முருகபூபதி – அவுஸ்திரேலியா

முன்னுரை

காரையூரான், காரைநகரான்  முதலான புனைபெயர்களில் எழுதிக்கொண்டிருக்கும்,நோர்வேயில் வதியும் எழுத்தாளர்  இ. தியாகலிங்கம் அவர்களை நான் இதுவரையில் நேரில் பார்த்ததில்லை. எனினும்,  அவ்வப்போது இவரது எழுத்துக்களை ஊடகங்களிலும் இவர் அனுப்பும் இணைப்புகளிலும் படித்திருக்கின்றேன்.

நாம் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நான்கு நாட்கள் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர்  மாநாட்டுக்கும் இவர் வந்து சென்றிருக்கிறார் என்ற தகவலையும் காலம் கடந்தே அறிந்துகொண்டேன்.

அந்த மாநாடு தொடர்பாக மிகவும் மோசமாக கருத்துரைத்து காகித  ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைத்த மூத்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களை சென்னையில் சந்தித்து,  “நீங்கள் சொன்னதுபோன்று அங்கு எதுவும் நடக்கவில்லையே..?“ எனக்கேட்டவர் இவர் என்பதும் நான் காலம் கடந்து அறிந்த செய்திதான்.

தியாகலிங்கம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஆறாவது தலைமுறையைச்சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்பது எனது கணிப்பு. 1967 இல் வடபுலத்தில் காரைநகரில் பிறந்திருக்கிறார்.

ஊர்மீது கொண்டிருந்த நேசம், காரையூரான், காரைநகரான்  முதலான புனைபெயர்களிலும் இவரை எழுதவைத்திருக்கிறது.

நோர்வேக்கு புலம்பெயர்ந்து சென்று, அந்த நாட்டின் மொழியையும் பயின்று தேர்ச்சி பெற்று, அம்மொழியிலும் தனது இலக்கியப்பிரதிகளை வெளியிட்டிருப்பவர். 

சிறுகதை, நாவல், கவிதை என இவர் தொட்ட துறைகளில் பல படைப்புகளை இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கிறார். அவற்றில் சில ஆங்கில மொழியிலும் வந்திருக்கின்றன.

இவர் தனது 132 பக்க நாவலை எழுதி, அதன் மூலப்பிரதியை அனுப்பி, படித்துவிட்டு முன்னுரை எழுதித்தருமாறு கேட்டிருந்தார்.

எழுத்துப்பணிகளிலும் இலக்கிய மற்றும் பொதுவேலைகளிலும் சமகால மெய் நிகர் அரங்குகளிலும் எனது நேரம் அதிகம் செலவாகின்றமையினால்,  இந்தப்பதிவை எழுதித்தருவதற்கு தாமதம் நேர்ந்துவிட்டது.

எனினும்,  தொடர்ந்தும் இவரை காத்திருக்கவிடலாகாது என்ற எண்ணத்தில், இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்கி, உறைவி நாவலை முழுமையாகப் படித்து முடித்தேன்.

உள்நாட்டுப்போர்களும், சர்வதேசப்போர்களும் பெற்ற குழந்தைகள்தான் அகதிகள்.  மீண்டும் அகதிகள் உரத்துப்பேசப்படும் ரஷ்யா – உக்ரேய்ன் மோதல் காலத்தில்,  இந்நாவலில் இடம்பெறும் இரண்டு ஈழ அகதிக்குழந்தைகள் குறித்து தியாகலிங்கம் எம்மை சிந்திக்க வைத்துள்ளார்.

