றையும் சேர்த்து எங்களுக்குப் பயிற்சி தருகுது. அதை நாங்கள் துஷ்பிரயோகம் செய்கிறது எண்டா ஒழுங்காப் பயிற்சி செய்யாமல் இருக்கிறதாகத்தான் இருக்கும். அப்படிச் செய்தால் அவங்கள் இப்பிடிதான் அடிப்பாங்கள். அதில அவங்களை யாரும் குறை சொல்ல முடியாது.
‘என்ன கதைக்கிறீங்கள் தோழர்? நாங்கள் என்ன அரச இராணுவத்திற்கே வந்து  இருக்கிறம்? நாங்கள் விடுதலைக்கா ஒரு விடுதலை இயக்கத்திற்கு விரும்பி வந்து இருக்கிறம். இங்க நாங்கள் எல்லாரும் சமனான தோழர்கள் தானே? தோழர் எண்டுகிறவையே தோழரை அடிப்பினமா? அது இங்க நடக்குமா தோழர்? அதைக் கழகம் அனுமதிக்குமா? என்னால இதை நம்ப முடியாமல் இருக்குது. ஒரு விடுதலை இயக்கம் எண்டுகிறதே தோழரை அடிமையா நடத்துமா? பயிற்சி செய்ய முடியாட்டி அவங்களை அடிக்கிறது அதுக்கு பதிலாகுமா? அப்படி எண்டா இது என்ன விடுதலைக்கானா போராட்டம்? நிலத்தை மாத்திரம் விடுவிக்கிறதுதான் விடுதலையா? அப்படி ஒரு விடுதலை எங்களுக்குத் தேவையா? இதை என்னால ஏத்துக் கொள்ள முடியாது. இதுதான் இயக்கம் எண்டா நான் உடனடியாகத் திரும்பி ஊருக்குப் போக வேணும்’
‘இப்படி நீர் கதைக்கிறது எண்டா நான் போகிறன். இங்க உள்ள நிலைமை தெரியாமல் நீர் கதைக்கிறீர். உம்மோடை சேர்ந்து நானும் மாட்டுப்பட விரும்ப இல்லை. நாங்கள் இயக்கத்திற்கு வந்தாச்சுது. பயிற்சியைக் கெட்டித்தனமாய் செய்து நாட்டுக்காக எவ்வளவு சிறப்பாகப் போராட முடியமோ அவ்வளவு சிறப்பாகப் போராட வேணும். அதைவிட்டிட்டு தேவையில்லாத கதை கதைச்சுத் தேவையில்லாத இடங்களில வதை படுகிறது புத்திசாலித்தனம் இல்லை. இதை முதல்ல தெளிவா விளங்கி வைச்சிரும். நீங்கள் தேவையில்லாமல் மாட்டுப்படுகிறதோடை மற்றவையையும் தேவையில்லாமல் இழுத்து விடாதையுங்க.’
‘என்ன நீங்கள் இப்பிடிக் கதைக்கிறியள்?’
‘நிலைமையை விளங்கிக் கொள்ளுங்க தோழர்… கழகத்தில என்ன நடக்குது எண்டு உங்களுக்கு விளங்க இல்லை எண்டு நினைக்கிறன். தேவை இல்லாமல் நீங்களும் சிக்கலில மாட்டிக் கொள்ளாதீங்க. நீங்கள் உங்கடை அலுவலைப் பாருங்க. சுமன் கொஞ்சம் கொஞ்சமா நிலைமையை விளங்கிக் கொள்வார். அதை விட்டிட்டு சுமனுக்கு உதவி செய்யகிறம் எண்டு நினைச்சுக் கொண்டு உங்கடை கழுத்தில நீங்களே சுருக்குக் கயிறு மாட்டிக் கொள்கிறது புத்திசாலித்தனம் இல்லை. தத்துவங்கள், கொள்கைகள் போன்றவற்றிற்கும் நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதை விளங்கிக் கொண்டு நடக்க வேணும். தவளைமாதிரிக் கத்தினா உங்களை நீங்களே காட்டிக் குடுக்கிற மாதிரி இருக்கும்?’
‘விளங்குதா தோழர்? இருந்தாலும் இதை நான் கனவிலும் எதிர்பார்க்க இல்லை. நினைச்சு வந்தது வேறை. இங்கத்தே நடைமுறை வேறை.’
‘விளங்குதுதானே? அதுக்கேத்த மாதிரி நடவுங்க. சுமனை மாதிரி நடந்தா உங்களுக்கும் அதே நிலைமைதான்.’

‘இதயம் இல்லாத விடுதலை இராணுவம் எண்டுறியள்.’
‘போராட்டத்தில வெல்ல வேணும் எண்டா வேற வழி இல்லை. அதை நாங்களும் விளங்கிக் கொள்ள வேணும். இராணுவம் எண்டா அது எந்த இராணுவம் எண்டாலும் இப்பிடிதான்.’
தோழர் குமரனும் கண்ணனும் கதைத்துக் கொண்டு இருக்கும் போது தோழர் சிவம் தான் சென்ற அலுவல்களை முடித்துக் கொண்டு மீண்டும் அங்கே வந்தார். அங்கே வந்த அவருக்குச் சுமனைக் காணவில்லை என்பது சற்று வியப்பாக இருந்தது. அதனால் தோழர் சிவம் கண்ணனைப் பார்த்து,
‘சுமன் எங்க? ஏன்; இன்னும் அவன் இங்க வர இல்லை?’ என்றார்.
‘தோழர் சிவம் அதைத்தான் நாங்களும் கதைச்சுக் கொண்டு இருந்தம். எது நடக்கக் கூடாது எண்டு நாங்கள் நினைக்கிறமோ அதுதான் இங்க வழக்கம் எண்டு தோழர் குமரன் செ;லலுகிறார். எனக்கு இது பெரிய அதிர்ச்சியா இருக்குது. உண்மையில இதை என்னால கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடிய இல்லை. தோழர் எண்டாத் தோழர் தானே? தோழமையில என்ன பாகுபாடு? விடுதலை இல்லை யுத்தம்தான் எங்களுக்கான விடிவு எண்டாப் பிறகேன் நாங்கள் இதுக்கு வாறம்? நீங்க சொல்லுங்க?’
‘கண்ணன் நீங்கள் சொல்லுகிறது ஒண்டும் விளங்க இல்லை. என்ன நடந்தது? ஏன் நீங்கள் இப்பிடிக் கதைக்கிறியள்?’
‘அதுக்குக் காரணம் இருக்குத் தோழர் சிவம். சுமன் ஒழுங்காப் பயிற்சி செய்ய இல்லை. காலமை பயிற்சியில ஓடியே இருக்க மாட்டான் போல. அவங்கள் சாதுவா வாட்டி எடுத்து இருக்கிறாங்கள். அதால அவனை வருத்தக் காரருக்கான முகாமில படுக்க விட்டிருக்கிறாங்கள். கெதியாத் திருப்பி இங்க அனுப்பி விடுவாங்கள். அதைக் கேட்டதில இருந்து தோழர் கண்ணன் கொதிக்கிறார். ஆனால் இந்தக் கொதிப்பு அவருக்கு நன்மையா இருக்காது எண்டு ஏன் விளங்குது இல்லை.’
‘ஓ… அப்பிடியே தோழர். கண்ணன் நீர் கொஞ்சம் பொறுமையா இரு. அவதானமாய் கதை. பயிற்சிக்கு எண்டு வந்திட்டுப் பயிற்சி செய்ய முடியாது எண்டா அவங்கள் விடமாட்டாங்கள். அதைப் பிழை எண்டும் முழுமையாகச் சொல்ல முடியாது. இப்பிடி ஒரு இயக்கத்தை நடத்துகிறது எவ்வளவு கஸ்ரம் எண்டு எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. அதை விளங்காமல் பயிற்சி செய்ய முடியாது எண்டாக் கொஞ்சம் கடுமையாகத்தான் இருப்பாங்கள்.’
‘என்ன தோழர் சிவம்… நீங்களும் இப்பிடிக் கதைக்கிறியள்?’
‘அதுதான் நடைமுறை தோழர் கண்ணன். நல்லா விளங்கிக் கொள்ளுங்க. தேவையில்லாத பிரச்சனையில மாட்டுப்படாதேங்க.’
‘இது என்ன போராட்டம்?’ என்றான் கண்ணன்.
‘இதுவும் போராட்டம்தான். இதைவிட மோசமாகவும் இது நடக்கலாம்.’ என்றார் தோழர் சிவம்.

கண்ணன் அதற்கு மேல் தொடர்ந்து கதைக்கவில்லை. அவன் மனது வேதனையில் வெந்தது. கழகத்திற்கு வந்தால் ஒழுங்காகப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதிலோ ஒழுங்காகப் போராடத் தயாராக வேண்டும் என்பதிலோ அவனுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தோழர் என்கின்ற அடிப்படையே நழுவும்போது அதை அவனது மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. தோழர் என்பவன் மீது தோழர் என்பவனே அத்து மீறிக் கைவைப்பது? உடலில் காயம் வருவது போலத் தண்டிப்பது ஒரு அரச இராணுவத்திற்கு வந்ததான உணர்வையே அவனுக்கு உண்டு பண்ணியது. கழகத்தின் போராட்டத்தில் தோழர்களுக்குச் சமவுரிமை கிடையாது என்பது அப்பட்டமாய் தெரிகிறது. அப்படி என்றால் தோழர்களுக்குக் கொடுக்க முடியாத சமவுரிமையை இவர்கள் எப்படி மக்களுக்குக் கொடுப்பார்கள்? இவர்களால் அப்படி எதையாவது கொடுக்க முடியுமா? மனைவிக்குக் கொடுக்காத உரிமையை மகளுக்குக் கொடுக்க முடியுமா? கொடுப்பது என்றால் யாவருக்கும் அந்த உரிமை கொடுக்கப்பட வேண்டும். இல்லை என்கின்றபோது அங்கே சர்வாதிகாரம் கருக் கொள்கிறது. அப்படி என்றால் இங்கே என்ன நடக்கிறது?

