சந்திரமதிக்கு காசு எந்த வழியில் வந்தாலும் பறுவாய் இல்லை பொருளோடு சுகமாக வாழ வேண்டும் என்கின்ற ஆசை. இல்லை… பேராசை என்று சொல்லலாம். ஊரில் அவள் குடும்பம் பொருளற்று, பணமற்று, சுகமிழந்து வாழ்ந்த காலம் இங்கே வந்த பின்பு கழிந்தாலும், அவள் அனுபவித்த வறுமையின் கழியாத நினைவு போதாது போதாது என்கின்ற எண்ணத்தை ஓயாது ஓயாது அடுக்கேற்றம் போல ஏற்றிக்கொண்டே சென்றது. பற்குணனுக்கு அரிச்சந்திரன் போல வாழ வேண்டும் என்கின்ற கொள்கை. இருந்தும் தனக்கு வாய்த்த சந்திரமதி அதற்கு எதிராகக் கொடி பிடிப்பது அவனை எப்போதும் வருத்தும். தமிழ்ச் சமுக மரபின்படி சந்திரமதியின் மூக்கணாம் கயிறு அவனிடம் இருந்தது. அவளது நினைவுகளுக்கு நிரந்தரமாக அகலிகையின் சாபம் கிடைத்தது போல பற்குணனின் பிடி இறுகி இருக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். விரும்பியவை முழுமையாக அவனுக்கு அருளப்படாவிட்டாலும் கனதியான அதிகாரம் அவன் கைவசப்பட்டது. கடன் என்னும் மூழ்கும் கப்பலில் குடும்பம் பயணம் செய்யக்கூடாது என்பதே அவன் பதைபதைப்பும், குறிக்கோளும்.

அன்று இந்த நவீன சந்திரமதியான சந்திராவை அழைத்துக் கொண்டு Alnabru என்கின்ற இடத்தில் இருக்கின்ற OBS கடைக்குச் சென்றான். அந்தக் கடைக்குப் பக்கத்தில் Power என்கின்ற இல்லப் பயன்பொருள்கள் கடையும் இருக்கிறது. அதற்குள் போக வேண்டும் என்று சந்திரா குழந்தைப் பிள்ளையாகி பற்குணனின் மேலங்கியைப் பிடித்த வண்ணம் அடம்பிடித்தாள். அவள் இப்படி அடம்பிடிப்பதும் அதைச் சமாளிப்பதும் பற்குணனுக்கு பழகிப்போன விஷயம். அவன் அவளிடம் காரணம் கேட்டபோது அந்தக் கடையில் Kenwood சமையலறை இயந்திரம் மலிவு விற்பனையில் போவதாகவும், அதை வாங்க வேண்டும் என்பதாகவும் கூறினாள். அது தரமான இயந்திரம். அதற்கு நான்காயிரம் குரோனர்கள் தேவைப்படும் என்பது பற்குணனுக்கு விளங்கியது. அவனிடம் அதற்குக் கையிருப்பு போதுமானதாக இருக்கவில்லை. அவன் அவளுக்கு அதை விளங்கப்படுத்தினான். அதை அவள் கேட்பதாக இல்லை. கடன் அட்டையைப் பாவித்து என்றாலும் வாங்க வேண்டும் என்றாள். கடன் அட்டையில் பொருட்கள் வாங்குவது பற்குணனின் கொள்கைக்கு ஒத்துப் போகாத விடயம். அது இரவல் பணத்தில் சுகம் அனுபவிக்கும் சூதாட்டம் என்பது அவனது உறுதியான நம்பிக்கை.
அரிச்சந்திரனின் கொள்கை மாறாது என்பதை அறிந்த பின்பு கவலையோடு மீன் மற்றும் உலர் பொருட்கள் விற்பனையாகும் OBS பல்லங்காடிக்குள் பற்குணன் பின்னே இழுபட்டுச் சென்றாள். பற்குணனுக்கு கடையில் நிற்பவர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பது போல இருந்தது. அவள் தொடர்ந்தும் கடையில் வாயைத் திறவாது தனது கோபத்தைக் காட்டினாள். வீட்டிற்குத் திரும்பி வரும்போது திடீரென ‘எனக்கு ஒரு யோசினை வருகுதப்பா’ என்று திருவாய் மலர்ந்து ஒரு புதிய குண்டைத் தூக்கிப் போடத் தயாரானாள். அதைக் கேட்டதுமே பற்குணன் நடுங்கிப் போய்விட்டான். தனது கொள்கைக்கு எதிராக மீண்டும் எதைச் சொல்லப் போகிறாளோ என்று அவசரமாக, அந்தரங்கமாக, சமாளிப்பதற்கு தனக்குள் மதியூகம் நடத்தினான்.
பதில் சொல்லாது ஏதோ யோசித்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்துவதைப் பார்க்கச் சந்திரா என்கின்ற சந்திரமதிக்கு எரிச்சலாக இருந்தது. அதை அடக்கிய வண்ணம், ‘என்னப்பா என்ன எண்டு கேள்க மாட்டியளே?’ என்றாள். வேறு வழி இன்றி ‘கேள்கிறன் சொல்லு’ என்றான் பற்குணன். ‘வசதிகள் எங்களைத் தேடி வராதப்பா. நாங்கள்தான் அதைத் தேடிக் கண்டுபிடிச்சு கைப்பற்ற வேணும். எங்களிட்ட இருக்கிறதை வைச்சே அதை அடையலாம். அதுக்கு கொஞ்சம் யோசிச்சால் சரியப்பா’ என்றாள். இவளும் மதியூகி ஆகிவிட்டாளே என்கின்ற யதார்த்தம் அவனைக் கதி கலங்க வைத்தது. இந்த மதியூகியைக் கேட்டால் நன்மை விளையுமா கேட்காவிட்டால் நன்மை விளையுமா என்பது அவனுக்கு விளங்கவில்லை. தமக்குத் தேவை வரும்போது மதியூகியாகும் மனிதர்கள் பலர் என்பது அவனுக்குத் தெரியும். அவன் அதைக் காட்டிக் கொள்ளாமல், ‘நீ என்ன சொல்ல வாறாய் எண்டதைத் தெளிவாச் சொல்லு சந்திரா’ என்றான். ‘நீங்கள் ஒண்டையும் கவனிக்கமாட்டியள் அப்பா. ஆனால் அதைச் செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது எண்டு அதுக்குச் சப்போட்டா உங்களுக்கு ஏற்ற தத்துவங்களை எடுத்து விடுவீங்கள்’ என்றாள். ‘தொணதொண எண்டு தலையைச் சுத்தி மூக்கைத் தொடாத… விஷயத்தை நேரடியாச் சொல்லு’ என்றான் பற்குணன் கோபத்தோடு. ‘சரி… சரி… கோபப்படாதையுங்க. எத்தினபேர் வீடு வாங்கிற போதே பெரிசா வசதியா வாங்கி, அதில ஒரு பகுதியை வாடகைக்கு குடுத்து, வரியில்லாத பணம் சம்பாதிச்சு சுகமா வாழுகினம். அதைப் பார்த்தாவது நாங்களும் ஏதாவது செய்தால் இப்பிடி நாலாயிரத்துக்கு யோசிச்சுகொண்டு இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லையெல்லே’ என்றாள்.
