பிதிர்சொக்கனும் சுப்பனும் ஒரே விமானத்தில் நோர்வேக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் ஒஸ்லோவின் பொர்னவூ விமானநிலையத்தில் இறங்கிய பொழுது விமானத்திற்குள் பார்த்த அதே சொர்க்கம் இங்கு நாட்டிற்குள்ளும் வஞ்சகம் இல்லாமல் பரந்து தொடர்கின்ற உண்மை இருவருக்கும் விளங்கியது. அதனால் கள்ளுண்ட மந்திபோல் உண்டான மலைப்பு அவர்கள் வாயைப் பிளக்க வைத்தது. இந்த அளவிற்குத் தூய்மை, வசதி, சொகுசு என்பவற்றை அவன் இலங்கையில் இதற்கு முன்பு கண்டதில்லை. அங்கே கூரையும், தரையும் கதவோடு இருந்தால் அதை வீடு என்பார்கள். அவை எதனாலும் உருவாக்கப்பட்டு இருக்கலாம். உள்ளே அடுப்பு மட்டும் இருக்கலாம். அதுகூடப் பலருக்கு நிம்மதி தந்த காலம் உண்டு. அந்தக் காலம் கப்பல்லேற இவர்கள் விமானம் ஏறினார்கள். இங்கு அவன் விமானத்திலிருந்து பார்த்த வீடுகளின் வெளித் தோற்றமே அவனை மலைக்க வைத்தன. அனேகமான வீடுகள் அரிகல் அச்சில் அரிந்தது போல ஒரே அளவிலிருந்தன. அதன் உள்ளேயும் விமான நிலையத்தைப் போன்ற சொகுசும் நவீனமும் இருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. இப்படி மலைப்போடு இருவரும் விமானத்தை விட்டு இறங்கிப் பழக்கத் தோசத்தில் கையைத் தூக்கிக் கொண்டு வர எண்ணியவர்கள் இது நோர்வே என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுக் குடிவரவு குடியகல்வுப் பகுதிக்கு வந்தார்கள். இவர்கள் வரும் காட்சியைக் கண்டு இன்புற்ற விமானநிலைய அதிகாரிகள் விமான நிலையக் காவலர்களுக்கு உடனடியாக நடைபேசியில் அறிவித்துவிட்டு இவர்களை அங்கே இருக்கும் ஒரு ஆசனத்தில் காத்திருக்குமாறு பணிவுடன் கட்டளை இட்டார்கள். அது தமிழர்கள் வஸ்கொடகாமா போல நோர்வேயைக் கண்டுபிடித்த குடியேறிகளின் ஆரம்பக்காலம். அதனால் தமிழர்கள் பற்றி நோர்வே அதிகாரிகளுக்கு அவ்வளவாகத் தெரியாது. இவர்களும் தங்களைப் போன்ற சாதுவான ஜந்துக்கள் என்ற கணிப்புடனே தமிழர்களை நடத்தினார்கள். இராஜ மரியாதை கொடுத்தனர். அது காலத்தால் கரைந்த கதை வேறு ஒன்று.
சிறிது நேரத்தில் ஒரு அதிகாரியால் சொக்கனும் சுப்பனும் விபரங்கள் பதிவதற்காய் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது  சொக்கன் சுப்பனைப் பார்த்துச் சொன்னான்…
‘நோர்வே வசதியான நாடு எண்டு நான் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் இவ்வளவு வசதியாய் இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை. இங்க உழைச்சா நல்ல வருமானம் வருமாம். நிறைய றொக்கெற் ஊருக்கு அடிக்கலாம் எண்டு கேள்விப்பட்டன். அதோடை ஏதாவதும் பிரத்தியேகமாய் செய்ய வேணும்.’ என்றான்.
‘என்ன பிரத்தியேகமாச் செய்ய வேணும் எண்டு நினைக்கிறா?’
‘நிறையத் தமிழ் ஆட்கள் இனி நோர்வேக்கு வருவினம். அதுவும் யாழ்ப்பாணத்தார். தாங்கள் அனுபவிக்காததை எல்லாம் தங்கடை பிள்ளையள் அனுபவிக்க வேணும் எண்டு ஒற்றை காலில நிப்பினம். அவைக்குச் சேவை செய்கிற மாதிரி ஏதாவது செய்யலாம்.’