சுமனை எண்ண எண்ணக் கண்ணனுக்குக் கவலையாக இருந்தது. இயக்கத்திற்கு எண்டு வந்தாகிற்று. பின்பு பயிற்சி செய்யப் பின்வாங்கக் கூடாது. அப்படிப் பின்வாங்குவது வந்த நோக்கத்திற்குக் கழகத்தின் எண்ணத்திற்கு என்று எல்லாவற்றிற்குமான நம்பிக்கையைச் சிதைப்பதாக இருக்கும். சுமன் அப்பிடிச் செய்யாது இருந்து இருக்கலாம். அவன் வேண்டும் என்று செய்திருக்கமாட்டான். அவன் வந்த அன்றே சாப்பாடு அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. சாப்பாடு ஒத்துக் கொள்ளாது அவளைப் பலவீனப்படுத்தி விட்டது. அதன் பின்பு கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சியை அவனால் செய்ய முடியாது போனதில் அதியசம் ஒன்றும் இல்லை. அதற்காக அவனைத் தண்டிப்பது எந்த வகையில் மனிதாபிமானமாகும்? தமது சொந்தத் தோழர்களுக்கே மனிதாபிமானம் காட்டமுடியாத ஒரு கழகமும் அதன் அங்கத்தவர்களும் மக்களுக்கு எப்படி அதைக் காட்டுவார்கள்? மனிதாபிமானம் அற்றவர்கள் போராடி மக்களுக்கு என்ன கிடைக்கும்? மனிதாபிமானம் அற்றவர்களால் உண்மையில் போராட முடியுமா? போராட்டம் என்பது தத்துவ வார்த்தைகளில் புதைந்து இருக்கும் கனவு மட்டும்தானா? கண்ணனின் மனம் அமைதி இன்றித் தவித்தது. சரி பிழை என்று மனதிற்குப் பட்டதைச் சொல்லி விடலாம். ஆனால் இந்த உலகில் எதுவும் சரியாகவோ அல்லது பிழையாகவோ நிரந்தரமாக இருந்து விடுவதில்லை. அது பாத்திரத்தில் ஏந்தப்படும் நீர் போல. என்றாலும் மீண்டும் அவன் மனது வேறு வழி இன்றி பூச்சியத்தில் வந்து நின்றது.

இரண்டகன்?

2. அறிமுகம்

‘என்னுடைய பெயர் பாண்டியன். நான் தான் உங்களுக்குப் பயிற்சியளிக்கப் போகிறவர். எனக்குத் தோழர்களோடை கடுமையா நடந்து கொள்ளுகிறதில எந்தவித உடன்பாடும் கிடையாது. தோழர்கள் தாங்களாக விரும்பி நாட்டின்ரை விடுதலைக்காக வந்து இருக்கிறார்கள் எண்டதை முழுமையா நம்புகிறன். அப்பிடி வந்தவர்களுக்கு இங்க கொடுக்கிற பயிற்சி ஒரு பொருட்டாக இருக்க மாட்டுது எண்டது என்னுடைய அவிப்பிராயம். அனேகமாக என்னை ஒருவரும் கோபம் கொள்ளவோ, கடுமையா நடந்து கொள்ளவோ வைக்கிறது இல்லை. நீங்களும் நிச்சயம் அதைக் கடைப்பிடிபீங்கள் எண்டு நினைக்கிறன். நான் சொல்லுகிறது விளங்குதா?’
‘விளங்குது மாஸ்ரர்… நால்லாய் விளங்குது.’ என்று பலரது குரல் ஓங்கி ஒலித்தது. கண்ணனும் தனது சம்மதக் குரலைப் பலமாகக் கொடுத்தான்.
‘நல்லது. அப்ப எல்லாரும் எனக்குப் பின்னால வாங்க.’
என்று கூறிய பயிற்சி ஆசிரியர் மேற்கொண்டு நடக்கத் தொடங்கினார். அவர் முதலில் வடகிழக்கு மூலையிலிருந்த சமையல் அறைக்குக் கூட்டிச் சென்றார்.  அங்கே சமையல் நடந்து கொண்டு இருந்தது. ஏதோ இறைச்சியைச் சிலர் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு அடுப்பில் சோறு பெரியதொரு கிடாரத்தில் அவிந்து கொண்டு இருந்தது. இன்னும் ஒரு கிடாரத்தில் பருப்பு சமைப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தார்கள். பயிற்சி ஆசிரியர் சமையல் கொட்டகையைச் சுற்றிக் காட்டிவிட்டு,
‘உங்களுக்கும் சுழற்சி முறையில் சமையல் வேலை வரும். அப்போது இயன்ற அளவு அக்கறையாக, சுவையாகச் சமைக்க வேண்டும்.’  என்றார். அப்போது சுமன்,
‘என்ன இறைச்சி சமைக்க வரும். ஆட்டு இறைச்சியா?’ என்று கேட்டான். அதைக் கேட்டுப் பயிற்சி ஆசிரியர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது சிரித்துவிட்டார். பின்பு அதனை அவசரமாக அடக்கிக் கொண்டு முகபாவனையைச் சற்றுக் கடுமையாக்கிய வண்ணம்,
‘என்ன இறைச்சியாய் இருந்தால் என்ன? உங்களுக்குத் தருகிறதைச் சமைக்க வேண்டியதுதான். அதிலை எல்லாம் எந்தக் கேள்விக்கும் இடம் இல்லை. எதிலும் தேவை இல்லாத விவாதங்கள் செய்யக் கூடாது. இது இராணுவம் எண்டது நினைவு இருக்க வேணும். சாப்பாட்டு நேரங்களைத் தவிரக் காலைத் தேநீர் வெல்லத்தோடு தருவார்கள். அதை வாங்கிக் குடித்துவிட்டு வெளிக்குப் போய் வரவேண்டும். வெளிக்குப் போவது, குளிக்கப் போவது எங்கே என்பதை நான் உங்களுக்குக் கடைசியாகக் காட்டுகிறேன். இப்போது நாங்கள் தொடர்ந்து முகமைச் சுற்றிப் பார்ப்பம். உங்கள் பொருட்களையும் கெதியாக உங்களது இடத்தில் வைக்க வேண்டும். சரி என்னைத் தொடர்ந்து வாருங்கள்.’
என்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடந்தார். அவர் நடந்து களஞ்சியமும் அலுவலகமுமாய் இருந்த கொட்டிலுக்கு முன்பு போய் நின்றார். பின்பு தோழர்களைப் பார்த்து,
‘இங்கு நீங்கள் அதிகம் வரவேண்டிய அவசியம் இருக்காது. ஒன்று சமைக்கும் போது அல்ல முகாம் பொறுப்பாளரோடு எதாவது கதைக்க வேண்டும் என்றால் மட்டும் நீங்கள் இங்கே வரவேண்டும். அதற்கான தேவைகள் அடிக்கடி வராது எண்டு நினைக்கிறன்’  என்றார் அவர்.
‘சரி உங்களுக்கு சிக் முகாமைக் காட்டுகிறன். ஏதாவது பிரச்சினை எண்டா டொக்ரர் ரவியைப் பார்க்கலாம். அவர் உங்களுக்கு மருந்து தருவார். கடுமையான பிரச்சனை எண்டா தஞ்சாவூர் மெடிக்கல் காலோச்சிற்கு அனுப்பி வைப்பார்.’
‘உங்களை ஒண்டு கேட்கலாமா.’ என்றான்  திடீரெனச் சுமன்.
‘பிரச்சினை இல்லை. தேவையானதைக் கேட்கலாம். நான் மற்றவைய மாதிரி கடுமையாக இருக்கிறதாலா தைரியமான தோழர்களை உருவாக்கலாம் எண்டு நினைக்க இல்லை. அன்பாக நம்பிக்கை ஊட்டுவதாலா வீரமான, நம்பிக்கையான தோழர்களை உருவாக்கலாம் எண்டு நம்புபவன்.’
‘நன்றி தோழர்.’
‘சரி நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்க.’
‘இல்லை சிக் காம்பிற்கு முதல்ல இருக்கிற அந்த குட்டிக் குட்டி மண்வீடுகள் பற்றி ஒண்டும் சொல்ல இல்லையே?’
‘தேவை எண்டா நான் சொல்லி இருப்பன்தானே? தேவையில்லாத எந்த விசயத்திலையும் நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது. அதை முதல்ல எல்லாத் தோழர்களும் நல்லா மனதில பதிய வைக்க வேணும். தேவையில்லாத ஆராய்ச்சி, அமைப்புக்கு ஒத்துவராது எண்டு விளங்கிக் கொள்ள வேணும். தேவையில்லாத விவாதங்கள், போராட்டத்திற்கு அல்லது கழகத்திற்கு எதிரான கருத்துக்கள் உங்களைத் தேவையில்லாத சிக்கலில மாட்டிவிடும். அதால நீங்கள் வந்தது எதுக்கோ அதை மாத்திரம் மனதில வைச்சுக் கொண்டு எப்பிடிப் பயிற்சியைக் கடுமையாகச் செய்து திறமையான தோழராய் வருகிறது எண்டு யோசிக்க வேணும். முக்கியமா இது எல்லாருக்கும் தெளிவா விளங்க வேணும். இந்த மண்குடிசை பற்றிச் சுமன் நீ அறிஞ்சு கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. இனிமேலைக்கு இதைப் பற்றி நீ தேவை இல்லாத ஆராய்ச்சியில ஈடுபடக்கூடாது. யாரிடமும் கேள்வி கேட்கக் கூடாது. சரியா? இதை எல்லாரும் நல்லாய் ஞாபகம் வைச்சிருக்க வேணும்.’
‘சரி தோழர். நான் தெரியாமல் கேட்டிட்டன்.’
‘இந்த முறை பருவாய் இல்லை. ஆனால் இப்பிடியான கேள்விகள் இதுவே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும்.’
‘சரி தோழர்.’
‘வாயைச் சும்மா வைச்சுக் கொண்டு இரு சுமன்.’ என்றான் கண்ணன் கடுமையான தொனியில்.
‘சரி விடு. இனிக் கவனமா இருக்கிறன்.’
‘அதுதான் எல்லாருக்கும் நல்லது.’
‘ம்….’
‘சரி… எல்லாரும் வாங்க. சிக் காம்பைக் காட்டுகிறன்.’
என்று கூறிய பாண்டியன் மற்றவர்களின் பதிலை எதிர்பாராது முன்னே நடந்தார். அதைப் பார்த்த தோழர்களும் புகையிரதப் பெட்டிகளைப் போல அவர் பின்னால் தொடர்ந்தார்கள். மருத்துவ முகாமிற்குப் போன போது மருத்துவர் என்று கூறப்படும் தாதிப் படிப்பையே முடிக்காத கௌரவ மருத்துவர் ரவி இவர்களைப் பார்த்துச் சிரித்த வண்ணம் நின்றார். இவரின் அதிகபட்ச சிகிச்சை பி12 ஊசி ஏற்றுதல். அதைவிட மாத்திரைகள், கலவைகள் அவர் கைவந்த கலை. இவரால் எத்தினை பேர் குணமடைந்தார்கள். எத்தினை பேர் மேலும் வருத்தக்காரர் ஆகினர் என்பது யாருக்கும் தெரியாது.
‘என்ன தோழர்… எப்பிடி வருத்தக் காரர் எல்லாம் இருக்கினம்? யோன்டிஸ்சும் , அம்மை வருத்தமும் பிரச்சனை போல இருக்குது?’
‘ஓமுங்கோ… அது இரண்டும்தான் பெரிய பிரச்சனையா இருக்குது. அதுவும் யோன்டிஸ் பெரிய பிரச்சனை. அதுக்காகச் சிலரைத் தஞ்சாவூருக்கு அனுப்ப வேண்டி இருக்குது. வெக்கையும் இங்க குறைகிற மாதிரி இல்லை. அதால எல்லாரும் குளித்து முழுகி உடம்பைக் குளிர்மையா வைச்சிருக்க வேணும்.’
‘இந்தச் சவுக்கங் காட்டுக்க எப்பிடி வெக்கை குறையும்? சமாளிக்க வேண்டியதுதான். அடிக்கடி குளிச்சு முழுகி கொஞ்சம் உடம்பைக் குளிர்மையா வைச்சிருக்கிறது புத்திசாலித்தனம். அதுக்குத்தானே ஆறு, வாய்க்கால் எண்டு இருக்குது. அதை ஒழுங்காப் பயன்படுத்துகிறது நல்லது.’
‘கூடியமட்டும் வருத்தங்கள் வராமல் சுத்தமாய் இருக்க வேணும். வாய்க்கால்ல குளிக்கிறது அதுக்கு உதவாது. ஆனா அதைவிட்டா இங்க வேற வழியும் இல்லை.’
‘ம்… நீங்கள் சொல்லுகிறதிலையும் உண்மை இருக்குது. ஆனா நாங்கள் சமாளிக்கிறதைத் தவிர வேற வழி இல்லை.’
பின்பு சக தோழர்களைப் பார்த்த ரவி,
‘உங்களுக்கு ஏதாவது வருத்தம் வந்தால் நீங்கள் இங்க வரலாம். அந்த நிலைக்கு வராமல் முதல்ல பார்த்துக் கொள்ளுங்க. சுகமில்லாமல் இருக்கிறவைக்கு மேலதிகமாகத் தயிர் தேவைப்பட்டால் இங்க கிடைக்கும். அதே நேரம் பயிற்சி செய்யும் போது ஏதாவது காயம் ஏற்பட்டாலும் இங்க உடனடியாக வரலாம். இங்க வந்தாலும் முகாமிற்கு வெளியால நிண்டே உதவி கேட்க வேணும். ஏன் எண்டால் முகாமிற்கு உள்ளுக்கு அம்மை நோயாளிகள் இருக்கலாம். அது தேவையில்லாமல் உங்களுக்கும் தொத்துகிறதுக்கு ஏதுவாக இருக்கலாம். அதால இயன்ற மட்டும் நீங்கள் பொறுமையாக வெளியாலேயே நிண்டு உதவி கேட்க வேணும். இதைவிட மேற்கொண்டு நான் சொல்லுகிறதுக்கு எதுவும் இல்லை. தோழர் நீங்கள் இவங்களைக் கூட்டிக் கொண்டு போகலாம்.’
அதை அடுத்துத் தோழர் பாண்டியன் இவர்களை அழைத்துக் கொண்டு இவர்கள் தங்க வேண்டிய குடிலுக்குச் சென்றார். அது மற்றைய குடில்களைவிட நீளமாக இருந்தது. அதற்குள் கிட்டத்தட்ட நாற்பது தோழர்கள் படுத்து உறங்கலாம் போலத் தோன்றியது. அதற்குள் நிலத்திலேயே அனைவரும் உறங்க வேண்டும். அப்படி உறங்குவதற்குப் புல்லினால் செய்யப்பட்ட பாய் கொடுக்கப்பட்டு இருந்தது. தலையணை தேவைப்படுபவர்கள் வேண்டும் என்றால் பாதணிகளைத் தலைக்கு வைத்துக் கொண்டு உறங்கலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை. கிடுகினால் வேயப்பட்ட குடில்கள் வெப்பத்தைச் சிறிது தணித்தது. அதன் சுவர்கள் அப்படியே இடைவெளி விட்டு வேயப்பட்டு இருந்தது. அதனால் காற்று வருவதற்கும் அது மிகவும் வசதியாக இருந்தது. பயிற்சி ஆசிரியர் ஒவ்வொருவரும் தங்க வேண்டி இடத்தைச் சுட்டிக் காட்டினார். தோழர்களும் தாங்கள் கொண்டு வந்த பாய், பாதணி, போர்வை, உடுப்புகள் என்பனவற்றை அங்கே வைத்துவிட்டு அடுத்தது என்ன என்பது போலத் தயங்கியபடி நின்றார்கள். பயிற்சி ஆசிரியர் அவர்களை அப்படித் தொடர்ந்தும் நிற்கவிடாது,
‘நாங்கள் மேற்கொண்டு செல்வோம்.’ என்றார்.
‘ஓம்… ஓம்…’ என்ற வண்ணம் தோழர்கள் அவரைத் தொடர்ந்தார்கள்.