இடப்பெயர்வினால் உள்நாடுகளில் அவதியுறும் அகதிகள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கும், புலம்பெயர்ந்து சென்று அந்நிய நாட்டின் சுவாத்தியத்திற்கு ஏற்பவும், அங்குள்ள சமூக கட்டமைப்பினை உள்வாங்கி அதற்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் சந்திக்கும் நெருக்கடிகளுக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்த அகதிகள் மொழிவாரியாக அதிகம் துன்பப்படமாட்டார்கள். இரண்டே இரண்டு மொழிகள்தான். கலவர காலத்தில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த அகதிகளும்,  போர்க்காலத்தில் வடக்கு – கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும்  பலவந்தமான வெளியேற்றத்தினால், யாழ். குடநாட்டிலிருந்தும் மன்னார் – வன்னியிலிருந்தும் இடம்பெயர்ந்த இஸ்லாமிய மக்களும் எதிர்நோக்கிய நெருக்கடிகளிலிருக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிக்கோலத்துடன் புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் சந்தித்த நெருக்கடிகளுக்கும் பாரிய வேறுபாடுள்ளது.

அவ்வாறு சென்று தமது வாழ்வை வளம்படுத்திக்கொண்டவர்களையும்,  சிக்கிச்சின்னாபின்னமாகி தமது வாழ்வை அழித்துக்கொண்டவர்களையும் பற்றிய செய்திகளை இலக்கியப்படைப்புகளிலும் ஊடகங்களிலும் பார்த்துவருகின்றோம்.

நோர்வேக்கு விதிவசத்தால் வந்து சேர்ந்த 19 வயதிற்கும் குறைவான லக்ஷிகா லவன் என்ற இரண்டு பிள்ளைகளின் கதைதான் உறைவி.

இலங்கையில்  நீடித்த உள்நாட்டுப்போர் வடபுலத்தில் பெற்ற குழந்தைகள்தான் இந்த இரண்டு பிள்ளைகளும். அவர்கள், அவர்களின் உறவினர்களினாலேயே நோர்வேக்கு அனுப்பப்பட்டவர்கள்.

மொழிதெரியாத ஒரு நாட்டில், அறிந்த தெரிந்தவர்கள் எவருமே அற்ற ஒரு ஐரோப்பிய நாட்டில், தமது ஊணுக்கும் உறைவிடத்திற்கும் பாதுகாப்பிற்குமாக அவர்கள் தினம் தினம் நடத்தும் போராட்டமே இந்தப்புதினம்.

உறவினர்களினால் நோர்வேக்கு அனுப்பிவைக்கப்பட்ட அபினயா என்ற பிள்ளை, லக்‌ஷிகா என்ற புதிய பெயருடன்,  அங்கு ஒரு புறநகரத்தில், அந்நாட்டு அதிகாரிகளின் கண்களில் தென்படாமல் ஒரு ஈழத் தமிழர் வீட்டின் கீழறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறி சந்திக்கும் மனிதர்கள், அனுபவிக்கும் வேதனைகள், இவளைப்போன்று அதே பத்தொன்பது வயதில் அங்கு வந்து சேர்ந்துள்ள லவன் என்ற ஆண்பிள்ளை காணும் காட்சிகளும் அனுபவிக்கும் தொல்லைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

அங்கிருப்பவர்களின் மனிதநேயத்தையும் மனநிலையையும் பொறுத்தே தங்கள் விதி அமையும் என்ற நம்பிக்கையுடன் புகலிடத்தில் தங்கள் தங்கள் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கியிருக்கும் இந்த பதின்மவயதுப்பிள்ளைகள் இருவரும்  இறுதியில் என்னவாவார்கள் என்பதை பதட்டத்துடன் படிக்கவைக்கிறது இந்தப்புதினம்.

வீட்டறைக்குள் அகப்பட்ட சிறை வாழ்க்கை, முகாம் வாழ்க்கை, காப்பகம் என்ற பெயரில் கிடைத்த தற்காலிக அடைக்கலம், தொழில் என்ற பெயரில் கிட்டிய பண்ணைப்பணி, அங்கு சந்திக்கும் மனிதர்களின் பாலியல் வக்கிரங்கள், உழைப்பின் மீதான சுரண்டல் அனைத்தையும் திகிலுடன் நாவலாசிரியர் தியாகலிங்கம் சித்திரித்துள்ளார்.