பற்குணனுக்கு அவள் சொல்வது புதிய கீதா உபதேசம் போலப் பட்டது. இது சட்டத்திற்கு ஏற்பானதோடு அதில் வரி இல்லாத வருமானமும் கிடைக்கும் என்பது விளங்கியது. அப்படியான வீடு வாங்குவது என்றால் இருக்கும் கடனைப் பெருப்பிக்க வேண்டும். அது சிறு சுமை என்றாலும் அதனால் வரும் வருவாயில் அதற்கான கட்டுக்காசும் செலுத்தி ஒரு தொகை செலவிற்கும் எடுக்கலாம் என்பது தெளிவாகியது. அதை வைத்து சந்திராவின் வாயை அடைத்தால் நிம்மதி கிடைக்கலாம் என்று நம்பினான்.
வீடு வாடகைக்குக் கொடுப்பதில் சிக்கல்கள் வரலாம் என்பதை அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் வேலை செய்யும் பாடசாலையின் அதிபர் தனது அனுபவத்தை இளைப்பாறும் அறையில் பகிரும் போது அருகே இருந்து கேட்டிருக்கிறான். அவர் தவறுதலாகப் போதை வஸ்துப் பாவிக்கும் நபருக்குக் கொடுத்துவிட்டு அவனை வெளியேற்றப் பட்டபாடு, பின்பு அதைத் திருத்துவதற்குச் செலவழித்த பணம், அதனால் வந்த நஷ்டம் என்பதை அரை மணித்தியாலமாய் கவலையோடு பிரஸ்தாபித்துக்கொண்டு இருப்பதைக் கேட்டிருக்கிறான். அவருக்கு நேர்ந்தால் தங்களுக்கும் அப்படி நடக்க வேண்டுமா என்று பற்குணன் அதற்குச் சமாதானம் சொல்லிக்கொண்டான்.
*
சில காலத்தில் தற்போது வைத்திருந்த வீட்டை விற்றுவிட்டு பிறின்சென்ங் என்னும் இடத்தில் இருக்கும் பல்லங்காடிக்குப் பக்கத்தில் புதிதாகக் கட்டிய கட்டடத் தொகுதி ஒன்றில் தமக்கான வசந்த மாளிகையை வாங்கி விமர்சையாகக் குடிபுகுந்தனர். அதற்கு மூன்று படுக்கை அறைகளோடு கூடிய பிரதான வீடு எழுபத்து ஐந்து சதுர மீற்றரிலும், வாடகைக்குக் கொடுக்கும் ஒரு துணை வீடு இருபத்து நான்கு சதுர மீற்றரிலும் இருந்தன. இரண்டு வீட்டிற்கும் தனித்தனியான கதவுகள் உண்டு. அந்த இரண்டு கதவுகளையும் உள்ளடக்கியதாகப் பிரதான கதவு அமைந்திருந்தது.
அதிலிருந்து வீட்டுக்காரர் திரு பற்குணன் தனது தொழிலைப் பொறுப்போடு ஆரம்பித்தார்.
முதலில் டூரோ என்னும் Italy-ஐச் சார்ந்த நபர் வாடகைக்கு விண்ணப்பித்தான். வீடு பார்க்க வந்தபோதே அவனை முதலில் பற்குணன் பார்த்தான். தலை, தாடி, மீசை என்பனவற்றை மொத்தமாக வழித்து புத்தத் துறவிபோல காட்சி தந்தான். அவன் ஐந்தடி ஐந்து அங்குலம் இருப்பான். அணில் போன்று மிதந்து நின்ற முன்வாய்ப் பற்கள். நீலநிறத்தில் சட்டையும் ஜீன்சும் அணிந்திருந்தான்.
முதலில் ஒரு வீட்டில் கூட்டாகச் சேர்ந்து வாழ்ந்ததாகவும் (ஒரு வீட்டில் இருக்கும் பல அறைகளைப் பல நபர்கள் வாடகைக்கு எடுத்திருப்பார்கள். சமையல் அறை, குழியல் அறை, வாழ்க்கை அறை ஆகியவை அனைவரும் பகிர்ந்து கொள்வதாக இருக்கும்) அது தனக்கு வசதியாக அமையவில்லை என்றும், தனக்கே உரியதாகச் சமையல் அறை, குழியல் அறை, வாழ்க்கை அறை இருக்கும் குடியிருப்பு வேண்டும் என்பதால் இப்படியான வீட்டில் வாசிக்க விரும்புவதாய் பற்குணனிற்கு விளக்கம் கொடுத்தான்.
முதல் வீட்டில் கூட்டாக வாழ்ந்ததால் இவன் எப்படி வீட்டை வைத்திருப்பான் என்பதை அறியச் சரியான தகவல்களைப் பெறமுடியாது என்பது பற்குணனுக்கு விளங்கியது. பற்குணன் முதல் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரனின் அலைபேசி எண்ணை விண்ணப்பத்தில் இணைக்குமாறு கூறினான். அத்தோடு முன்பணமாக இருபத்தி நான்காயிரமும் முதல் மாத வாடகை எட்டாயிரமும் செலுத்தப் பணம் இருக்கிறதா என்று கேட்டான். அவன் அனைத்தும் தயாராக இருக்கிறது என்றான். அதன் பின்பு தனக்குப் படுக்கும் சோபா வேண்டும் என்றான். தன்னிடம் அப்படிப் படுக்கும் சோபா இருப்பதால் தானே கொண்டு வந்து அதைப் போடுவதாய் கூறினான். பற்குணன் மற்றைய தளபாடங்கள் வாங்கி இருந்தாலும் கட்டில் மாத்திரம் வாங்காது தாமதித்தது சிரி என்று தனக்குள் பெருமையாக எண்ணிக் கொண்டான்.
வாடகை ஒப்பந்தம் இணை நிறுவனப் பக்கம் ஒன்றினூடாக நவீன முறையில் கைச்சாத்தானது. கையெழுத்து வைக்காது வங்கி அடையாளப்படுத்தும் முறை மூலம் அது நடந்தேறியது. அத்தோடு குடியேறியதற்கான பதிவும் உருவாக்கப்பட்டு வங்கி அடையாளப்படுத்தும் முறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. முதல் வாடகைக்காரன் நல்லவனாக இருக்கிறான் எனச் சந்திரா புகழ் பாடினாள்.