பின்பு அவர் மற்றைய தோழர்கள் தங்கும் முகாமைக் காட்டினார். அந்தக் குடில்களும் அவர்கள் குடில்கள் போல இருந்தன. அதற்குள் இருந்த சில தோழர்கள் வந்து அவர்கள் பேயரையும், ஊரையும் கேட்டுக் கொண்டார்கள். என்னதான் போராட்டம் என்றாலும் அறிமுகம், நண்பர்கள் என்றால் அதில் ஊர் முதல் இடத்தில் நிற்கிறது என்பது கண்ணனுக்கு விளங்கியது. கண்ணனுக்குத் தெரிந்த ஊர்க்காரர் யாரும் இருக்கவில்லை. பக்கத்து ஊர்களைச் சார்ந்தவர்கள் அங்கே இருந்தார்கள். சிறிது நேர அறிமுகத்தின் பின்பு பயிற்சி ஆசிரியர் அவர்களைப் பார்த்து,
‘சரி உங்களுக்குக் குளிக்கிற வாய்க்காலைக் காட்டுகிறன். அதுக்குப் பிறகு ஆற்றில குளிக்கிற இடத்தைக் காட்டுகிறன். பிறகு நீங்கள் காலமையில எங்க போக வேணும் எண்டதையும் காட்டுகிறன். சரி வாங்க போகலாம்.’  என்று கூறிய பயிற்சி ஆசிரியர் நடக்கத் தொடங்கினார். அதனை அடுத்துத் தோழர்களும் அவர் பின்னால் நடக்கத் தொடங்கினார்கள். அவர் முதலில் முகாமின் முகப்பிற்குச் சென்றார். அப்படிச் செல்லும் போது நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட குடிலிருந்தது. இம்முறை அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்கின்ற துணிவு சுமனுக்கோ அல்லது வேறு யாருக்கோ இருக்கவில்லை. அதனால் அவர்கள் அமைதியாக அந்தக் குடிலைக் கடந்து பயிற்சி ஆசிரியரோடு நடந்தனர். இருந்தாலும் பலருக்கும் அதற்குள் என்ன இருக்கிறது என்கின்ற கேள்வி உள்மனத்தில் விடை இல்லாது அலை மோதியது. இருந்தும் ஞானிகளாக அமைதி காத்தனர்.
முகாமின் முகப்பிற்கு வந்த பயிற்சி ஆசிரியர்,
‘இந்தப் பக்கத்தாலும் வாய்க்காலுக்குப் போகலாம். ஆனால் நாங்கள் இந்தப் பக்கம் இண்டைக்குப் போகத் தேவையில்லை. அதை நீங்களே போய் தெரிஞ்சு கொள்ளலாம். இப்ப நாங்கள் சமையல் அறைப் பக்கம் இருக்கின்ற வாய்க்காலைப் பார்த்திட்டுப் பிறகு ஆற்றைப் பார்க்கப் போகலாம். அதுக்குப் பிறகு நீங்கள் வெளிக்குப் போக வேண்டி இடத்தைக் காட்டுகிறன்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து சமையல் அறைப் பக்கம் நடந்தார். அவர் பின்னால் அனைவரும் நடந்தனர். சமையல் அறையிலிருந்து இறைச்சி வாசம் வந்தது. இருந்தாலும் அது ஊரில் வைப்பது போல் மணம் குணம் அற்றதாய் இறைச்சியை நீரில் அவிப்பது போல மணம் வந்தது. சிலவேளை அவித்து பின்பு பிரட்டல் கறியாக வைப்பார்களோ என்று அவன் எண்ணிக் கொண்டான்.
பயிற்சி ஆசிரியர் சமையல் அறையைத் தாண்டி அதன் பின்புறமாகக் கிழக்கு நோக்கி நடந்தார். அவர் பின்னால் அவரது புகையிரதம் பெட்டி கழறாது தொடர்ந்தது. கண் முன்னே பச்சைக் கடலாக விரிந்த வயல் பகுதி. அந்த வாய்க்கால் அதற்கு உயிர்நாடியாக ஊடறுத்து ஓடும் காட்சி. மனிதனுக்குள் இரத்தம் ஓடுவது போல் வயல்வெளியின் இரத்த ஓட்டம் அந்த வாய்க்கால்களாக.
பயிற்சி ஆசிரியர் வாய்க்காலுக்கு அருகே சென்றார். பின்பு அதற்குள் இறங்கினார். அவரின் முழங்காலுக்குச் சிறிது மேல் வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது.
‘இதுக்க எப்பிடிக் குளிக்கிறது?’ என்றான் பார்த்திபன். பியிற்சி ஆசிரியர் முதலில் சிரித்தார். பின்பு,
‘படுத்துத்தான் குளிக்க வேணும். எவ்வளவு குறைஞ்ச வளத்தோட சிறப்பாக வழுகிறமோ அவ்வளவு சிறந்த போராளியாக, தோழராக வரமுடியும். ஆதால இனிமேலைக்குப் பற்றாக்குறையை ஒரு பிரச்சினையாக் கதைக்காதீங்க. இந்த வாய்க்காலுக்க நீங்கள் படுத்துக் குளிச்சா நிறையத் தண்ணியா இருக்கும். அப்ப நீங்கள் ஈசியாக் குளிக்கலாம். காகம் தண்ணி குடிச்ச கதை மாதிரி தந்திரமாக இருக்கிறதைப் பயன்படுத்தப் பார்க்க வேணும். அதை நாங்கள் ஒவ்வொரு சின்ன விசயத்திலையும் கவனிச்சு நடந்தாத்தான் களத்தில சிறந்த போராளியாகப் போராட்டத்திற்கு முழுப் பங்களிப்பையும் செய்யலாம். நான் சொலுகிறது விளங்குதா?’
‘விளங்குது. நீங்கள் சொல்லுகிறதில நிறைய விசயம் இருக்குது. எப்பிடிக் குளிக்க வேணும் எண்ட உங்கடை ஐடியா நல்ல ஐடியாத்தான்.’ என்றான் பார்த்திபன்.
‘சரி இனி ஆற்றைப் போய் பார்ப்பம்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். அவர் பின்னால் மற்றவர்களும் நடக்க ஆரம்பித்தார்கள். அவர் தொடர்ந்து நடந்ததில் பலருக்குக் களைப்பாகவும், சலிப்பாகவும் இருந்தது. என்றாலும் யாருக்கும் அவரைக் குடைய மனத்தில் துணிவு இன்றித் தொடர்ந்தார்கள். சிறிது நேரத்தின் பின்பு ஆவலோடு அந்த ஆற்றை அனைவரும் வந்து அடைந்தார்கள். ஆறு வெகு அமைதியாக ஓடிக் கொண்டு இருந்தது. வெண் புழுதி ஆற்றுப் படுக்கை அதன்மீது அனைவருக்கும் வெல்ல முடியாத கொள்ளை ஆசையைக் கொணர்ந்தது. ஆனாலும் அதைப் பார்த்தவர்கள் கண்களில் ஒருவித சோர்வு. அந்தத் தெளிவான ஆறு மேலும் சிறிது செழிப்பாக ஓடி இருக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றியது. பார்த்த உடனேயே பலராலும் அதில் வாய்க்காலைவிடக் குறைவான உயரத்திலேயே நீர் ஓடுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. அதனால் சோர்ந்து போனவர்களைக் கனிவாகப் பயிற்சியாளர் பார்த்து,
‘மழை பெய்ஞ்சா நல்லாத் தண்ணி ஓடும். அப்ப வந்தால் சந்தோசமாய் குளிக்கலாம். நாங்கள் இப்ப இங்கயே நிற்க முடியாது. தொடர்ந்து போனால்தான் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கலாம்?’
‘ஓம்… ஓம்…’ என்று பல குரல்கள் வந்தன. அதைத் தொடர்ந்து பயிற்சி ஆசிரியர் நடக்கத் தொடங்கினார். வயல் வெளிகள் பார்க்கும் இடம் எங்கும் தொடர்ந்தன. பசுமை அலை இடைவிடாது எங்கும் மோதியது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் அல்லவா இது. அந்தச் செழுமை பார்ப்பவரை இடைவிடாது மயக்கியது. வயல்கள் ஒருவாறு முடிந்து சவுக்கம் காடு தொடர்ந்தது. அந்த வயல் முடிந்ததும் மேற்குப் பக்கமாகத் தொடர்ந்த உயரமான சவுக்கங் காட்டைக் காட்டி,
‘இங்கதான் நீங்கள் காலையில வரவேணும். உங்களோடை நிறையக் கூட்டம் அந்த நேரம் வருவினம். அப்ப நீங்கள் மேற்கொண்டு அறிய வேண்டியதை அறிஞ்சு கொள்ளுங்க. சரி இப்ப வாங்க. இப்பிடியே தெற்க போனக் கிறவுண்ட் வருகுது. அதைப் பார்த்திட்டு அப்பிடியே முகாமிற்குப் போகலாம்.’ என்ற பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் அவசரமாக நடந்தார்கள். உச்சி வெயில் உலோகத்தையே உருக்குவது போலத் தலைமேல் கொதித்தது. எப்போது முகாமிற்குப் போவோம் என்பது பலரின் எதிர்பார்ப்பாய் இருந்தது. பயிற்சி ஆசிரியர் எட்டி எட்டி நடந்ததில் விரைவாகவே மைதானத்தை வந்து அடைந்துவிட்டார். மைதானம் மிகவும் விஸ்தீரணமாக இருந்தது. நான்கு எல்லைகளும் சவுக்கம் தோப்புக்கள் அரணாகச் சுவர் போல இருந்தன. பயிற்சிக்கா ஓடி ஓடி அவர்கள் ஓடும் பாதை புல் பூண்டு இல்லாது வண்டில் பாதை போலப் புழுதியாக இருந்தது. மற்றைய இடங்களிலும் சொற்பமாகவே ஆங்காங்கே புற்கள் இருந்தன. வெயிலில் நின்று இங்குப் பயிற்சி செய்வது கடினமாக இருக்கும் என்றே கண்ணனுக்குத் தோன்றியது. சுமனுக்கு அதைப் பற்றி எண்ணவே பிடிக்கவில்லை. அவன் எப்போது முகாமிற்குப் போவது என்ற எதிர்பார்ப்போடு அவர்கள் பின்னே பல விடை இல்லாத கேள்விக்குறிகளோடு நின்றான்.
‘இரண்டு றவுண்டு இந்தக் கிறவுண்டைச் சுற்றி ஓடினா நல்லா இருக்கும்… ஆனால் உங்களுக்கு முதல் நாள். அதனால இந்த உச்சி வெயிலில் வேண்டாம். வாங்க போவம்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் நடந்தார். அவரோடு அனைவரும் சேர்ந்து நடந்தார்கள்.
முகாமிற்குத் திரும்பி வந்த பின்பு அனைவரையும் சிறிது நேரம் இளைப்பாறிய பின்பு, குளித்துச் சாப்பிடத் தயாராகும்படி கூறிவிட்டு பயிற்சி ஆசிரியர் சென்றுவிட்டார். அதன் பின்பு அனைவரும் ‘அப்பாடா.’ என்கின்ற நிம்மதியோடு ஓய்வெடுத்தார்கள்.
அப்படி ஓய்வெடுக்கும் போது வேந்தன் என்கின்ற பழைய தோழர் வந்து கண்ணன், சுமன், பார்த்திபன், குமரன் ஆகியவர்களைப் பார்த்துக் குளிப்பதற்குத் தான் அழைத்துக் கொண்டு செல்வதாகக் கூறினார். அது அனைவருக்கும் சம்மதமாக அவர்கள் அவரோடு புறப்பட்டார்கள். முதலில் அலுவலகத்திற்குச் சென்று சவர்க்காரம் வாங்கிக் கொண்டு பின்பு செல்லாம் என்று கூறிய அவர் அவர்களைக் கூட்டிக் கொண்டு அலுவலகத்தை நோக்கிச் சென்றார். அலுவலகத்தில் உடனடியாக ‘டுகைநடிழல’ சவர்க்காரம் கிடைத்தது. அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
வேந்தன் முகாமின் முன்புறமாகப் போய் குளிப்பதே நல்லது என்று கூறி அவர்களை அந்தப் பக்கம் அழைத்தான்.
‘முன்பக்கம் போய் குளிப்பம். எனக்கு அதுதான் பிடிக்கும்.’ என்றான் வேந்தன்.
‘ஏன் தோழர்?’ என்றான் கண்ணன்.
‘துப்பரவை எண்ணித்தான்.’
‘அப்பிடி எண்டா அதுக்கு முன்னுக்கு யாரும் குளிக்க… கழுவ… மாட்டினமா?’
‘அது நடக்கும்தான். அதுக்காக நாங்கள் ஏன் அதிகமான அழுக்குக்கை போய் விளவேணும்? பின்னுக்குப் போகப் போக அது இன்னும் அதிகமாகும்.’
என்று கூறிய வேந்தன் முகாமுக்கு வண்டி வரும் பாதையால் சென்று பின்பு சவுக்கம் தோப்பு வழியாக நடந்து வாய்க்காலை அடைந்தான். கிணற்றில் குளித்தவர்களுக்கு வாய்க்காலில் குளிப்பது சங்கடமாய் இருந்தது. கழுவுவதும் குளிப்பதும் ஓரே வாய்க்கால் என்பது மேலும் அந்தச் சங்கடத்தை அதிகரித்தது. இருந்தும் அதற்கு மாற்றுவழி இல்லை என்பது அனைவருக்கும் நன்கு விளங்கியது. அதனால் அதை மறந்து அன்றாட வாழ்க்கையில் ஒன்றத் தொடங்கினார்கள்.