எண்ணெய்ச்சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த பண்டங்கள் போன்று இந்த பிள்ளைகள்  இருவரும் புகலிடத்தில் அனுபவிக்கும் வேதனைகளை  வாசகர்கள் அருகிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வினை தியாகலிங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்.

ஊரிலே அள்ளிக்கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் பிள்ளையான லக்‌ஷிகா, புகலிடத்தில் ஒருவேளை உணவுக்காகவும்,  பாதுகாப்பிற்காகவும் அல்லல்படும் காட்சிகள் அவள் மீது உருக்கத்தை வரவழைக்கின்றன.

வேலைக்கென்று அமர்த்தப்பட்ட  லவனை ஓரினச்சேர்க்கையாளன் ஒருவன் தனது இச்சைக்கு பலியாக்க நினைக்கிறான்.

தந்தை ஸ்தானத்தில் இருக்கவேண்டிய ஒருவன் லக்‌ஷிகாவை வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு துடிக்கிறான்.

இந்தக் கழுகுகளிடம் இரையாகாமல் தப்பித்தாலும்> பிறிதோர் சந்தர்ப்பத்தில், உயிர் வாழுவதற்காகவே  பலியாகிப்போகின்றன அந்த இளம் குருத்துக்கள். 

இலங்கை இராணுவத்துடன் போரிடச்சென்று கால், கை இழந்து முடமாகிப்போயிருக்கும் தனது சகோதரிகளை காப்பாற்ற புகலிட தேசத்தில் பாலியல் ரீதியில்  ஊனமுற்றுள்ள பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்து பணம் உழைக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றான் லவன்.

தனது அன்றாட செலவுகளை சமாளிப்பதற்காக உடலை விற்று வயிறு வளர்க்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றாள் லக்‌ஷிகா.

ஒரு புறத்தில் இனவிடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்கள் தாயகத்தில்,-  மறுபுறத்தில்  அந்த போராட்டத்தால் உயிர்தப்பி வாழ புகலிடம் தேடி வந்தவர்களை அரவணைக்காமல்  உணர்ச்சிக்கோஷம் எழுப்பி மஞ்சள் – சிவப்பு கொடிகளுடன் பம்மாத்து காண்பிக்கும் கூட்டம்.

இந்த இரண்டு தரப்புக்கும் மத்தியில் சிக்குண்டு சின்னாபின்னமான ஒரு பக்கத்தை தியாகலிங்கம் இந்த உறைவி என்ற புதினம் வாயிலாக முடிந்தவரையில் பதிவுசெய்ய முயன்றுள்ளார்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சி, சில பரிமாணங்களை  உள்ளடக்கியிருக்கிறது.

ஒரு காலகட்டத்தில், தேசிய இலக்கியம் சார்ந்து மண்வாசனை இலக்கியம், பிரதேச மொழிவழக்கு படைப்புகள் ஈழத்தில் வெளிவந்தன. அதனையடுத்து  முற்போக்கு இலக்கியம் பேசுபொருளானது.  சோஷலிஸ யதார்த்தப்பார்வைகொண்ட இலக்கியத்துடன்,  அடிநிலை மக்களின் வாழ்வுக்கோலங்களை ஆவணப்படுத்தும் தலித் இலக்கியம் மேற்கிளம்பியது.

இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போரட்டம் வெடிக்கத்தொடங்கியதும் போர்க்கால இலக்கியம் வரவாகியது.  போர் உக்கிரம்பெற்றமையால், உள்நாட்டு இடப்பெயர்வு இலக்கியத்துடன், அங்கிருந்து அந்நியம் ஓடிவந்துவிட்டவர்களிடமிருந்து புலம்பெயர் இலக்கியம் உருவானது.