‘ஓ… அப்ப நீங்கள் சேவை செய்யப் போகிறியளா?’
‘ஏன் நான் செய்யக்கூடாதே?  சேவைதான் நல்ல தொடக்கம் சுப்பா. அது உனக்கு இப்ப விளங்காது. ஆனால் போகப் போக விளங்கும். எனக்குச் சேவை செய்கிறது எண்டால் அப்பிடி ஒரு விருப்பம். அது எனக்கு நிறைய மனசிற்குச் சந்தோசம் தரும். ம்;;;…’ அவன் சிரித்தான்.
‘நீ ஏன் சிரிக்கிறா? நீ என்ன சொல்ல வாறா எண்டு எனக்கு விளங்க இல்லை.’
‘அதை விடு… அதுதான் உனக்கு நல்லது.’
‘நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். எனக்கு என்னுடைய சொந்தப் பிரச்சினை தீர்க்கவே நேரம் இல்லை. அது சரி நீ இங்க என்ன பொதுச் சேவை செய்யப் போகிறா?’
‘எத்தினையோ சேவை செய்யலாம். அது அவை அவையின்ர திறமையைப் பொறுத்தது. திறமைக்கு ஏற்ப பயனும் கிடைக்கும். சேவை செய்கிறதுக்கு தேவை இருக்கோணும் எண்டு இல்லை. தேவையை நாங்களே உருவாக்க வேண்டியதுதான். பிறகு பார்க்க வேணும் அது எப்பிடி செளிக்குது எண்டு.’
‘சேவை… செழிப்பு… நீ என்னவோ கதைக்கிறா… உன்ரை பிளான் என்ன?’
‘நான் ஒரு காலத்தில ஒரு மடத்தை இங்க ஸ்தாபிப்பன்.’
‘இங்க மடம் நடத்தப் போகிறியா? அது ஏற்கனவே ஹரி ராமா ஹரி கிருஷ்ணா எண்டு ஒண்டு ஒஸ்லோவில இருக்குதாமே? ‘
‘இந்தால் என்ன? நான் வேற ஒரு பெயரில வேறை ஒரு மடம் நடத்துவன். திட்டங்கள் நல்லாய் இருந்தால் விட்டில்கள் தானாய் வரும். நீ இருந்துபார்… எப்பிடி எல்லாம் இங்கை மாற்றம் வரும் நான் எப்பிடி அதை வளர்த்து எடுக்கிறன் எண்டு.’
‘ம்… நல்ல கற்பனைதான். இப்ப நாங்கள் பறக்கிறதை விட்டிட்டு இருக்கிறதைப் பார்ப்பமே?’
‘ம்… தொடங்குவம்.’
*
காலங்கள் உருண்டோடின. சொக்கன் கூறியது போலவே ஒஸ்லோவில் தமிழர் பல்கிப் பெருகினர். சொக்கன் பல சேவை செய்யும் அமைப்புக்களில் அக்கறை காட்டினான். அதன் நிர்வாகங்களிலும் பங்களித்தான். சுப்பனையும் அங்கே வருமாறும் அதற்குச் சேவை செய்யுமாறும் அழைத்தான். சுப்பனுக்கு நிறைப் பொறுப்புகள் இருந்தன. அதனால் அவன் தன்னால் அதற்கு நேரம் ஒதுக்க முடியாது என்றான். ஆனால் சொக்கனோ நீ ஓய்வாக இருக்கும் நேரங்களில் என்னுடன் வந்தால் அது உனக்குப் பல நன்மைகளை உண்டு பண்ணும் என்றான். என்ன நன்மை உண்டாகும் என்பது சுப்பனுக்கு விளங்கவில்லை. தனது சகோதரங்களுக்காய் உழைக்க வேண்டிய நேரமே வீணடிக்கப்படும் என்று அவன் மேலோட்டமாக எண்ணிக் கொண்டான். பல அமைப்புகள் பல பெயர்களில் நேர்வே எங்கும் உருவெடுத்தன. இங்கு மாத்திரம் அல்ல பல நாடுகளிலும் அப்படித்தான். சேவை செய்பவர்கள் சேவை பெறுபவர்களைவிட அதிகமாக இருப்பது போலத் தோன்றியது. இப்படி ஒரு மனம் படைத்த மாந்தர்கள் எதற்காக நாடு விட்டு நாடு வந்தார்கள் என்பது சுப்பனுக்கு விளங்கவில்லை. இந்தச் சேவையை இலங்கையில் செய்திருந்தால் சமுதாயத்திற்குள் நிலவி இருந்த பல பகைகள் காணாமல் போயிருக்கலாம். சிலவேளை அதற்கு இடம் காலம் சூழ்நிலை என்பன ஒத்து வந்திருக்காத போல என்று அவன் எண்ணிக் கொண்டான்.