அதன் பின்பு ‘Lifeboy’ முதலில் நுரைத்தது. அவர்கள் மனதில் சந்தோசமும் அப்படியே நுரைத்துப் பொங்கியது. தஞ்சை வெயில் குளிர் நீரையும் வெந்நீராக்கியதும் உடலிற்கு ஒருவித சுகமாகவே இருந்தது. இந்த வாய்க்கால்கள் இல்லை என்றால் தஞ்சை நெற்களஞ்சியம் சுவாசம் அற்றுப் போய் இருக்கும்.
குளித்து முடித்தபோது பசி வயிற்றை அமிலமாகக் கிள்ளியது. அதனால் வேந்தனுக்கு மேலும் அங்கே தாமதிப்பதில் விருப்பம் இருக்கவில்லை. அவன் புறப்பட வேறு வழியின்றி அனைவரும் முகாமிற்கு வந்தார்கள்.

இரண்டகன்?

1. பிரவேசம்

அந்த மஞ்சள்நிறப் பாரவூர்தி அலுவலகத்திற்கு முன்பு கொழுத்த எருமை போல வந்து நின்றது. அந்தக் கட்டடம் தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற இரண்டுமாடிக் கட்டடம். நீண்ட காலம் எண்ணைத் தேய்த்துக் குளிக்காதவர் தோல் போலப் பரட்டை அடித்து வெடிப்பு விழுந்த சுவர்கள். அது அதன் சொந்தக்காரருக்குக் காசு வந்தால் போதும் கட்டடத்தைக் கவனிப்பான் ஏன் என்பது போன்ற எண்ணம் இருப்பதாய் காட்டியது. அதன் கீழ்த்தளத்தில் நடைமுறை அலுவலகங்களும் மேலே செயலதிபரின் அலுவலகம் ஒன்றும் இருந்தது. அதைவிட வெறுமையாக இருந்த இடங்களில் அங்கங்கே பலர் தங்குவதும் போவதுமாகப் பரபரப்பாய் இருந்தனர். அங்கேதான் இவர்களும் நின்றார்கள். இவர்களை ஏற்கனவே விசாரித்துப் படிவங்கள் நிரப்பி, பின்பு அசையும் சொத்துக்களாய் பாய், பாத்திரம், சீருடை, பாதணிகள் என்பன கணக்குப் பார்த்து வழங்கித் தாயார் நிலையில் வைத்திருந்தார்கள்.
அந்தப் பாரவூர்தியில் இருந்து இறங்கிய இருவர் அவசரமாக அலுவலகத்திற்கு உள்ளே வந்தார்கள். அவர்களில் ஒருவர் கறுப்பாக, உயரமாக இருந்தார். அவருக்கு ஐயனாரைப் போன்ற அருவாள் மீசை. அது முகத்தில் குற்றிட்டு நின்றது. அவருக்கு அது கம்பீரத்தைவிடப் பயத்தை அதிகம் தருவதாய் இருந்தது. கம்பியின் தடிப்பில் முறுக்கு முறுக்காகச் சுருண்ட தலைமுடி. பழுக்கக் காய்ச்சிப் பளபளக்கும் இரும்பாகச் சிவந்த கண்கள். மொத்தத்தில் அவர் மிகுந்த கோபக்காரர் போலத் தோன்றினார். மற்றவர் மிகவும் சாந்தமான முகத்தைக் கொண்டவர். அவர் மாநிறம். அதிராது மிகவும் மென்மையாகப் பேசினார். அந்த இருவரும் உள்ளே சென்று அலுவலகத்தின் முன் உள்ள அறைக்குள் வேகமாகப் புகுந்தார்கள். பின்பு ஏற்கனவே அங்கு இருந்தவர்களோடு ஏதோ கதைத்தார்கள்.