அவ்வாறு வந்தவர்கள் முதலில் தாயக நினைவுளுடன்தான் முதலில் எழுதினர். பின்னர் தாயகத்தையும் புகலிட வாழ்வையும் இணைத்து  தமது பிரதிகளில் பாலம் அமைத்தனர்.

காலப்போக்கில் தாம் அடைக்கலம்புகுந்த  நாடுகளின் மொழியைக்கற்று தேர்ச்சிபெற்று அம்மொழிகளிலும் தங்கள் படைப்புகளை மொழிபெயர்த்து எழுதினர். அவ்வாறு பரிமாணம் பெற்றுவளர்ந்த ஈழத்து இலக்கியம், தற்போது புகலிட இலக்கியமாக அவதாரம் எடுத்துள்ளது.

அத்தகைய இலக்கியங்களை படைக்கும் தலைமுறையினரில்  தியாகலிங்கமும் முக்கியமான இடத்தை வகித்துள்ளார். அத்துடன் தான் வாழ்ந்துவரும் நாட்டின் நிலக்காட்சியையும் தனது படைப்புகளில் காண்பித்து வருகிறார்.  அதனால் இவரது படைப்புகள் ஆறாம் திணைக்குள் வந்துள்ளன. அதாவது பனியும் பனிசார்ந்த நிலங்களும்  இவரது படைப்புளில் இடம்பெறுகின்றன.

அத்துடன் பேசாப்பொருளை பேசத்துணிந்தவராக அடையாளமும் பெற்றுள்ளார்.

ஈழத்தில் உறைவி போன்ற படைப்பிலக்கிய முயற்சிகளை காண்பது அரிது.  ஓரினச்சேர்க்கை சார்ந்த  சிறுகதைகளையோ, நாவல்களையோ அங்கிருப்பவர்கள் எழுதத்தயங்குவர். அத்தகைய படைப்புகளுக்கு அங்கிருக்கும் ஊடகங்களும் களம் வழங்காது.

ஆனால், புலம்பெயர் வாழ்வின் புகலிடச்சூழல் அத்தகைய கதைகளுக்கு வாசல் திறந்திருக்கிறது. அதனால், தியாகலிங்கம் போன்ற புலம்பெயர் படைப்பாளிகள்  உறைவி போன்ற படைப்புகளை எழுதியிருப்பதன் மூலம் அந்நிய நாட்டின் வாழ்வுக்கோலங்களையும் இலங்கை – இந்திய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்தப்புதினத்தில் வரும் லக்‌ஷிகா,  தனது தாய்நாட்டின்                              ( இலங்கையில் ) இன ஒடுக்குமுறையினால் தப்பிவந்திருந்தாலும், புகலிடதேசத்தில் தனது இனத்து இளைஞர்களினால் அவமானத்திற்கும் இலக்காகி, இறுதியில் அவர்களினாலேயே கொல்லப்பட்டு அந்நிய தேசத்தில் வீதியில் அநாதரவாகிப் போகின்றாள்.

மண்மீட்பு போராட்டத்தில் தங்கள் அவயவங்களை இழந்து உடல் ஊனமாகிப்போன சகோதரிகளின் வாழ்வுக்காக தனது உடலை  பாலியல் ரீதியில் ஊனமாகிப்போன அந்நியப்பெண்களிடம் சோரமாக்கி வருவாய்தேடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் லவன்.

புகலிடம் என்பது சொர்க்கமல்ல, அதுவும் ஒரு நரகம்தான். ஆனால், அந்தப்பக்கத்தை பார்க்காமல் கடந்துசென்றுகொண்டிருக்கிறது வாசிப்பு உலகம் என்பதை உணர்த்தியிருக்கிறார் தியாகலிங்கம்.

அதனால், பேசாப்பொருளை பேசத்துணிந்தவராக இந்த படைப்பாளி இலக்கிய உலகில் பேசப்படுவார்.

தியாகலிங்கம் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

                     முருகபூபதி அவுஸ்திரேலியா

                     letchumananm@gmail.com