அன்று மாலை சுப்பன் வீட்டிற்குச் சொக்கன் வந்திருந்தான். சுப்பனுக்கு இவன் எதற்கு வந்து  இருக்கிறான் என்பது விளங்கவில்லை. சேவை செய்வதற்குப் பலமுறை கேட்டுவிட்டான். சுப்பனால் அதற்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை. முதலில் தனது வீடு. அதன் பின்பே பொதுச் சேவை என்பதில் அவன் உறுதியாக இருந்தான். இருந்தாலும் சொக்கன் எப்படி முதலில் சேவை பின்பு வீடு என்று வாழ்கிறான் என்பது மட்டும் அவனுக்கு விளங்கவே இல்லை. தான் இப்படி யோசித்துக் கொண்டு நிற்பது சரி அல்ல என்பதை உணர்ந்த சுப்பன் சொக்கனைப் பார்த்தான்.
‘என்ன சொக்கா… என்ன விசயம்? நீ விசயம் இல்லாமல் நேரத்தை வீணாக்க மாட்டியே? ‘ என்று தொடங்கினான்.
‘ஓ முதலில வசதியா ஒரு இடத்தில இருப்பம். பிறகு அதைப்பற்றிக் கதைப்பம். என்ன?’ என்றான் சொக்கன்.
‘ஓ நீ சொல்லுகிறது சரி. வந்து முதல்ல இரு.’
‘நான் இவ்வளவு நாளும் ஓடி ஓடிச் சேவை செய்தது உனக்கும் நல்லாய் தெரியும்.’
‘உன்ரை மனது யாருக்கு வரும் சொக்கா. நான் சொல்லுகிறது சரியே?’ என்றவன் உதட்டில் ஒரு மென்னகை.
‘ம்… அது மட்டும் இல்லை. அப்படி சேவை செய்ததால எனக்கு ஒஸ்லோவில இருக்கிற எல்லாப் பெரிய காய்களையும் தெரியும். அவையின்ர சப்போட்டும் எனக்கு இனி எப்பவும் இருக்கும். சப்போட் எடுக்கோணும் எண்டா தகுதியில்லாததையும் வாழ்த்திப் பழக வேணும். முகப்புத்தகத்தில ஓடி ஓடி விருப்பம் தெரிவிக்கிற மாதிரி இதுவும் ஒரு முக்கியமான சடங்கு. எல்லாம் ஒரு சதுரங்கம்.’
‘ஓ… உன்னைமாதிரி முறிஞ்சா நிச்சயம் அவங்கள் அதுக்கு மரியாதை தருவங்கள் தானே? அதோடை உனக்கு விளங்காத அரசியலா? எனக்கு இதெல்லாம் தூரம் சொக்கா.’
‘சுப்பா நீ இங்கதான் கோட்டை விடுகிறாய்.’
‘என்ன சொல்லுறாய் சொக்கா?’
‘பிறகென்ன? நான் என்னுடைய குடும்பத்தையே விட்டிட்டுப் பாடுபட்டன் எண்டால் அதுக்கு முறையான ஒரு காரணம் இருக்காமல் நான் அதைச் செய்வன் எண்டு நினைக்கிறியா? இந்த உலகத்தில அப்பிடி எதுவும் இந்த யுகத்தில லேசில நடந்திடுகிறது இல்லை.’