அந்தப் பாரவூர்தியில் ஏற்கனவே நிறையப் பொருட்கள் இருந்தன. அலுவலகத்திலிருந்து மேற்கொண்டு பொருட்கள் அதில் ஏற்றப்பட்டன. மூட்டை மூட்டையாக ஏற்றப்பட அதற்குள் என்ன இருக்கிறது என்பது கண்ணனுக்குத் தெரியாது. அதற்கான அவசியமும் அவனிடம் இல்லை என்பது கண்ணனுக்கு விளங்கியது.
அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் ஒரு பட்டியலை வந்தவர்களிடம் கொடுத்தார்கள். அந்த நபர்கள் அதைக் கவனமாக வாசித்தார்கள். பின்பு எண்ணிப் பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள்.

காலைச் சாப்பாடாக வழங்கப்பட்ட இட்லியை ஆர்வத்தோடு இவர்கள் உண்ணும் போது,
‘B காம் போகிறவை கெதியா வந்து லொறியில ஏறுங்கோ.’ என்கின்ற சத்தம் ஒலிபெருக்கியில் கத்துவது போலக் கேட்டது. சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் முதலில் அதிர்ந்து போய்விட்டார்கள். அதற்கு மேல் அவர்களால் அதைச் சுவைத்துச் சாப்பிட நேரமும் விருப்பமும் இருக்கவில்லை. அவதி அவதியாக அள்ளி அதக்கிவிட்டு கையைக் கழுவிக் கொண்டு பாரவூர்திக்குப் பின்னே தமது சொத்துக்கள் உடன் வந்து நின்றார்கள். அவர்களைப் பார்த்து அந்தச் சுருள் முடி மனிதர் பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்ட பெயரையும் அவர்களுக்கு அதில் கொடுக்கப்பட்டு இருந்த எண்ணையும் வாசிக்கத் தொடங்கினார். அதில் தானும் ஒரு சிப்பாய் என்று காட்டும் அவஸ்தை இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துச் சிலர் மனதிற்குள் சிரித்துக் கொண்டனர். அந்த விபரங்கள் ஏற்கனவே பதியப்பட்டு அதைப் பற்றி விரிவாக அலுவலகத்தில் கூறியிருந்தார்கள். இயக்கத்தில் சொந்தப் பெயர்கள் பாவிப்பதில்லை என்றும் அதற்குப் பதிலாக ஒரு புனை பெயரைக் கட்டாயம் பாவிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி அதை மாற்றிப் பாவிக்கத் தொடங்கி இருந்தாலும் இந்த எண் புதிதாக இருந்தது. கண்ணனுக்கு இராணுவத்தில் அல்லது சிறையில் பெயருக்குப் பதிலாக அதைப் பாவிப்பார்கள் என்று தெரியும். அப்படியே இங்கும் பாவிக்கிறார்கள் என்பது விளங்கியது. அப்படி என்றால் இதுவும் ஒரு முழுமையான இராணுவம் போன்றதே என்கின்ற எண்ணம் கண்ணன் மனதில் உருவானது. வண்டிக்குள் நிறையப் பொருட்கள் இருந்தன. அதற்கு மேல் ஏறி இருந்துதான் பயணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கியது.

அந்தச் சுருள் முடிக்காரர் எண்ணையும், பெயரையும் ஒலிபெருக்கியின் குரலில் வாசித்ததன்படி எல்லோரும் எழுந்து ஆர்வத்தோடு வந்து ஏறுவதற்குத் தயாரானார்கள். இவர்கள் ஆர்வத்தைப் பார்த்த அந்தச் சுருள் முடிக்காரர் இவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்தார். அவர் முகத்தில் மலர்ந்த புன்முறுவல் எல்லோருக்கும் அதிசயத்தைத் தந்தது. அவர் அப்படிச் செய்ததின் அர்த்தம் என்ன என்று கண்ணனுக்கு விளங்கவில்லை. கல்லுக்குள் நிறைந்து மறைந்து இருந்த ஈரமா என்றும் அது விளங்கவில்லை. என்றாலும் அதை யாரிடமும் இப்போது கேட்க முடியாது என்பது திண்ணமாக விளங்கியதால் பேசாது ஏறும் இளைஞர்களோடு சேர்ந்து தானும் பாரவூர்தியில் ஏறத் தயாரானான். அப்போது பின்னே நின்ற சுமன்,
‘என்ன கண்ணன் யோசிக்கிறா? பயப்பிடுகிறாய் போல…?’ என்று கேட்டான்.
‘அங்… நான் ஏன் பயப்பிட வேணும்? உண்மையில பரபரப்பாய் இருக்குது. அவ்வளவுதான். பயப்பிட வேணடிய எந்த அவசியமும் இல்லை. முகாமைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்குது.’
‘சரி சரி… அது எண்டா உண்மைதான். எண்டாலும் சில வேளை வீட்டில இருந்தளவுக்குச் சொகுசா இங்க இருக்க முடியாமல் இருக்கும். அதை நாங்கள் சமாளிக்கத்தான் வேணும். எனக்கு அது பெரிய பிரச்சனையா இருக்காது எண்டு நினைக்கிறன். ஊரில ஆமிக்குப் பயந்து, பயந்து மரவள்ளித் தோட்டத்துக்கையும் பாவைப் பந்தலுக்குள்ளையும் உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு கிடக்க வேண்டிய அவசியம் இங்க இல்லைத்தானே? இதுவே பெரிய சுதந்திரம் கிடைச்ச மாதிரி. பயமற்ற ஒரு சூழல். இவ்வளவும் இருக்கிறதால நாங்கள் இங்க எதுக்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.’
‘உள்ளுக்காப் போங்கோ… உள்ளுக்காப் போங்கோ…’ என்று மீசைக்காரர் ஒலிபெருக்கியின் குரலில் திடீரெனக் கத்தினார். அதை அடுத்துப் பலரும் நினைவு வந்தவர்களாக முன்னே நகர்ந்தனர். கண்ணனும், சுமனும் தங்களது கதைக்கு ஒரு இடைவெளி விட்டு இடைவெளி உள்ள இடமாகப் பார்த்து முன்னோக்கிச் சென்றார்கள்.
பாரவூர்தி மெதுவாக அந்தச் சந்தைவிட்டுப் பிரிய முடியாது பிரியாவிடை கொடுத்தது. பின்பு மெதுவாக அது முன்னோக்கி நகரத் தொடங்கியது. அலுவலகம் இருந்த இடம் செழிப்பான இடம் போலக் கண்ணனுக்குத் தோன்றியது. அதை அங்கிருந்த வீடுகளிலும் அதைச்சுற்றிய அமைப்புக்களிலும் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது. அது செழுமையான மரங்களும், கொடிகளும் நிறைந்த பகுதியாகப் பூத்துக் குலுங்குவதையும் அவனால் கவனிக்க முடிந்தது. வாகனம் ஒருவாறு நகர்ந்து பிரதான பாதையை அடைந்தது. அந்த நகரம் யாழ்ப்பாணத்தைவிட மிகச் சிறிய நகரமாகவே கண்ணனுக்குத் தோன்றியது. சில கடைகள். சில கட்டடங்கள். வருங்காலத்தில் இதன் தோற்றம் மாறலாம் எனக் கண்ணன் எண்ணினான். வாகனத்தில் இருந்தவர்கள் எல்லோரும் பேச்சு இழந்து நகரைப் புதினம் பார்ப்பதில் ஆர்வம் காட்டினர். அந்த அமைதி கண்ணனுக்கும் தேவைப்பட்டது. அந்த நகரத்தை இரசிக்கத் தொடங்கினான். ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே கட்டங்கள் கழிந்து வயல்வெளி வரத் தொடங்கியது. சிறிது நேரம் சாலைவழியாகச் சென்ற வாகனத்திலிருந்து அனைவரும் இடங்களைப் பராக்கு பார்த்துக் கொண்டு வந்தார்கள். பிரதான பாதையால் சென்ற வாகனம் திடீரென ஒரு சவுக்கம் தோப்புக்களை ஊடறுத்துச் செல்லும் பதை வழியே இறங்கியது.

சவுக்கம் தோப்புக்கள் இவ்வளவு விஸ்தீரணமாய் இருக்கும் என்று கண்ணனோ, சுமனோ எதிர்பார்க்கவில்லை. இங்கு இருக்கும் சவுக்கு மரத்தின் தேவை அவர்களை மலைக்க வைத்தது. அந்த மலைப்போடு வாகனத்திலேயே அந்தத் தோற்றத்தைக் கடந்து செல்லப் பல நிமிடங்கள் பிடித்தன. அதன் பாதைகள் சுற்றிச் சுற்றித் திரும்பிப் போகும் வழியை ஞாபகம் வைத்திருக்க முடியாதவாறு தலை சுற்றப் பண்ணியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் சவுக்கம் தோப்புகள் கடல் போல எல்லை அற்று தெரிவதை வாகனத்திலிருந்து பார்க்கப் பார்க்க மலைப்பு மாறாது தொடர்ந்தது. இந்தப் பச்சைக் கடலுக்குள் எங்கே முகாம் இருக்கிறது என்று பலரும் ஆர்வத்தோடு தேடினார்கள். முதலில் அவர்கள் கண்ணிற்கு அது புலப்படா விட்டாலும் சிறிது நேரத்தில் உயரப் பறந்த கழகத்தின் கொடி அதைக் காட்டிக் கொடுக்கப் பலரும் ஆர்வமாக அங்கே பார்த்தார்கள். வேகமாகச் சென்ற வாகனம் மெதுவாகத் தனது வேகத்தைக் குறைத்தது. அப்போது கண்ணனால் அங்கே ஒரு தடை இருப்பதைக் கவனிக்க முடிந்தது. அது காவல் அரண் போல் இருந்தது. அத்தோடு சிறிய கோபுரம் ஒன்றும் அதற்கு அருகாக அமைத்து வைத்து இருந்தனர். அதில் ஏறி நின்று பார்த்தால் அதிக தூரத்திற்குப் பார்க்க முடியும். அதனால் யாராவது ஊடுருவுவதை விரைவாகக் கண்டு பிடித்துவிட முடியும். அவற்றைப் பார்க்கும் போது இலங்கையில் இராணுவம் அமைத்திருக்கும் தடைகள் போலவே அது தோன்றியது. அந்தக் காட்சி இவர்களும் ஒரு இராணுவம் என்பதைக் கண்ணனுக்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது.
அந்தப் பாரவூர்தி மெதுவாகச் செல்ல இருவர் திடீரென அதன் முன்பு வந்து நின்று நிறுத்துமாறு கட்டளை இட்டார்கள். இராணுவமும் இப்படித்தான் பற்றைக்குள் இருந்து புயல் வேகத்தில் பாய்ந்து வரும். ஆனால் அவர்கள் கைகளில் சுடு திறன் கொண்ட ஆயுதம் இருக்கும். இவர்கள் கையில் ஆயுதத்திற்குப் பதிலாகச் சவுக்கம் கட்டைகள் இருந்தன. சவுக்கம் கட்டைகளாக இருந்தாலும் அதை ஆயுதமாக நினைத்து வாகனம் நின்றது. உடனே அவர்கள் வந்து அதைப் பரிசோதித்தனர். பின்பு வாகனத்தின் முன்னாசனத்தில் இருந்தவர்களோடு கதைத்தனர். அவர்கள் விசாரணை முடிந்ததும் வண்டியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