வாடகைப் பணத்தில் கட்டுக்காசுக்கு ஒரு பகுதியைக் கட்டிவிட்டு மீதத்தைச் செலவழிப்பது சந்திராவுக்கும் பற்குணனுக்கும் ஒருவித பொருளாதார சுதந்திரத்தைக் கொடுத்தது. அதில் தங்களுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் சுற்றுப்பிரயாணங்கள் செய்வதற்கு வசதி கிடைத்த மகிழ்வு அவர்களை மேலும் ஊக்கமூட்டியது. அதனால் உந்தப்பட்ட சந்திரா வீட்டில் இருக்கும் அறையை வாடகைக்கு விட்டால் என்ன என்று கேட்டாள். ‘உன்ர பேராசைக்குக் கொள்ளி வைக்க’ என்று பற்குணன் துள்ளிய துள்ளலில் அவள் அடங்கிப்போனாள். பணம் மட்டும் நிம்மதி தருவதில்லை என்பதில் பற்குணன் தெளிவாக இருந்தான். பணம் மட்டுமே நிம்மதி தரும் என்பதில் சந்திரா பிடிவாதமாக இருந்தாள். இருந்தும் சில விட்டுக் கொடுப்புகளோடு அவர்கள் குடும்ப வண்டி நகர்ந்துகொண்டு இருந்தது.
டூரோ பிரச்சனை இல்லாது இருப்பதைப் பார்த்த பற்குணன் இப்படி என்றால் இவன் எவ்வளவு காலமும் குடியிருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுது, தனக்கு நகரத்துக்குள் இருப்பது பிடிக்கவில்லை என்றும், தான் நகரத்துக்கு வெளியே குடியிருக்கப் போவதாகவும், அதற்கு அனுமதி அளிக்க முடியுமா என்று பற்குணனிடம் ஒரு நாள் கேட்டான். பொதுவாக வாடகை வீட்டை காலி செய்து வெளியேறுவது என்றால் மூன்று மாதத்திற்கு முன்பே அறிவித்தல் கொடுக்க வேண்டும். அவன் அடுத்த மாதமே வெளியேற வேண்டும் என்று கேட்டபோது முதலில் என்ன செய்ய வேண்டும் என்று பற்குணனுக்கு விளங்கவில்லை. இருந்தும் பணத்தைவிட மனிதர்களே முக்கியம் என்கின்ற தனது கொள்கைக்கு ஏற்ப அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதமே வெளியேற அனுமதித்தான். அதன்படி வெளியேறுவதற்கான படிவமும் வங்கி அடையாளப்படுத்தும் முறை மூலம் உறுதி செய்யப்பட்டது.
மீண்டும் வாடகைக்கு வீடு இருப்பதாக இணையத்தில் விளம்பரம் கொடுத்ததால் பலர் அலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அதிபர் அன்று ஒரு நாள் பற்குணனோடு கதைக்கும் பொழுது பற்குணன் தான் வாடகைக்கு வீடு கொடுப்பது பற்றிப் பிரஸ்தாபித்தான். அப்போது அவர் ஆண்களைவிடப் பெண்களுக்கு கொடுப்பதே மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லி வைத்தார். அதைப் பற்குணன் நம்பினான். அதிலிருந்து அவனது பட்டியலில் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்றாகியது. பெண்களில் சுதேசப் பெண்கள் வெளிநாட்டவரிடம் வாடகைக்கு வருவதற்குப் பொதுவாக விரும்புவதில்லை. இப்படியாகப் பற்குணனின் வாடிக்கையாளர்கள் குறைந்தாலும் பெண் என்றாலே வீட்டைச் சேதப்படுத்தாது பார்த்துக் கொள்வாள் என்று எண்ணியவன், இனி கொடுப்பது என்றால் ஒரு பெண்ணிற்கே கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.
அப்பிடியாக பற்குணன் நினைத்தது போல வந்து பார்த்துவிட்டுச் சென்ற சில பெண்கள் காட்டில் தொலைந்த கட்டெறும்பாய் பதில் அளிக்கவில்லை. சலிப்பு ஏற்பட்டாலும் பற்குணன் நம்பிக்கையோடு இருந்தான். ஒரு நாள் எத்தியோப்பியா நாட்டைச் சார்ந்த கிளியோபாற்றா வீட்டைப் பார்க்க வேண்டும் என்று பற்குணனிடம் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூறிவிட்டு வீடு பார்க்க வந்தாள்.
வழமையான ஆப்பிரிக்கப் பெண்கள் போலச் சுருண்டு, தலையோடு ஒட்டிய கேசம் அல்ல அவளுக்கு. சுருண்டு இருந்தாலும் சடைத்த கேசமாக மெல்லிய கம்பிகள் போலத் தலையை அடர்த்தியாக நிறைத்து இருந்தது. அதை ஒருவாறு வழித்து இழுத்துக் கட்டியிருந்தாள். அந்தக் கம்பிச் சடை இயற்கையா அல்லது செயற்கையா என்கின்ற தடுமாற்றத்தை தரவல்லதாகியது. அவனுக்கு அதைத் தொட்டுப் பார்த்தால் என்ன என்கின்ற எண்ணம்கூட ஏற்பட்டது. கிளியோபாற்றாவுக்கும் இப்படித்தான் கேசம் இருந்திருக்குமா என்கின்ற கேள்வி பிறந்தது. பற்குணனின் தோள்மூட்டைத் தாண்டா முடியாத ஐந்தடி உயரம். பருமனாக இருந்தாலும் பெண்ணிற்கான வடிவம் மாறாத உடல். வெள்ளைச் சுவரில் கறுப்பில் பொட்டு வைத்தது போன்ற கண்கள். அரியதரம் போன்ற தட்டை மூக்கு. தனது பெயர் கெடாஸ் என்றாள்.
வீட்டைக் காட்டிய உடன் கிளியோபாற்றா கெஞ்சும் குரலில் தான் இப்போதே குடிவர வேண்டும் என்றாள். பற்குணன் வீடு வாடகைக்கு எடுப்பது என்றால் அவள் என்ன செய்ய வேண்டும் என்று விபரமாகக் கூறினான். அவளுக்கு அது சட்டென்று பற்றிக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றாக அவளுக்கு விளங்கப்படுத்த வேண்டி இருந்தது.
வீட்டிற்குக் குடிவந்த காலத்திலிருந்து அடுப்பை இயக்குவது எப்படி? துணி கழுவும் இயந்திரத்தை இயக்குவது எப்பிடி? வெப்பமூட்டியை இயக்குவது எப்பிடி? அலைபேசியில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவது எப்பிடி? என்பதாகப் பல எப்படிகள் அவளிடம் புழுத்தன.
ஒருநாள் கழிவு நீர்க் குழாயால் கழிவுநீர் இறங்கவில்லை என்று அலைபேசியில் தொடர்பு கொண்டாள். வீட்டில் குழியல் அறை கழிவுநீர்க் குழாய், சமையல் அறை கழிவுநீர்க் குழாய், என்று எங்கும் அடைப்பு என்பதே சர்வமயமாக இருந்தது. பற்குணன் ஒவ்வொன்றாக அதைத் திறந்து துப்பரவு செய்தான். கிருஷ்ண பரமாத்மா திரௌபதிக்குக் கொடுத்த சீலை போல அவள் தலைமயிரைக் கழிவுநீர்க் குழாய்களில் இருந்து இழுத்து இழுத்து துச்சாதனன் போலக் களைத்து வீழ்ந்து விடுவேனோ என்று பற்குணன் பயந்தான்.