‘உண்மையைச் சொன்னால் எனக்கு உள்ளேயும் அப்பிடி ஒரு கேள்வி இருக்குது. சோழியன் குடுமி சும்மா ஆடுமோ எண்டு நினைப்பன். எண்டாலும் எனக்கு உன்னுடைய சேவை மனப்பான்மையில இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்குது. அதை நானாகக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.’
‘உனக்கு நான் சேவை பற்றிக் காட்டுகிறதுக்குத்தான் என்னோடை சேவை செய்ய வரச்சொல்லிக் கேட்டனான். நீ வர இல்லை. இப்ப எனக்கு என்ன சேவை ஒஸ்லோவில எப்பிடி நடக்குது, அதை எப்படி நடத்த வேணும், அதனால எனக்கு என்ன வரும் எண்டு எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். வியாபாரம் செய்கிறதைவிட இது றிஸ்கில்லாத அலுவல். இதை எல்லாம் படிக்க வேணும் எண்டுதான் நான் இவ்வளவு காலமும் மினக்கெட்டன். பருவாய் இல்லை சில இடங்களில சில இரையும் கிடைச்சுது. கணக்கில்லாத இரை அது. இது எல்லாம் சாதாரணமாய் வெளிய நிண்டு பார்த்தால் விளங்காது. உள்ள இறங்கினால்தான் தெரியும். ஒவ்வொரு அங்கத்தவரும் பொன் முட்டை இடுகிற வாத்து போல. அப்பிடி இப்பிடி கணக்குக் காட்டி இரகசியம் காக்க வேணும்…’
‘நீ என்ன சொல்லுகிறாய் சொக்கா?’
‘சேவை எண்டுகிறது சேவை மட்டும் இல்லையடா சுப்பா. அது ஒருவிதமான உழைப்பு. அது உனக்கு விளங்குதா?’
‘ஏதோ அப்பிடிக் கேள்விப்பட்டு இருந்தன். ஆனா எனக்கு உண்மை பொய் என்ன எண்டு விளங்க இல்லை. சேவை எண்டா எனக்கு முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி தான் ஞாபகம் வரும். அது எதையும் எதிர்பார்க்காது தன்னிடம் இருப்பதையும் கொடுப்பது. சிலர் அதைத் தியாகம் எண்டு சொல்லலாம். ஆனா நான் உண்மையான சேவையெண்டா அதுதான் எண்டு நினைக்கிறன். உண்மையான சேவை எண்டுகிறது பிரதி பலனை எதிர்பாராது செய்யப்படும் கல்வி, கலை, செல்வம், தொண்டு, உணவு எண்டு எதையும் இதயம் மகிழ்ந்து கொடுப்பது. அது இல்லாமல் இங்க நடக்கிறது உண்மையில சேவையா? குரு எண்டால் மாணவனிடம் தட்சணையைக்கூட எதிர்பார்க்காது போதிப்பதாம். தட்சணை பெற்றால் அது வியாபாரம் எனப்படுகிறது. இங்கே யார் குரு? யார் இங்கே ஆகக்குறைந்தது ஆசிரியன்?’
‘நான் உனக்கு அதை விளங்கப்படுத்துகிறன். உழுத்துப் போன தத்துவங்களை முதல்ல விடு. மற்றவங்களை மாதிரி நீயும் பிழைக்கப்பார். யாருக்கும் எதுக்கும் சிலை வைக்கப் போகிறது இல்லை. சிலை வைச்சாலும் அது நீடூழி நிலைக்கப் போகிறது இல்லை. நீ சேவை என்கிற சொல்லிற்கு வைச்சிருக்கிற கற்பனை மிகவும் பழமையானது. அது எப்பவோ அழிஞ்சு போயிட்டுது.  இது கலி யுகம். இங்க நடக்கிறது எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ வியாபாரம். அதை நாங்களும் பயன்படுத்திக் கொள்ள வேணும். இல்லாட்டி நாங்கள் வாழத் தெரியாத மனிசராகிடுவம். இப்ப நான் சொல்லுகிறதைக் கேளு… நாங்கள் ஒரு மடம் திறப்பம். அதுக்கான காலம் இப்ப வநத்திட்டுது. நீ என்னோடை சேவை செய்ய வா. திரும்பவும் சொல்லுகிறன்… சேவை எண்டுகிறது சேவை மட்டும் இல்லை. விளங்கிச்செண்டா என்னோட வா. நாங்கள் இன்னும் சிலரோடை அதைத் தொடங்குவம். அதில எங்கடை முழு நேரத்தையும் செலவிடுவம். அது பொழுது போக்காகவும் இருக்கும். பொருளாகவும் பெருகும். விளங்குதா சுப்பா? இங்க யாரும் உன்னுடைய கற்பனைப் பாரி இல்லை. அதை யாரும் எதிர்பார்க்கிறதும் இல்லை. நான் இவ்வளவு காலமும் சேவை சேவை எண்டு அலைஞ்சதின்ரை அர்த்தம் பற்றி இப்ப உனக்கு விளங்கி இருக்கும்.’