அதன் பின்பு வேகமாகச் சென்ற வாகனம் முகாமில் பரந்த வெளி போன்ற இடத்தில் போய் கடிவாளம் இழுக்கப்பட்ட குதிரை போல் நின்றது. முகாம் எதிர்பார்த்ததைவிட விஸ்தீரணமாகவே இருப்பதாய் கண்ணனுக்குத் தோன்றியது. முகாமின் மத்தியில் சதுரமாகச் சிறிய வேலியால் அடைக்கப்பட்டு அதன் நடுவே நட்சத்திர மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதன் மத்தியில் கொடிக்கம்பம் நடுநாயகமாக நாட்டப்பட்டு இருந்தது. அதிலே கழகத்தின் கொடி கம்பீரமாகப் பறந்தது. கொடிக்கம்பத்தின் அடியில் நட்சத்திரத்தில் சம்மட்டியால் உலகத்தைப் பிணைத்து இருக்கும் சங்கிலியை அடித்து நொறுக்குவதான கல் வேலைப்பாட்டால் அழகுபடுத்தப்பட்டு இருந்தது. அந்த நடு முற்றத்தைத் தொடர்ந்து மணல்பாங்கான தரை பரந்து இருந்தது. அது மிகவும் தூய்மையாக இருந்ததைக் கண்ணன் அவதானித்தான். முகாமின் மேற்குப் பக்கத்தில் தோழர்கள் தங்கும் பெருங்குடில்கள் நிரைக்கு இருந்தன. அதன் கடைசிக் குடிலாக மருத்துவக் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அவை சவுக்கம் தடிகளால் கட்டப்பட்டு கிடுகால் வேயப்பட்டு இருந்தன. அந்தக் கொட்டில்களை அடுத்து விசித்திரமான மண்வீடுகள் இருந்தன. அவை மிகவும் சிறியவை ஆகவும், மிகவும் தடித்த சுவர்களைக் கொண்டவை ஆகவும் இருந்தன. அது ஏன் அப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது கண்ணனுக்குச் சற்றும் விளங்கவில்லை. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தது. அந்த மண்குடில்கள் முகாமின் வடக்குப் பக்கமாக இருந்தன. இந்தக் குடில்களுக்குப் பின்னே சவுக்கம் தோப்புக்கள் தொடர்ந்தன. முகாமின் வடகிழக்கு மூலையில் சமையல் செய்யும் கொட்டிலும், காவல் குடில் ஒன்றும், வெளியே போகும் பாதையும் இருந்தது. முகாமின் கிழக்குப் பக்கம் சவுக்கம் தோப்புத் தொடர்ந்தது. முகாமின் தெற்குப் பக்கத்தில் விசேசமான குடில் ஒன்று இருந்தது. அது சிறிய குடில். அதற்கு நான்கு சுவர்கள் இருந்ததோடு விசித்திரமான மண்குடில் போலக் கதவும் இருந்தது. மற்றைய குடில்கள் கதவுகள், சுவர்கள் அற்றுக் காற்றோட்டமா இருந்தன. தம்மிடம் இரகசியம் இல்லை என்பதாய் அவை கதை பேசின.
‘என்ன கண்ணன் யோசிச்சுக் கொண்டு நிக்கிறாய்.’ என்றான் சுமன்.
‘இல்லை காம்பைப் பார்த்தா பெரிசா இருக்குது… அதுதான்…’
‘கலவரத்துக்குப் பிறகு இப்ப இயக்கத்துக்கு நிறையச் சனம் வருகுதாம். அதால முகாங்கள் இப்பிடித்தானே இருக்கும். இதைவிட வேறை முகாங்கள் வேறை வேறை இடங்களில இருக்குது எண்டு ஒபிசில கதைச்சாங்கள். இந்த முகாங்களில ஒண்டு தேனீ எண்ட இடத்தில இருக்குதாம். அதுதானாம் எல்லா முகாங்களிலும் நல்ல முகாமாம். அங்க போனாப் பெரிய அதிஸ்ரம் எண்டு கதைச்சாங்கள். அனேகமா எல்லாருக்கும் தொடக்கம் இங்கதானாம். பிறகுதானாம் வேறை வேறை முகாங்களுக்கு அனுப்புவாங்களாம்.’
‘இவ்வளவு விசயம் நீ தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்.’
‘அப்ப நீ என்ன செய்தாய்?’
‘நான் அங்க இருந்த ஒரு புத்தகத்தை வாசிச்சுக் கொண்டு இருந்ததில நேரம் போயிட்டுது. உன்னோடைதான் இடைக்கிடை கதைச்சன்.’
‘ஓ அதை நானும் பார்த்தன்.’
‘பயிற்சி மட்டும் இல்லை. நிறைய அரசியலைப் பற்றியும் தெரிஞ்சு கொள்ள வேணும். அப்பதான் சனத்திற்கும் உண்மையான போராட்டத்தைப் பற்றி விளங்கப்படுத்திப் போராட்டத்தில பங்குகொள்ள வைக்கலாம். அப்பிடித்தான் உண்மையான மக்கள் போராட்டத்தை உருவாக்க முடியும். அதுதான் இலங்கைக்குச் சரியான போராட்டம் எண்டு தலைவர் தன்னுடைய பேச்சுக்களில, கட்டுரைகளில விபரிச்சு இருக்கிறார். எனக்கும் அவர் சொல்லுகிறதுதான் சரி எண்டு படுகுது.’
‘எனக்கு இது பெரிசா சரிவருமா எண்டு தெரிய இல்லை. மற்றவை இராணுவத் தாக்குதல் செய்யேக்க நாங்கள் அரசியல் கதைக்கிறதால சனத்திற்கு எங்களில எவ்வளவு பிடிப்பு வரும் எண்டு ஒரு கேள்வி இருக்குது. சினிமாப் பார்த்துப் பழகிப்போன சனத்திற்குக் கொஞ்சம் வீரசாகசங்கள் தேவைப்படுகுது. எல்லாம் சுடச்சுட உடனடியாக நடக்க வேணும் எண்டு சனங்கள் எதிர்பார்க்குங்கள். அதை நிறைவேற்றாட்டி அதை நிறைவேற்றுறவைக்குத் தங்களின்ரை சப்போட்டைக் குடுக்கப் போகுதுகள். சனத்தின்ரை சப்போட் யாருக்கு இருக்குதோ அவையாலதான் நிண்டுபிடிச்சுப் போரட முடியும்.’
‘நீ சொல்லுகிறது சனத்தின்ரை உண்மையான பங்களிப்பு இல்லை. அது வெறும் ஆரவாரம் மட்டும்தான். வெறும் ஆரவாரம் நல்ல போராட்டத்திற்கான வழியாய் இருக்காது. போராட்டத்திற்கு மக்களின் பங்களிப்பு மிக முக்கிமானது எண்டுகிறது என்னுடைய அவிப்பிராயம்.’
‘நீ சொல்லுகிறதிலும் விசயம் இருக்குது. ஆனா தத்துவம் பேசிப் பேசி யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல் விட்டிடக்கூடாது எண்டதையும் ஞாபகம் வைச்சிருக்க வேணும்.’