ஒரு வருடம் குடியிருந்தவள் பின்பு வாடகை அதிகமாக இருப்பதால் தான் வேறு வீட்டிற்குப் போகப் போவதாக அலைபேசியில் தொடர்புகொண்டு கூறினாள். பற்குணன் அதை குறுஞ் செய்தியாக அனுப்பிவிடக் கூறினான். அவளும் அதற்கு இசைய ஒரு குறுஞ் செய்தியை அனுப்பிவிட்டாள்.
அதன் பின்பு பிள்ளை பிடிகாரரைப் போல அவன் வேறு வாடகைக்காரரைத் தேடத் தொடங்கினான். அதில் ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்த பின்பு கெடாஸ் அலைபேசியில் தொடர்புகொண்டு தான் தொடர்ந்தும் வீட்டில் குடியிருக்க விரும்புவதாகக் கூறினாள். அதற்கு அவன் ஏற்கனவே வேறு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும், அவள் கட்டாயம் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றும் கூறினான். அவளுக்குக் கட்டின புருசனைப் பிரியும் மனநிலை. இருந்தும் வேறு வழி இல்லையே என்கின்ற கவலை.
*
யூலியா ரஷ்யா நாட்டுக்காரி. ஒஸ்லோவில் கணக்காளராக வேலை செய்கிறாள். அவளுக்குத் துரண்கெய்ம் என்கின்ற நகரத்தில் வீடு இருக்கிறது. அதை வாடகைக்குக் கொடுத்துவிட்டு இங்கே வேலை கிடைத்ததால் வந்திருக்கிறாள். வந்த இடத்தில் குடியிருப்பதற்கு வீடு தேவைப்பட்டது. அதனால் பற்குணனின் விளம்பரத்தைப் பார்த்துத் தொடர்புகொண்டாள். பற்குணன் அவளை வீடு பார்க்க வரச் சொன்னான்.
அவளை நேரே பார்த்த போது அவளுக்கு நாற்பது வயது இருக்கும் என்று பற்குணனுக்குத் தோன்றியது. பொன்னிறக் கேசத்தைக் கழுத்தளவில் கத்தரித்து சரை சரையாகச் சுருட்டி வைத்திருந்தாள். ஒருவிதமான பச்சையும் நீல நிறமும் கலந்ததான ஒளி தெறிக்கும் விழிகள். வரிசை மாறாத சங்குப் பற்கள். மெல்லிய உதடுகளில் ஏறியிருந்த சிவப்புச் சாயத்தில் அது மிளகாய்ப்பழமான தோற்றம். கிளியின் அலகு போல வளைந்த மூக்கு. அவளின் வயதை மீறிய ஒருவித வசிகரிப்பான தோற்றம். அதில் பற்குணன் தன்னை மறந்து சிலகணங்கள் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். பின்பு தன்னைச் சமாளித்துக்கொண்டு அவளோடு கதைத்தான்.
அவளுக்கு வீடு பிடித்துக்கொண்டது.
வீட்டிற்குக் குடிவந்த பின்பு வீட்டை நன்கு பார்த்துக்கொண்டாள். இருந்தும் ஒரு நாள் கழுவும் இயந்திரத்திற்குள் கரையும் உடையைப் போட்டதால் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. பற்குணன் போய் அதைத் துப்பரவு செய்து இயங்கவைத்துக் கொடுத்தான்.
யூலியாவிற்கு வேலை போய்விட அவள் துறண்கெய்ம் கிளம்பிவிட்டாள். அதனால் பற்குணனுக்கு அடுத்த ஆளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த முறை அவ்வளவு சுலபமாய் ஆள் பிடிப்பு நடந்து விடவில்லை. பற்குணனின் எண்ணப்படி பெண்கள்தான் வீட்டைக் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் ஆண்களின் விண்ணப்பங்களை நிராகரித்தான். இலவு காத்த கிளியாகக் காலம் கரைந்தது. அவனுக்குக் காத்திருப்பதில் சலிப்பு ஏற்பட்டது. இறுதியில் யாருக்காவது வாடகைக்குக் கொடுப்போம் என்கின்ற முடிவுக்கு வேறு வழியின்றி வந்தான்.
அந்த நேரத்தில்தான் ஆரி என்கின்ற எஸ்தோனியா நாட்டுக்காரன் தொடர்புகொண்டான். தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்றான். அலுத்துப்போன பற்குணன் அவனை வீடு பார்க்க வரச் சொன்னான். அதற்குச் சந்திராவின் நச்சரிப்பும் ஒரு காரணமாகியது.
அவனுக்கு நாற்பது வயது இருக்கும். கட்டுமஸ்தான ஐரோப்பியருக்கு உரித்தான தேகம். இருந்தும் பழுப்பு நிறக் கண்கள். பழுப்ப நிறத்தில் பற்கள். ஆங்கிலத்தில் தட்டித் தட்டிக் கதைத்தான். அவனது பல்லைப் பார்த்துப் புகை பிடிப்பானோ என்கின்ற எண்ணம் பற்குணனுக்கு வந்தது. வீட்டிற்குள் புகை பிடிக்கக்கூடாது என்றான். தான் அப்படி புகை பிடிக்க மாட்டேன் என்று அவன் பதில் சொன்னான். தான் ஒரு பாதணிக் கடையில் பாதணிகள் திருத்தும் வேலை செய்வதாயும், வாடகை ஒழுங்காச் செலுத்த முடியும் என்றும், சந்தேகம் இருந்தால் தனது முதலாளியைத் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் கூறினான். பின்பு தயங்கிவிட்டு முற்பணம் தரவேண்டுமா அல்லது முற்பணத்திற்குக் காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து உத்தரவாதம் வாங்கித் தரலாமா என்று கேட்டான்.
பற்குணன் யோசித்தான். இவனையும் வேண்டாம் என்றால் இனி என்கின்ற கலக்கம் அவனிடம். சந்திரா வேறு மேலதிகப் பணம் செலவுக்கு இல்லாது தவண்டையடிப்பாள். அந்தத் தொணதொணப்பைத் தாங்குவதிலும் இவனுக்கு என்றாலும் வாடகைக்குக் கொடுப்பது மேலாகப்பட்டது.
‘இது முற்பணம் போலவே. உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. வாடகைகூட நான் நேரத்திற்கு ஒழுங்காகச் செலுத்திவிடுவேன்’ என்று ஆரி தொடர்ந்தான். பற்குணனுக்கு வேறு வழியிருக்கவில்லை. சந்திராவின் சுகமான வாழ்க்கைக்கு வீட்டுவாடகை முக்கியம். அல்லது அவள் தவிப்பு இவன் நிம்மதியை அசுரனாக வதம் செய்துவிடும்.
‘என்ன யோசிக்கிறியள்? உங்களுக்கு முதலாளியின் தொடர்பு எண் தரவா?’ என்று ஆரி கேட்டான். ‘பறுவாய் இல்லை. உங்களை நம்புகிறேன்’ என்றான் பற்குணன். ஆரி தனது முயற்சியில் அயராது பாடுபட்டான். ‘எப்போது திறப்பைத் தருவீர்கள்’ என்று கேட்டான். சுதாரித்துக்கொண்ட பற்குணன் ‘முதலில் இணையத்தின் ஊடாக வாடகை ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதன் பின்பு முதல் மாத வாடகையும் முற்பணத்திற்கான காப்புறுதியும் நீங்கள் வழங்க வேண்டும். அது முடிந்தால் சாவியைத் தரலாம்’ என்று கூறினான். ‘சரி… நான் அதைச் செய்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றான். பற்குணன் ஆற அமர ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என்றுதான் நினைத்தான். அவன் நினைப்பு யானை ஏறிய பானையாக, சிலநாட்களிலேயே படுக்கும் சோபாவிற்கு மேலே போட்டுப் படுப்பதற்குக் குசன் மெத்தை ஒன்றுடன் ஆரி வந்து குடியேறினான்.