‘நான் அரசல்புரசலாக கேள்விப்பட்டிருந்தன். இப்ப நீயே வெட்ட வெளிச்சமாய் அதைச் சொல்லிப் போட்டாய்.’
‘அப்ப வேலையைத் தொடங்குவமே? எனக்கு உன்னை மாதிரி நம்பிக்கையான வேறு ஒரு நண்பன் கிடையாது. எல்லாரையும் நம்ப இயலாது.’
‘உன்னுடைய எண்ணம் விளங்குது. ஆனா நான் கொஞ்சம் ஆழமா இதைப்பற்றி யோசிக்க வேணும். எனனைப் பொறுத்தவரையில வாழ்க்கை எண்டுகிறது மற்றைய ஜீவன்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் ஆகக் குறைஞ்சது எங்கடை பேராசைக்காக அவற்றை இம்சைப் படுத்தாமலாவது இருக்கிறது. அதுவே எங்களைப் போன்ற மனிசருக்குச் சரியாக இருக்கும்.’
‘இது கலியுகம் சுப்பா. யதார்த்தத்தை விளங்கிக் கொள். உன்னுடைய குடும்பப் பொறுப்பே இன்னும் முடிய இல்லை எண்டது ஞாபகம் இருக்கா? உதில இருந்து எல்லாம் நீ எப்ப விடுபடப் போகிறாய்?’
‘ம்… எல்லாம் ஞாபகம் இருக்குது. அதுக்கான காலம் வரும்.’
‘சரி நான் வெளிக்கிடுகிறன். உனக்கு பிறகு போன் பண்ணுகிறன். நீ எதுக்கும் யோசிச்சுப் போட்டு அப்ப முடிவைச் சொல்லு.’
என்று கூறிய சொக்கன் சுப்பனிடம் விடை பெற்றுச் சென்றான். சுப்பனுக்கு ஒன்று விளங்கியது. இந்த உலகில் உண்மையாகச் சேவை செய்யும் சிலரும் உண்டு. ஆனால் துர்அதிஸ்ரவசமாக சேவை செய்வதாக வேசம் போடுபவர்களும் கோசம் போடுபவர்களுமே அதிகம். அவர்கள் நோக்கம் கிடைப்பதைச் சுருட்டுவது அல்லது சுயவிளம்பரம் செய்து கொள்வது. அதற்காக அவர்கள் போற்றப்படும் எதையும் விற்பார்கள். யாரையும் ஏமாற்றுவார்கள்.
*
‘அப்பா உங்களுக்கு என்ன வேணும்? எதற்காக இப்படித் திடீர் என்று வந்தீர்கள்? நான் ஏதும் குறை வைத்தேனா?’
‘நீ குறை வைத்தால்கூட பருவாய் இல்லை. எனக்கு அது ஒரு பிரச்சினையே இல்லை. உன்னை நான் என்றும் நேசிப்பவன். உன்மீது எனக்கு வஞ்சம் வாராது.’
‘ஓ… என்னைப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை உங்களுக்கு வந்துவிட்டதா?’
‘உன்நினைவு என்னோடு என்றும் நீங்காது இருக்கிறது.’
‘பிறகு?’