அவர்களின் கதை தொடர முடியாதவாறு வாகனத்தின் முன்னிருக்கையில் இருந்து இறங்கி வந்த சுருள் முடிக்காரர் அனைவரையும் பார்த்து,
‘கெதியா இறங்குங்க. இறங்கி லையினா நில்லுங்க. பொறுப்பாளர் வந்து நீங்கள் என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுவார்.’
அதையடுத்து எல்லோரும் பரபரப்பாய் இறங்கி நிரையாக நின்றார்கள். சிறிது நேரம் எல்லோரும் அப்படியே நிரையாகக் காத்துக் கொண்டு நிற்க வேண்டியது ஆகிவிட்டது. பலருக்கும் அது சலிப்பைத் தந்தது. ஆனால் வேறு எதுவும் செய்ய முடியாது என்பதால் தொடர்ந்தும் அமைதி காத்தார்கள். பாரவூர்தியும் அதனோடு வந்த இருவரும் இவர்களை விட்டு விலகி வடக்குப் பக்கமாக இருந்த களஞ்சியக் குடிலை நோக்கி நகர்ந்தனர். அதற்குள்ளேயே பொறுப்பாளரின் அலுவலகமும் இருந்தது. பொறுப்பாளர் சிறிது நேரம் வந்த அந்த இருவரோடும் கதைத்தார். அவர்கள் கொடுத்த பட்டியலையும் வாங்கிப் பார்த்தார். அதைக் கண்ணனால் கவனிக்க முடிந்தது. சிறிது நேரத்தின் பின்பு கழகச் சீருடையோடு முகம் பொறுப்பாளர் இவர்களை நோக்கி வந்தார். அவரோடு மேலும் ஒருவரும் வந்தார்.
முகாம் பொறுப்பாளரைப் பார்க்கச் சுமனுக்குச் சற்றுப் பயமாக இருந்தது. அவர் கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருப்பார். கண்கள் ஏனோ உலையால் வந்த இரும்பாகச் சிவந்திருந்தன. முகத்தில் ஒருவித விறைப்பு அப்பி இருந்தது. அந்தச் சிவப்பான கண்களின் ஒளி நெஞ்சைப் பிளப்பதான கூர்மையோடு பாய்ந்தது. அவர் கழகத்தின் சீருடையோடு தொப்பியும் அணிந்து இருந்தார். எல்லோரையும் மீண்டும் மீண்டும் துளைப்பது போலப் பார்த்தார். அது பலருக்கும் ஒருவித நடுக்கத்தைக் கொடுத்தது.
வந்தவர்கள் கட்டளையிட நின்றவர்கள் மேலும் விறைப்பாக நின்றார்கள். பின்பு அதைத் தளர்த்திய முகாம் பொறுப்பாளர் தனது பெயரைக் கூறிவிட்டு ஒவ்வொருவருடைய பெயரையும் கேட்டு அறிந்தார். அப்போது அவர் கைகளைக் குலுக்கி கண்களை மிகவும் கூர்மையாகப் பார்த்தார். அவரின் பார்வை பலரைச் சங்கடப்படுத்தியது. பின்பு முகாம் பொறுப்பாளர் இவர்களை விட்டுப் புறப்பட்டார். போகும் போது,
‘இவர்தான் உங்களுடைய முதன்மைப் பயிற்சி ஆசிரியர். இவர் பெயர் பாண்டியன். உங்களுக்கு இவர் முகாமைச் சுற்றிக் காட்டுகிறதோடு முகாமின்ரை நடைமுறையைப் பற்றி விபரமாய் சொல்லுவார். ஒண்டை மாத்திரம் நீங்கள் நல்லாய் ஞாபகம் வைச்சிருக்க வேணும். இயக்கத்தில பயிற்சிகள் கடுமையாக இருக்கலாம். இங்க நிச்சயம் சொகுசாய் வாழ முடியாமல் இருக்கும். என்ன கஸ்ரமாய் இருந்தாலும் எப்பவும் நீங்கள் இயக்கத்திற்கும், விடுதலைக்கும் விசுவாசமாய் இருக்க வேணும். அதில யாராவது தப்புப் பண்ணினால் அதை நான் ஒருநாளும் மன்னிக்கமாட்டன். அதைக் கழகமும் ஒருநாளும் மன்னிக்க மாட்டுது. நாட்டு விடுதலை எண்டு வரேக்கையே எல்லாத்தையும் துறந்து, உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகத்தான் வந்து இருக்கிறம். அதில எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது. அதையும் மீறி அப்பிடிச் செய்தா அப்பிடியானவைக்கு நான் எந்த ஈன இரக்கமும் காட்டமாட்டன். எல்லாருக்கும் இது நல்லா விளங்குதா?’
‘ஓம்… ஓம்…’
என்று பலரிடம் இருந்து ஒத்த குரல் வந்தது. கண்ணனிடம் இருந்தும் அந்தக் குரல் பலமாக வந்தது. அவர் எல்லோரையும் பார்த்துத் திருப்தியாகப் புன்னகைத்தார். பின்பு பயிற்றுனரைப் பார்த்து,
‘பாண்டியன் நீங்கள் இனி எல்லாத்தையும் விபரமாய் சொல்லுங்க. அதோடை எங்க போய் குளிக்கிறது, எங்க வெளிக்குப் போகிறது எண்டு எல்லாத்தையும் விபரமாய் சொல்லுங்க.’
‘நான் விபரமாய் சொல்லுகிறன். நீங்க போங்க.’ என்றார் பாண்டியன்.
அவர் புறப்பட்டுச் சென்றார். பாண்டியன் பயிற்சியாளர்களைப் பார்த்து,
‘சரி. எல்லாரும் என்னோடை வாருங்க. முதல்ல முகாமைச் சுத்திப் பார்க்கலாம். அதோடை நீங்கள் தங்க வேண்டிய இடத்தில உங்கடை உடைமைகளை வைச்சிட்டு தொடர்ந்து முழுமையாக முகாமைச் சுற்றிப் பாக்கிறதோடை இங்க எப்பிடி எல்லாம் நீங்கள் இருக்க வேணும் எண்டதை எல்லாம் விபரமாய் சொல்லுகிறன்.’
அவர் கூறிவிட்டு முன்னே நடக்க அவர் பின்னே பயிற்சியாளார்கள் தொடர்ந்தார்கள். கண்ணனும் அவர்களோடு நடக்கத் தொடங்கினான். அப்போது நினைவு வந்தவனாய் சுமனைப் பார்த்தான். அவனும் அவர்களோடு சேர்ந்து வந்தாலும் ஏதோ களையிழந்து உற்சாகம் குறைந்தவன் போல அவன் தோற்றம் இருந்தது. வெக்கையாலும் தாகத்தாலும் அவன் அப்படி இருக்கலாம் என்று எண்ணியவன்,
‘என்ன சுமன் எல்லாம் ஓகேயா?’
‘ஏதோ நிறையச் சொல்லுகினம். அதுதான் யோசினை.’
‘முகாம் எண்டா அப்பிடித்தானே இருக்கும். விடுதலைக்கு எண்டு வந்தா அதிகமான எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. அதிகமான எதிர்பார்ப்பு இருந்தா விடுதலைக்கான அக்கறையும், அர்ப்பணிப்பும் இல்லாமல் போயிடும். அதால எதுக்கும் நாங்கள் எங்களைத் தாயார் செய்து கொள்ள வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.’
‘ம்… விட்டா நீயே இப்ப பிரச்சாரம் செய்வாய் போல இருக்குது. நீ நல்ல தெளிவோடைதான் இருக்கிறாய்.’
‘நான் மட்டும் இல்லை. எல்லாரும் அப்படித்தான் இருக்க வேணும். விடுதலை எண்டு வெளிக்கிட்ட பிறகு இனி அதில எந்தத் தடுமாற்றமோ, தயக்கமோ இருக்கக் கூடாது.’

தொடரும்…

சதை உண்ணும்…

இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு கடந்த வருடங்கள் போல் அல்லவே அல்ல என்பது புறநடை அல்லவே என்பதாகிவிட்டது. அது இயற்கையின் இயல்பிற்குத் தலைகீழாக்கப் போயிற்று. உலகு இன்று அனலாகக் கொதிக்கிறது. இந்த உலகு மனிதர்களின் செய்கைகளால் கொதிக்கிறது என்பதைப் பலர் நம்புகிறார்கள். சிலர் அதை இன்றும் நம்ப மறுக்கிறார்கள். மனித அறிவை, ஆராய்ச்சியை இன்றும் கேள்வி கேட்காது நம்பும் அளவிற்கு அவை விருத்தி அடையவில்லை என்பதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கலாம். எது எப்படியோ உலகு கொதிப்பதை இந்தக் காலத்தில் வாழும் மனிதர்களால் நன்கு உணர முடியும். முடிந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத மனிதர்களும் உண்டு என்பது மறைக்க முடியாத உண்மை. இந்தியாவில் குடிப்பதற்கு நீரே கிடையாது குடங்களோடு தெருவில் நின்று அதற்காகப் போராடுகிறார்கள். வெக்கை தாங்காது புகையிரதத்தில் சென்றவர்கள் செத்து மடிகிறார்கள். இருந்தாலும் நோர்வேயில் வாழ்பவர்களுக்கு இப்போது எந்தவித எதிர்மறையான விளைவுகளும் இல்லை என்பதே ஆறுதலான உண்மை. அதற்கு மாறாக இங்கேயும் வெப்பமாக, அதை அனுபவிக்கும் தினமாக நாட்கள் பல தொடராக மலருகின்றன. அப்படி மலர்ந்த ஒரு நாளில் குமுதன் குடும்பம் திய்வ்கொல்மன் சென்று தீர்த்தமாடி வருவதாய் முடிவு செய்து இருந்தார்கள். குமுதன் குடும்பம் என்றால் ஆறு ஏழுபேர் கூட்டமாகச் செல்வார்கள் என்று எண்ணத் தேவையில்லை. அவர்கள் சராசரி நோர்வே மக்களைவிடச் சிக்கனமான குடும்பம். குமுதனுக்கு அன்பான, அழகான மனைவி உள்ளாள். அவளுக்கு றஞ்சிதா என்று பெயர். அவனது செல்வ மகனுக்கு அபின் என்று பெயர். உண்மையில் இந்தத் தீர்த்த திருவிழா அவரை எண்ணியே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீர்த்தமாடிப் அத்தோடு அங்கேயே உணவு வாட்டிச் சாப்பிட்ட பின்பு ஆறுதலாக மலையே வீட்டிற்குத் திரும்பி வருவதாக அவர்களது திட்டம். திட்டமிட்டால் பின்வாங்குவது குமுதனின் அல்லது ரஞ்சிதாவின் வழக்கம் இல்லை. அவர்கள் தேவையான பொருட்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
தோலில் சூடு சுள்ளிடும் அளவிற்கு அன்று சூரியனின் வெள்ளிக் கதிர்களின் தனது வீரவிளையாட்டை நடத்திக் கொண்டு இருந்தது. சென்ற உடனேயே ஒரு முறை குமுதனும் அபினும் ஓடிச் சென்று கடலில் மூழ்கிக், கழித்துக் குளித்து வந்தார்கள். அதற்கு இடையில் ரஞ்சிதா அடுப்பு மூட்டி உணவு வாட்டத் தயார் செய்து இருந்தாள். அத்தோடு வர்த்தகப் பழத்தைத் துண்டு துண்டாக வெட்டுவதற்குக் கத்தியும் எடுத்து வந்ததிருந்தாள். அதை அப்போதே வெட்ட வேண்டும் என்று எண்ணியவள் அதை மாற்றிக் கொண்டு சாப்பிட்ட பின்பு இறுதியாக வெட்டலாம் என்று எண்ணினாள். ஆனால் அந்தக் கத்தியை அபின் கண்டு விட்டு அதை எடுத்து வர்த்தகப் பழத்தைத் தான் வெட்டுவதற்கு முயற்சி செய்தான். இறைச்சி வாட்டும் அக்கறையிலிருந்த ரஞ்சிதாவும், குமுதனும் அதைப் பின்பு கவனிக்கவில்லை. அரன் கத்தியோடு விளையாடிக் கொண்டு இருந்தவன் திடீரென வீரிட்டு அழுதான். அப்பொழுதே அவன் கத்தியை வைத்து விளையாடியதை அவர்கள் முற்றாக மறந்து போனது அவர்களுக்கு விளங்கியது. அவன் அந்தக் கத்தியால் கட்டை விரலில் வெட்டி, அதனால் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அதைக் கண்ட குமுதன் பாய்ந்து அடித்து அவனது விரல்களை அழுத்திப் பிடித்துக் கையை உயர்த்திப் பிடித்தான். அரன் அப்படியும் அழுது கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் இரத்த ஓட்டம் நின்றுவிட்டது. ஆனாலும் காயம் பாலைவன நிலம் போலச் சிவப்பாக வெடித்துக் கிடந்தது.
முதலுதவிப் பெட்டியைக் கொண்டு வந்து இருக்க வேண்டும். அதைக் கொண்டு வராததால் அவனது விரலுக்குக் கட்டுப்போட முடியவில்லை. இரத்த போக்கு ஒருவாறு நின்று போயிற்று. அதனால் அவன் காயத்தைப் பற்றி மறந்து போய் இருந்தான். அதைப் பற்றித் தேவையில்லாது ஏன் ஞாபகப்படுத்த வேண்டும் என்று ரஞ்சிதாவும் எதுவும் பேசாது இருந்தாள். அரனால் சும்மா இருக்க முடியவில்லை. அவன் குமுதனை மீண்டும் நீராட வருமாறு அழைத்தான். குமுதனுக்கு அவன் சந்தோசமே முக்கியமாக இருந்தது. அதனால் அவன் அவனை அழைத்துக் கொண்டு நீராடச் சென்றான். அங்கே சென்ற பின்பு முதலில் காயம் எரிவதாகப் புகார் செய்தவன் சிறிது நேரத்தில் அதை மறந்து சந்தோசமாக நீராடினான். அவனது சந்தோசத்தைப் பார்க்கப் பார்க்க குமுதனுக்குப் பூரிப்பாய் இருந்தது. விளையாட்டும் நீச்சலுமாக நேரம் விரைவாகச் சென்றது. அத்தோடு பசிக்கவும் தொடங்கியது. மீண்டும் திரும்பி வந்த போது இறைச்சி வாட்டப்பட்டுத் தயாராக இருந்தது. அவர்கள் வந்த உடனேயே சுடச் சுட அதை ரஞ்சிதா பரிமாறினாள்.   அதைக் குமுதன் வாங்கிச் சாப்பிட்ட அளவிற்கு ஆர்வமாக அரன் வாங்கிச் சாப்பிடவில்லை. விளையாட்டுப் புத்தி என்று எண்ணிய ரஞ்சிதா அவனைக் கட்டாயப்படுத்தி ஊட்டினாள். சிறிது சாப்பிட்டவன் அதை வாந்தியாக வெளியே எடுத்தான். அதைப் பார்த்த ரஞ்சிதாவுக்குக் கவலையாக இருந்தது. அவள் குமுதனைப் பார்த்து,
‘என்னப்பா இவன் கடல் தண்ணியைக் குடிச்சிட்டானே? சாப்பிடுகிறானும் இல்லைச்… தெண்டிச்சுச் சாப்பிட்ட வைச்சதையும் சத்தி எடுத்துப்போட்டான்.’
‘அப்பிடி அவன் தண்ணி குடிச்ச மாதிரி இல்லையே. ஏன் சத்தி எடுத்தான் எண்டு தெரியேல்ல. கொஞ்சம் விளையாடினான் எண்டாச் சரியாகீடும்.’
‘அவன் குளிச்சது காணும்… நாங்கள் கொஞ்சம் வெள்ளன வீட்டை போவம்.’
‘ம்…. நீ சொல்லுகிறதும் சரிதான்.’ என்றவன் அரனைப் பார்த்து,
‘இங்க வா அரண்.’ என்று கூப்பிட்டான்.