புதுப் பெண்ணே, புதுப் பெண்ணே, நெருப்பு எடுத்து வா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்படி என்பதை அறியாத பற்குணன் சந்திரமதியின் சந்தோஷத்தில் தனது சந்தோஷத்தைக் கண்டு மகிழ்ந்தான். காலம் கனவு போலக் கரைந்து சென்றது. இடையில் இணையத் தொடர்பு பிழைப்பதாகவும் தனக்கு உதவி வேண்டும் என்றும் பற்குணனிடம் உதவி கேட்டான். அது வீடு என்ன நிலைமையில் இருக்கிறது என்பதைத் தான் நோட்டமிட வசதியாக இருக்கும் என்று பற்குணன் எண்ணிக் கொண்டான்.
வீடு அப்போது ஒழுங்காக இருந்ததில் பற்குணன் திருப்தி அடைந்தான். அவன் இணைய இணைப்பைச் சரி செய்து கொடுத்துவிட்டு நிம்மதியாகத் திரும்பி வந்தான். சில நாட்களின் பின்பு ஆரியைக் கடைக்குப் போகும்போது கண்டான். கடைக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து பியர் அருந்திக்கொண்டு இருந்தான். கோடை வெயிலை அனுபவிக்கிறான் என்று எண்ணிய வண்ணம் அவனைப் பார்த்துச் சிரித்தான். அவனும் கையை உயர்த்திக் காட்டிச் சிரித்தான். அதன் பின்பு அடிக்கடி அவனை பியர் புட்டிலுடன் கண்டிருக்கிறான். இங்கே இது ஒரு சாதாரண விடயம் என்பதால் பற்குணன் அதைக் கணக்கெடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு பயம் அவன் மனதில் முளை விட்டது.
அடுத்த மாத வாடகையில் தனக்கு ஒரு புதிய அலைபேசி வாங்க வேண்டும் என்று சந்திரா ஒப்பந்தம் போடுவது போல அன்று ஒரு நாள் கேட்டாள். பற்குணனால் என்ன சொல்ல முடியும்? தலையைக் கோயில் மாடு போல நன்கு ஆட்டி வைத்தான். அவனைப் பொறுத்தவரைப் பணம் தங்களது உறவில் நெஞ்சி முள்ளாக விழுந்துவிடக்கூடாது என்கின்ற கவலை. கனவில் கருக்கொள்ளும் பணம் கைக்கு வராது என்பதை முதலாம் திகதி கழிந்தும் வாடகை வராதபோதுதான் பற்குணனால் உணர முடிந்தது. பணம் ஏன் கட்டவில்லை என்று கேட்டு ஆரிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான். அரச உதவிப் பணம் வருவதில் தாமதம் அதனால் தன்னால் கட்டமுடியவில்லை என்று பதில் வந்தது. அப்பொழுதுதான் அவன் வேலை இல்லாது இருப்பது பற்குணனுக்கு தெரியும்.
ஒரு கிழமை கழித்து அவன் அந்தப் பணத்தின் பாதித் தொகையைக் கட்டினான். பின்பு பத்து நாள் கழித்து மீதித் தொகையைக் கட்டினான். அடுத்த மாதமும் அவன் முதலாம் திகதி பணம் கட்டவில்லை. பற்குணன் அவனுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தான். அதன் பின்பு ஐந்து நாள்கள் கழித்துப் பணம் கட்டினான். அடுத்த மாதம் ஐந்தாம் திகதி வரையும் எந்தப் பணமும் வரவில்லை. பற்குணன் வீட்டைவிட்டு மூன்று மாதத்தில் வெளியேற வேண்டும் என்று கடிதம் அனுப்பி வைத்தான். நேரே கூப்பிட்டுச் சொல்லலாம். அது இங்கே செல்லுபடியாகாது. வாடகைக்கு இருப்பவர்களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் இருக்கின்றன. வீட்டை வாடகைக்கு விடுபவர்களுக்கு வாடகைக்கு இருப்பவர்களின் தயவு வேண்டிய நாடு இது. தயவு இல்லாவிட்டால் ஒவ்வொரு அடியையும் சிந்தித்தே வைக்க வேண்டும். ஆதலால் எதுவென்றாலும் அது எழுத்து மூலம் இருப்பதே செல்லுபடியாகும்.
அதன் பின்பு உதவிப் பணம் கொடுக்கும் அரச நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி தொடர்புகொண்டு பற்குணனுடன் கதைத்தாள். இனி அவர் ஒழுங்காக வாடகை செலுத்தினால் நீங்கள் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடமுடியுமா என்று கேட்டாள். வாடகை ஒழுங்காய் வந்தால் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பற்குணன் சமாதானமானான். அதைத் தொடர்ந்து ஒரு மாதம் ஒழுங்காக வாடகை வந்தது. பின்பு பழைய குருடி கதவைத் திறவடி என்பதாக அதே அசண்டையீனம். பற்குணன் கொதி கொண்டான். நோர்வேயில் வாடகை வீட்டிலிருந்து ஒருவரை எழுப்புவது என்பது மயிரால் கட்டி மலையை இழுப்பது போன்றது. அதற்கு Namsmann என்று காவலிடம் ஒரு அமைப்பு இருக்கிறது. அவர்களுக்கு விண்ணப்பித்து அவர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாடகைக்காரனை வீட்டிலிருந்து எழுப்ப முடியும். பற்குணனுக்கு இதில் முன்பின் அனுபவம் கிடையாது. இருந்தும் தான் கொடுத்த எச்சரிக்கைக் கடிதங்கள் குறுஞ்செய்திகள் ஆகியவற்றை இணைத்து அவனை எழுப்பித் தரவேண்டும் என்று விண்ணப்பித்தான். இரண்டு கிழமைக்குப் பின்பு முறைப்படி சட்டத்தை ஆதாரமாகக் காட்டி வாடகைக்காரனுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்குமாறு அறிவுறுத்தி அந்த விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்பி வைத்தனர். பற்குணனிற்கு வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டதான தவிப்பு. மீண்டும் ஒழுங்காக எச்சரிக்கை எழுதத் தொடங்கலாமா என்று நினைத்தான். பின்பு அவன் பல மாதங்கள் வாடகை காட்டாமல் விடட்டும், அதன் பிறகு தனது வேலையைத் தொடங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். பல மாதங்கள் வாடகை காட்டாவிட்டால் சட்டப்படி வீட்டைவிட்டு வெளியேற வேண்டி வரும் என்பதைப் பற்குணன் தற்போது அறிந்து வைத்திருந்தான்.
பணம் ஒழுங்காக் கிடைக்காததில் சந்திராவுக்குப் பொறுக்க முடியாத அவஸ்தை. அதைப் பற்குணனிடம் கேட்க முடியாது. கேட்டால் நீ ஒரு பேராசை பிடித்த பிசாசு என்று சொல்லி விடுவானோ என்கின்ற பயம்.
பல நாள்களாக ஆரி குடியிருக்கும் வீட்டின் கதவின் முன்பு பெண் ஒருத்தியின் பாதணி நிரந்தரமாகத் தரித்து நிற்பதைக் கண்டான். வாடகை ஒப்பந்தப்படி ஒருவர் மட்டுமே வீட்டில் தங்கி இருக்கலாம். உறவினர்கள், நண்பர்கள் வேண்டும் என்றால் வந்து போகலாமே தவிரத் தங்கி இருக்க முடியாது. அவன் அந்த விதிகளை மதிப்பவன் அல்ல என்பதை ஏற்கனவே பற்குணன் அறிந்து கொண்டான். இப்போது அதற்கு மேலும் ஆதாரம் கிடைத்தது போல இருந்தது. கதவைத் தட்டி விசாரிக்கலாம். தட்டினாலும் அவன் திறப்பானா என்று தெரியாது. திறந்தாலும் அது பயனுள்ள உரையாடலாக இருக்குமா என்கின்ற குழப்பம். பற்குணன் கதவைத் தட்டவில்லை. அதன் பின்பு குடித்துவிட்டு அவனும் அவளும் சண்டையிடும் சத்தம் சில வேளையில் கேட்கும். பற்குணனுக்கு அப்போது நவ துவாரங்களும் அரைத்த மிளகாயை அப்பியதாகப் பற்றி எரியும்.
நாள்கள் செல்லச் செல்ல அவன் மதுவிற்கு அடிமையாகிவிட்டான் என்பதை பற்குணன் அறிந்து கொண்டான். அதை நிரூபிப்பது போல எப்போதும் வியர் புட்டியுடன் அலைவான். இடைக்கிடையே கதவின் முன்பு வாந்தி எடுத்து அசிங்கம் செய்திருப்பான். அதைத் துப்புரவு செய்வது பற்றி எந்த அக்கறையும் காட்டமாட்டான். அவன் ஆழக்கடலில் அமிழும் கல்லாக மதுவுக்கு அடிமையாகிக் கொண்டு இருக்கிறான் என்பது பற்குணனின் நிம்மதியை மேலும் தின்றது.
ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அதற்கான வலுவான காரணங்களைக் காட்டி கடிதம் அனுப்பி வைத்தான். அதற்கு ஒரு மாதத்திற்குள் பதில் அழிக்காவிட்டால் வாடகைக்கு இருப்பவன் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியது கட்டாயமாகும் என்கின்ற ஒரு சட்ட நுணுக்கத்தை பற்குணன் ஒருவாறு அறிந்துகொண்டு, அவனுக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி வைத்தான். ஆரிக்கு இருக்கும் மதுப் பிரச்சினையில் அவன் பதில் கடிதம் எழுதமாட்டான் என்கின்ற ஒரு குருட்டு நம்பிக்கை பற்குணனிடம் இருந்தது.
காகம் இருக்கப் பனம்பழம் விழுகிறதோ இல்லையோ ஆரி பதில் எழுத மறந்து போய்விட்டான். பற்குணனுக்கு அதை எண்ணி மனதிற்குள் சீட்டி அடிக்கத் தோன்றியது. அது மனித நேயம் அற்ற செயல் என்று எண்ணிச் செய்யாது விட்டான். இருந்தும் இன்னும் இரண்டு மாதத்தில் முறைப்படி தான் நம்ஸ்மன்னைத் தொடர்புகொண்டு அவனை எழுப்பி விடலாம் என்கின்ற நம்பிக்கை உண்டாகியது. வீடு என்ன நிலையில் இருக்கிறது என்பது பற்குணனுக்கு இப்போது தெரியாது. நீண்ட காலமாகவே ஆரி அவனைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.
எதிர்பாராது வாடகைக் காலம் முடிவதற்குப் பத்து நாள்கள் இருக்கும் பொழுதே தான் வீட்டை விட்டு வெளியேறுவதாயும், தனக்கு மது விலக்கிற்கான மையத்தில் இடம் கிடைத்திருப்பதாகவும், பற்குணனிடம் வந்து கூறினான். வீட்டைத் துப்பரவு செய்த பின்பு தருவதாகவும், தற்போது வீட்டை ஒரு முறை வந்து பார்க்க முடியுமா என்றும் கேட்டான்.
பற்குணன் சென்றான். அவனுக்கு வயிற்றைப் புரட்டி குடலைப் பிடுங்கிக்கொண்டு வந்தது. அவன் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான். ஆழக்கடலில் அமிழ்ந்த குரலாக எதுவும் பற்குணன் காதில் ஏறவில்லை. கழிப்பறை அடிவாங்கி அடிவாங்கி அலங்கோலமாய் கிடந்தது. பல்கணிக் கதவு கோடாரியால் கொத்தியது போன்று காயப்பட்டுக் கிடந்தது. தரை பொன் நிறத்தில் இருந்தது கறுப்பாகிப் போனது. எங்கும் அழுக்கு. எதிலும் காயம். அதைப் பார்க்கும் மனநிலையில் பற்குணன் இல்லை. உதிரம் கண்ணீராக வடிவதாக அவன் கண்கள் கனத்தன. வீட்டிற்குள் இருந்த வெடுக்கைத் தாங்க முடியவில்லை. துப்பரவு செய்த பின்பு வந்து பார்க்கிறேன் என்றுவிட்டுத் திரும்பி வந்துவிட்டான்.
மூன்று நாள்களின் பின்பு ஆரி அலைபேசியில் தொடர்புகொண்டான். உங்களுடன் ஒரு அதிகாரி கதைக்க வேண்டும் என்றான். அலைபேசி கைமாறியது. அடுத்த முனையில் ‘நான் லிசா, மது விலக்கு மையத்திலிருந்து கதைக்கிறேன். ஆரியை இங்கே சேர்த்திருக்கிறோம். அவர் இங்கிருந்து இப்போது வெளியேற முடியாது’ என்றாள். எவ்வளவு காலத்திற்கு என்று பற்குணன் கேட்டான். அதற்கு அவள் தன்னால் அதைச் சொல்ல முடியாது என்றும் ஆனால் நீண்ட காலம் இருக்க வேண்டி வரும் என்று ஆரூடம் தெரிவித்தாள். ‘வீட்டுச் சாவியை ஆரி தந்துவிட்டுப் போகவில்லை. அதை வாங்கி அனுப்ப முடியுமா?’ என்று கேட்டான். அவள் வாங்கி அனுப்புவதாக உறுதி அளித்தாள்.
ஆரி இனித் திரும்பி வரமாட்டான் என்பதில் சந்தோஷம் இல்லாவிட்டாலும் கவலை இருக்கவில்லை. அதே நேரம் சாவி வரவேண்டுமே என்பது கவலையாக இருந்தது. அதன் பின்பு துப்பரவு செய்து, விளம்பரம் கொடுத்து, வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடும்வரைக்கும் அமைதி கிட்டாது என்று தோன்றியது.
சில நாள்களின் பின்பு சாவி வந்தது. வீட்டைத் திறந்து பார்க்கப் போகும் பொழுது சந்திராவும் வந்தாள். தாங்க முடியாத அந்த மணத்தால் அவர்களது வீட்டிற்குத் திரும்பி ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். கையெடுத்துப் பற்குணனைக் கும்பிட்டு ‘நீங்கள் முதலில் துப்பரவு செய்யுங்கள், மீதிக்கு நான் வந்து உதவி செய்கிறேன்’ என்றாள். பற்குணனுக்குக் கழிவிரக்கம் ஏற்பட்டது. அவன் மீண்டும் சென்றான். வீடு கன்னியைக் கற்பழித்தது போலக் கசங்கிக் கிடந்தது. அந்த வெடுக்கு என்ன என்று பற்குணனுக்கும் விளங்கவில்லை. வயிற்றைப் புரட்டியது. சமாளித்துக் கொண்டு முதலில் ஒவ்வொரு அங்குலமாகத் தனது அலைபேசியில் படம் எடுத்துக் கொண்டான். பின்பு வந்து போகுமளவிற்கு மேலோட்டமாக அலுவலைப் பார்த்தான். முழுமையாகத் துப்பரவு செய்யமுடியாது. அதற்கு முன்பு காப்புறுதி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் வந்து பார்ப்பார்களா என்பது அவனுக்கு விளங்கவில்லை. பார்த்தால் வேலை சுலபமாக அமையலாம் என்கின்ற ஒரு நப்பாசை இருந்தது.
பற்குணன் வாடகைக்காரன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய படிவத்தை நிரப்பி அதில் தனக்கு நஷ்டமான தொகையைப் போட்டு அனுப்பி வைத்தான். எறிந்த பந்தைப் போல ஆரி அதை நிராகரித்து உடனடியாகப் பதில் அனுப்பிவிட்டான். பற்குணனிற்கு உடல் கோபத்தில் உலையாகக் கொதித்தது. காப்புறுதி நிறுவனத்தின் வாடகை முற்பண உத்தரவாதம் இருந்ததால் அவர்களைத் தொடர்பு கொண்டான். வீட்டில் இருக்கும் அசையும் பொருட்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு மட்டுமே தாங்கள் பொறுப்பேற்க முடியும் என்றும், வீட்டின் அசையாத பகுதியில் இருக்கும் சேதங்களுக்கு நீதிமன்றமோ அல்லது அதைப் போன்ற சட்ட பரிபாலன அமைப்போ உங்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு தந்தாலே நஷ்டஈடு தரமுடியும் என்று கூறினார்கள். பற்குணனுக்குக் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டதான மூச்சுமுட்டல். முதலில் அசையும் பொருள்களுக்கான நஷ்டஈடு பற்றிய விண்ணப்பத்தை அனுப்பி வைத்தான்.
நீதிமன்றத்திற்குப் போவது என்றால் காசை அள்ளி இறைக்க வேண்டும். இறைப்பது திரும்பி வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அரசனை நம்பிப் புருசனைக் கைவிடுவதான செயலில் ஈடுபட அவன் விரும்பவில்லை. காப்புறுதி நிறுவனமும் வந்து பார்க்கவில்லை. இதற்கு வேறு என்ன வழி இருக்கிறது? அவன் இணையத்தின் உதவியை நாடினான். இணையம் பலருக்குப் பல வேளைகளில் இருட்டறையில் ஏற்றி வைக்கப்படும் தீபம் போன்றது.
Husleietvistutvalget (HTU) என்கின்ற அரச அமைப்பு இப்படியான வழக்குகளைப் பேசிச் சமாதானமான முடிவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதைக் கண்டு பிடித்து, அவர்களின் இணைய தளத்திற்குச் சென்று, தனது வழக்கைப் பதிவு செய்தான்.
சில நாள்களில் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. அதில் மேலதிக விபரம் கேட்டிருந்தனர். வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான ஒழுங்கான நஷ்டஈட்டு விபரத்தை மீள்பார்வை செய்து ஆதாரங்களோடு அனுப்புமாறு கேட்டிருந்தனர். அத்தோடு இந்த வழக்கைப் பார்ப்பதற்கு அவர்களுக்குக் கட்ட வேண்டிய பணத்திற்கான விபரங்களையும் அனுப்பி இருந்தனர். அவர்களுக்குக் கட்டும் தொகை பெரிதாக இருக்கவில்லை. அதைச் செய்து முடிப்பதற்கும் அவனுக்கு இணைய உதவியே தேவைப்பட்டது.
ஆரி மதுவிலக்கு மையத்தில் இருப்பதால் அவனுக்கு இலவசமாகச் சட்டத்தரணிகளை அரசாங்கம் கொடுத்திருந்தது. அவர்கள் அந்த வழக்கிற்கு எதிரான தங்களது எதிர் மனுவை அனுப்பி இருந்தனர். அதில் ஆரியில் எந்தப் பிழையும் இல்லை என்றும், ஆரிதான் வீட்டிற்குச் சேதாரத்தை விளைவித்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.
சந்திரா இப்போது எதுவும் பேசுவதில்லை. எதைக் கேட்டும் நச்சரிப்பதில்லை. தான் செய்தது பிழையோ என்கின்ற குற்ற உணர்வில் அவள் வாடுவது பற்குணனுக்குத் தெரியும். இருந்தும் பற்குணன் அவளைச் சமாதானம் செய்ய விரும்பவில்லை. அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று எண்ணி இருந்தான்.
சில கடிதப் பரிமாற்றத்தின் பின்பு HTU சமாதான பேச்சு வார்த்தை மூலம் இந்த வழக்கைத் தீர்த்து வைப்பதே சிறந்த வழியெனவும், அதற்குச் சம்மதமா என்றும் கேட்டுக் கடிதம் அனுப்பி இருந்தது. பற்குணன் அதைப் பார்த்ததுமே அதில் பங்கு கொள்வதாக முடிவு செய்து கொண்டான். சந்திராவிடம் கூற ‘இதுவும் நல்ல யோசனைதானே. உங்களுக்குத் தேவையில்லாத கஷ்டம்’ என்றாள். இவளுக்கு என்ன இந்த ஞானம் என்பது பற்குணனுக்கு விளங்கவில்லை. சில வேளை சும்மா சமாதானமாகச் சொல்கிறாளோ என்று எண்ணிக் கொண்டான்.
ஆரியும் சமாதான பேச்சிற்குச் சம்மதம் தெரிவித்ததால் அவர்கள் சந்திப்பதற்கான நேரமும் திகதியும் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தச் சமாதான பேச்சு Teams மூலமாக நடக்க இருப்பதாயும், அதற்கான தொடுப்பைத் தாங்கள் பின்பு அனுப்புவதாகவும் எழுதி இருந்தார்கள்.
குறிப்பிட்ட நாளில் கூட்டம் Teams மூலமாக கூடியது. அதில் பற்குணன், HTU சார்பாக லேனா, ஆரி, அவனது சட்டத்தரணி மாரி, மொழிபெயர்ப்பாளர் மீயா ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள். ஆரி எஸ்தோனியனும், தட்டித் தட்டி ஆங்கிலமும் கதைப்பான். அதனால் அவனுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டிருந்தது. லேனாவே சமாதானம் செய்து வைக்கும் அலுவலராகப் பணியாற்றினாள். அவளுக்கு இருபத்தி ஐந்து வயதுதான் இருக்கும். இருந்தும் அவள் தனது பணியில் உச்சம் கண்டு வருவதை பற்குணனால் பார்க்க முடிந்தது. மாரியும் அவளின் வயதை ஒத்தவளே.
இருவரிடமும் இளமையும் அழகும் ததும்பி வழியும் கோலம். ஸ்கண்டிநேவிய இளம் பெண்களுக்கே உரிய வெள்ளையில் ரோஜாவைக் குழைத்துப் பூசியதான நிறம். பளிங்காக ஒளிரும் நீல வைரம் போன்ற கண்கள். சிவப்புப் பவளமாக உயிருடன் நெளியும் இதழ்கள்.
மீயாவுக்கு அறுபத்து ஐந்து வயது இருக்கும். முதுமை ஏறிக்கொண்டு இருக்கும் தோற்றம்.
அவர்களை இரசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை. அவன் தொடக்கத்திற்குக் காத்திருந்தான்.
பற்குணன் கோரிய நஷ்டஈட்டுத் தொகை 46000 குரோனர்களாக இருந்தது. கூட்டம் தொடங்கியதும் தங்கள் தங்கள் பக்கங்களை விளக்குமாறு லேனா கேட்டாள். அது முடிந்த பின்பு லேனா தனக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொண்டாள். அதன் பின்பு இருவருடனும் தனித் தனியே கதைக்க வேண்டும் என்று கேட்டாள்.
பற்குணனோடு கதைக்கும் போது 46000 குரோனர்கள் தங்கள் அமைப்பின் கணிப்பைவிட அதிகமாக இருக்கிறது என்றும் தங்கள் அமைப்பின் கணிப்புப்படி18000 குரோனரே இதற்குச் சரியான தொகை என்றும் கூறினாள். மர நிலத்தை மாற்றாது மெருகூட்டுவதே சரி என அபிப்பிராயம் தெரிவித்தாள். நிறுவனங்களை வைத்துத் துப்பரவு செய்திருந்தால், திருத்தியிருந்தால் முழுத் தொகையையும் வாங்கி இருக்கலாம் என்றும், சொந்தமாகச் செய்ததால் இதைத்தான் கேட்க முடியும் என்றும் கூறினாள்.
பற்குணன் அலுத்துப் போய் இருந்தான். எப்போது இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியேறுவேன் என்று துடித்தான். அவனுக்கு எதிர்த்து நீதிமன்றம் போகும் எந்த எண்ணமும் இருக்கவில்லை. மறுபக்கத்திலிருந்த சந்திராவைப் பார்த்தான். அவள் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று சைகை காட்டினாள். பற்குணன் ‘நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றான். ஆரியோடும், அவனது சட்டத்தரணியோடும் லேனா என்ன கதைத்தாள் என்பது அவனுக்குத் தெரியாது.
பின்பு இருவருக்குமான கூட்டம் தொடங்கியது. அதில் லேனா 18000 குரோனர்கள் தந்தால் பற்குணன் இந்த வழக்கை முடித்துக்கொள்ள ஒத்துக்கொண்டார் என்று கூறினாள். அதற்கு ஆரி தன்னால் ஐந்தாயிரம் குரோனர்கள் மட்டுமே தரமுடியும் என்றான். பற்குணன் இது மிகவும் அற்பத் தொகை என்று கனன்றான். பின்பு ஆரி தனியாகத் தனது சட்டத்தரணியோடு கதைக்க வேண்டும் என்றான்.
கதைத்த பின்பு 8000 குரோனர் தரலாம் என்று கூறினான். அப்போது லேனா இருவரும் நெருங்கி வரவேண்டும் என்றாள். பின்பு தான் ஒரு தொகையைப் பரிந்துரைக்கலாமா என்று கேட்டாள். அதற்கு இருவரும் அனுமதித்தனர். அவள் 15000 குரோனருக்கு ஒப்பந்தம் செய்யலாம் என்று பரிந்துரைத்தாள். ஆரி பத்துதான் தரமுடியும் என்றான். உங்களால் இறங்கிச் செல்ல முடியுமா என்று பற்குணனிடம் கேட்கப்பட்டது. பற்குணன் 12500 குரோனர்கள் என்றான். ஆரி அறுதியாக தன்னால் 12000 குரோனர்கள் தரமுடியும் என்றான். சந்திரா ஒத்துக் கொள்ளுங்கள் என்று கண்ணைக் காட்டினாள். பற்குணனுக்கு அதை நம்பமுடியாமல் இருந்தது. இருந்தும் அவள் கண் காட்டாவிட்டாலும் அவன் அதைத்தான் செய்திருப்பான். அதன் பின்பு லேனா தனது தீர்ப்பை வழங்கினாள். அதன்படி இத்தோடு இருவருக்குமான பிணக்குத் தீருகிறது எனவும், பணம் செலுத்திய பின்பு இந்த விஷயம் பற்றி ஒருவர் மீது மற்றவர் வழக்குத் தொடர்வதற்கு எந்த உரிமையும் கிடையாது என்றும், அதற்கான சட்டங்களைப் பற்றி விவரித்தாள்.
பற்குணனுக்கு இருட்டுக் குகைக்குள் பல மாதங்கள் அடைந்து கிடந்தவனை வெளியே திறந்து விட்டது போன்ற நிம்மதி.
கூட்டம் முடிந்த பின்பு பக்கத்தில் வந்த சந்திரா, ‘உங்களை நான் தேவையில்லாத பிரச்சினைக்குள்ள மாட்டி விட்டிட்டன் எண்டு நினைக்கிறன். வாடகைக்கு விடுகிறதில இவ்வளவு பிரச்சினையும் சிக்கலும் வரும் எண்டு எனக்குத் தெரியாது அப்பா. நான் இனிமேலைக்கு உங்களிட்ட காசு கேட்டுத் தொந்தரவு செய்யமாட்டன். நீங்கள் ஆறுதலா நல்ல ஆள் கிடைச்சா மட்டும் வாடகைக்கு விடுங்க அப்பா. திரும்பவும் சொறி அப்பா’ என்றாள்.
இந்தப் பிக்குணி எப்போது பிறந்தாள்?
பற்குணனின் தலையை அந்தப் பிக்குணி செல்லமாகத் தடவிக்கொண்டு இருந்தாள். ஆசையும் துன்பமும் நீங்கி எட்டு நெறிகளும் கைவசப்பட்டதாக பற்குணன் உணர்ந்தான்.
Great expression ! Great service to Tamil World! God is with u Always my friend ! Continue your Great service!
LikeLike
மிக்க நன்றிகள்.
LikeLike