‘என்மனதில் அமைதி இல்லை. அதில் ஒரு தாங்க முடியாத புதிய உறுத்தல். அது என்னை இடைவிடாது வருத்துகிறது. அதிலிருந்து விடுதலை வேண்டி இங்கு வந்தேன்.’
‘எதனால், எப்பிடி அப்பா அது வந்தது?’
‘அது உன்னால் உருவாகியது.’
‘என்னால் உருவாகியதா? என்னால் எப்படி உருவாகியது அப்பா?’
‘உன் சித்தம் கலங்கிப் போய்விட்டது. அதுவே என்கலக்கத்திற்கும் காரணமாகியது.’
‘என் சித்தம் எதற்காக் கலங்கியது என்கிறீர்கள் அப்பா? ‘
‘உன் சித்தம் பொருள்மேல் கொண்ட வேட்கையால் கலங்கி இருக்கிறது.’
‘அப்பா?’
‘உன் சகவாசம் உன்னைத் தப்பான வழிக்கு இழுத்துச் செல்கிறது.’
‘நான் என்ன செய்ய வேண்டும் அப்பா?’
‘எவன் ஒருவன் பொருள்மேல் வேட்கை கொண்டு தர்மத்தைத் துறக்கிறானோ நீ அவனுடைய நட்பைத் துறந்துவிடுவது மேல். யாருக்கும் சேரவேண்டிய பொருளை உனது மதியால் மயக்கி அபகரித்துக் கொள்வதும் மாகா பாவமே. அரச சொத்தாக இருந்தால்கூட அது கொடும் பாவமே. உனது ஞானத்தை விற்றாலோ அல்லது குறுக்கு வழியில் பாவித்தாலோ அதுவும் பாவமே. அந்தப் பாவத்தைச் செய்தால் பின்பு நீ எனக்கு எள்ளும் தண்ணியும் இறைக்காதே. அது என்மீது அனலை அள்ளிக் கொட்டுவதாய் இருக்கும்.’
‘அப்பா?’
‘நீ தப்பு செய்யமாட்டாய் என்பது எனக்குத் தெரியும் சுப்பா. ஆனால் நீ தளும்புவதுகூட எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் உன்னிடம் வந்தேன் சுப்பா?  எனக்கு நீ ஒரு தானம் தரவேண்டும் சுப்பா.’
‘என்னப்பா அது?’
‘நீ எனக்கு என்றும் உன்வாழ்வில் மாறாத வாக்கு ஒன்று வஸ்துவாக தானம் தரவேண்டும்?’
‘அப்பா?’
‘தருவாயா?’
‘தருவேன் அப்பா. உங்களுக்கு என்ன வேண்டும்?’
‘முளை விட்ட உன் ஆசை சுப்பா. அதை என்னிடம் தந்து நீ அதிலிருந்து விலகிவிடு.’
‘அப்பா?’
*
சுப்பனிற்கு விழிப்பு வந்தது. திறன்பேசி அவனை விழிப்பிற்குக் கொண்டு வந்திருந்தது. அதை எடுத்துப் பார்த்தான். சொக்கன் அழைத்தான். சுப்பன் அந்த அழைப்பை ஏற்றான். அவன் இதழ்களில் மீண்டும் ஒரு மென்னகை.
‘என்ன சொக்கா? இந்த நேரத்தில? உனக்கு நித்தரை வரவில்லையா? நித்திரை கொள்ள முயற்சிசெய் சொக்கா.’
‘அது இருக்கட்டும். நீ யோசிச்சியா?’
‘ம்… யோசிச்சன்.’
‘என்ன முடிவு? ‘
‘நான் எந்தச் சேவை செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும். அது நீ எண்ணும் சேவை அல்ல. தயவு செய்து என்னை மன்னித்துவிடு.’
‘சுப்பா? இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நீ அதை வீணாக்குகிறாய்.’
‘பருவாய் இல்லை. எனக்கு நித்திரை வருகிறது.’
சுப்பன் திறன்பேசியைத் துண்டித்தான். நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினான். சுப்பனின் அப்பா தான் பெற்ற தானத்தோடு திருப்தியாக தன்னிடம் மீண்டார்.