‘என்னப்பா…?’ என்ற வண்ணம் அரண் அங்கே வந்தான். வந்தவன் குமுதனின் மடியிலிருந்தான். இருந்தவனின் மேலில் எதேச்சையாக கை வைத்த போது அது அனலாகக் கொதிப்பதாக அவனுக்குத் தோன்றியது. வாந்தியும் எடுத்து இருக்கிறான் அத்தோடு மேலும் இப்படிக் கொதிக்கிறது என்றவுடன் அவனுக்கு சாதுவாகச் சஞ்சலம் தோன்றியது. அவனைப் பார்த்துக் கொண்டு இருந்த ரஞ்சிதாவுக்கும் அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் பயத்தை உண்டு பண்ணியது. அவள் தனது ஆதங்கத்தை அவனிடம் கேட்டாள்.
‘என்னப்பா யோசிக்கிறியள்? நீங்கள் ஒண்டும் பேசாமல் இருக்கிறதைப் பார்க்கப் பயமா இருக்குது.’
‘உடம்பு கொதிக்குது. அதுதான் ஏன் எண்டு தெரிய இல்லை.’
‘அப்ப கெதியாப் போவமே அப்பா?’
‘ம்… அதுதான் நல்ல ஐடியா எண்டு நினைக்கிறன்.’
‘சரி அப்ப வெளிக்கிடுவம்.’
இருவரும் புறப்பட்டு வண்டியை நோக்கிச் சென்றார்கள்.

அரணின் நிலைமையை உணர்ந்து கொண்ட ரஞ்சிதா அவனை மடியில் வைத்துக் கொண்டு பின்னாசனத்தில் இருந்தாள். அரனின் மேல் இப்போது வெப்பமூட்டி போல் கொதித்தது. அவன் ஏதோ வேதனையால் அனுங்கத் தொடங்கிவிட்டான். ரஞ்சிதாவுக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாகவும் பயமாகவும் இருந்தது. அவள் அவனது கையை ஆசனத்திலிருந்து எடுத்து மடியில் வைத்தாள்.
‘அம்மா…’ என்று அரன் அலறினான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படி அழுகிறான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை. அவள் அவன் கையை மெதுவாகத் திருப்பிப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் காயம் இறைச்சி போல இல்லை அதைவிட ரோஜா நிறத்தில் சிவந்து இருந்ததோடு அதைச் சுற்றிய பகுதியிலும் அதன் தாக்கம் இருந்ததைக் கவனித்தாள். வெட்டுக்காயம் இப்படி மாறியதை அவள் இதுவரையும் கண்டதில்லை. அதைவிட அந்தக் காயத்தில் ஒரு இடத்தில் தசை கறுப்புப் புள்ளியாகத் தொடங்கி இருந்தது. ரஞ்சிதா அதைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே சில கணங்கள் எதுவும் பேசாது யோசித்துக் கொண்டு இருந்தாள். அவள் எதுவும் பேசாது இருப்பதைப் பார்த்த குமுதன்,
‘என்ன பேசாமல் இருக்கிறாய்? அவன் அனுங்கிறான்… அவனைப் பாரு…’
‘ஐயோ…. எனக்குத் தலை சுத்துகிறமாதிரி இருக்குது. அதோடை எனக்குப் பயமா இருக்குது?.’
‘என்ன ரஞ்சிதா… ஏன் அப்பிடிச் சொல்லுகிறாய்? என்னத்துக்கு இப்ப இப்பிடிப் பயப்படுகிறாய்?’
‘அவன்ரை கையை நீங்கள் பிறகு கவனிக்க இல்லையே? இது சாதாரண வெட்டுக் காயம் மாதிரித் தெரிய இல்லை. ஏதோ காயத்துக்குள்ளால விசம் ஏறுகிற மாதிரி வித்தியாசமாய் தெரியுது. ஓமப்பா அப்பிடித்தான் இருக்குது.’
‘அப்ப டொக்ரரிட்டைப் போவமே?’
‘போங்க. கெதியாப் போங்க.’
வண்டி பாதையை மாற்றி விரைவாகப் பயணித்தது. ஸ்தூர்காத்தாவில் இருக்கும் அந்த அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் செல்வதற்கு அரை மணித்தியாலம் தேவைப்பட்டது. அது இருவருக்கும் அரை யுகம் என்றால் அரனுக்கு ஒரு யுகமாக வேதனையில் கழிந்தது.
அங்கே சென்றதும் வண்டியை நிறுத்திவிட்டுக் குமுதன் அரனைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான். அவன் அப்படி ஓடியதால் வண்டிச் சாவியை எடுத்து அதற்குக் கட்டவேண்டிய தரிப்பிடப் பணத்தைக் கட்டித் துண்டை எடுத்து வைத்துவிட்டு ரஞ்சிதாவும் அவசரமாக உள்ளே ஓடினாள். குமுதன் ஓடிய அவசரத்தைப் பார்த்துவிட்டு ஒரு தாதி வந்து அரனைப் பார்த்தாள். அவன் அரனின் காயத்தைக் காட்டினான். அவள் அதை உற்றுப் பார்த்தாள். ஏனோ அவள் முகம் சட்டென மாறியதை அவனால் நன்கு அவதானிக்க முடிந்தது. அவள் உடனே சென்று மருத்துவரை அழைத்து வந்தாள். அவரும் அரனின் காயத்தைப் பார்த்தார். பின்பு உடனடியாக தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வரவழைத்தார். அத்தோடு ஏதோ மருந்தை இரத்த ஒட்டத்தில் செலுத்துவதற்குப் பொருத்தினார். அரன் தொடர்ந்தும் முனுகிக் கொண்டு கிடந்தான். அவர்கள் செய்வதை எல்லாம் பார்த்த குமுதனும், ரஞ்சிதாவும் எதுவும் விளங்காது திகைத்துப்போய் நின்றார்கள்.

அம்புலன்ஸ் வந்தது. ரஞ்சிதாவையும் அரனையும் அதில் ஏற்றி எங்கோ அனுப்பினார்கள். அதுவரையும் கதைப்பதற்கு நேரம் இல்லாது ஓடித் திரிந்த மருத்துவர் அப்போதுதான் குமுதனைப் பார்த்து,
‘மன்னிக்க வேண்டும். உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்லவே நேரம் கிடைக்கவில்லை. அவரது காயத்தின் ஊடாக இறைச்சி உண்ணும் பாக்டீரியா தாக்கி இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இப்போது அவரை றிக்ஸ்கொஸ்பிற்றல் அனுப்பி வைத்திருக்கிறேன். நீங்கள் அங்கே சென்று அவரைப் பாருங்கள். அங்கே மருத்துவர்கள் உங்களுக்கு மேற்கொண்டு விளக்கம் தருவார்கள். கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறேன். மன்னிக்க வேண்டும். எனக்கு நிறைய அலுவல்கள் இருக்கின்றன. நான் மேற்கொண்டு நோயாளிகளைக் கவனிக்க வேண்டும்.’
‘சரி.’ குமுதன் தலையை ஆட்டினான். அவனுக்கு உண்மையில் எதுவும் விளங்கவில்லை.
அதற்குமேல் அவன் அங்கே நிற்க விரும்பவில்லை. அவன் வண்டியை எடுத்துக் கொண்டு றிக்ஸ்கொஸ்பிற்றலுக்குச் சென்றான். அங்கே ரஞ்சிதா அவசர சத்திர சிகிச்சைப் பகுதிக்கு வெளியே இருந்த கதிரை ஒன்றில் மடியில் தலைவைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டு இருந்தாள். குமுதனுக்கு அது ஏன் என்று விளங்கவில்லை.  அவன் அருகில் சென்று அவள் தலையை மெதுவாகத் தடவினாள். நிமிர்ந்தவள் அவனைக் கட்டிப் பிடித்து ஓவென்று சத்தமாகக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். குமுதன் அவள் வாயை முதலில் பொத்தினான். எதுவும் விளங்காது அவளை அணைத்த வண்ணம் சிறிது நேரம் இருந்தான். பின்பு அவளை இறுக்கி அணைத்தபடியே,
‘எதுக்கு இப்ப இப்பிடி அழுகிறாய்? எல்லாம் சரியாகீடும். நீ பயப்பிடாதை.’ என்றான்.
‘சரியாகாது அப்பா.’
‘ஏன் அப்பிடிச் சொல்லுகிறா?’
‘கை எழுத்து வாங்கிக் கொண்டு போயிட்டாங்கள். விரலை எடுக்க வேணுமாம்.’
அவள் குரல் எடுத்து மீண்டும் அழுதாள். அவன்  திடீரென மயங்கி நிலத்தில் விழுந்தான்.

%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this:
%d bloggers like this: